திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கு, பிரச்சார வாகனம் வழங்காதது ஏன்? திமுக கட்சியினர் ஆதங்கம்…
1 min read
திருவள்ளுர் சட்டமன்ற திமுக வேட்பாளர் வி ஜி ராஜேந்திரன் அவர்களை ஆதரித்து வாக்கு சேகரிக்க திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வந்திருந்தார். அவருடைய பேச்சை கேட்க, பெண்கள் உட்பட திரளான மக்கள் கூடியிருந்தனர். அங்கு கூடியிருந்த மக்கள் வெகு நேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால், அவர்கள் சோர்ந்து விடாமல் இருப்பதற்காகவும், அவர்களை உற்சாகப்படுத்தும் விதமாகவும், கலைக்குழுவினர் கலைநிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

இப்படி, சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த கூட்டத்திற்கு, திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வந்த உடன் அங்கு கூடியிருந்த திமுகவினர் பலருக்கு அதிர்ச்சியாக இருந்தது. தற்போது திமுகவில் இருக்க கூடியவர்களில், ஒரு மூத்த நிர்வாகி மட்டுமில்லாமல், ஐந்து முறை தமிழகத்தை ஆட்சி செய்த, ஒரு கட்சியினுடைய பொதுச்செயலாளர் அவர் பிரச்சார வாகனத்தில் நின்று பிரச்சாரம் செய்யாமல், வேட்பாளருடைய வாகனத்தில் தட்டுத்தடுமாறி ஏறி போய் நின்று பேசியது, அங்கு கூடியிருந்த திமுக கட்சியினர்களை கவலைப்பட வைத்தது.

மேலும், அவர்கள் நம் காதுபடவே, மற்ற கட்சிகள், காமெடி நடிகர்களுக்கு கூட, தனியாக பிரச்சார வாகனம் ஏற்பாடு செய்து வழங்குகின்றன. ஆனால், திமுகவில் பொது செயலாளருக்கு இந்த நிலைமையா? என, அங்கிருந்த திமுக தொண்டர்கள் பலர் வருத்தப்பட கூறினர். மேலும், தேர்தல் பிரச்சார குழுவினருடைய ஏற்பாடுகள் பல, சிறப்பாக இருந்தாலும், ஒரு பொதுச் செயலாளரின் பிரச்சாரக் கூட்டத்திற்கு 20 அடிக்கு அப்பால் உள்ள பொதுமக்களுக்கு அவர் பேசுவது கூட கேட்காத சூழ்நிலை அங்கு நிலவியது. ஒலிபெருக்கி வசதி சரி வர ஏற்பாடு செய்யாதது, திமுகவினர் பலரை கவலையடைய வைத்தது. கூட்டத்தில் வந்திருந்த பெண்கள் பலருக்கு, துரைமுருகன் என்ன பேசுகிறார் என்பது காதில் விழாத சூழ்நிலையில், வேட்பாளர் வி.ஜி ராஜேந்திரன் கைதட்ட, அவர் கைதட்டுவதை பார்த்து கூட்டத்தினர் கைதட்டினர். இதையெல்லாம் பார்த்த திமுக கட்சியினர் ஆதங்கப்பட்டும், விரத்தியுடனும், அங்கிருந்து கலைந்து சென்றனர் .

தொகுதி மக்களுக்கு பணியாற்றுவதில், என் வாரிசாக வளர்ந்து வருகிறார் வி.ஜி. ராஜேந்திரன், திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் புகழாரம்…

திருவள்ளூர் தொகுதி திமுக வேட்பாளர் விஜி ராஜேந்திரனை ஆதரித்து மணவாளநகர் பகுதியில், திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அவர்கள் பேசுகையில், 10 ஆண்டுகளாக தமிழகத்தில் ஒரு ஆட்சி நடக்கிறது. நடத்தியிருக்கிறார்கள் என்று கூட சொல்ல முடியாது, அப்படிப்பட்ட ஒரு ஆட்சி இங்கு நடக்கிறது.

களப்பிரர்கள் காலம் தான் தமிழர்களின் இருண்ட காலம் என்பார்கள் அதேபோல், இப்போது தமிழகத்தின் இருண்ட காலம் என்றால் அது ஜெயலலிதா, எடப்பாடி ஆண்ட இந்த 10 ஆண்டு காலம் தான், என்றார். இந்த இருளை போக்க, ஸ்டாலின் தான் ஒளிவிளக்காக பி்காசிக்க போகிறார். ஸ்டாலின் என்றாலே உழைப்பு, உழைப்பு, உழைப்பு தான், கருணாநிதி இருந்திருந்தால் இதைவிட மேலும் பாராட்டி இருப்பார், என்றார்.

தேர்தலில் திமுக வெற்றி பெற்று விட்டது, வாக்கு எண்ணிக்கை தான் தேவை, திமுக அதிக பெரும்பான்மையோடு சட்ட மன்றத்திற்கு போவது உறுதி, பிறகு நாட்டை வழி நடத்தப்போவது ஸ்டாலின் தான் , அவர் உடல் நலத்தில் அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும் என பலமுறை நான் அறிவுரை வழங்கியுள்ளேன். அந்தளவுக்கு அவர் இரவு, பகல் பாராமல் நெடுநேரம் தமிழகத்தின் விடியலுக்காக உழைத்துக் கொண்டிருக்கிறார் என, தெரிவித்தார். மேலும், அதிமுக ஆட்சி முறை சரியில்லை, எடப்பாடி ஆட்சி மக்களிடத்தில் ஒளி இழந்து விட்டது, அதிமுக ஆட்சியில் 10 ஆண்டு கால சாதனை என்று எதுவும் அவர்களால் சொல்லமுடியாது எனவும் தெரிவித்தார்.

கருணாநிதி ஆட்சி காலத்தில் ₹1 லட்சம் கோடியாக இருந்த கடன் தொகை, தற்போது ₹7 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது எனவும், கமிஷன் வாங்குவதில் இந்த அரசு முதலிடத்தில் உள்ளது எனவும், சட்ட மன்றத்தில் குட்கா ஊழலை எடுத்து சொன்ன ஒரே எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் தான் எனவும், திருவள்ளூர் தொகுதியின் அதிமுக வேட்பாளர் குட்கா ஊழலில் சிக்கியவர் எனவும் அவர் கூறினார்.

நான் எனது தொகுதியில், 13வது முறையாக வேட்புமனு தாக்கல் செய்து இருக்கிறேன். அதற்கு காரணம் நான் எனது தொகுதியில் மக்களின் தேவையறிந்து செயலாற்றுவது தான். அதேபோல், இந்தத் தொகுதியில் தொகுதி மக்களுடைய தேவையறிந்து செயலாற்றுவதில் ராஜேந்திரன் என்னுடைய வாரிசாக செயல்படுகிறார், என்று பெருமையுடன் கூறினார்.
G. பாலகிருஷ்ணன்
நிழல். இன் – 8939476777