June 19, 2021

மண்ணச்சநல்லூர், திருபாஞ்சீலியில், பணபலம் கொண்ட நபரால், வீட்டு சிறையில் வைக்கப்பட்டிருக்கும் குடும்பத்தினரை மீட்க, மனசாட்சி உள்ள அரசு அதிகாரிகள் இல்லையோ…

1 min read

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் தாலுகா இயற்கை வளம் கொண்ட பூமியாகும், அது மட்டுமில்லாமல் 108 பரிகார ஸ்தலங்களில் ஒரு ஸ்தலமான திருப்பாஞ்சலீஸ்வரர் குடி கொண்ட ஊராக இருந்து வருகிறது. திருமணத்தடை உள்ளிட்ட, தடைகளுக்கு பரிகாரம் வழங்கும் இந்த புண்ணிய பூமியில், பணத்தின் பின்னால் ஓடிய கோடீஸ்வரன் கூட இன்று தன்னுடைய தவறுகளை நினைத்து திருந்தி, மனம் வருந்தி வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த கொரோனா தொற்று பரவல் காலத்தில்,
மனசாட்சியே இல்லாமல், “சில குடும்பங்களை வீட்டு சிறையில்” வைத்திருக்கும் கொடுமை இந்த மாணச்சநல்லூரில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது, என்பதுதான் கொடுமையிலும் கொடுமை.

இதற்க்கு பரிகாரம் கேட்டு காவல் நிலையம், வருவாய் துறை என எங்கு ஓடியும் பலன் கிடைக்காத ஒரு அவல நிலை இந்த மண்ணச்சநல்லூரில்
நிலவுகிறது. இங்குள்ள திருப்பாஞ்சலி ஊராட்சியில், நான்காம் பிரகாரம் மற்றும் ஐந்தாம் பிரகாரம் சாலைகைளை இணைக்கும் தெருவான மேலத்தெருவில் வசித்து வரக்கூடிய கணேசன், நீலகண்டன், முருகேசன், ராசு, சுப்பிரமணி, சபாபதி, ஆறுமுகம், உள்ளிட்ட மேலும் பல குடும்பங்கள் அந்த தெருவில் பல தலைமுறையாக வசித்து வருகின்றனர். இந்நிலையில், அப்பகுதிக்கு 90-களுக்கு பிறகு செல்வராஜ் என்பவருடைய குடும்பத்தினர் அந்த தெருவின் முகப்பில் புதிதாக வீடு கட்டி குடியேறி உள்ளனர்.

இவர்கள் இங்கு வீடு கட்டி வந்து 10 ஆண்டுகளுக்கு பிறகு மேலத்தெரு சாலை உள்ளிட்ட பகுதி இவர்களுடைய பத்திரப்பதிவில் பதிந்து இருப்பதாக கூறி, இனி இந்த சாலையை யாரும் பயன்படுத்தக்கூடாது. என, சாலையை மறித்து வேலி அமைத்தனர். இதை சிறிதும் எதிர்பார்க்காத மேலதெருவில் குடியிருக்க கூடிய கணேசன் உள்ளிட்ட அனைவரும் செல்வராஜ் குடும்பத்திடம் போய் முறையிடுகின்றனர். அப்போது, ” இந்த சாலை உள்ளிட்ட பகுதிகள் எங்களுடைய பத்திரப்பதிவில் பதிவாகி உள்ளது. ஆகவே, இந்த இடம் எங்களுக்குச் சொந்தம்” என, கூறியுள்ளனர். அதற்கு அப்பகுதி மக்கள், ” 60 வயதுக்கு மேற்பட்ட நாங்கள் பிறந்து வளர்ந்த இடம் இது தான். என் தந்தை, பாட்டன் உட்பட பலர் இங்கு வாழ்ந்து இருக்கிறார்கள். அவர்களெல்லாம் பயன்படுத்திய சாலை இது. இப்போது நாங்கள் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். பத்து வருடத்திற்கு முன்பு இந்த தெருவிற்கு வந்த உங்களுக்கு இந்த சாலை எப்படி சொந்தமாகும்’ என கூறி அந்த தெருவில் குடியிருப்பவர்கள் முறையிட்டு இருகிறார்கள்.

இவர்களுடைய கூக்குரல் செல்வராஜ் உடைய காதில் விழாததால், அவர்கள் காவல்துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளனர். 2002 – ல் தாசில்தார் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடந்து, அதன் பிறகு அந்த வேலியை அகற்றி இருக்கிறார்கள். இதற்கிடையே, இருதரப்பிலும் மூன்று வழக்குகள் நீதிமன்றத்தில் தொடரப்பட்டு உள்ளது. மேலும், ஊராட்சிமன்ற தரப்பிலும் ஒரு வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வரக்கூடிய சூழ்நிலையில், தற்போது ஒரு மாதத்திற்கு முன்பாக, செல்வராஜ் குடும்பத்தினர் மீண்டும் அந்த சாலையில் பாறைக் கற்களை லாரியில் கொண்டு வந்து, தெருவின் முகப்பில் கொட்டி உள்ளனர். அதனால் அந்த சாலையை பயன்படுத்தக்கூடிய மக்கள் யாரும் வெளியேற முடியாமல் தவித்து வந்தனர். அது குறித்து செல்வராஜ் குடும்பத்திடம் அப்பகுதி மக்கள் முறையிட்ட போது, செல்வராஜ் மற்றும் அவருடைய உறவினர் பெரியசாமி ஆகியோர் கடைபாரை, மற்றும் கட்டையை எடுத்துக்கொண்டு அருகில் நின்றிருந்த மக்களை ஓட, ஓட விரட்டி அடித்திருக்கிறார்கள்.
” நீங்கள் யாரும் இந்தச் சாலையை பயன்படுத்த கூடாது. இந்த வழியாக வந்தால், உங்களை கொன்று விடுவோம்.” என, கூறி மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

பணத்திலும், அரசியல் பலத்திலும் உச்சத்தில் இருக்கும், செல்வராஜ் குடும்பத்தினரை எதிர்த்து மேலத்தெரு மக்களால் ஒன்றும் செய்ய முடியாத சூழ்நிலையில், மனச்சநல்லூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். மேலும், இது குறித்து தாலுகா அலுவலகத்தில் புகார் செய்துள்ளனர். ஆனால், இன்று வரை அந்த பாறை கற்கள் தெருவில் இருந்து அகற்றப்படவில்லை. ஆகவே, அந்த தெருவில் வயதானவர்களும், பெண்களும், குழந்தைகளும் வெளியே போக முடியாமல் அவதிப்படுகின்றனர்.

இந்த பிரச்சினை குறித்து, மேல தெருவை சேர்ந்த கணேசன் என்பவர் நம்மிடம் கூறியபோது, “எங்கள் ஊரில் நடக்கும் கொடுமை எந்த ஊரில் நடக்காது சார், தமிழக அரசு மக்கள் உயிரை காப்பாற்றுவதற்காக ஊரடங்கு பிறப்பித்திருக்கிறது. அதை நாம் அனைவரும் ஏற்றுக் கொண்டு அரசின் அறிவுரையின்படி, வீட்டினுள் தமிழகமே அடங்கிக் கிடக்கிறது. ஆனால், ஊரடங்குக்குள் ஒரு ஊரடங்கு நடப்பது போல் எங்களை, வீட்டுச் சிறையில் வைத்திருப்பது போல, எங்கள் தெருவில் பாறைக் கற்களை கொட்டி, செல்வராஜ் குடும்பத்தினர் எங்களை சிறை பிடித்து வைத்திருக்கிறார்கள். அவர்களிடம் இருந்து எங்களை காப்பாற்ற வேண்டி, காவல் நிலையம் சென்றும், வருவாய் துறை அதிகாரிகளிடம் மன்றாடி கேட்டும், எங்களுக்கு நீதி கிடைக்கவில்லை. இந்த பிரச்சினை குறித்து, 2002 -ல் இருந்து 4 வழக்குகள் நடந்து வருகிறது. ஆனால், அதில் ஊராட்சி நிர்வாகம் தரப்பில் தொடரபட்ட வழக்கில் ஊராட்சி நிர்வாகம் தரப்பில் யாரும் ஆஜராகாததால், அந்த வழக்கு அவர்களுக்கு சாதகமாக தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மற்றபடி மூன்று வழக்குகள் நீதிமன்றத்தில் தற்போது வரை நடந்து வருகிறது. இந் நிலையில், நீதிமன்ற நடவடிக்கையை மீறி நடக்கும் வகையில் செல்வராஜ் குடும்பத்தினர் எங்கள் தெருவில் பாறை கற்களை கொட்டி எங்களை வீட்டுச் சிறையில் வைத்திருக்கிறார்கள்.” என விரக்தியான குரலில் பேசினார்.

இது குறித்து, நாம் ஊராட்சி மன்ற தலைவரை தொடர்பு கொள்ள பலமுறை முயன்றும் பலனில்லை. ஆகவே, காவல் துறை ஆய்வாளர் அவர்களை தொடர்பு கொண்டு இப்பிரச்சினை குறித்து பேசிய போது, அவர் சார்.. இதில் ” இரண்டு தரப்பும் சமாதானமாக போய் கொள்வதாக சொல்லி இருக்கிறார்கள். அந்த வழக்கில் நான் தலையிட முடியாது. வருவாய் துறை அதிகாரிகள் இதில் எந்த வழிகாட்டுதலும் எங்களுக்கு வழங்கவில்லை. ஆகவே, அந்த கற்களை அகற்றுவது குறித்து நாங்கள் எதுவும் செய்ய முடியாது.”என, கூறினார். தெருவில் பெண்களை அடித்து விரட்டிய புகாருக்கு, எதும் நடவடிக்கை நீங்கள் எடுக்கவில்லையா? என கேட்டதற்கு, “அது தான் அவர்கள் சமாதானமாக போய் விடுவதாக கூறி இருக்கிறார்கள் நான் என்ன செய்ய முடியும்” என்று கூறி அவருடைய பதிலை முடித்து கொண்டார்.

தாசில்தார் அவர்களை தொடர்பு கொண்டு பேசிய போது, ” இந்த பிரச்சனையில் நான் எந்த முடிவும் எடுக்க முடியாது. அவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தவும், இது தகுந்த நேரம் இல்லை. ஊரடங்கு நடைமுறையில் உள்ளதால், சமாதான பேச்சுவார்த்தை நடத்த முடியாது.” எனக் கூறி தட்டிக் கழித்துவிட்டார்.

மேலும், இப்பிரச்சினை குறித்து தெளிவான விளக்கம் பெற வேண்டி, மேலத் தெருவில் வசிக்கும் மக்களின் சார்பாக வழக்குகளை நடத்தி வரக்கூடிய, வழக்கறிஞர் ஜெயராமன் அவர்களை தொடர்பு கொண்டு விசாரித்தபோது, இப்பிரச்சனை குறித்து நிதானமாகவும், தெளிவாகவும் விளக்கமளித்தார். ” மேலத்தெரு மக்கள் நீண்ட நெடுங்காலமாக பயன்படுத்திய சாலையை செல்வராஜ் என்ற ஒரு தனி நபர் குடும்பத்தினர் இது தங்களுக்கு சொந்தம் என கூறிக்கொண்டு அடாவடித்தனமான பல சம்பவங்களை அரங்கேற்றி வருகின்றனர். இந்த பிரச்சினை குறித்த வழக்குகள் நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கும் போது செல்வராஜ் தரப்பினர் அடாவடித்தனமாக நான்காம் பிரகாரம், ஐந்தாம் பிரகாரத்தை இணைக்க கூடிய அந்த தெருவை ஆக்கிரமிக்கும் வகையில் பாறைக் கற்களை கொட்டி வைத்திருப்பது சட்டத்திற்குப் புறம்பான செயல் மட்டுமல்லாமல் நீதிமன்றத்தை அவ மதிக்கக் கூடிய ஒரு செயலாகும். அந்த தெருவில் வசிக்கக்கூடிய அனைவருக்கும் மின்சார வசதி, குடிநீர் வசதி, ரேஷன் கார்டு உள்ளிட்டவை அரசு தரப்பில் வழங்கப்பட்டு பல தலைமுறையாக அதே இடத்தில் வசித்து வருகின்றனர். அந்தப் பகுதியில் பொது கிணறு ஒன்றும் உள்ளது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் அந்த சாலையை ஆக்கிரமிக்க கூடிய செயல் ஆணவம் தனமானது “.

மேலும், ” அந்த குடும்பத்தாரை வீட்டு சிறையில் வைக்கும் வகையில் சாலையில் கற்களை கொட்டி, அவர்களுடைய உரிமையை பறிக்க கூடிய வகையில், மனித உரிமை மீறல் தவறையும் அவர்கள் செய்திருக்கிறார்கள். நான் இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் தொடர்பு கொண்டு பேசியபோது, அவர்
” இந்த சம்பவம் மோசமான சம்பவம் என வருத்தப்பட்டதுடன், வட்டாட்சியரை விசாரித்து முதலில் அந்த பாறைக் கற்களை அப்புறப்படுத்த சொல்கிறேன் ” என கூறினார். ஆனால் மணச்சநல்லூர் வட்டாட்சியர் அவர்களும், காவல் நிலைய ஆய்வாளரும் ஒருதலைப்பட்சமாக நடந்து வருகின்றனர். அதிலும் மணச்சநல்லூர் காவல் ஆய்வாளர் அவர்கள் புகார் கொடுத்த நபர்களிடம், ” நீ செல்வராஜ் மீது கொடுத்திருக்கும் புகார்களையும், வழக்குகளையும் வாபஸ் வாங்கு, நான் அந்தக் கற்களை எடுக்க சொல்கிறேன்.” என கூறியிருக்கிறார். இவர்களெல்லாம் எந்த தைரியத்தில் இது போன்ற தவறு செய்த நபர்களுக்கு உடந்தையாக இருக்கிறார்கள், என்று தெரியவில்லை. வட்டாட்சியரும், ஆய்வாளரும் நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு மதிப்பளிக்கும் வகையில், நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. நான், இது குறித்து மனித உரிமை ஆணையத்தில் புகார் அளிப்பது மற்றும் அனைத்து வகையான சட்ட நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறேன்.” என கூறினார்.

எது எப்படியோ… மனிதன் ஒவ்வொருவனும் தான் ஈட்டிய செல்வங்களும், சொத்துக்களும் முக்கியமல்ல. இழந்த நட்புகளையும், உறவுகளையும் தேடி அலையும் வகையில் அனைவருக்கும் கொரோனா தோற்று புத்தி புகட்டி கொண்டிருக்கும் இந்த வேலையிலும், பணம் இருக்கின்றது என்ற ஒரே ஆணவத்தில், சட்டத்தை மதிக்காமல், மனித உணர்வுகளுக்கும் மதிப்பு அளிக்காமல், இது போன்ற மனித உரிமை மீறல் செயலில் ஈடுபடும் இந்த நபர்களையெல்லாம் தண்டிக்க வேண்டாம். புத்திமதி சொல்லி அறிவுரை வழங்க கூட மனம் இல்லாத மாணச்சநல்லூர் அதிகாரிகளை நினைக்கும் போது, நாம் தான், மனம் வருந்த வேண்டியதுள்ளது…

G. பாலகிருஷ்ணன்
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed