திருவண்ணாமலை பேருந்தில், குடிபோதையில் வடமாநில இளைஞர்கள் இடையே மோதல், ஆசிட் வீச்சு, பயணிகள் காயம்…
1 min read
திருவண்ணாமலை அடுத்த ஒட்டகுடிசல் கிராமம் அருகே ஊத்தங்கரையில் இருந்து திருவண்ணாமலை நோக்கி வந்து கொண்டிருந்த அரசு பேருந்தில் பயணம் செய்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சாந்தகுமார் மற்றும் சோனுகுமார் ஆகிய இருவருக்கும் இடையே பணம் பிரிப்பதில் ஏற்பட்ட மோதலில் இருவரும் மாறி மாறி ஆசிட் வீசி கொண்டதில் பேருந்தில் பயணம் செய்த பயணிகள் மீது ஆசிட் வீசப்பட்டதில் இருவர் காயமடைந்து திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சாந்தகுமார் மற்றும் சோனுகுமார் ஆகிய இருவரும் கடந்த 15 நாட்களுக்கு முன்பு பித்தளை பொருட்கள் மற்றும் கண்ணாடிகள் ஆகியவற்றை பாலிஸ் செய்வதற்காக அரக்கோணம் மற்றும் திருப்பத்தூர் பகுதிகளில் வீதி வீதியாக சென்று பாலிஷ் செய்து பிழைப்பை நடத்திக் கொண்டு வந்துள்ளனர், இந்நிலையில் இன்று திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த அம்மாபாளையம் கிராமத்தில் பித்தலை மற்றும் கண்ணாடி ஆகியவற்றை வீதி வீதியாக சென்று பொதுமக்களிடம் கேட்டறிந்து இருவரும் பாலிஷ் போட்டு விட்டு பிறகு அம்மாபாளையம் கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் இருவரும் சேர்ந்து மது அருந்தியுள்ளனர்.

அங்கிருந்து மதுபோதையில் ஊத்தங்கரையில் இருந்து திருவண்ணாமலை நோக்கி வந்து கொண்டிருந்த அரசு பேருந்தில் ஏறி திருவண்ணாமலை நோக்கி வந்து கொண்டிருந்தனர். அப்போது பேருந்தில் இருவருக்கும் இடையே பணம் பங்கிடுவதில் வாக்குவாதம் அதிகரித்து இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டு பின்னர் பாலிஷ் போடுவதற்காக வைத்திருந்த ஆசிட்டை இருவரும் மாறி மாறி ஒருவர் மீது ஒருவர் தெளித்துக் கொண்டனர், அப்போது பேருந்தில் பயணம் செய்த பயணிகள் மீது ஆசிட் வீசப்பட்டதால், இருவர் காயமடைந்தனர்.

உடனடியாக பேருந்து ஓட்டுநர் பேருந்தை நிறுத்திவிட்டு காவல் நிலையத்திற்கு தகவல் அளித்ததன் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து வடமாநில இளைஞர்கள் இருவரையும் கைது செய்தனர், முன்னதாக பேருந்தில் பயணம் செய்த பயணிகள் வடமாநில இளைஞர்கள் இருவரையும் கைகளை கட்டிபோட்டு உட்கார வைத்திருந்தனர்.

திருவண்ணாமலை கிராமிய காவல் நிலைய போலீசார் வடமாநில இளைஞர்கள் இருவர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர், பிழைப்பத் தேடி வடமாநில இளைஞர்கள் தமிழகத்திற்கு வந்து இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதால் பொதுமக்களுக்கு எவ்வித பாதுகாப்பும் இல்லை என்றும், இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.
செய்தியாளர் – மூர்த்தி
நிழல். இன் – 8939476777