August 6, 2021

திருவண்ணாமலையில், 15 நாட்களாக தவித்த முதியவரை மீட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைத்த சமூக சேவகர்…

1 min read

நினைத்தாலே முக்தியளிக்கும் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரரை ஒரு முறையாவது தரிசனம் செய்ய வேண்டும் என்பது அனைத்து மக்களின் விருப்பமாகும். இந்த ஆசை காரணமாக பல்வேறு இடங்களிலிருந்தும் பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வந்து செல்கின்றனர்.

திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஜனார்த்தன நாயுடு (வயது87)என்பவருக்கும் அருணாச்சலேஸ்வரரை தரிசனம் செய்ய வேண்டும் என்ற ஆசை வெகு நாளாக இருந்து வந்தது. தனது ஆசையை நிறைவேற்றிக் கொள்ளும் வகையில் அவர் கடந்த 15 நாட்களுக்கு முன்பு தனது குடும்பத்தினரிடம் எதுவும் சொல்லாமல் திருவண்ணாமலைக்கு வந்து விட்டார். அவர் ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களில் வந்திருக்கலாம் என்று தெரிகிறது. ராஜகோபுரம் வரை வந்து விட்ட அவரால் கோவிலுக்குள் சென்று அருணாச்சல சுவாமி தரிசனம் செய்ய முடியவில்லை.

தனது இரண்டு கால்களும் புண்களாக இருப்பதால் அவரால் சரியாக நடக்க முடியவில்லை. இதனால் அவர் மிகவும் அவதிப்பட்டு வந்தார். கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால் அவரால் எங்கும் தங்கமுடியவில்லை. இந்த நிலையில் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் தேரடி அருகில் இரண்டு கால்களும் நடக்க முடியாத நிலையில் முதியவர் ஒருவர் சிரமப்பட்டு வருவதாக பொதுமக்கள் சமூகசேவகர் மணிமாறனுக்கு தகவல் கொடுத்தனர்.

அதை தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த மணிமாறன் நேற்று முதியவருக்கு தேவையான உதவிகளை செய்து அவர் யார்? எதற்காக இங்கு வந்தார் ? என்று விசாரித்த போது பல்வேறு தகவல்கள் தெரியவந்தன. அவரிடம் ஆதார் கார்டு மற்றும் சில போன் நம்பர்கள் இருந்தன. அதனைத் தொடர்பு கொண்டு விசாரித்த போது அவர் திருவள்ளூர் மாவட்டம் காக்கலூரைச் சேர்ந்த ஓமியோபதி டாக்டர் என்பதும் , அவரை குடும்பத்தினர் கடந்த 15 நாட்களாக தேடி வருவதும் தெரியவந்தது.

இதை தொடர்ந்து மணிமாறன்
” நீங்கள் இங்கு தனியாக இருப்பது நல்லதல்ல குடும்பத்தினருடன் சேர்ந்து இருப்பது பாதுகாப்பு ” என்று தெரிவித்து அவரது அனுமதியுடன் உறவினருடன் பேசியுள்ளார். அப்போது அவர்கள் ,அவரை தான் தாங்கள் தேடி வருவதாக தெரிவித்து, அவரை சொந்த ஊருக்கு அழைத்து வரும்படி கேட்டுக் கொண்டுள்ளனர்.

அதனை ஏற்று நேற்று மணிமாறன் முதியவர் ஜனார்த்தன நாயுடுவை அழைத்து சென்று அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைத்தார். அவரை கண்ணீர் மல்க வரவேற்ற அவரது மனைவி மற்றும் மகள், உறவினர்கள் சமூக சேவகருக்கு தங்கள் நன்றியை தெரிவித்தனர். தாங்கள் உடனே அழைத்து வராவிட்டால் அவரை நாங்கள் பார்க்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டிருக்கும் என்று கூறினர்.

செய்தியாளர் – மூர்த்தி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed