May 13, 2021

பெரியபாளையம் அருகே, ஆரணி ஆற்றில் வந்த, கிருஷ்ணா கால்வாய் தண்ணீர் கிராமங்களில் புகுந்ததால், மக்கள் அச்சம் அடைந்தனர்…

1 min read

ஆந்திர மாநிலத்தில் இருந்து சென்னை குடிநீர் தேவைக்காக உருவாக்கப்பட்ட, கிருஷ்ணா நதிநீர் கால்வாயில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் கொண்டு வரப்படுகிறது. தற்போது அதில், பல இடங்களில் கரைகள் சேதம் அடைந்து இருப்பதால், அவைகளை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

அதனால், கிருஷ்ணா கால்வாயில் மூலமாக பூண்டிக்கு செல்லக்கூடிய நீரை இடைமறித்து, சிற்றபாக்கம் என்னும் இடத்திலிருந்து அந்த நீரை ஆரணி ஆற்றில் திருப்பி விடப்பட்டுள்ளது. அந்த நீர் ஆரணி ஆற்றில் இருந்து பெரியபாளையத்தை அடுத்து உள்ள, பளையஞ்சேரி ஏரிக்கு செல்லும் வகையில் திருப்பி விடப்பட்டு உள்ளது. இந்த ஏரிக்கு செல்லக்கூடிய வரவு கால்வாய் தூர்வாரபடாமல், மிகவும் மோசமான நிலையில், கரைகள் இல்லாமலும், கால்வாய்க்கு இடையே பல இடங்களில் செடி கொடிகளால் சூழ்ந்த முள்புதர்கள் நிறைந்து இருப்பதாலும், அந்தக் கால்வாய் தண்ணீர் செல்வதற்கு தகுதியற்ற கால்வாயாக இருந்து வருகிறது.

இந்நிலையில், திடீரென ஆரணி ஆற்றில் இருந்து பனையசேரி ஏரிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டதால், கல்பட்டு, மேல்மாளிகைபட்டு, செங்காத்தாகுளம் போன்ற ஊர்களின் வழியாக பெரியபாளையம் தண்டுமாநகர், அம்பேத்கர் நகர், போன்ற பகுதிகளில் கடந்து செல்லும் போது, அந்த கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு, பல இடங்களில் வெளியேறும் ஆற்றுநீர் ஊரின் வயல்வெளிகளிலும், விளைநிலத்திலும், தண்ணீர் பாய்ந்து ஓடுகின்றன .

அதனால், அப்பகுதி மக்கள் சித்திரை மாதத்தின் வெயில் காலத்தில், திடீரென கால்வாயில் தண்ணீர் வந்து ஊரில் உள்ள வயல்வெளிகளில் பாய்ந்ததால், மக்கள் பீதியடைந்தனர். இதுகுறித்து, வருவாய் துறை அதிகாரிகளிடம் கிராம மக்கள் சென்று விசாரித்தால், அதற்கான தகுந்த பதில் இல்லை.

மேலும், இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளை சந்திக்க நேரில் அலுவலகத்திற்கு சென்றாலும், “கடந்த பல நாட்களாக அலுவலகத்திற்கு, யாரும் வருவதில்லை” என, பதில் வருகிறது. பொதுப்பணித்துறை அதிகாரிகளை தொடர்பு கொள்ளவும் முடியாத சூழ்நிலை நிலவுகிறது என, அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

இந்தப் பிரச்சினை குறித்து, பொதுப்பணித்துறை அதிகாரிகளை நாம், பல நாட்களாக தொடர்பு கொள்ள முயன்ற போதும், நேரில் சந்திக்க முடியாத சூழலும், தொடர்பு கொள்ள முடியாத சூழலும் நிலவியது உண்மை தான், என தெரியவந்தது.

G.பாலகிருஷ்ணன்
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *