August 3, 2021

சிறுவாபுரி முருகன் கோவிலில் ஊரடங்கு விதிமுறைகளை மீறி, செயல்பட்ட நடிகர் ஐசரிகணேஷ், கோவில் செயல் அலுவலரை, கோயில் அலுவலகத்தில் வைத்து, சிறை பிடித்து கிராம மக்கள் போராட்டம்…

1 min read

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த சிறுவாபுரியில் பிரசித்த பெற்ற பாலசுப்பிரமணியர் சுவாமி கோவில் உள்ளது. ஆறு செவ்வாய் கிழமைகளில் தொடர்ந்து விளக்கேற்றி வழிபாடு நடத்தினால் வேண்டுதல் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது.

இதன் காரணமாக, செவ்வாய் கிழமைகளில் சிறுவாபுரி முருகன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். தற்போது முழு ஊரடங்கு காரணமாக கோவிலில் பக்தர்கள் வழிபாடு நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், செவ்வாய் கிழமையான இன்று சிறுவாபுரி முருகன் கோவிலில் உயர்தர சொகுசு காரில் வந்த குடும்பத்தினரை கோவில் நிர்வாகிகள் தரிசனத்திற்காக உள்ளே அனுமதித்து உள்ளனர்.

அவர்களுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவலறிந்த கிராம மக்கள் கோவிலில் திரண்டு செயல் அலுவலர் நாராயணனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பிரபல கல்வி நிறுவன உரிமையாளரும் திரைப்பட நடிகருமான ஐசரி கணேஷ் குடும்பத்தினர் தரிசனத்திற்க்காக வந்திருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து ஐசரி கணேஷ் குடும்பத்தினரை செயல் அலுவலர் அலுவகத்தில் சிறை பிடித்து கிராம மக்கள் தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.

அரசு விதிகளை மீறி பக்தர்களை அனுமதித்த கோவில் செயல் அலுவலர் நாராயணனை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆரணி போலீசார் அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து ஐசரி கணேஷ் குடும்பத்தினர் கோவிலில் இருந்து வெளியேற்றப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டனர்.

முழு ஊரடங்கால் பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படாமல் இருந்து வரும் நிலையில் பணபலம் படைத்தவர்களை கோவில் நிர்வாகிகள் தங்களது ஆதாயத்திற்காக சாமி தரிசனம் செய்ய வழிவகை செய்வதாக கிராம மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். தமிழக அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை மீறிய செயல் அலுவலர் நாராயணன் மீது அறநிலையத்துறை மற்றும் தமிழ்நாடு அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கின்றனர்.

G.பாலகிருஷ்ணன்
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed