June 21, 2021

ரெம்டெசிவர் மருந்தினை கள்ளச்சந்தையில் விற்பனை செய்வது மனிதாபிமானமற்ற செயல், அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி…

1 min read

சென்னை அடுத்த மாதவரம் தொகுதிக்குட்பட்ட புழல், மாத்தூர் மாநகாரட்சி மருத்துவமனைகளிலும், சூரப்பட்டில் தனியார் கல்லூரியில் உள்ள கொரோனா கேர் சென்டரிலும் தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய; அவர் சூரப்பட்டில் தனியார் கல்லூரியில் உள்ள கொரோனா கேர் சென்டரில் 606 படுக்கைகளில் 327 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும், இந்த கல்லூரி வளாகத்தில் ஒரு வார காலத்தில் இன்னும் கூடுதலாக, 86 ஆக்சிஜன் படுக்கைகளும், 90 சித்தா படுக்கைகளும் ஏற்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட உள்ளது என்றார்.

மாத்தூர், சூரப்பட்டில் கொரோனா படுக்கை வசதிகள் அதிகப்படுத்துவதால், சென்னை புறநகரில் இருந்து சென்னையின் முக்கிய மருத்துவமனைகளுக்கு செல்லும் நோயாளிகளின் எண்ணிக்கை பெருமளவு குறையும் என்றார். சென்னையில் 4நோயாளிகள் படுக்கை வசதி கிடைக்காமல் இறக்கவில்லை என்றும், நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் 850 படுக்கைகளுடன் கூடிய கொரோனா சிகிச்சை மையத்தை அண்மையில் தமிழக முதல்வர் திறந்துள்ளார் எனவும், ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை மற்றும் ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் பாதிப்பை பொறுத்து நந்தம்பாக்கத்தில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்திற்கு அனுப்பப்பட்டு வருகிறார்கள் என்றும் கூறினார்.

தண்டனை, அபராதத்தை தாண்டி மக்களிடம் சுய உணர்வோடு கட்டுப்பாடு இருந்தால் தான் முழு ஊரடங்கு வெற்றி பெறும் என்று அமைச்சர் தெரிவித்தார். வடமாநிலங்களில் நிகழ்வது போல சென்னையில் சடலங்களை எரியூட்ட மயானங்களில் வரிசையில் காத்திருக்கும் அவலம் ஏதும் இல்லை என்றார்.

கொரோனா நோயாளிகள் உயிர்காக்கும் மருந்தான ரெம்டெசிவர் மருந்தை கள்ளச்சந்தையில் விற்பனை செய்வது மனிதாபிமானமற்ற செயல் என்று தெரிவித்தார். 7000 ரெம்டெசிவர் மட்டுமே ஒரு நாளைக்கு மத்திய தொகுப்பில் இருந்து தமிழகத்திற்கு வருகிறது என்றும், சென்னையில் மட்டுமே வழங்கப்பட்ட ரெம்டெசிவர் தமிழகத்தின் முக்கிய நகரங்களில் பொதுமக்களுக்கு கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.

நாள் ஒன்றிற்கு 20,000 ரெம்டெசிவர் மருந்துகளை தமிழகத்திற்கு அனுப்ப தமிழக முதல்வர் தொடர்ந்து பிரதமரிடம் கோரிக்கை வைத்து வருகிறார் எனவும், ஏற்கனவே முதல்வர் பிரமருக்கு அழுத்தம் கொடுத்தன் காரணமாகவே 419டன் ஆக்சிஜன் தமிழகத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

தமிழக அரசே உலகளாவிய ஒப்பந்தத்தின் அடிப்படையில் கொரோனா தடுப்பூசிகளை கொள்முதல் செய்ய ஒப்பந்தகள் தயாராகி வருவதாகவும் தெரிவித்தார். 18 முதல் 45 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்த 46 கோடி ரூபாய் முன்பணம் செலுத்தப்பட்டுள்ளது என்றும், 15லட்சம் டோஸ் தடுப்பூசி எப்போது வேண்டுமானாலும் தமிழகத்திற்கு வந்துவிடும் என்றும், தடுப்பூசிகள் வந்ததும் 18 வயது முதல் 45 வயதுக்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கப்படும் என்று தெரிவித்தார்.

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முன்வரும் தனியார் கல்லூரிகளில் கொரோனா கேர் சென்டர் அமைக்க தமிழக அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

G.பாலகிருஷ்ணன்
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed