August 3, 2021

பெரியபாளையம் பகுதியில், தெருக்களில் தேங்கி நிற்கும் மழை நீரை அகற்றவும், சாலைகளை சீரமைக்கவும் பொதுமக்கள் கோரிக்கை…

1 min read

பெரியபாளையம் பகுதியில், எம்.ஜி.ஆர். நகர் பாளையக்கார தெரு, கலைஞர் நகர், கிழக்கு தோட்டக்காரர் தெரு, உள்ளிட்ட தெருக்களில் உள்ள சாலைகள் அனைத்தும், ஏற்கனவே மிகவும் பழுதடைந்த நிலையில் கிடந்தது. அந்த சாலைகளை சீரமைக்க கோரி அப்பகுதி மக்கள் ஊராட்சி நிர்வாகத்திற்கு பலமுறை கோரிக்கை வைத்திருந்தனர். ஆனால், இதுவரை சீரமைக்கவில்லை.

இந்நிலையில், இரண்டு தினங்களுக்கு முன்பு பெய்த லேசான மழையிலேயே அந்த தெருக்களில் மழைநீர் தேங்கி நின்று வீட்டில் உள்ள குழந்தைகளும், பெண்களும் வீட்டை விட்டு வெளியே வர முடியாதபடி முழங்கால் அளவிற்கு தண்ணீர் தேங்கி கிடக்கிறது. இரண்டு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் சகதியில் சிக்கி விபத்துகளுக்கு உள்ளாகின்றனர்.

அந்த தெருக்களின் சாலைகளில் லேசான மழைக்கு கூட ஆங்காங்கே ஏற்பட்டுள்ள பள்ளங்களில் மழைநீர் தேங்கி நின்று அதிலிருந்து கொசுக்கள் உற்பத்தியாகி பல்வேறு தொற்று நோய்கள் ஏற்படும் அபாயமும் உள்ளது. இதுகுறித்து பலமுறை அப்பகுதி மக்கள் ஊராட்சி நிர்வாகத்திடம், “சாலைகளில் மழைநீர் மற்றும் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர்கள் செல்ல கால்வாய் அமைத்து தர வேண்டும்” என பலமுறை கோரிக்கை வைத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தெருக்களின் சாலைகளில் மழை நீர் தேங்கி இருப்பது குறித்து ஊராட்சி மன்ற தலைவர் அவர்களிடம் விசாரித்த போது, ஊராட்சி மன்ற தலைவராக பொறுப்பேற்றதில் இருந்து, தொடர்ந்து இரண்டு முறை கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதிலேயே எங்களுடைய முழு நேரமும் செலவிட வேண்டியதுள்ளது. அது மட்டுமில்லாமல் நாங்கள் பொறுப்பேற்ற பிறகு பெரிய அளவில் அரசு ஊராட்சி நிர்வாகங்களுக்கு நிதி ஒதுக்கவில்லை.

குடிநீர், தெருவிளக்கு வசதி போன்ற அத்தியாவசிய பணிகளுக்கு செலவிடுவதற்கே மிகவும் சிரமமாக இருக்கின்றது. அரசு சாலை அமைப்பதற்கு என்று இதுவரை எந்த விதமான நிதி ஒதுக்கீடும் எங்கள் ஊராட்சிக்கு வரவில்லை. நாங்கள் சாலை வசதி மேம்படுத்த வேண்டி, தீர்மானம் நிறைவேற்றி அதை அரசுக்கு வழங்கி இருக்கிறோம். கூடிய விரைவில் அதற்கான நிதி ஒதுக்கீடு கிடைத்தவுடன் அனைத்து தெருக்களும் சீரமைக்கப்படும், என கூறினார்.

செய்தியாளர் – சீனிவாசன்
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed