மாதவரம் தொகுதியில், பல தடைகளுக்கு இடையே, மக்கள் மனநிறைவு அடையும் வகையில், பல வளர்ச்சிப் பணிகள் செய்து கொடுத்திருக்கிறேன், சுதர்சனம் எம்எல்ஏ பேட்டி…
1 min read
தமிழகத்தின் 2-வது மிகப்பெரிய தொகுதி என்றால், அது மாதவரம் தொகுதி தான். சென்னை மாநகராட்சியுடன் இருந்தாலும், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில் இது 9-வது தொகுதி என்ற சிறப்பை பெற்றுள்ளது. 2011ல் தொகுதி மறுசீரமைப்பில், திருவொற்றியூர் தொகுதியில் இருந்து பிரித்து மாதவரம் தொகுதி புதிதாக உருவாக்கப்பட்டது. மாதவரம் நகராட்சியில் 14-வார்டுகளும், புழல் ஒன்றியத்தில் 7 ஊராட்சிகளும், வில்லிவாக்கம் ஒன்றியத்தில் 10 ஊராட்சிகளும், சோழவரம் ஒன்றியத்தில் 15 ஊராட்சிகளும் என 32 ஊராட்சிகளையும் கொண்டதும். நாரவாரிக்குப்பம் பேரூராட்சி என அனனத்தையும் ஒன்றிணைந்தது தான், மாதவரம் சட்டமன்றத் தொகுதி.

இந்த தொகுதியில் தான், சென்னையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் புழல் ஏரியும், சோழவரம் ஏரியும் உள்ளன. அது மட்டுமின்றி ரெட்டேரியும் இந்த தொகுதியில் உள்ளது. ஆசியாவிலேயே மிகப்பெரிய சிறையான புழல் மத்திய சிறை உள்ள தொகுதியும் இதுவே ஆகும். 100-க்கும் மேற்பட்ட
அதிக அரிசி ஆலைகளை கொண்ட செங்குன்றம், நெல் மற்றும் அரிசி மொத்த விற்பனையும் இதில் தான் உள்ளது. மாதவரம் பைபாஸ் சாலையில் உள்ள ஆட்டு சந்தை பிரசித்தி பெற்றது. பல்வேறு தொழில் நிறுவனங்களை கொண்ட மாதவரம் தொகுதியில், மாதவரம் பால்பண்ணை, கால்நடை பல்கலைக்கழகம், கூட்டுறவு சங்க அலுவலகம், அலமாதி பால்பண்ணை, உணவு பதப்படுத்தும் நிறுவனம் ஆகியவை மாதவரம் தொகுதியில் உள்ளது.


பாடியநல்லூரில் உள்ள பேருந்து பணிமனை, சென்னை-கொல்கொத்தா தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் சாலை,
சோழவரம் ராணுவ மையம்,
செங்குன்றம், மாதவரம் ஆகிய இரண்டு வட்டார போக்குவரத்து அலுவலகம் உள்ளன. ஆந்திராவுக்கு செல்லும் புறநகர் பேருந்து நிலையம், அடுக்குமாடி பேருந்துகள் நிற்கும் பேருந்து நிலையம் என மாதவரத்தில் புதியதாக கட்டப்பட்ட பேருந்து நிலையத்தில் இருந்து தான் செல்கின்றன. மாதவரம் தொகுதியில் வாக்காளர்களை பொருத்தவரை ஆண்கள் 2 லட்சத்து 24 ஆயிரத்து 323 பேரும், பெண் வாக்காளர்கள் 2 லட்சத்து 26 ஆயிரத்து 288 பேரும், இதரர்கள் 106 பேரும் என மொத்தம் 4 லட்சத்து 50 ஆயிரத்து 217 வாக்காளர்கள் உள்ளனர்.

இந்த மாதவரம் சட்டமன்றத் தொகுதிக்கு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் போட்டியிட, தற்போதைய சட்டமன்ற உறுப்பினராக இருக்கக்கூடிய மாதவரம் எஸ்.சுதர்சனம் அவர்களுக்கே, திமுக தரப்பில் மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

தற்போது மாதவரம் தொகுதி மக்களின் கோரிக்கைகளாக இருக்கக்கூடிய பிரச்சினைகள் என்னவென்றால்,
மாதவரம் பகுதியில், 10 ஆண்டுகளாக இதுவரை பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்றப்படவில்லை, குடிநீர் ஏரிகளான சோழவரம், புழல் ஏரிகள் இருந்தும் கூட பாதுகாக்கப்பட்ட குடிநீர் இந்தத் தொகுதியில் வழங்கப்படுவதில்லை, லட்சுமிபுரம், கல்பாளையம்., விநாயகபுரம் ஆகிய பகுதிகளில் சுடுகாடு வசதி இல்லை, அரசு கல்லூரி, நர்சிங் கல்லூரியும் இங்கு இல்லை, ஆந்திர பேருந்து நிலையத்தில் இருந்து கண்டெய்னர் யார்டு வழியாக மேம்பாலம் தேவை,

அண்ணாநகர், திருமங்கலம் வரை உள்ள மெட்ரோ ரயில் திட்டம், மாதவரம் வரை போடப்பட உள்ளது. அதனை செங்குன்றம் வரை அமைக்க கோரிக்கை, செங்குன்றம் பேருந்து நிலையத்தில் மேற்கூரை அமைக்க வேண்டும், செங்குன்றம் பகுதியில் நாள் தோறும் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க வழிவகை செய்ய வேண்டும், மாதவரம் ரவுண்டானா முதல் சோழவரம் சுங்கச்சாவடி வரை 16 கி.மீ. உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும். போன்ற கோரிக்கைகளை இந்த மாதவரம் தொகுதி மக்கள் முன் வைக்கின்றனர்.

மாதவரம் தொகுதி மக்கள் எதிர் பார்க்கக்கூடிய இந்த கோரிக்கைகள் குறித்து, நாம் மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் சுதர்சனம் அவர்களிடம் கேட்ட போது…

மாதவரம் தொகுதி மக்களால் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கபட்ட நான், இந்த அதிமுக ஆட்சியில் இந்த தொகுதி குறித்த பல பிரச்சினைகளை சட்டமன்றத்தில் பேசியும், அதிகாரிகளிடம் போராடியும் பல வளர்ச்சி பணிகளை செய்து இருக்கிறேன்.

அதில் குறிப்பாக, மாதவரம் தாலுக்கா மருத்துவ மனையில் 60 படுக்கைகள் ஏற்படுத்தி கொடுத்திருக்கிறேன், விபத்து மற்றும் அவசர காலங்களில் சிகிச்சை பெறுவதற்காக புழல் பகுதியில் சமுதாய மருத்துவமனை அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது, வழக்குகள் சம்பந்தமாக மாதவரம் தொகுதி மக்கள், திருவெற்றியூர் அல்லது பொன்னேரிக்கு செல்லவேண்டிய நிலைமை இருந்து வந்தது. அந்தப் பிரச்சனையை போக்கும் விதமாக
மாதவரம் பகுதியில் உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மாதவரம் ரவுண்டான முதல் நல்லூர் சோதனைச்சாவடி வரை 16 கி.மீ தூரத்திற்கு மேல்மட்ட பாலம் கட்ட 1,100 கோடி ரூபாயில் திட்ட அறிக்கை தயார் நிலையில் உள்ளது. இந்த மேல்மட்ட பாலம் உருவாக்கப்பட்டு விட்டால் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள புழல், சைக்கிள் ஷாப், காவாங்கரை, சாமியார் மடம், வடகரை, பாலவாக்கம், திருவள்ளூர் கூட்டு சாலை, மொண்டி அம்மன் நகர் போன்ற சாலை சந்திப்புகளில் தற்போது ஏற்படும் போக்குவரத்து நெரிசல்கள் முற்றிலுமாக நீக்கப்படும்,

அதனால் செங்குன்றம் வட்டார பகுதிகளில் போக்குவரத்து நெரிசலும் விபத்துகளும் ஏற்படுவது தவிர்க்கப்படும் வகையில் அமையும் என்றார். நெமிலிச்சேரி-மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் 20 கி.மீ.மாதவரம் தொகுதியில் வருவதால், செங்குன்றம் பகுதிகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க வேண்டி, உடனடியாக அந்த சாலைையை திறக்க சட்ட மன்றத்தில் வலியுறுத்திய தன் விளைவாக, தற்போது திறக்கப்பட்டது.

மோரை ஊராட்சியில் ஆரம்ப சுகாதார நிலையம் ஏற்படுத்தி கொடுத்திருக்கிறேன்.
சென்னையில் வளர்ந்த பகுதிகளாக உள்ள செல்வச்செழிப்பான மக்கள் வாழக்கூடிய வளர்ச்சியடைந்த பகுதிகளான அடையாறு, அண்ணா நகர் போன்ற பகுதிகளை விட கூடுதலாக, மாதவரம் பகுதியில் வரி வசூல் செய்யப்பட்டு வந்தது. மாதவரத்தில் அதிக வரி வசூல் செய்யப்படுவதை சட்ட மன்றத்தில் பேசி, வரியை குறைத்து நடவடிக்கை எடுக்க முயற்சி செய்து வெற்றியும் கண்டேன்.

செங்குன்றத்தில் நெல், அரிசி மண்டி வாகனங்கள் நிறுத்த தனியாக இடம் ஒதுக்கவும், லாரி பழுது பார்க்கும் இடமும் கட்ட கோரிக்கை வைத்துள்ளது. புதிய எருமைவெட்டிப்பாளையம், பழைய எருமைவெட்டி பாளையம் ஆகிய பகுதிகள் வனத்துறை மற்றும் கொசஸ்தலை ஆற்றில்
சூழப்பட்ட பகுதிகள் என்பதால், சாலைகள் இல்லாமல் இருந்த நிலையில், தற்போது 1 கோடி ரூபாயில் சாலை வசதி செய்து தரப்பட்டுள்ளது. மாதவரம் சட்டமன்ற தொகுதியில் உள்ள சோழவரம், வில்லிவாக்கம், புழல் ஒன்றியங்களில் உள்ளடங்கிய 32 ஊராட்சிகளிலும் போர் வசதி செய்து, குடிநீர் வசதி செய்து தரப்பட்டுள்ளது.

கர்லப்பாக்கம் மற்றும் புழல் பகுதியில் பள்ளி கட்டடங்கள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளன.
22-வது வட்டத்தில் மரத்தடியில் இயங்கி வரும் பள்ளி குறித்து சட்டமன்றத்தில் பேசிய நிலையில், கல்வி துறை சார்பில் 2 கோடி ரூபாயில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
செங்குன்றம் பேருந்து நிலையத்தில் 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மேற்கூரை கட்ட ஒப்பந்தம் விடப்பட்டுள்ளது. சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரேஷன் கடைகள் கட்டி தரப்பட்டுள்ளன. என்று தான் செய்த பணிகளை பட்டியலிட்டு, எதிர்கட்சி எம்எல்ஏ என்பதால், பல திட்டங்களை சட்டமன்றத்திலும் அரசு துறை அலுவலகங்களிலும் பலமுறை நேரடியாகச் சென்று போராடியும் செயல்படுத்த முடியமல் பல பணிகள் நிலுவையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. என கூறி ஆதங்கப்படுகிறார், மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் சுதர்சனம் அவர்கள்.

மாதவரம் பகுதியில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் தேவை என்பதால், அப்போது இருந்த திமுக ஆட்சியின் போது, 2011-இல் 55 கோடி ரூபாயில் 90 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நீர் தேக்க தொட்டி கட்ட ஒப்பந்தம் விடப்பட்டும் இதுவரை அந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் கட்டி முடிக்கப்படாமல் உள்ளது. அதனால் மாதவரம் பகுதிகளில் மக்கள் குடிநீர் பிரச்சினையை தீர்க்க முடியாத நிலையில், கடந்த பத்து ஆண்டுகளாக அந்தத் திட்டம் முடக்கி வைக்கப்பட்டுள்ளது.

மாதவரம் நகரில் 600 தெருக்களில் 10 ஆண்டுகளாக பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படவில்லை. புழல் ஏரி உபரி நீர் கால்வாய் சீரமைக்காததால், பல கிராமங்களில் மழைக்காலங்களில் தண்ணீர் புகும் அபாயம் உள்ளது. மாதவரத்தில் உள்ள 14 வார்டுகளிலும், உயர்மின் கம்பிகளுக்கு மாற்றாக புதைவட கம்பி அமைக்க கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை.
இ-சேவை மையங்களில் இணையம் சரியாக செயல்படுவதில்லை. அதனால், மக்கள் எந்த ஒரு சிறிய கோரிக்கை என்றாலும், அரசு அலுவலகங்களுக்கு நேரடியாக அலைய வேண்டிய நிலை உள்ளது. அதேபோல் தொகுதியிலுள்ள பல அரசு அலுவலகங்களில் அரசு அலுவலர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன. அதனால் பல பணிகள், மற்றும் மக்களுடைய கோரிக்கைகள் முடங்கிக் கிடக்கின்றன. மக்களின் பிரச்சினைகளுக்காக, துறை அதிகாரிகளுக்கு இதுவரை நான் 3,000 கடிதங்கள் எழுதி இருக்கிறேன் எனவும், நான், “இதுவரை, சட்ட மன்றத்திற்கு ஒருநாள் கூட விடுப்பு எடுத்தது இல்லை” எனவும் கூறினார்.

G.பாலகிருஷ்ணன்
நிழல். இன் – 8939476777