September 23, 2021

பொன்னேரி சட்டமன்ற தொகுதி, கடந்த பத்தாண்டுகளில் “வளர்ச்சிப் பணிகளில் பின்னோக்கி சென்றுள்ளது” திமுக மீஞ்சூர் ஒன்றிய செயலாளர் எம். எஸ்.கே. ரமேஷ்ராஜ் குற்றச்சாட்டு

1 min read
Spread the love

திமுகவில், திருவள்ளூர் வடக்கு மாவட்டத்தில் அடங்கிய தெற்கு ஒன்றிய செயலாளராக இருப்பவர், வல்லூர் எம்.எஸ்.கே ரமேஷ்ராஜ், இவர் ஏற்கனவே மீஞ்சூர் ஒன்றியத்தில் அடங்கிய மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினராகவும் இருந்து பணியாற்றி இருக்கிறார். இவர் திமுக ஒன்றிய நிர்வாகியாக இருந்தாலும், கட்சி பாகுபாடு இன்றி பொன்னேரி தொகுதியில் உள்ள அனைத்து மக்களிடமும் நன்கு அறிமுகமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவரிடம், தற்போது பொன்னேரி தொகுதியின் நிலவரம் குறித்து நாம் பேசியபோது, ” இந்த பொன்னேரி தொகுதியில் அதிமுக ஆட்சியில் கடந்த பத்தாண்டுகளாக எந்தவிதமான வளர்ச்சிப் பணிகளையும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு இல்லை” என்று கூறியதுடன், இந்தத் தொகுதியில் மக்கள் இழந்தது என்று கூறுவதற்கு நிறைய உள்ளது என துவங்கினார்.

பொன்னேரி தொகுதியில், திமுக ஆட்சியின் போது செய்த பணிகளை இன்றளவும் உரக்க சொல்லும் அளவிற்கு நிறைய உள்ளன. உதாரணமாக, சென்னையை பொன்னேரி தொகுதியுடன் இணைக்ககூடிய நாப்பாளையம் பாலமாக இருக்கட்டும், காரனோடை பாலமாக இருக்கட்டும், சுற்றுலா தலமான பழவேற்காட்டில் உள்ள பாலமாக இருக்கட்டும், அனைத்தும் திமுக ஆட்சியில் உருவாக்கப்பட்டது தான். அதேபோல் தற்போது பொன்னேரி ஆரணி ஆற்றின் குறுக்கே, பழைய பேருந்து நிலையம் பின்புறம் ஏலியம்பேடு செல்லும் சாலையை இணைக்கக்கூடிய பாலத்திற்கும் திட்டம் வகுத்தது திமுக ஆட்சியில் தான், திமுக ஆட்சியின்போது பொன்னேரி பேரூராட்சியாக இருக்கட்டும், மீஞ்சூர் பேரூராட்சியாக இருக்கட்டும் அனைத்து சாலைகளும் சிமெண்ட் சாலைகளாக மிகவும் சுகாதாரமாக அமைக்கப்பட்டிருந்தது.

ஆனால், இன்று பொன்னேரியில் உள்ள அனைத்து சாலைகளையும் நீங்கள் நேரில் சென்று பார்த்தால் தெரியும், மக்கள் ஒரு தெருவில் இருந்து மற்றொரு தெருவுக்கு கூட செல்ல முடியவில்லை, அந்த அளவிற்க்கு அனைத்து சாலைகளும் மிகவும் மோசமாக உள்ளன, கேட்டால் பாதாள சாக்கடை பணிகள் நடைபெறுவதால் இப்படி உள்ளது என்று சொல்வார்கள். இந்த பாதாள சாக்கடை திட்டத்தை திமுக ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்டது. அதை உடனடியாக செய்திருந்தால் அதன் பணிகள் எப்போதோ முடிக்கப்பட்டிருக்கும். ஆனால், அவர்கள் காலதாமதம் செய்து சமீபத்தில் தான் பணியை துவக்கினார்கள். இருந்தாலும், அதன் பணிகள் மிகவும் ஆமை வேகத்தில் நடைபெற்றுக் கொண்டிருப்பதால் தான் பொன்னேரி பேரூராட்சி முழுவதும் அனைத்து சாலைகளும் குண்டும் குழியுமாக உள்ளன. அதனால் மக்கள் மிகவும் அவதிப்படுகிறார்கள்.

பொன்னேரியில் இருந்து மீஞ்சூர் பகுதிகளுக்கு இயங்கி வந்த பேருந்து வழித்தடங்கள் அதிக அளவில் நிறுத்தப்பட்டு விட்டன. உதாரணத்திற்கு, பொன்னேரியில் இருந்து மீஞ்சூர் வழியாக செல்லக்கூடிய 56B 95A போன்ற வழித்தடங்களில் இயங்கிய பல பேருந்துகள் இன்று காணாமலேயே போய்விட்டன. மீஞ்சூரில் இருந்து பொன்னேரி செல்லக்கூடிய மக்கள் பேருந்து வசதிகள் இல்லாமல் மிகவும் சிரமப்படுகின்றனர். பொன்னேரி பணிமனையில் சுமார் 70க்கும் மேற்பட்ட பேருந்துகள் உள்ளன. அவைகளில் ஒரு இருபது பேருந்துகள் கூட பொன்னேரி தொகுதிக்குள் இயக்கப்படவில்லை, பெரும்பாலான பேருந்துகள் அனைத்தும் கோயம்பேட்டில் இருந்து காஞ்சிபுரம், பாண்டிச்சேரி, திண்டிவனம், வேலூர், போன்ற வெளி மாவட்டங்களுக்கு தான் இயக்கப்படுகின்றன. அந்த அனைத்துப் பேருந்துகளும் பொன்னேரி தொகுதிக்குள் இயக்கினால் போக்குவரத்து வசதிகளை தடையின்றி மக்கள் பெறுவார்கள்.

திமுக ஆட்சிக் காலத்தில் சென்னையில் இருந்து மாநகரப் பேருந்து இயக்கத்தின் தூரத்தை 50 கிலோ மீட்டர் என கலைஞர் அதிகப்படுத்தினார். அதனால், சென்னை மாநகரப் பேருந்துகள் பொன்னேரி, பழவேற்காடு, புதுச்சேரிபேடு, அவுரிவாக்கம், கடப்பாக்கம், தத்தைமஞ்சி என்று அனைத்து குக்கிராம பகுதிகளுக்கும் பேருந்துகள் இன்று வரை இயங்குகின்றன. பழவேற்காட்டில் லைட் ஹவுஸ், அரங்கம் கூனங்குப்பம் உட்பட அனைத்து கிராமங்களையும் பழவேற்காட்டுடன் இணைக்க கூடிய பாலத்தை கட்டி கொடுக்கப்பட்டுள்ளது. சுனாமி பேரிடர் காலத்தில் அவரிவாக்கம் முதல் பழவேற்காட்டில் உள்ள அனைத்து மீனவ கிராமங்களுக்கும் ஆயிரக்கணக்கான கான்கிரீட் வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டது. பழவேற்காட்டில் இருந்து காட்டுப்பள்ளி, காளாஞ்சி வழியாக எண்ணூர் வரை மக்கள் தங்கு தடையின்றி சென்று வர சிறப்பான சாலை வசதிகள் செய்யப்பட்டதும் திமுக ஆட்சியில் தான், என்பதை பொன்னேரி தொகுதி மக்கள் மறந்து விடமாட்டார்கள்.

பொன்னேரியில் 2010ம் ஆண்டு இப்பகுதியில் உள்ள படித்த இளைஞர்களும், பெண்களும் பயன்படுத்தும் வகையில் டிஜிட்டல் நூலகம் அமைக்கப்பட இருந்தது. அதற்காக லோகநாத நாராயணசுவாமி கல்லூரிக்கு எதிரில் இடமும் ஒதுக்கீடு செய்து அதற்காக ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. அந்த நூலகம் சென்னை உள்ள அண்ணா நூலகத்துடன் இணைக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. இணையதள வசதியுடன் குழந்தைகள், மற்றும் பெண்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் படித்துப் பயன்பெறும் வகையில் குளிர்சாதன வசதியுடன் அமைக்க திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் அடுத்து வந்த அதிமுக ஆட்சி அத்திட்டத்தை கிடப்பில் போட்டுவிட்டது. தற்போது அந்த இடத்தை அதிமுகவினர் தரை வாடகைக்கு விட்டு வாடகை வாங்கி வருகின்றனர், என குற்றம் சாட்டினார்.

திமுக ஆட்சியின்போது,
பழவேற்காடு பகுதியில் உள்ள முகத்துவாரத்தில் பாறைகளால் தூண்டில் வளைவு அமைக்கப்பட திட்டமிடப்பட்டிருந்தது. அந்தத் திட்டத்தை அதிமுக கட்சியினர் இழுபறியுடன் இவ்வளவு காலம் காலதாமதம் செய்து விட்டு, அத்திட்டத்தை நிறைவேற்றுவதாக கூறிக்கொண்டே இருந்தனர். ஆனால் அதிமுக கடந்த பத்தாண்டு ஆட்சிக்காலத்தில் 10 கல்லை கூட அந்த இடத்தில் போடவில்லை என குறை கூறினார். திமுக ஆட்சி ஏற்பட்ட உடன் பழவேற்காட்டில் தூண்டில் வளைவு அமைப்பது முதல் பணியாக செய்து முடிக்கப்படும் என கூறினார்.

திமுக ஆட்சியின் போது, பொன்னேரியில் உள்ள அனைத்து நீதி மன்றங்களையும் ஒன்றிணைத்து, ஒருங்கிணைந்த நீதிமன்றம் அமைக்க பொன்னேரி மற்றும் பஞ்செட்டி போன்ற பகுதிகளில் இடம் தேர்வு செய்யும் பணி நடைபெற்றது. அப்போது சட்டத்துறை அமைச்சராக இருந்த துரைமுருகன் அவர்கள் நேரடியாக பொன்னேரிக்கு வந்து, பொன்னேரியில் உள்ள பல இடங்களை ஒருங்கிணைந்த நீதிமன்றம் அமைக்க பார்வையிட்டார். ஆனால், கடந்த பத்தாண்டு அதிமுக ஆட்சியில் பொன்னேரிக்கு ஒருங்கிணைந்த நீதிமன்றம் கொண்டு வர ஒரு சின்ன முயற்சி கூட செய்யவில்லை என்பது தான் கொடுமை.

அதேபோல், பொன்னேரி தாலுகா அலுவலக சாலை மிகவும் நெருக்கடியான சாலையாக மாறிவிட்டது. ஆகவே தாலுகா அலுவலகத்தை வேறு இடத்திற்கு மாற்ற போகிறோம் என கூறிவிட்டு, அதே நெருக்கடியான சாலையிலேயே, கடந்த சில மாதங்களுக்கு முன்பு தாலுகா அலுவலகம் கட்ட பூமி பூஜை எல்லாம் போட்டனர். ஆனால் அந்த பூமிபூஜை போட்டதை அப்படியே விட்டுவிட்டு அங்கு தற்போது எந்த பணியும் செய்யப்படாமல் போய்விட்டது. இதற்கு காரணம் என்ன என்பது மர்மமாக உள்ளது. இப்படி தான் பொன்னேரியில் உள்ள அனைத்து பணிகளும் எந்த விதமான ஒரு முயற்சியும் கூட எடுக்கப்படாமல், எந்த புதிய திட்டங்களும் பொன்னேரிக்கு கொண்டு வரபடாமல், பொன்னேரி தொகுதி கடந்த பத்தாண்டுகளில் பின்தங்கியே உள்ளது என்று, நம் பொன்னேரி தொகுதி மக்களுக்கு வெட்டவெளிச்சமாக தெரிகிறது என்றார்.

அத்திப்பட்டு மற்றும் அதன் சுற்றுவட்டார ஊராட்சிகளில் அதிக அளவிலான தொழிற்சாலைகள் பெருகி வரும் சூழ்நிலையில், இப்பகுதியில் வெளிமாநிலத்தவர்கள் ஆயிரக்கணக்கானவர்கள் தங்கி பணிபுரிந்து வருகின்றனர். மேலும் வெளி மாவட்டங்களைச் சேர்ந்த பலவிதமான கனரக வாகனங்கள் தினமும் இப்பகுதிக்கு வந்து செல்கின்றன. அது மட்டுமில்லாமல் எண்ணூர் பகுதியில் இருந்து அத்திப்பட்டு பகுதிகளை இணைக்கக் கூடிய பாலத்தின் வழியாக, சென்னையிலிருந்து எளிதில் சமூக விரோதிகள் ஊடுருவும் வகையில் அமைந்துள்ளது. ஆகவே, திமுக ஆட்சி பொறுப்பேற்ற உடன் அத்திப்பட்டு பகுதிக்கு தனியாக ஒரு காவல் நிலையம் அமைக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது, என கூறினார்.

G.பாலகிருஷ்ணன்
நிழல். இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed