தேனி அருகே பயங்கர ஆயுதங்களுடன் சொகுசு காரில் சுற்றிய கூலிப் படையினர் 5 பேர் கைது…
1 min read
தேனி மாவட்டம், போடியில் பயங்கர ஆயுதங்களுடன் சொகுசு காரில் சுற்றிய கூலிப் படையினர் 5 பேரை போலீசார் கைது செய்தனர். தமிழக சட்டப்பேரவை தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் போலீசார் வாகன சோதனைகளை தீவிரப்படுத்தியுள்ளனர். போடி உள் கோட்டத்தில், போடி டி.எஸ்.பி. பார்த்திபன் உத்தரவின் பேரில், போலீசார் நள்ளிரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

போடி நகர் காவல் நிலைய போலீசார் போடி பழைய பேருந்து நிறுத்தம் அருகே சோதனையில் ஈடுபட்டு இருந்த போது, போடி நகர் பகுதியில் சொகுசு கார் ஒன்று சுற்றியதை கண்டு அதனை மடக்கி பிடித்து விசாரணை செய்தனர். காரில் இருந்தவர்கள் முன்னுக்கு பின் முரணாக தகவல் கூறவே, காரை சோதனை செய்ததில், காரின் பின்பக்கம் பட்டாக்கத்தி, வீச்சு அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்கள் இருந்தது தெரிந்தது. இதனையடுத்து காரையும், காரிலிருந்த 5 பேரையும் காவல் நிலையம் கொண்டு வந்து விசாரணை செய்தனர்.
இதில் இவர்கள் கம்பம் நெல்லுக்குத்தி புளியமரத் தெருவை சேர்ந்த அஜித் ரகுமான் (29), போடி ராசிங்காபுரத்தை சேர்ந்த ராஜேஷ் (26), கம்பம் வடக்குபட்டியை சேர்ந்த ஆனந்தன் (28), கூடலூர் சிங்கபெருமாள் தெருவை சேர்ந்த ஜெயபிரபு (39), போடி, மார்க்கெட் தெருவை சேர்ந்த விக்னேஷ்வரன் (28) என்பது தெரிந்தது.

இவர்களை கைது செய்த போடி நகர் காவல் நிலைய போலீசார் இவர்கள் மீது பயங்கர ஆயுதங்களுடன் கொடுங்குற்ற நோக்குடன் சதித்திட்டம் தீட்டி சுற்றுதல், பயங்கர ஆயுதங்களை வைத்திருத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து 5 பேரையும் கைது செய்தனர். மேலும் இவர்கள் பயன்படுத்திய இனோவா சொகுசு கார், ஆயுதங்களையும் பறிமுதல் செய்த போலீசார் இவர்கள் வேறு யாரையும் கொலை செய்யும் நோக்குடன் போடியில் சுற்றினார்களா என்றும் விசாரித்து வருகின்றனர். கைது செய்யப்பட்டவர்களில் சிலர் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உத்தமபாளையம் வழக்குரைஞர் ரஞ்சித் என்பவரை கொடூரமாக வெட்டி கொலை செய்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் என போலீசார் தெரிவித்தனர்.
செய்தியாளர் – அழகர்
நிழல். இன் – 8939476777