June 17, 2021

நாகை மாவட்டத்தில், பெண் நியாயவிலை கடை ஊழியரை தரக்குறைவாக பேசிய, பிரட்சனையில், பெண் ஊழியர் இடம் மாற்றம் நியாயமா…

1 min read

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியத்தில் அடங்கிய வாழ்குடி ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் சிவகாம சுந்தரி இவருடைய கணவர் விநாயகம், இவர் அதிமுக நிர்வாகியாக இருந்து வருகிறார். அதே ஊரை சேர்ந்த பிரியா என்பவர் அப்பகுதி நியாயவிலை கடையில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இதற்கிடையே, விநாயகம், பிரியாவை செல்போனில் தரக்குறைவாக திட்டிய, ஆடியோ ஒன்று வைரலானது, அதை கேட்ட பெரும்பாலோனோர் ஒரு பெண் ஊழியரை திட்டும் வந்த அதிமுக பிரமுகர் மீது கோபம் அடைந்தனர். நியாயவிலை கடை ஊழியர் சங்கத் நிர்வாகிகள் கொதிப்படைந்து, இது குறித்து நடவடிக்கை வேண்டும் என, உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்தனர்.

இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து, விசாரிக்க நாம் ஊராட்சி மன்ற தலைவர் சிவகாம சுந்தரியின் கணவர் விநாயகத்தை, தொடர்பு கொண்டு பேசியபோது, அவர் மழுப்பலாக அதெல்லாம் ஒன்றுமில்லை, பிரியா அவர்களும் நாங்களும் ஒரே தெருவை சேர்ந்தவர்கள், எங்களுக்குள் நாங்கள் சமாதானம் ஆகிவிட்டோம். இதை தவிர வேறு என்றும் இல்லை, என கூறினார். அதனால், நடந்த சம்பவத்தை தெளிவாக விசாரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில்,
திருமருகல் ஒன்றிய செயலாளரும், ஒன்றியக் குழு தலைவருமான ராதாகிருஷ்ணன் அவர்களை தொடர்பு கொண்டு நாம் பேசியபோது; வால்குடி ஊராட்சி மன்ற தலைவரின் கணவரான விநாயகம் பேசியது தவறு தான், இல்லை என நான் சொல்லவில்லை. ஆனால், அந்த நியாய விலைக்கடை ஊழியரான பிரியா என்ற அந்தப் பெண், தலைவருடைய அதே தெருவை சேர்ந்தவர் என்றும் அவர்கள் குடும்பத்துடன் மிகவும் நெருக்கமாக பழக கூடியவர் என்றும் தெரிய வந்தது. ஆனால், தற்போது அரசு வழங்கிய அந்த டோக்கன்களை அவரும், கூட்டுறவு சங்க செயலாளரும் வீடு,வீடாகச் சென்று வழங்கியுள்ளனர்.

ஆனால், மீதம் இருந்த 60 டோக்கனை அந்த ஊராட்சியின் முன்னாள் தலைவரும், திமுக பிரமுகருமான துரையரசன் என்பவரிடம், பிரியா கொடுத்திருக்கிறார். அந்த டோக்கனை துரையரசனுடைய மகன் விநாயகத்தின் தெருவில் இருக்கும் நபர்களுக்கு நேரில் சென்று வழங்கியிருக்கிறார் .
நியாயவிலை கடை ஊழியரான அந்தப் பெண் மீதம் இருந்த டோக்கன்களை கூட்டுறவு சங்க தலைவராக இருக்கக்கூடிய எங்கள் கட்சியை சார்ந்த பக்கிரிசாமி என்பவர் இடம் கொடுத்திருக்கலாம், அல்லது ஊராட்சி மன்ற தலைவரிடம் கொடுத்திருக்கலாம் அதை விட்டு,விட்டு திமுக நிர்வாகியான முன்னாள் தலைவரிடம் கொடுத்தது தவறு என்று விநாயகம் கொதிப்படைந்து மிகவும் பழக்கப்பட்ட பெண் என்ற உரிமையில் அப்படி பேசி இருக்கிறார், என்றார்.

மேலும், இந்த பிரட்சனை குறித்து,
நாகை மாவட்ட கிராம ஊராட்சி துணை இயக்குனர் மற்றும் திருமருகல் ஒன்றிய ஆணையர் ஆகியோர் இரண்டு தரப்பினரையும் விசாரணை செய்தனர். அதில், அந்தக் கூட்டுறவு சங்கத்துக்கு சொந்தமான 15, 16 கடைகள் உள்ளன. அதில், வேறு ஏதாவது ஒரு கடைக்கு இந்த பெண் ஊழியரை மாற்றம் செய்வது என பேசி முடிவெடுக்கப்பட்டது. மேலும், ஊராட்சி மன்றத் தலைவரும் நியாயவிலைக் கடை ஊழியரும் ஒரே ஊரை சேர்ந்தவர்கள், ஒரே தெருவை சேர்ந்தவர்கள் என்பதனால், இருவரும் ஒருவருக்கு ஒருவர் சால்வை அணிவித்து சமாதானம் அடைந்துவிட்டனர். என கூறினார்.

மேலும், இதுகுறித்து, நாம் பேசுவதற்கு பெண் ஊழியரை தொடர்பு கொள்ள முடியாத நிலையில், நியாய விலை கடை ஊழியர்கள் சங்க மாவட்ட நிர்வாகியான செல்வகுமார் என்பவரை தொடர்பு கொண்டு பேசியபோது, “ஆமாம் சார், அவர்கள் ஒரே பகுதியைச் சேர்ந்தவர் என்பதால் சமாதானமாகி விட்டார்கள்,” என்றார். அதற்கு நாம் அப் பெண்ணை தவறாக பேசியது ஊராட்சி மன்ற தலைவரின் கணவர். ஆனால், அந்தப் பெண்ணை இடமாற்றம் செய்தது ஞாயமா… என கேட்டதற்கு, அவர் “சார் அந்தப் பெண் ஊழியரை யாரும் இடமாற்றம் செய்யவில்லை. அவராக விருப்பப்பட்டு தான் மாறுதல் கேட்டதாக எங்களிடம் கூறினார்.” எனவும், “அந்த ஊராட்சிமன்ற தலைவருடைய குரல் பதிவை, அந்த பெண் ஊழியர் சமூக வலைதளத்தில் பதியவில்லை. ஆனால், அவரை சார்ந்த வேறு யாரோ இதை செய்து விட்டிருக்கிறார்கள்,” எனவும், கூறினார்.

எது எப்படியோ, ஆட்சிமாற்றம் ஏற்பட்டு விட்டால், கலெக்டர் முதல் காவல்துறை உயரதிகாரிகள் வரை ஆளும் கட்சி சார்ந்து பணியாற்றுவது சகஜம் என்று ஆகிவிட்ட இந்த காலகட்டத்தில், அந்த பெண் ஊழியர் எந்த மாதிரியான சூழ்நிலையில் அந்த டோக்கன்களை முன்னாள் தலைவரிடம் வழங்கி இருப்பார் என்பதை அனைவரும் புரிந்துகொள்ளலாம்…

பெண்ணின் அபயக்குரல் கேட்டு, இறந்த கணவனை மீட்டுக் கொடுத்த திருத்தலத்தை கொண்ட அந்த மண்ணில், இப்படிப்பட்ட ஒரு சம்பவத்தை நினைத்து பார்த்தால் வேதனையாக இருக்கிறது. எல்லாம் கடவுளுக்கு தான் வெளிச்சம், விநாயகா…

G.பாலகிருஷ்ணன்
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *