July 28, 2021

திருவண்ணாமலை பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில்,
ஒருங்கிணைந்த முதுகெலும்பு மறுவாழ்வு மையம் செயல்படுவதற்கான,
சுகாதாரம் உள்ளிட்ட அரசு சான்றிதழ்கள்
பொதுப் பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு நேரில் வழங்கினார்…

1 min read

திருவண்ணாமலை மாவட்டம், திருவண்ணாமலை நகராட்சி, செங்கம் சாலை, மணக்குள விநாயகர் கோயில் தெரு, சேஷாத்திரி ஆசிரமம் அருகில் வசித்து வரும் ‘தொண்டு நிறுவனத்தின் இணை நிறுவனர் செல்வி. பிரீத்தி சீனிவாசன், கடந்த 05.07.2021 அன்று பொதுப் பணித் துறை அமைச்சர் எ. வ. வேலு , மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆகியோர் திருவண்ணாமலை பழைய அரசு மருத்துவமனை வளாகத்தின் ஒரு பகுதி கட்டிடத்தில் ஒருங்கிணைந்த முதுகெலும்பு மறுவாழ்வு மையம் செயல்படுத்துவதற்கான புதுப்பிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை ஆய்வு மேற்கொண்ட போது, அமைச்சர் பெருமக்களிடம் தனது நிறுவனம் செயல்படுவதற்கு தேவையான பல்வேறு அரசு சான்றிதழ்கள் விரைவில் வழங்க வேண்டி கோரிக்கை மனு அளித்தார். மேலும், இதனை தொடர்ந்து கடந்த 08.07.2021 அன்று சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்களையும் நேரில் சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை செல்வி. பிரீத்தி சீனிவாசன் அவர்கள் நேரில் வழங்கினார்.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடமும், அமைச்சர் பெருமக்களிடம் அளிக்கப்பட்ட கோரிக்கை மனு மீது 2-5 நாட்களில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இன்று (11.07.2021) பொதுப் பணித்துறை அமைச்சர் எ. வ. வேலு அவர்கள் செல்வி. பிரீத்தி சீனிவாசன் வீட்டிற்கு நேரில் சென்று திருவண்ணாமலை பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில் ஒருங்கிணைந்த முதுகெலும்பு மறுவாழ்வு மையம் செயல்படுதவற்கு தேவையான வருவாய்த் துறையின் கட்டிட உரிமம் சான்றிதழ், பொதுப் பணித் துறையின் கட்டிட நிலைத்தன்மை சான்றிதழ், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சுகாதார சான்றிதழ், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையின் தடையின்மை சான்றிதழ், ஆகிய சான்றிதழ்களை வழங்கினார். இந்நிகழ்வின் போது, சட்டப் பேரவைத் துணைத் தலைவர்
கு. பிச்சாண்டி, மாவட்ட ஆட்சித் தலைவர் பா. முருகேஷ், திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி. என். அண்ணாதுரை, சட்டமன்ற உறுப்பினர்கள் மு. பெ. கிரி (செங்கம்),
பெ. சு. தி. சரவணன் (கலசபாக்கம்), அரசு அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் உடன் இருந்தனர்.

திருவண்ணாமலை நகராட்சி, செங்கம் சாலை, மணக்குள விநாயாகர் கோயில் தெருவில் வசித்து வரும் செல்வி. பிரீத்தி சீனிவாசன் தனது 18 வயது வரை மாநில அளவில் நீச்சல் மற்றும் கிரிக்கெட் வீராங்கனையாக திகழந்து வந்துள்ளார். இந்த நிலையில் தேசிய கிரிக்கெட் அணியில் விளையாடும் கனவு நனவாகும் நேரத்தில் அவரது 18 வயதில் எதிர்பாராத விதமாக நடைபெற்ற விபத்தில் கழுத்திற்கு கீழ் முதுகெலும்பு பாதிக்கப்பட்டு முற்றிலும் செயல்பட முடியாமல் முடங்கிப்போனார். இந்நிலையிலும் மணம் தளராமல் தனது குடும்பத்தினர் ஆதரவுடன் தொண்டு நிறுவனத்தை ஆரம்பித்து தன்னை போல் பாதிக்கப்பட்டவர்களின் மறுவாழ்விற்காக பல்வேறு பணிகளை செல்வி. பிரீத்தி சீனிவாசன் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்.

செல்வி. பிரீத்தி சீனிவாசன் கனவு திட்டமான முதுகுதண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களுக்கான மறுவாழ்வு மையம் ஆரம்பிப்பதற்காக, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம்,
தொண்டு நிறுவனத்துடன் 03.12.2019 அன்று புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழத்திடப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின்படி திருவண்ணாமலை நகராட்சி பழைய அரசு மருத்துவமனை வளாகத்தின் ஒரு பகுதி கட்டிடத்தின் தரை மற்றும் முதல் தளங்களில் தொண்டு நிறுவனத்தின் ஒருங்கிணைந்த முதுகெலும்பு மறுவாழ்வு மையம் நிறுவுவதற்கும், கட்டிடத்தை சீரமைக்கவும், புனரமைக்கவும், உள்கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளவும் அனுமதி அளிக்கபட்டது. மேலும், மறுவாழ்வு மையம் செயல்படுத்துவதற்கு தேவையான உரிமம், அனுமதி, அங்கீகாரம் ஆகியவை அரசிடம் பெற்றுக் கொள்ளவும் தெரிவிக்கப்பட்டதுு

.

திருவண்ணாமலை பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில் செயல்படவுள்ள ஒருங்கிணைந்த முதுகெலும்பு மறுவாழ்வு மையம், முதுகுதண்டுவடம் பாதித்தவர்களுக்கான குறுகிய காலம் தங்கும் மையமாக அமைக்கப்படுகிறது. முதுகுதண்டுவடம் பாதிக்கப்பட்டவர்கள் அடுத்தவர்களின் உதவியுடன் மட்டும் தான் எந்த பணிகளையும் செய்ய முடியம். இம்மையம் செயல்பாட்டிற்கு வருவதன் மூலம் முதுகுதண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்படும் படுக்கை புண் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளுக்கு, அனைத்து மருத்துவ வசதிகளுடன் முழுமையான சிகிச்சை அளிக்கப்பட்டு வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் அந்த அளவிற்கு அந்த மையத்தில் அனைத்து வசதிகளும் தற்போது ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

செய்தியாளர் – மூர்த்தி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *