August 6, 2021

தமிழகத்தில், டீசல் பற்றாக்குறையை சரி செய்யும் வகையில், விரைவில் எலக்ட்ரிக் பேருந்துகள் இயக்கப்படும், அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் தகவல்…

1 min read

தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் கும்மிடிப்பூண்டியில் பேருந்து பணி மனைக்கான இடம், அம்மா குடிநீர் தொழிற்சாலை, சாலை போக்குவரத்து நிறுவனம் ஆகியவற்றை ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்விற்கு போக்குவரத்து துறை கூடுதல் தலைமை செயலாளர் தயானந்த கட்டாரியா ஐஏஎஸ், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ், கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன், மாவட்ட ஊராட்சி தலைவர் உமா மகேஷ்வரி, கோட்டாட்சியர் செல்வம், வட்டாட்சியர் மகேஷ், டிஎஸ்பி எஸ்.ரித்து, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வாசுதேவன், நடராஜன், போக்குவரத்து ஆய்வாளர் காவேரி முன்னிலை வகித்தனர்.

தொடர்ந்து கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகம் அருகே பேருந்து பணிமனைக்கான இடத்தை அமைச்சர் ஆய்வு செய்தார். இதனை தொடர்ந்து அம்மா குடிநீர் தொழிற்சாலை செயல்படும் விதம், சாலை போக்குவரத்து நிறுவனம் செயல்படும் விதத்தை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின் போது பேசிய அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், தமிழகத்தில் பேருந்துகளில் இலவச பயணம் செய்ய 40% மகளிர் பயணிகளை எதிர்பார்த்த நிலையில் தற்போது 60% மகளிர் ஒவ்வாரு பேருந்திலும் பயணிக்கின்றனர். தமிழகத்தில் இலவசமாக பேருந்தில் பயணம் செய்யும் பெண்கள், மூன்றாம் பாலினத்தவர், மாற்று திறனாளிகள், அவர்களது உதவியாளர்களுக்கு டிக்கெட் வழங்கப்பட்டு அதன் மூலம் ஒரு நாளில் எத்தனை பேர் இலவசமாக பயணிக்கின்றனர் என கணக்கிடப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் 19200அரசு பேருந்துகளில் 17,527 பேருந்துகள் இயக்கப்படுகிறது, சென்னை மாநகரத்தில் மட்டும் 2,650பேருந்துகளில் 2,250 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது என்றார்.
தொடர்ந்து பேசியவர், போக்குவரத்து கழகத்தில் உள்ள இடர்பாடுகள் இந்த மாதத்திற்குள் சரி செய்யப்படும் என்றும்,

போக்குவரத்து துறையில் லஞ்சம், இடைதரகர் இல்லாமல் இதற்கு முன் இல்லாத வகையில் போக்குவரத்து நிர்வாகம் சிறப்பாக இருக்கும் என்றவர், நகரங்களில் இயக்கப்படும் பேருந்துகளில் பெண் பயணிகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்றார். மேலும், தமிழகத்தில் 9லட்சம் கிலோ மீட்டர் தொலைவு இயங்கிய பேருந்துகள் மற்றும் 12வருடம் பயன்பாட்டில் இருந்த பேருந்துகள் இயக்கம் நிறுத்தப்பட்டு அதற்கு பதிலாக புதிய பேருந்துகள் இயக்கப்படும் என்றவர் ஜெர்மன் நாட்டு நிறுவனத்திடம் இருந்து 2,000டீசல் பேருந்துகளும், பெட்ரோல் தேவையை குறைக்கும் நோக்கில் எலக்ட்ரிக் பேருந்துகளும் வாங்கப்படும் என்றார்.

அதே போல, கும்மிடிப்பூண்டியில் 4.70ஏக்கரில் பணி மனை அமைக்கப்படும் என்றும் அதற்கான அறிவிப்பு வரும் பட்ஜெட் தொடரில் அறிவிக்கப்படும் என்றவர், கரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட அனைத்து பேருந்துகளும் மீண்டும் இயங்குவதோடு, கடந்த ஆட்சியில் நிறுத்தப்பட்ட மினி பேருந்து சேவையும் மீண்டும் இயக்கப்படும் என்றார்.

மேலும், போக்குவரத்து தொழிலாளர்கள், போக்குவரத்து அலுவலக தொழிலாளர்களின் பிரச்சனைகள் குறித்து அதிகாரிகளுடன் பேசி முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என்றவர், 7,000டிரைவர், கண்டெக்டர் பணியிடங்கள் நிரப்படும் என்றார்.
தமிழத்தில் 33,000கோடி நஷ்டத்தில் இயங்கும் போக்குவரத்து துறையை லாபகரமானதாக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றவர்,

கரோனா தொற்று காலம் முடிந்து கல்லூரி, பள்ளிகள் திறக்கப்படும் நேரம் தனியார் கல்லூரி, பள்ளி பேருந்துகள் இயக்கம் செய்ய உரிய பரிசோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படும் என்றார். நிகழ்வில் மாவட்ட கவுன்சிலர்கள் சாரதா முத்துசாமி, ராமஜெயம், ஒன்றிய குழு துணை தலைவர் மாலதி குணசேகரன், எண்ணூர், பாடியநல்லூர் பணிமனை தொழிலாளர் முன்னேற்ற சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.

செய்திகள் – சுடர்மதி
நிழல். இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed