June 19, 2021

திருவள்ளூர் அரசு தலைமை மருத்துவமனை, கொரோனா வார்டில், ஆட்சியர் பொன்னையா முழு கவச உடை அணிந்து ஆய்வு செய்தார்…

1 min read

திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா 2-வது அலை காரணமாக நாளுக்கு நாள் தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதன் படி திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 1204 நபர்களுக்கு தொற்று பாதிப்பு உறுதியானதால் இதுவரை 73,443 நபர்களுக்கு தொற்று உறுதியானதாகவும், இன்று ஒரே நாளில் 1,309 நபர்கள் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதாகவும், இது வரை 64,413 நபர்கள் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதாகவும், 17 நபர்கள் உயரிழந்ததால் இதுவரை 921 நபர்கள் உயரிழந்ததாகவும் சுகாதார துறையினர் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில், இன்று திருவள்ளூர் மாவட்ட தலைமை அரசு மருத்துவ மனையில் கொரோனா நோய் தொற்று காரணமாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 7 பேர் உயிரிழந்து உள்ளனர். மேலும் தொற்று பாதிப்புக்கு உள்ளானவர்களை சிகிச்சைக்காக அனுமதிக்காமல் அலைக்கழிப்பதாகவும், இதனால் மருத்துவமனை வளாகத்திலேயே படுத்துகிடப்பதாகவும் ஆட்சியர் பொன்னையவுக்கு கிடைத்த புகாரையடுத்து, அவர் திடீரென நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

முழு கவச உடையுடன் ஆட்சியர் பொன்னையா, மருத்துவமனை டீன் அரசி ஸ்ரீவத்சன், மற்றும் சுகாதார துணை இணை இயக்குனர் ஜவஹர் உள்ளிட்டோர் கொரோனா வார்டில் ஆய்வு மேற்கொண்டனர். ஆக்சிஜன் படுக்கை வசதிகள் காலியாக உள்ளதா என்றும் சாதாரண படுக்கை எத்தனை காலியாக உள்ளது என கேட்டறிந்தார்.

அதனைத் தொடர்ந்து மருத்துவமனை வளாகத்தில் ஒரு சில நோயாளிகள் படுத்திருப்பதையும், நோயாளிகளின் உறவினர்கள் அதிகளவில் இருந்ததையும் கண்ட ஆட்சியர் பொன்னையாா, பணியில் இருந்த மருத்துவர்களை கடுமையாக சாடினார். மேலும், திருவள்ளூர் மாவட்டத்தில் நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் படுக்கை வசதிக்காக 2 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் ஆக்சிஜன் படுக்கை வசதிகள் செய்து தர நடவடிக்கை எடுத்திருப்பதாக ஆட்சியர் பொன்னையா தெரிவித்தார்.

செய்தியாளர் – மகேஷ்
நிழல். இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed