August 6, 2021

காமராஜரை, போற்றி பாதுகாத்த, திராவிட தலைவர்கள்…

1 min read

கடவுளும் தெய்வமாகலாம் என்ற வார்த்தையை உண்மையாக்கி காட்டியவர், கோடான கோடி மக்களின் இதயங்களில் குடி கொண்டவரான காமராஜர். இவர் மனித உருவில் வாழ்ந்து மறைந்த தெய்வம் என்று தான், மக்கள் நினைக்கின்றனர். இதற்கு காரணம் அவர் தன்னலமில்லாமல் வாழ்ந்த வாழ்க்கை தான், ஆறாம் வகுப்பு வரையே படித்தவர் தன்னுடைய சிறு வயதிலேயே நாட்டுப்பற்றை மனதில் ஏற்றுக் கொண்டார். காந்தி மீது பற்று கொண்டு அவர் அறிவித்த அனைத்து போராட்டங்களிலும் கலந்து கொண்டு பலமுறை சிறை சென்றவர். தன்னுடைய தன்னலமில்லாத குணத்தாலும், உறுதியான செயல்பட்டாலும், தமிழக காங்கிரஸில் வேகமாக உயர்ந்தவர். மாநில அளவில் அவர் வளர்ந்து வந்ததும் ஆதிக்க புத்தி கொண்ட சிலரால் பல இன்னல்களை காமராஜர் சந்திக்க நேர்ந்தது.

அவைகளை எல்லாம் சாதுர்யமாக வென்று சாதித்து அவர்களையே நிலை கொள்ள விடாமல் சாய்த்த சாதனையாளர். அவர் பெரிய அளவில் படிக்காத நிலையிலும் இவருடைய திறமையான நிர்வாகத்தை பார்த்து வியந்த ஜவகர்லால் நேரு இவரை மிகவும் நேசிக்க தொடங்கி தான் ஒரு பிரதமர் என்ற கர்வம் கொள்ளாமல், தமிழக முதல்வராக இருந்த காமராஜரிடம் பல சமயங்களில் குருவிடம் ஆலோசனை கேட்பது போல், இவருடைய ஆலோசனையை ஏற்று இவர் அமைத்துக் கொடுத்த பாதையில் அவர் பயணித்துள்ளார்.

இந்தியாவில் தொடர்ந்து 14 ஆண்டுகள் ஆட்சி செய்த நேரு தன் உடல் நிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருந்த போது, சிறந்த நிர்வாகத் திறமை கொண்ட காமராஜரை காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவராக பொறுப்பேற்க செய்தார். தனக்கு ஏதேனும் நேர்ந்தால் தனக்குப் பின்னால் காமராஜர் தலைமையில், லால்பகதூர் சாஸ்திரி, குல்சாரிலால் நந்தா, ஆகியோர் கொண்ட கூட்டுக்குழு இந்தியாவை வழி நடத்த வேண்டும் (ஆட்சி செய்ய வேண்டும்) என கூறினார். அந்த அளவிற்கு நேரு, காமராஜரின் திறமை மீது நம்பிக்கை வைத்து இருந்தார். நேருவின் மறைவிற்கு பின்னர் இந்தியாவில் சாமானியன் முதல் உலக நாடுகளின் தலைவர்கள் வரை, “இந்தியா இனி என்னாகுமோ” என எண்ணி பயந்த நிலையில், காமராஜர் காங்கிரஸில் இருந்த அனைவரையும் பேச்சுவார்த்தையின் மூலம் பிரச்சனைகளை எல்லாம் சரி செய்து, ஆறே நாளில் லால்பகதூர் சாஸ்திரியை பிரதமராக ஆக்கியவர்.

அவரும் குறுகிய காலத்திலேயே இறந்து விடவே, அந்த இக்கட்டான சூழ்நிலையிலும் இந்திரா காந்தியை பிரதமராக தேர்வு செய்ததற்கு மொரார்ஜி தேசாய் எதிர்ப்பு தெரிவிக்கவே, அவரை எதிர்த்து தேர்தலில் இந்திரா காந்தி வெற்றி பெற மாநிலம், மாநிலமாக சுற்றி அனைவரையும் தன் பக்கம் இழுத்து தேர்தலில் இந்திரா காந்தியை வெற்றி பெறச் செய்து, அவரையும் பிரதமர் ஆக்கிய பெருமைக்குரியவர் காமராஜர். தனது கட்சியில் தேசிய அளவில் அனைவரிடமும் அவர்களின் அன்பை பெற்று, வெற்றி கண்டாரோ… அதே போல், மாற்றுக் கட்சியினரும் அவர் மீது அன்பும், மரியாதையும் செலுத்தும் அளவிற்கு அவருடைய செயல்பாடுகள் பரந்த மனப்பான்மையுடன் இருக்கும்.

உதாரணமாக, தமிழகத்தில் காங்கிரஸின் நேர் எதிர் திராவிட கட்சிகளின் தலைவராக இருந்தவர்களும் காமராஜரை மரியாதையுடன் நடத்தி உள்ளனர். அதில் பெரியார், காமராஜரை மிகவும் நேசித்தார். காங்கிரஸில் காமராஜர் வளர்ச்சியடைய பல நிலைகளில் பெரியார் அவருக்கு உதவியாக இருந்திருக்கிறார். ஆதிக்க மனப்பான்மையுடன் சிலர் காமராஜரை அடக்க நினைத்த போதெல்லாம், பெரியார் காமராஜருக்குப் பின் பலமாக நின்று ஒரு தமிழன் வெற்றி பெற வேண்டும், எனக் கூறி உள்ளார். காமராஜர் மூன்றாவது முறை முதல்வராக இருந்தபோது தேசிய அரசியலில் ஈடுபட வேண்டி, தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். அப்போது பெரியார் பொதுகூட்ட மேடையிலேயே
” இப்படிப்பட்ட தலைவர் அடுத்த நூறு ஆண்டுகளுக்கு நமக்கு கிடைப்பார்களா, என எனக்கு தெரியாது, ஆகவே அவரை போக விடாதீர்கள் ” என மக்களிடம் பகிரங்கமாக பேசியுள்ளார்.

அவரை போலேவே அண்ணாவும், தேர்தலில் வெற்றி பெற்றவுடன் காமராஜரிடம் நேரடியாகச் சென்று வாழ்த்து பெற்றார். அதேபோல், ” நாங்கள் காங்கிரசை தான் தோற்கடிக்க நினைத்தோமே தவிர, காமராஜரை தோற்கடிக்க ஒரு நாளும் நாங்கள் நினைக்கவில்லை ” என கூறி உள்ளார். பொதுக்கூட்டங்களில் திமுகவினர் விருதுநகரில் வெற்றி பெற்ற சீனிவாசனை ஒருவர் குறிப்பிடும் போது, காமராஜரை வென்றவர் என கூறினார். உடனே, அண்ணா எழுந்து, ” காமராஜரை யாராலும் வெல்ல முடியாது, விருதுநகரில் வென்ற சீனிவாசன் என கூறுங்கள் ” என அவர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.

சீனிவாசன் தனக்கு அமைச்சர் பதவி வேண்டும் என அண்ணாவிடம் கேட்டபோது, ” அண்ணா உனக்கு அமைச்சர் பதவி வழங்கினால், அது காமராஜரை அசிங்கப்படுத்துவது போல் ஆகிவிடும். ஆகவே, அதை எதிர்பார்க்காதே ” எனக் கூறி அனுப்பினார். திமுகவினர் மாநகராட்சி கூட்டத்தில் அண்ணா சிலை வைக்க வேண்டும் என பேசியதற்கு, ” முதலில் காமராஜர் சிலை வையுங்கள் ” என கூறி உள்ளார்.

அதேபோல், கலைஞர் அவர்கள் அவசரகால சட்டத்தின் போது, காமராஜரை கைது செய்ய சொல்லி ஒன்றிய அரசு கட்டளையிட்ட போது,
” அவரை நான் கைது செய்யமாட்டேன் ” என கூறியது மட்டும் இல்லாமல், அவருக்கு பாதுகாப்பை அதிகரித்து வழங்கினார்.
மேலும், உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருந்த காமராஜரை, முதல்வர் கலைஞர் அவர்கள் அவருடைய 72 ம் பிறந்தநாள் அன்று தனது அமைச்சர்களுடன் நேரில் சென்று அவருடைய உடல் நலம் குறித்து விசாரித்து, பின் பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார்.

எம்.ஜி. ஆரும், ” காமராஜர் என் தலைவர், அண்ணா எனது வழிகாட்டி ” என, பொது வெளியில் பேசினார். அதனால் பலர் எம்ஜிஆரை பற்றி அண்ணாவிடம் இதுகுறித்து குறை கூறியபோது, அண்ணா அதை பெரிதுபடுத்திக் கொள்ளவில்லை. காமராஜரின் 60வது பிறந்தநாள் விழா மலரில் எம்ஜிஆர் அவரை புகழ்ந்து கூறினார். அப்போதும் அண்ணா அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. திராவிட சிந்தனையுடன், தேசிய அளவில் புகழ் பெற்று விளங்கிய அந்த மாமனிதரை, திராவிட தலைவர்கள் பெரியார், அண்ணா, கலைஞர், எம்ஜிஆர் என அனைவரும் காமராஜரை புகழ்ந்தும், அவருடைய இறுதிக் காலத்தில் பாதுகாத்தும், அவருக்கு மரியாதை செய்து இருக்கிறார்கள் என, நினைக்கும் போது மிகவும் மகிழ்ச்சியாகவும், நெகிழ்ச்சியாகவும் உள்ளது.

G.பாலகிருஷ்ணன்
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed