August 3, 2021

காடுவெட்டி குருவின் மகளை, பிரச்சாரம் செய்ய விடாமல், பாமகவினர் தடுத்து மிரட்டியதால், பரபரப்பு…

1 min read

தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 6-ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதில், திமுகவுக்கு மறைந்த வன்னியர் சங்கத்தின் முன்னாள் தலைவர் காடுவெட்டி குருவின் மகள் ஆதரவு தெரிவித்துள்ளார். திமுகவுக்கு ஆதரவாகவும் பிரச்சாரமும் மேற்கொண்டு வருகின்றார். அதன்படி, தமிழக சட்டமன்ற தேர்தலில் சோளிங்கர் சட்டமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியில் வேட்பாளர் ஏ.எம்.முனிரத்தினம் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து, காடுவெட்டி குருவின் மகள் விருத்தாம்பிகை அரக்கோணம் அடுத்த நெமிலி பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டு இருந்தார் .

அப்பொழுது பாமக நிறுவனர் ராமதாஸ் தனது தந்தைக்கு மருத்துவ உதவி செய்யாததால் தான் உயிரிழந்தார் என, குற்றம்சாட்டி பேசியதாக கூறப்படுகிறது. இதை அறிந்த பாமகவை சேர்ந்த சிலர் திடீரென பிரச்சார வாகனத்தின் முன்பு வாக்குவாதத்தில் ஈடுபட்டு தகராறு செய்ததால், அப்பகுதியில் பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டது. உடனே, அங்கு பாதுகாப்புக்கு வந்திருந்த காவல்துறையினர் உடனடியாக, பலத்த பாதுகாப்புடன் பிரச்சாரத்தில் இருந்து காடுவெட்டி குருவின் மகள் விருத்தாம்பிகையை பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர். இதனால் அந்த இடத்தில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

அதே போல், வந்தவாசி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் அம்பேத்குமாரை ஆதரித்து விருதாம்பிகை பிரச்சாரம் செய்தார். அதன்படி வந்தவாசி தேரடி பகுதியில் தனது தேர்தல் பிரச்சாரத்தை முடித்து விட்டு, அடுத்ததாக வந்தவாசி பஜார் வீதிக்கு அவர் பிரச்சாரத்தில் ஈடுபட வந்தார். அப்போது பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த சிலர் அவரை தடுத்து நிறுத்தியதாக கூறப்படுகிறது.
பாட்டாளி மக்கள் கட்சியை சேர்ந்த சில இளைஞர்கள் பஜார் வீதியில் காடுவெட்டி குரு மகள் விருதாம்பிகை மற்றும் திமுக வேட்பாளர் அம்பேத்குமார் சென்ற வாகனத்தை தடுத்து நிறுத்தினர். அப்போது, பாமக தலைவரை பற்றி அவதூறாக பேசக்கூடாது என தகராறு செய்தனர். உடனடியாக அங்கு வந்த போலீசார் தகராறு செய்த இளைஞர்களை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.

 
பின்னர் விருத்தாம்பிகை திமுக வேட்பாளர் அம்பேத்குமார் மற்றும் கூட்டணிக் கட்சியினருடன் பஜார் வீதியில் வாக்கு சேகரித்தார். இதனால் பஜார் வீதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அங்கு மக்கள் கூடிவிடாமல் இருக்க நடவடிக்கை எடுத்தனர்.
முன்னதாக, சேலம் மாவட்டம் மேட்டூரில் விருதாம்பிகை வாக்குசேகரித்த போது, “வன்னியர் அறக்கட்டளை என்பதனை எனது தந்தை குரு இறந்த பிறகு, ராமதாஸ் அறக்கட்டளை என மாற்றியுள்ளனர்” என பரபரப்பாக பேசினார்.  மேலும், “எனது தந்தை மருத்துவமனையில் இருந்தபோது 48 நாட்கள் மயக்க ஊசி போட்டு நினைவு திரும்பாத படி மருத்துவ கொலை செய்தனர்” என்ற பெரிய குற்றச்சாட்டையும் முன்வைத்தார். 

நிழல் . இன் – 8939476777
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed