மீஞ்சூர் ஒன்றியத்தில், மாற்றுத் திறனாளிகளுக்கு, உபகரண பொருட்கள் வழங்கப்பட்டது…
1 min read
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியம் வஞ்சிவாக்கம் பகுதியில் இயங்கி வரக்கூடிய “கற்கை நன்று கிராம கல்வி அறக்கட்டளை” என்ற அமைப்பின் சார்பில், அப்பகுதி இளைஞர்கள் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு பலவித உதவிகளை தொடர்ந்து செய்து வருகின்றனர். இரவுப் பாடசாலைகள் நடத்தியும், புத்தகங்கள், மற்றும் உபகரண பொருட்கள் வழங்கியும், தேர்வில் அதிக மதிப்பெண் எடுக்கும் மாணவ-மாணவிகளுக்கு பரிசு பொருட்கள் வழங்கியும், சிறப்புடன் செயலாற்றி வருகின்றனர்.


அந்த அமைப்பின் சார்பில், தற்போது மாற்றுத் திறனாளிகளுக்கு, “தன் நம்பிக்கையாளர்கள்” என்ற பெயரிட்டு, அவர்களுக்கு உதவும் நோக்கில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள நடக்க முடியாத நிலையில் இருக்கக்கூடிய அனைவரையும் ஒன்றிணைத்து அவர்களுக்கு உதவி பொருள்கள் வழங்கினர். அதன்படி திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 30 பயனாளிகளை தேர்வு செய்து, முதல்கட்டமாக அவர்களுக்கு மெத்தை யுடன் கூடிய புதிய மாதிரியாக வடிவமைக்கப்பட்ட இருக்கைகளும் மற்றும் உபகரணப் பொருட்களும் வழங்கினர்.

இவர்களுடன் இணைந்து, “புதிய தலைமுறை அக்னி சிறகுகள் கிராம சேவை மையம்” மற்றும் “சுவாமி விவேகானந்தர் அறக்கட்டளை” போன்ற அமைப்புகளை சேர்ந்த வடிவேல், கார்த்திக் , நவீன் குமார், உமா ஷங்கர் , கிஷோர்குமார் , ஜானகிராமன், கோபாலகிருஷ்ணன், ஷோபா, பார்த்திபன், ஜாக், ஆகியோர் ஒன்றிணைந்து பயனாளிகளுக்கு உதவிப் பொருட்களை வழங்கினர். மேலும், இந்த அமைப்பினை சேர்ந்தவர்கள் விபத்துகளிலும், திடீரென ஏற்பட்ட உடல்நிலை பிரச்சனைகளாலும் கால்கள் செயலிழந்து நடக்க முடியாத நிலையிலுள்ள, அன்பு உள்ளங்களுக்கு பல வழிகளில் உதவ விரும்புகின்றனர்.

அதில், ஒரு முயற்சியாக நடமாட முடியாவிட்டாலும் கைத்தொழில் செய்ய கூடியவர்களுக்கு அமர்ந்து செல்லக்கூடிய வண்டியிலேயே, எழுந்து நின்று பணி செய்யக்கூடிய வகையில் புதிய விதமாக வடிவமைக்கப்பட்ட மூன்று சக்கர வண்டியை வழங்க திட்டமிட்டுள்ளனர். இந்த அமைப்பினருடன் இணைந்து “தன்னம்பிக்கையாளர்களுக்கு” உதவும் எண்ணம் கொண்டவர்கள் அவர்களை (9345163638) தொடர்பு கொண்டு உதவி செய்ய வேண்டி, “நிழல்.இன்” சார்பில் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

மகிழ்வித்து, மகிழ்வோமே…
G. பாலகிருஷ்ணன்
நிழல். இன் – 8939476777