கும்மிடிப்பூண்டியில் பறக்கும் படை அதிகாரிகள் இறால் பண்ணை உரிமையாளரிடம் இருந்து 3 லட்சம் பறிமுதல்
1 min read
ஆந்திராவில் இருந்து கூவத்தூருக்கு, இறால் குஞ்சுகள் வாங்க சென்றவர்களிடம் இருந்து உரிய ஆவணங்களின்றி எடுத்து செல்லப்பட்ட 3 லட்சம் ரூபாய் கும்மிடிப்பூண்டியில் தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தொகுதி முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் இரண்டு பிரிவுகளாக தொடர்ந்து இரவு பகலாக வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் ஆந்திர-தமிழக எல்லையான பெத்திக்குப்பம் கூட்டு சாலையில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது, கார் ஒன்றை மடக்கி சோதனையிட்ட போது, அதில் உரிய ஆவணங்களின்றி 3 லட்சம் ரூபாய் இருந்தது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து அதனை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படையினர் கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர். அங்கு நடத்தப்பட்ட விசாரணையில், ஆந்திர மாநிலம் நெல்லூர் திருமுள்ளைபாளையத்தை சேர்ந்த சீனிவாசன் (55) மற்றும் மகேந்திரன் (28) ஆகியோர் இறால் குஞ்சுகள் வாங்குவதற்காக தமிழக எல்லை மார்க்கமாக கூவத்தூர் செல்லும் போது உரிய ஆவணம் இல்லாததால் 3 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் தெரியவந்து. இதனையடுத்து, அந்த பணத்தை சீல் வைத்த அதிகாரிகள் கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

நிழல். இன்- 8939476777