June 19, 2021

போடி அரசு மருத்துவமனைக்கு, ஆக்ஸிஜன் செறிவூட்டும் கருவிக்கு, ஆஸ்திரேலிய பொறியாளர் நிதி உதவி

1 min read

மதுரை விளாங்குடி பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன் காளிமுத்து. இவர் ஆஸ்திரேலியாவில் ஆம்பியான் மென்பொருள் நிறுவனத்தில் ஆய்வு பிரிவு தலைமை அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களில் பலரும் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் இறந்து வருகின்றனர். இதனையடுத்து பாலமுருகன் காளிமுத்து தனது தாயார் நினைவாக தமிழகத்தில் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் ஏழை நடுத்தர மக்களுக்கு உதவிடும் வகையில் ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை வழங்கி வருகிறார். இவரும், இவருடன் பணிபுரியும் சக ஊழியர்களும் நிதி திரட்டி தலா ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பிலான ஆக்ஸிஜன் செறிவூட்டும் கருவிகளை பெங்களூரு, சென்னை, மதுரையில் உள்ள பல மருத்துவமனைகளுக்கு வழங்கி வருகின்றனர். போடியில் உள்ள மருத்துவமனைக்கும் இதுபோன்ற கருவியை வழங்கவேண்டும் என போடியில் செயல்பட்டு வரும் டாடா மனமகிழ் மன்றம் சார்பில் அதன் நிர்வாகிகள் பரணி, ஸ்ரீதர் ஆகியோர் வேண்டுகோள் விடுத்தனர்.

அதன் அடிப்படையில் பாலமுருகன் காளிமுத்து போடி அரசு மருத்துவமனைக்கு ஒரு ஆக்ஸிஜன் செறிவூட்டும் கருவியை வாங்கி அனுப்பி வைத்தார். இந்தக் கருவியை டாடா மனமகிழ் மன்ற நிர்வாகிகள் போடி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் டாக்டர் ரவீந்திரநாத்திடம் வழங்கினர். இக்கருவியின் தொடர் பராமரிப்பு மற்றும் பயன்பாட்டு செலவுகளை டாடா மனமகிழ் மன்றத்தினர் ஏற்றுக் கொண்டனர்.

செய்தியாளர் – அழகர்
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed