June 21, 2021

அனைத்து தாலுக்காக்களிலும் ஆக்சிஜன் படுக்கைகளுடன் கூடிய கரோனா சிகிச்சை மையம்- தமிழக பால்வள துறை அமைச்சர் உறுதி…

1 min read

கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட திருவள்ளூர் மாவட்டத்தில் அனைத்து தாலுக்காக்களிலும் ஆக்சிஜன் படுக்கைகளுடன் கூடிய கரோனா சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட உள்ளது. என தமிழக பால் வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் கும்மிடிப்பூண்டியில் புதிதாக அமைக்கப்பட்ட கரோனா சிகிச்சை மையத்தினை பார்வையிட வந்த போது தெரிவித்தார்.

தமிழக பால் வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர், கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா ஆகியோருடன் இணைந்து கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனை மற்றும் கும்மிடிப்பூண்டி ஏழுகிணறு பகுதியில் உள்ள ஒருங்கிணைந்த சோதனை சாவடியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்விற்கு திருவள்ளூர் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் கே.வி.ஜி.உமா மகேஷ்வரி, மாவட்ட சுகாதார துறை துணை இயக்குனர் டாக்டர் ஜவஹர்லால், இணை இயக்குனர் டாக்டர் ராணி, திமுக பொதுக்குழு உறுப்பினர் பா.செ.குணசேகரன், மாவட்ட கவுன்சிலர்கள் ராமஜெயம், சாரதம்மா முத்துசாமி, கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் ந.மகேஷ், டிஎஸ்பி ரமேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர் ஸ்டாலின், நடராஜ் முன்னிலை வகித்தனர்.

தொடந்து கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனையில் உள்ள வசதிகள் குறித்து அங்குள்ள மருத்துவர்களிடம் தமிழக பால் வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் கேட்டறிந்தார். அப்போது கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு தேவையான வசதிகள் குறித்து கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் அமைச்சரிடம் எடுத்துரைத்தார். தொடர்ந்து அமைச்சர் சா.மு.நாசர் கும்மிடிப்பூண்டி ஏழுகிணறு பகுதியில் புதிதாக ஏற்படுத்தப்பட்டு உள்ள ஆக்சிஜனுடன் கூடிய 50 படுக்கைகள் கொண்ட கரோனா சிகிச்சை மையத்தை திறந்து வைத்ததோடு, வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கோவிந்தராஜிடம் கும்மிடிப்பூண்டி அடுத்த ஏடூரில் உள்ள டாக்டர் செரியனின் மருத்துவ ஆராய்ச்சி மையத்தில் செயல்படும் 150படுக்கைகளுடன் கூடிய கரோனா சிகிச்சை மையத்தில் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சா.மு.நாசர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி திருவள்ளூர் மாவட்டத்தில் அனைத்து தாலுக்காக்களிலும் ஆக்சிஜன் படுக்கைகளுடன் உள்ள கரோனா சிகிச்சை மையத்தை திறக்க நடவடிக்கை எடுத்து உள்ளதாகவும், அனைத்து பொதுமக்களுக்கும் தரமான முறையில் கரோனா சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தவர், தமிழகம் முழுக்க தடையற்ற முறையில் ஆவின் பால் விநியோகம் நடைபெறுவதாகவும் கூறினார். இந்த நிகழ்வில் திமுக ஒன்றிய துணை செயலாளர் திருமலை, பாஸ்கர், நகர செயலாளர் அறிவழகன், கருணாகரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

செய்திகள் – சுடர்மதி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed