எண்ணூர் துறைமுகத்தில், பணிபுரியும் பணியாளர்கள் பணி நிரந்தரம் செய்யக்கோரி, “இரு வழிப் போராட்டம்” செய்து வருகின்றனர்…
1 min read
பழவேற்காடு காட்டுப்பள்ளி பகுதியில் தனியார் கப்பல் கட்டும் தளம் அமைந்துள்ளது. அதனால், அந்த துறைமுகத்தை சுற்றியுள்ள மீனவர்களுக்கு வாழ்வாதாரம் இழக்க நேரிட்டதால், அவர்களுக்கு அந்த தனியார் துறைமுகத்தில் வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டது. அதில், காட்டுப்பள்ளி குப்பத்தை சேர்ந்த 144 இளைஞர்களுக்கு 2012 ஆண்டு பணி வழங்கப்பட்டது.

பணி நியமனம் செய்து பல ஆண்டுகள் ஆகியும், இது வரை அவர்களை துறைமுக நிர்வாகம் பணி நிரந்தரம் செய்யப்படவில்லை. ஆகவே, தங்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி, துறைமுகத்தில் பணியாற்றும் இளைஞர்கள் பலமுறை வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போதெல்லாம் துறைமுக நிர்வாகம் அவர்களுக்கு, “இன்னும் சில தினங்களில் பணிநிரந்தரம் செய்கிறோம்” என பலமுறை வாக்குறுதி அளித்தும் இதுவரை அவர்கள் பணி நிரந்தரம் செய்யப்படவில்லை. ஆகவே, அவர்கள் சமீபத்தில் கூட வேலைநிறுத்தப் போராட்டமும், சாலை மறியல் போராட்டம் செய்தனர். அவர்களுக்கு ஆதரவாக அப்பகுதி மக்களும் மறியலில் ஈடுபட்டனர். ஆனால், இதுவரை முடிவு எட்டப்படவில்லை.

இந்நிலையில், இது வரை அவர்களுக்கு ஒரு முடிவு கிடைக்காத சூழ்நிலை நிலவி வந்ததால், இன்று அதிகாலை முதல், தனியார் துறைமுக பணியாளர்கள் மீண்டும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவாக காட்டுபள்ளி குப்பம் கிராம பெண்களும், பெரியவர்களும் சாலைமறியல் செய்து வருகின்றனர். இளைஞர்கள் கடல் வழிப் பாதையை முற்றுகையிட்டு “இரு வழி மறியல் போராட்டமாக” செய்து வருகின்றனர்.

இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த, திருவள்ளூர் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துசாமி, பொன்னேரி கோட்டாட்சியர் செல்வம், திருவள்ளூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அரவிந்தன், பொன்னேரி சரக துணை கண்காணிப்பாளர் கல்பனா தத், பொன்னேரி தாசில்தார் மணிகண்டன், ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று, சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம், சாலை மறியலை கைவிட்டு, விட்டு பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைப்பு விடுத்தனர்.

பொதுமக்கள் சாலை மறியலை கைவிட மாட்டோம், என்று கூறினர். ஆனால், பேச்சுவார்த்தைக்கு அழைத்த அதிகாரிகளின் கோரிக்கையை ஏற்று, பேச்சுவார்த்தை நடத்த ஒப்புக்கொண்டனர். அதன்படி, பேச்சுவார்த்தையில் கிராம பெரியவர்கள் மற்றும் மீஞ்சூர் ஒன்றிய பெருந்தலைவர் ரவி, காட்டுப்பள்ளி ஊராட்சி மன்றத் தலைவர் சேதுராமன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

நிழல். இன் – 8939476777