August 6, 2021

திருவண்ணாமலையில், பழுதடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ள பஸ் நிலைய கட்டிடத்தால், பயணிகள் உயிருக்கு ஆபத்து…

1 min read

திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோயில், உலகத்தில் உள்ள இந்து மாதத்தவர்கள் அனைவரும் சிறப்புடன் போற்றுதல் வணங்கக் கூடிய ஒரு திருத்தலமாகும். இந்த திருவண்ணாமலை கோவிலுக்கு ஒவ்வொரு பௌர்ணமி தினத்தன்றும் லட்சக்கணக்கான மக்கள் வெளி மாநிலங்களில் இருந்தும் வெளி மாவட்டங்களில் இருந்தும் வந்து செல்வது வழக்கம்.

இந்நிலையில் அவ்வளவு மக்களும் வந்து செல்லக்கூடிய திருவண்ணாமலை பஸ் நிலையகட்டிடம் மிகவும் பழுதான நிலையில் அபாயகரமாக காட்சியளிக்கிறது. ஏற்கனவே மூன்று முறை பஸ் நிலைய கட்டிடத்தின் மேற்கூரைகள் பெயர்ந்து விழுந்து உள்ளது. தற்போதும் மேற்கூரை பல இடங்களில் இடிந்த நிலையில் காணப்படுகிறது. நகராட்சி உடைந்த பகுதிகளை மறைத்த போதிலும் மீண்டும், மீண்டும் இடிந்து விழுகிறது. அதுவே, நாளையோ அல்லது நாளை மறுநாளோ பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகளின் உயிருக்கு ஆபத்தாக முடிந்து விடலாம் என்று கருதப்படுகிறது.

கொரோனா ஊரடங்கு காரணமாக இந்த பஸ் நிலையத்திலிருந்து பல நாட்களாக பஸ்கள் இயக்கப்படாமல் இருந்து வருகிறது. தளர்வுகள் அறிவிக்கப்பட்டு இருப்பதால் நாளை(28-ந்தேதி) முதல் பஸ் நிலையத்தில் இருந்து பஸ்கள் இயக்கப்பட உள்ளது. மேலும் மழைக்காலம் தொடங்க உள்ளதால், இந்த பஸ் நிலையம் பயணிகள் உயிருக்கு ஆபத்தாக அமைந்துவிடலாம் என்று அனைத்து தரப்பு மக்களும் அஞ்சுகின்றனர்.

எனவே பஸ் நிலையத்தை மாற்று இடத்தில் செயல்பட வைக்க வேண்டும் என்று பயணிகள் கூறி வருகின்றனர். தற்போது உள்ள பஸ் நிலையத்தை நகர பஸ் நிலையமாக மாற்றிவிட்டு வேறு இடத்தில் அனைத்து பகுதிகளுக்கும் செல்லும் ரூட் பஸ் நிலையம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்களும், பக்தர்களும் பல ஆண்டுகளாக கூறிவருகின்றனர் .

புதிய பஸ்நிலையம் அமைக்க அனுமதி கிடைத்த பிறகும், இன்னும் இடத்தை தேர்வு செய்து, பஸ் நிலைய பணிகளை தொடங்காமல் காலம் கடத்தி வருகின்றனர் என்றும், குற்றம்சாட்டுகின்றனர். எனவே, நகராட்சி இனிமேலாவது விழித்துக் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால், திருவண்ணாமலை பொது மக்களுக்கும் திருவண்ணாமலை கோயிலுக்கு வரக்கூடிய லட்சக்கணக்கான பக்தர்களுக்கும் உயிருக்கு பாதுகாப்பு இல்லை என்பது மட்டும் உறுதி.

செய்தியாளர் – மூர்த்தி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed