June 21, 2021

திருவண்ணாமலையில் கொரோனா நோயால் இறந்தவர்களின் உடலை எடுத்து செல்ல ஆம்புலன்ஸ் வசதி இல்லாததால், ஆட்டோவில் எடுத்து செல்லும் அவல நிலை…

1 min read

திருவண்ணாமலை மாவட்டத்தில், கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது, அந்த வகையில் நேற்று ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவிற்கு 732 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

அவர்கள் அனைவரும் மாவட்டத்தில் 15 மையங்களில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர், திருவண்ணாமலை மாவட்டத்தில் இதுவரை 329 பேர் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக 500 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு 300 படுக்கைகளுக்கு ஆக்சிஜன் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இன்று கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற வருபவர்கள் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு அரைமணி நேரத்திற்கு மேலாக காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது, அது மட்டுமல்லாமல் நோய்தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்களின் உடலை எடுத்து செல்ல ஆம்புலன்ஸ் வசதி இல்லாததால் ஆட்டோவில் எடுத்து செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் 15 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையங்களில் 3044 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், திருவண்ணாமலை மாவட்டத்தில் மேலும் 400 படுக்கை வசதிகள் ஏற்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர் – மூர்த்தி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed