யாரேனும் பாத்தீங்களா?
1 min read
(இது… பத்திரிக்கையாளர்களாகிய, எங்களின் தாய், “சசிகலாதேவி ரவீந்திரதாஸ்” அவர்களின், பயணபாதை…)
தெள்ளுதமிழ் நடையில் , துள்ளி விளையாடும் சொல்லில், தமிழ் மொழியைத் தாலாட்டியவர் எனதருமை நண்பர் திரு.வலம்புரிஜான் அவர்கள். அவர் வாய் திறந்தாலே தேனொழுகும் தமிழ்ச்சொற்கள் துள்ளி விழும். அவருடைய சாதாரண உரைநடையே வசனக்கவிதையாகி விடும். ( கவிஞர் கண்ணதாசன் சொல்வார், நான் எழுதும் வசனமெல்லாம் என் கடன்காரன் தொல்லையால் விசனமாகி விடுகிறது என்று)
அந்த அளவிற்கு அறிவு,ஆற்றல்,புத்தி்கூர்மை, நாவன்மை, எழுத்து வன்மை, கொண்டு் தற்போது இவரைப்போல பேச தமிழ் நாட்டில் ஒருவர்தான் இருந்தார்.

என் நண்பரிடம் பேசும் போது பலதைக் கேட்டு அறிந்திருக்கிறேன். உதாரணமாக ஒரு கீரையைப் பற்றி பேச ஆரம்பித்தாலும் அதைப் பற்றி் பலமணி நேரம் கூட பேசுவார். அவர் மூலம் நான் பலதையும் அறிந்தேன்.
அவருக்கு அடுத்து மறைந்த அமைச்சர் திரு.காளிமுத்துவும் இப்படித்தான் சுவைபட பேசுவார். இதேபோல எழுதுவதும் ஒரு கலைதான். தொலைபேசி வந்துவிட்டதால் இப்பொழுது கையால் எழுதுவது குறைந்து விட்டது.

ஒரு காலத்தில் நமக்கு வரும் கடிதங்களுக்கு நாமே பதில் எழுதுவோம். அன்றைய காலகட்ட சினிமா நட்சத்திரங்களுக்கு ரசிகர்களிடமிருந்து கடிதங்கள் வந்தால் சிலர் தானே கைப்பட பதில் எழுதி அதில் அவர்களது சிறிய அளவிலான புகைப்படமும் இணைத்து அனுப்புவார்கள். சிலர் தன் உதவியாளர்களை எழுதச் சொல்லி அதில் கையொப்பமிட்டு அனுப்புவார்கள். இது ஒரு நடிகனுக்கும் அவனுடைய ரசிகனுக்கும் இடையே இருந்த அன்புப் பாலம்.
கடிதம்எழுதுவதன் காரணமென்ன?
- கடித்ததில் பெரும்பாலும் நாம் உண்மையைத்தான் எழுதுவோம்.
- நாம் பேசியதை நாமே மறுத்து விடலாம். எழுதியதை இல்லை என்று சாதிக்க முடியாது.
- நம் அம்மா இல்லாத நேரத்தில் அவளது கடிதத்தைப் படித்தால் அக்கடிதம் அவளை நம் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தி விடும். இதனால்தான் நான் கடிதம் என்பது கவிதையை விட சிறந்த இலக்கியம் என்பேன். கவிதையிலாவது சிறிது கற்பனை கலந்திருக்கும். ஆனால் கடிதத்தில் கற்பனைக்கு இடமில்லை. அதில் உண்மை மட்டுமே ஊர்வலமாக வரும்.

ஆமாம்! ஏன் எழுத வேண்டும்?
ஒருவர் உட்கார்ந்து நேரம் செலவழித்து ஏன் எழுதி மெனக்கிடணும்?
தொலைபேசி வசதிதான் வந்து விட்டதே. ஏனெனில், அவரே தன் கைப்பட எழுத எழுத உளவியல்படி அவரது மனம் உறுதிபடும். ஆழ்ந்த நிலையில் எந்த சூழ்நிலையிலும் தன்னை இழந்துவிடாத பேராண்மை எழுதுகிறவர்களுக்கு உண்டாகும். அக்கால பெரியவர்கள் வீட்டிற்கு வருகின்றகார்டு, கவர்,மணியார்டர் கூப்பன்,தீபாவளி, பொங்கல்,கிருஸ்துமஸ், பிறந்தநாள் வாழ்த்துக்களின் அட்டைகள் அனைத்தையும் ஒரு நீண்ட கம்பியில் செருகி அட்டத்தில் மாட்டி பத்திரப்படுத்தி வைப்பார்கள். இது தற்போதைய வங்கி லாக்கரை விட பாதுகாப்பானது தேட வேண்டாம். தேதிவாரியாக கிடைக்கும். தொலையாது.
எத்தனை வருடமானாலும் எடுத்து படிக்கலாம்.
சிலர் ஒரு மந்திரச் சொல்லையே திரும்ப திரும்ப (நம் பள்ளி பனிஷ்மென்ட் போல்) எழுதுவார்கள். உதாரணமாக ஸ்ரீராமஜெயம், ஓம் முருகா, ஜெய் அனுமன்,ஜெய்சாய்ராம், கர்த்தரே ஸ்தோஸ்தரி இத்தியாதி…….இத்தியாதி. முத்து முத்தான குண்டு குண்டான, சீரான இடைவெளியில் (Rithamic)
எழுதப்பட்ட கடிதம் படிக்கும்போது மனம் அதிலேயே லயித்து விடும்.

மனிதருள் மாணிக்கம் நேருஜி தன் மகள் இந்திரா பிரியதரிசினிக்கு ஜெயிலிலிருந்து எழுதிய கடிதங்கள், உலக மாமேதை மார்க்ஸ் அவர்கள் தன் காதல் மனைவி ஜெனிக்கு எழுதிய கடிதங்கள், மாவீரன் நெப்போலியன் போரில் தான் சோர்ந்த போதெல்லாம் உற்சாகம் பெற தன் காதலிக்கு எழுதிய கடிதங்கள் எல்லாம் உலகப் புகழ்பெற்றவை.
கிட்டத்தட்ட என் வயதுடையவர்கள் நினைத்துப் பாருங்கள் கடிதத்துக்கு உயிர் இருப்பதைப் போல வாட்ஸ்அப்பிற்கு உயிர் இருக்குமா?

ஆனால் அன்பர்களே,
உலகம் சுருங்கிவிட்டது. மனிதன் இயந்திரமாகிக் கொண்டிருக்கிறான். ரோபோவாக நடமாடும் காலம் இது. வேகமாக இயங்கிக் கொண்டிருக்கும் அவசர வாழ்க்கையில் நின்று நிதானிக்க அவனுக்கு ஏது நேரம்.? ஆகவேதான் நவீன குரியராக கைப் பேசியைப் பயன்படுத்துகிறோம். நம் உடம்பில் ஒரு அங்கமான ஆறாவது விரலாகி விட்டது கைப்பேசி. விஞ்ஞானம் மாறும்போது நாமும் அதன் பின்னேதான் செல்லவேண்டியுள்ளது. அதன் பயன்பாட்டை நாம் நம் இளையோரிடமிருந்து கற்க வேண்டியுள்ளது.
ஆனாலும் என் ஆதங்கமெல்லாம்
யாரேனும் பாத்தீங்களா?
15 பைசா கார்டு எங்கே என்று!!!!!

டி.சசிகலாதேவி ரவீந்திரதாஸ்…
7358520729
நிழல். இன் – 8939476777