September 23, 2021

மக்களின் பணத்தை கொள்ளை அடிப்பது யார்…

1 min read
Spread the love

பொதுமக்கள் இரவும், பகலும் கண் விழித்து தங்கள் ரத்தத்தை வியர்வையாக சிந்தி உழைக்கும் பணத்தை இன்றைய காலகட்டத்தில் வங்கியின் மூலமாகத்தான் பரிவர்த்தனை செய்யப்பட வேண்டிய நிலை உள்ளது. உலக அளவில் இது, நம்முடைய நாட்டின் வளர்ச்சியை வெளி உலகத்துக்கு காட்டினாலும், ஏழை மக்கள் வங்கியில் பண பரிவர்த்தனை செய்வதினால், பலவிதங்களில் இழப்புகளை சந்திக்கின்றனர்.
உதாரணத்திற்கு காரணமே இல்லாமல் வங்கிகள் மூலம் பலவிதங்களில் மாதம் தோறும் மக்களுக்கே தெரியாமல் அவர்களுடைய பணத்தை நேரடியாக 50 ரூபாய்,100 ரூபாய் என சுரண்டுகின்றனர். பல வங்கிகள் மக்களுக்கு முறையான பரிவர்த்தனை குறித்த விழிப்புணர்வு கூட கொடுக்கப்படுவது இல்லை. அதனால் பல விதங்களில் மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.

உதாரணத்திற்கு, மதுரையை சேர்ந்த, ரவிச்சந்திரன் என்பவர் அனுப்பம்பட்டு அருகே உள்ள, அக்கரம்பேடு கிராமத்தில் கூலி வேலை செய்து வருகிறார். அவர் மதுரையில் உள்ள தனது குடும்பத்தினருக்கு, கடந்த மாதம் 28ஆம் தேதி, தனது சம்பள பணத்தை அனுப்ப வேண்டி, பொன்னேரி ஸ்டேட் பேங்க் ஏடிஎம்மில் பணம் போடுவதற்காக வந்துள்ளார். விவரம் இல்லாத ரவிசந்திரன், அங்கிருந்த ஒரு நபர் “அந்த பணத்தை நான் போடுவதற்கு உதவி செய்கிறேன்” என கூறி அறியாமையில் உள்ள இவரை ஏமாற்றி, அந்த பணத்தை சுருட்டிக் கொண்டு அங்கிருந்து நாசுக்காக பேசிவிட்டு மறைந்து விடுகிறான். பணம் செலுத்த வந்த நபர் தன்னுடைய பணம் இயந்திரத்தின் உள் சென்று விட்டது, என நினைத்துக் கொண்டு சென்றுவிடுகிறார். ஆனால் மதுரையில் இருந்த ரவியினுடைய மனைவி, “எனக்கு ஏன்? இன்னும் பணம் அனுப்பவில்லை” என தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்கிறார். அதன் பிறகு தான் ரவிக்கு தன்னுடைய பணம் என்ன ஆனது, என்று தெரியாமல் அதிர்ச்சி அடைந்து, குழப்பத்தில் வங்கியில் வந்து விசாரிக்கும் போது, அவர்கள் அந்த ஏடிஎம்மில் அமைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை சோதித்து பார்த்தனர். அப்போது இவருக்கு பணம் போடுவதாக உதவுவது போல் நடித்த அந்த நபர் உடன் இருந்தவர், அந்த பணத்தை தனது பாக்கெட்டில் வைத்துக் கொண்டு அங்கிருந்து தலைமறைவானது தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து, பணத்தை இழந்த ரவிசந்திரன் பொன்னேரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால், அது குறித்து பொன்னேரி போலீசார் இன்று வரை எந்தவித விசாரணையும் செய்யப்படவில்லை. பணத்தை இழந்த அந்த நபர் இரவும், பகலும் கண்விழித்து சம்பாதித்த பணத்தை தனது குடும்பத்தினர் அனுப்ப முடியவில்லையே.. என தினம், தினம் கண்ணீர் விட்டு காவல் நிலையத்திற்கும், வங்கிக்கும் அலைந்து கொண்டிருக்கிறார்.
இது இப்படி இருக்க, அதே ஸ்டேட் பேங்க் ஏ.டி.எமில் சில தினங்களுக்கு முன்பாக, பொன்னேரி யை சேர்ந்த ஒரு நபர் ஏ.டி.எமில் பணம் போட்டிருக்கிறார். பணம் இயந்திரத்தின் உள் சென்ற பிறகு, “தாங்கள் பணம் செலுத்தப்படவில்லை” என சீட்டு வந்திருக்கிறது. உடனே பதறிப்போன அவர் பணம் உள்ளே சென்று விட்டது, ஆனால் சீட்டு பணம் அனுப்பவில்லை என வருகிறது என பதறிப்போய், வங்கியின்னுள் விசாரிக்கச் செல்கிறார். அதுவரை நடப்பதையெல்லாம் பார்த்துக் கொண்டு அமைதியாய் அங்கு நின்றிருந்த ஒரு நபர், “சார், நான் இந்த இயந்திரத்தை பழுது பார்க்க வந்திருக்கிறேன். பழுது பார்த்து முடித்து விட்டேன். ஆனால், அது வேலை செய்கிறதா என பரிசோதிக்க தான் காத்திருந்தேன்” என்றார். உடனே பணம் செலுத்திய நபர், “நீங்கள் பரிசோதிப்பது என்றால் உங்கள் பணத்தை போட்டு பரிசோதிக்க வேண்டும். ஏன்? நான் போடுவதற்கு முன்பு என்னிடம் சொல்லவில்லை” என தகராறு செய்துள்ளார். பின்னர், வங்கியின் உள் சென்று பணம் செலுத்திய நபர், முறையிட்டதும். பின்னர் வங்கி ஊழியர்கள் அதை புகாராக எடுத்துக் கொண்டு, “உங்களுடைய பணத்தை உங்களுடைய வங்கி கணக்கில் செலுத்துகிறோம்” என கூறி, அனுப்பி வைத்துள்ளனர். இதையெல்லாம் பார்க்கும் போது, ஏழை, எளிய மக்கள் வியர்வை சிந்தி உழைக்கும் பணத்தை, கொள்ளை அடிப்பது திருடர்களா, அரசாங்கமா, வங்கிகளா… என நினைத்து மனம் நொந்து கொள்ள வேண்டிய நிலை உள்ளது.

G.பாலகிருஷ்ணன்
நிழல். இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed