June 19, 2021

திருவண்ணாமலையில், கொரோனா பரவலை தடுக்க, பூமார்கெட், காய்கறி மார்க்கெட் இடமாற்றம்…

1 min read

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் அருகில் ஜோதி பூ மார்க்கெட் செயல்பட்டு வந்தது . இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட வியாபாரிகள் மாலை கட்டி விற்பனை செய்து வந்தனர். இங்கு கடைகள் அருகருகே நெருக்கமாக உள்ளதால், சமூக இடைவெளியை கடைபிடித்து பொதுமக்கள் மலர்களை வாங்கிச் செல்ல போதுமான வசதி இல்லாமல் இருந்துவந்தது.

இதனை நேற்று ஆய்வு செய்த அதிகாரிகள் அதனை உடனடியாக இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுத்தனர். அதன்படி, ஜோதி மார்க்கெட் மூடப்பட்டு அங்கு கடைகள் வைத்திருக்கும் வியாபாரிகள் திருவண்ணாமலை பஸ் நிலையத்தை தற்காலிக பூமார்க்கெட்டாக பயன்படுத்திக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து இன்று காலை முதல் பூ மார்க்கெட் திருவண்ணாமலை
பஸ் நிலையத்தில் செயல்பட்டு வருகிறது. அங்கு சென்று பொதுமக்களும் , சிறுவியாபாரிகளும் தங்களுக்கு தேவையான பூக்களை வாங்கி செல்கின்றனர்.

மேலும், திருவண்ணாமலையில் சாலையோரங்களில் 100-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் காய்கறி வியாபாரம் செய்து வந்தனர். அவர்கள் அனைவரும்
ஈசானிய மைதானத்தில் சமூக இடைவெளியை கடைபிடித்து காய்கறி வியாபாரம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.அதன்படி, நேற்று முதல் ஈசானிய மைதானம் தற்காலிக காய்கறி சந்தையாக செயல்பட்டு வருகிறது . தினமும் மதியம் வரை செயல்படும் இந்த சந்தையில் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான காய்கறிகளை வாங்கி சென்று வருகின்றனர்.

மேலும் அங்கு சமூக இடைவெளியை கடைப்பிடித்து முக கவசம் அணிந்து பொதுமக்கள் காய்கறிகளை வாங்கிச் செல்கிறார்களா?என்பதை கண்காணிக்க போலீசாரும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதிகாரிகளின் இந்த அதிரடி நடவடிக்கைகளால் திருவண்ணாமலையில் கொரோனா பரவல் விரைவில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படும் என்று தெரிகிறது. மேலும் முழு ஊரடங்கை மக்கள் சிரமமின்றி கடைபிடிக்கவும் இந்த நடவடிக்கை உதவியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

செய்தியாளர் – மூர்த்தி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed