June 19, 2021

கும்மிடிபூண்டியில், கரோனா தொற்று பொதுமுடக்க விதிமுறைகளை மீறினால் நடவடிக்கை, அதிகாரிகள் முடிவு…

1 min read

கும்மிடிப்பூண்டியில் கரோனா தொற்று பாதிப்பு அதிகரித்தும், இறப்பு எண்ணிக்கை கூடி வரும் நிலையில் தொற்று பாதிப்பை குறைக்கும் வகையில் பொதுமுடக்க விதிமுறைகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் முடிவெடுத்துள்ளனர்.
கும்மிடிப்பூண்டி பகுதியில், இறுதி சடங்குகளில் அதிக அளவில் மக்கள் பங்கேற்பதாலும், கடைகளில் சமூக இடைவெளி இல்லாமலும் கூட்டம் சேர்வதால் கரோனா பரவல் அதிகரித்து வருவதும், இறப்பு எண்ணிக்கை கூடுவதும் கண்டறியப்பட்டது.

அதனை கட்டுப்படுத்தும் நோக்கில், கும்மிடிப்பூண்டி டி.எஸ்.பி., முகாம் அலுவலகத்தில் புதன்கிழமை கரோனா நோய் பரவல் தடுப்பு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், கும்மிடிப்பூண்டி டி.எஸ்.பி ரமேஷ், வட்டாட்சியர் ந.மகேஷ், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கோவிந்தராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர் நடராஜன், தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்கள் பங்கேற்றனர்.

கூட்டத்தில், கரோனா தொற்று பரவலை தடுப்பது குறித்து அனைவரது ஆலோசனைக்கு பின் சில முடிவுகள் எடுக்கப்பட்டன. அதன்படி, கரோனா தொற்றில் இறந்தாலும், இயற்கை மரணம் என்றாலும் இறுதி சடங்குகளில் விதி மீறல் காணப்பட்டால் சம்பந்தப்பட்ட ஊராட்சி செயலர், கிராம உதவியாளர் தகவல் அளிப்பர். அதனை தொடர்ந்து, போலீஸ் கண்காணிப்புடன் விதி மீறல் இல்லாமல் இறுதி சடங்கு மேற்கொள்ளப்படும்.
இதேபோன்று சுப நிகழ்ச்சிகளும் கண்காணிக்கப்படும்.

அனைத்து பகுதிகளிலும், அந்த உள்ளாட்சி நிர்வாகம் சார்பில் கபசுர குடிநீர் கொடுப்பது. தொற்றுக்கான முதல் கட்ட அறிகுறி இருக்கும் போதே உரிய பரிசோதனை மேற்கொள்ள மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்றும், மளிகை, காய்கறி கடைகள் தவிர்த்து பிற கடைகள் திறக்கப்பட்டால் நடவடிக்கை எடுப்பதென்றும், ஒரு பகுதியில் இருந்து வேறு பகுதிக்கு கடைகளுக்கு செல்வதை தடுக்கவும், குடும்பத்தோடு கடைக்கு செல்வதை தடுக்கவும் முடிவெடுக்கப்பட்டது.

மேலும், கரோனா நோய் பரவலை கட்டுப்படுத்த பொதுமக்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். கும்மிடிப்பூண்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதிகளில், நோய் பரவல் தடுப்பு விதி மீறல்கள் மீது பொதுமக்கள் தகவல் அளிக்க, 7339667070, என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. தகவல் அளிப்போர் பற்றிய விபரம், ரகசியம் காக்கப்படும் என போலீசார் தரப்பில் கூறப்பட்டது.

செய்திகள் – சுடர்மதி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed