June 19, 2021

முதல்வருக்கு தனது பள்ளி குறித்து கடிதம் எழுதிய, மூன்றாம் வகுப்பு மாணவி, முதல்வர் ஆணைக்கிணங்க, கல்வி அமைச்சர் பள்ளியை ஆய்வு செய்தார்…

1 min read

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை சேர்ந்தவர் பாஸ்கரன், இவர் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். இவருடைய மகள் அதிகை முத்தரசி பொன்னேரி அகத்தீஸ்வரர் கோயில் அருகே உள்ள, மீஞ்சூர் ஒன்றிய அரசு ஆரம்ப பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்தார். இந் நிலையில் ஒருநாள் அதிகை முத்தரசி தனது தந்தையிடம், “தனது பள்ளியில் அடிப்படை வசதி இல்லை” என கூறியுள்ளார். அதை கேட்டு தனது மகள் இந்த வயதில் தான் படிக்கும் பள்ளி வளர்ச்சி குறித்து சிந்திக்கின்றாரே !என்ற ஆனந்தத்தில் பாஸ்கர் மறுநாள் அப்பள்ளி தலைமையாசிரியரை நேரில் சந்தித்து பேசியுள்ளார்.

மேலும், அப்பள்ளி குறித்து விசாரித்த பொழுது அப்பள்ளியின் அடிப்படை வசதிகள் இல்லை என்றும், அப்பள்ளிக்கு சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிப்புக்கு உள்ளாக்கப்பட்டு உள்ளது என்பதும், பள்ளி சீரமைப்பு என்ற பெயரில், பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டாமல் பழைய கட்டிடத்திற்கு வெள்ளையடித்து கணக்கு காட்டி இருப்பதும் தெரியவந்துள்ளது.

உடனே, இது குறித்து திருவள்ளூர் மாவட்ட கல்விதுறை அதிகாரிகளிடம் தனது தந்தையின் வழிகாட்டுதலுடன், மாணவி அதிகை முத்தரசி விளக்கம் கேட்டும் சரிவர பதில் இல்லாததால், சென்னை உயர்நீதிமன்றத்தில் இப் பிரச்சினைகள் குறித்து வழக்கு தொடுத்தார். அதன் அடிப்படையில், உயர்நீதிமன்றமும் பள்ளியின் நிலை குறித்து விளக்கம் அளிக்க அரசுக்கு நோட்டீஸ் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் சரிவர எடுக்கவில்லை, இதற்கிடையே, தன் மகள் படிக்கும் பள்ளியில் அடிப்படை வசதிகள் இல்லாததாலும், அப்பள்ளியின் வளர்ச்சி குறித்து மாணவி அதிகாரிகளிடம் முறையிட்டதாலும், அவருடைய படிப்புக்கு சில இடையூறுகள் ஏற்பட்ட காரணத்தினால், வழக்கறிஞர் பாஸ்கர் இந்த ஆண்டு மூன்றாம் வகுப்பு தனியார் பள்ளியில் சேர்த்து தனது மகள் படிப்பைத் தொடர செய்தார்.

இந்நிலையில், மூன்றாம் வகுப்பு படிக்கும் மாணவி ஆதிரை, புதிய முதல்வராக பொறுப்பேற்றிருக்கும் ஸ்டாலின் அவர்களுக்கு, தான் படித்த பள்ளி குறித்தும், அதற்காக தான் எடுத்த முயற்சிகள் குறித்தும், ஒரு கடிதம் எழுதி முதல்வருக்கு அனுப்பி உள்ளார். அதை படித்த தமிழக முதல்வர் உடனடியாக, கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களை பொன்னேரியில் உள்ள அந்த அரசு ஆரம்ப பள்ளிக்கு நேரில் சென்று ஆய்வு செய்து, அறிக்கை அளிக்க உத்தரவிட்டார்.

அதனை தொடர்ந்து அமைச்சர் இன்று மதியம் அதிகை முத்தரசி படித்த பள்ளியை ஆய்வு செய்தார். அப்போது அவருடன், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பொன்னையா, கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜே.கோவிந்தராஜன், பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உமாமகேஸ்வரி பொன்னேரி ஆர்.டி.ஓ செல்வம், தாசில்தார் மணிகண்டன், மீஞ்சூர் ஒன்றிய குழு தலைவர் அத்திப்பட்டு ரவி, மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலர் வேதநாயகம், மீஞ்சூர் ஒன்றிய திமுக செயலாளர் எம்.எஸ்.கே ரமேஷ்ராஜ், தமிழன் இளங்கோ, ஆகியோர் உடன் இருந்தனர். பள்ளி ஆய்வு செய்த அமைச்சர் பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

“முதல்வருக்கு மனு சிறியவரிடம் இருந்து வருகிறாதா, பெரியவரிடம் இருந்து வருகிறதா, என அவர் பார்ப்பது கிடையாது. மனுவின் உண்மை தன்மை குறித்து அறிந்து எந்த பிரச்சினையாக இருந்தாலும், குழந்தைகள், ஆசிரியர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை வேண்டும்.” என்ற மனநிலையில் முதல்வர் அவர்கள் அறிவுரை வழங்கி என்னை இங்கே அனுப்பி வைத்தார் என கூறினார்.

இந்த பள்ளி அருகே உள்ள சிறிய வழி குறித்த பிரச்சினையில், பொது மக்கள் ஒரு கருத்து சொல்வதாகவும், கருத்து என்பது 2 விதமாக உள்ளதால், மக்களிடமும் கருத்து கேட்கப்படும் எனவும், இந்த பிரச்சனை குறித்து நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளதாகவும்,
“பள்ளிக்கூடம், சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி விடக்கூடாது” என அதிகை முத்தரசியின் தந்தை தெரிவித்ததாகவும், “அதிகாரிகள் முன்னிலையில் மக்களிடம் கருத்து கேட்டு, நீதிமன்றம் என்ன சொல்கிறதோ, அதன்படி நல்ல முடிவை நிர்வாகம் எடுக்கும்,” என உறுதிமொழி தருவதாக கூறினார்.

மேலும், செய்தியாளர்களின் கேள்விக்கு அமைச்சர் பதில் அளிக்கையில்; “தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் தொடர் ஆய்வு நடத்தி பள்ளிகளுக்கு சொந்தமான இடங்களில் ஆக்கிரமிப்பு இருந்தால், அந்த நிலங்கள் மீட்கப்படும்” எனவும், “12ஆம் வகுப்பு மாணவர்கள் பொது தேர்வு குறித்து மாவட்ட கல்வி அதிகாரிகளுடன் இன்று மாலை ஆலோசனை நடத்தப்பட உள்ளதாகவும், பின்னர் நாளை கல்வியாளர்களிடம் ஆலோசனை நடத்திய பிறகு இது குறித்த முடிவு செய்யப்படும்.” எனவும், “மாணவர்களின் உடல் நலன் பாதிக்க கூடாது என்பதில் தமிழக முதல்வர் உறுதியாக இருப்பதால் அதற்கேற்ப நடவடிக்கை எடுக்கப்படும்” எனவும், “திமுக தேர்தல் அறிக்கையில் உள்ள, பள்ளிக்கல்வி துறை சார்ந்த 19 அறிக்கைகள் வருங்காலங்களில் படிப்படியாக நிறைவேற்றப்படும்.” எனவும், “கோடைக்கால விடுமுறையில் பகுதி நேர ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்குவது குறித்து அதிகாரிகளிடம் ஆலோசித்து நல்ல முடிவு அறிவிக்கப்படும்.” எனவும் தெரிவித்தார்.

செய்தியாளர் – பூர்ணவிஷ்வா
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed