August 3, 2021

அதிமுக, ஜாதி கட்சியாக இருந்ததா.. இருக்கிறதா… இருக்கப் போகிறதா….

1 min read

அதிமுக என்ற ஒரு கட்சியும், அதன் சின்னமான இரட்டை இலையும் இன்று தமிழகத்தில் உள்ள பட்டி, தொட்டி எல்லாம் இருக்க கூடிய ஏழை மக்களுடைய இதயங்களில் பின்னிப் பிணைந்திருக்கிறது. அந்தக் கட்சியை எம்ஜிஆர் உருவாக்கவில்லை அனகாபுத்தூர் என்ற ஊரை சேர்ந்த ஒரு நெசவாளர் எம்ஜிஆர் ரசிகராக இருந்தவர் பதிவு செய்து வைத்திருந்த, அதிமுக என்ற கட்சியில் எம்ஜிஆர் தன்னை இணைத்து கொண்டார். பின்னர் அந்தக் கட்சியின் துவக்க விழா 1972ல் மிக பிரமாண்டமாக நடைபெற்றது. பின்னர் அந்த கட்சி 1973ஆம் ஆண்டு திண்டுக்கல் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் முதல் முதலில் தேர்தலில் போட்டியிடக் கூடிய நிலைமை ஏற்பட்டது.

அப்போது அத்தொகுதியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ஒரு வேட்பாளர் சுயேச்சையான சின்னமாக தேர்ந்தெடுக்கப்பட்டது தான், அந்த இரட்டை இலை சின்னம். அந்தத் தேர்தலில் வெற்றி பெற்றதும் அந்த சின்னத்தையே எம்ஜிஆர், அதிமுகவின் நிரந்தரமான சின்னம் என அறிவித்துவிட்டார். அதே போல் அதிமுக சந்தித்த முதல் தேர்தலில் இவருக்கு ஜேப்பியார் என்ற ஒரு தனி மனிதர் 1973 -லேயே திண்டுக்கல் தேர்தல் நிதியாக 20 கோடியை வழங்கியிருக்கிறார். இப்படி எந்த விதமான பெரிய அளவில் திட்டமிடுதலும் பிரமாண்டமான கட்டமைப்பும் இல்லாமல் திடீர், திடீரென உருவான கட்சியும், சின்னமும் அந்தக் கட்சியின் வளர்ச்சியும், இன்று தமிழகத்தில் பிரமாண்ட ஒரு இடத்தை பிடித்து நிலைத்து நிற்கிறது.

எம்ஜிஆர் அந்தக் கட்சியில் இணைந்ததில் இருந்து இன்றுவரை அதிமுகவின் ஆணி வேராக இருந்து வரக்கூடியது, ஏழை, எளிய பொருளாதாரத்தில் வறுமை கோட்டுக்கு கீழ் அடித்தட்டில் இருக்கக்கூடிய மக்கள் தான். இருந்தாலும், அவருடைய மறைவிற்கு பிறகு படிப்படியாக அந்த கட்சியை பலவிதமான போராட்டங்களுக்கு இடையே எம்ஜிஆரை விட அந்தக் கட்சியை பல தரப்பு மக்களிடமும் கொண்டு போய் சேர்த்து, தமிழகத்தில் அந்த கட்சியினுடைய வாக்கு வங்கியையும் அதிகரித்து, இந்திய அளவில் பெரிய மூன்றாவது கட்சி என்ற ஒரு அந்தஸ்தையும் உருவாக்கி விட்டு மறைந்த ஜெயலலிதா அவர்கள் அந்த கட்சி நிர்வாகிகளை ஒவ்வொருவரையும், தன் கண் அசைவில் கட்டிப்போட்டு நிறுத்தி வைத்திருந்தார். அப்படிப்பட்ட ஒரு அதிரடியான, திடமான ஒரு அரசியல் செய்த ஜெயலலிதா அவர்களையே அவர் இருக்கும்போதே, கிட்டத்தட்ட அந்த ஏழை எளிய மக்களின் கட்சியாக இருந்த அதிமுக படிப்படியாக அனைவராலும், தேவர் சமுதாய கட்சி என கூறுமளவிற்கு திரைமறைவில் அக்கட்சியின் ஆளுமைகள் இருந்தன.

இந்நிலையில், ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு முதல்வர் பொறுப்பேற்ற எடப்பாடி பழனிச்சாமி தன்னுடைய ஆதிக்கத்தை ஆட்சியிலும், கட்சியிலும் நிலைநிறுத்த வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக இரண்டாம் கட்ட தலைவராக அவர் சார்ந்த கவுண்டர் சமுதாய அமைச்சர்களையே தன்னுடைய கேடயங்களாகவும், பின் பலமாகவும், நிறுத்தி கொண்டார். அவர் தன்னுடைய செல்வாக்கை கட்சியில் நிலைநிறுத்தி கொள்ள தம்முடைய சமுதாயத்தை தன்னுடைய பின்பலமாக நிற்கவைத்து பயன்படுத்தி வருகிறார் என்பது எந்த ஐயப்பாடும் இல்லை.

காரணம், ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கும் விதமாக, தேர்தலின் போது தேவர் சமுதாய வாக்குகள் சிதற வேண்டும். அதன் மூலம் தேவர் சமுதாய வேட்பாளர்கள் ஓ.பி.எஸ் முதல் அனைவரும் தோல்வி அடைய வேண்டும். என திட்டமிட்டு தான், வன்னியர்கள் 10 சதவிகித ஒதுக்கீடு பிரச்சனையையும், தேவேந்திரகுல வேளாளர்களுடைய இட ஒதிக்கீடு போன்ற பிரச்சினைகளையும் கையில் எடுத்து அதனால், தனக்கும் கொங்கு மண்டலத்தில் போட்டியிடும் தன்னுடைய ஆதரவு வேட்பாளர்களுக்கும் கூடுதல் பலமாக இருக்கும் என்ற காரணத்தின் அடிப்படையில் தான், தேர்தலின் போது பல அதிரடி முடிவுகளை சர்வாதிகாரமாக முடிவெடுத்து நடைமுறைப்படுத்தி அதில் வெற்றியும் கண்டுவிட்டார்.

ஒரு கோடி தொண்டர்களுக்கு மேல் இருக்க கூடிய பலமான கட்சியாக அதிமுக இருந்தாலும், எம்ஜிஆருக்கு பிறகு அந்தக் கட்சி ஒரு சில சமுதாயத்தினருடைய கைகளில் ஏன்? சிக்கிக் கொள்ளக் கூடிய நிலை உருவாகி வருகிறது. எம்ஜிஆர் இருக்கும் போது அனைத்து சமுதாயத்தினருக்கும் பொதுவாக இருந்த அந்தக் கட்சியை அவர் மறைவிற்க்கு
பிறகு திரைமறைவில் தேவர் சமுதாய கட்சியாக இருந்து வந்தது, என்று கூறும் அளவிற்கு அந்தக் கட்சியில் அவர்களுடைய ஆதிக்கம் இருந்தது. அதன் பிறகு தற்போது கவுண்டர் சமுதாய கட்சியாக இருக்கிறது. என அனைவரும் வெளிப்படையாக கூறும் அளவிற்கு சூழ்நிலை நிலவுகிறது. இதே நிலை, நாளை எப்படி இருக்கும் என்று யாராலும் யூகிக்க முடியவில்லை. ஆனால், அனைத்து சமுதாய மக்களுக்காகவும் பொதுவில் இருந்து செயல்பட்ட அதிமுக, நாளை தேவர் கட்சியாக மாறுமா.. அல்லது, கவுண்டர் கட்சியாகவே செயல்படுமா… என தெரியவில்லை.

ஒரு கோடிக்கும் மேற்பட்ட தொண்டர்களை கொண்ட ஒரு மாபெரும் கட்சியின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பது இன்று கேள்விக்குறியாக உள்ளது. அது ஜாதி கட்சியாகவே மாறிப் போகுமா, அல்லது எம்ஜிஆரின் ஆசைப்படி, ஏழை எளிய மக்களின் இதயங்களில் குடி கொள்ளும் அளவிற்கு அனைத்து தரப்பு மக்களுக்கும் சொந்தமாக இருக்குமா.. என்பது கேள்விக்குறியாக உள்ளது.

G.பாலகிருஷ்ணன்
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed