August 6, 2021

திருவண்ணாமலையில், கொட்டும் மழையில் பக்தர்கள் கிரிவலம் சென்றனர், தங்க வசதியின்றி சாமியார்கள் தவிப்பு…

1 min read

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் ஆனி பிரம்மோற்சவ விழா கடந்த 7-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வந்தது. இதையொட்டி தினமும் சிறப்பு வழிபாடுகள், பிரகாரத்தில் சாமி உலா ஆகியவை நடைபெற்று வந்தது.

நேற்று ஆனி பிரம்மோற்சவ விழா நிறைவு விழாவை முன்னிட்டு மதியம் 12 மணியளவில் அளவில் கோவில் வளாகத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக சாமி சன்னதியில் இருந்து சிறப்பு அலங்காரத்தில் அம்பாளுடன் சந்திரசேகரர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
பின்னர், கோவில் வளாகத்தில் பெரிய நந்தி பின்புறம் உள்ள மண்டபத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது.

அப்போது மங்கள வாத்தியங்கள் வேதமந்திரங்கள் முழங்க, சிவாச்சாரியார்கள் திரிசூலத்துக்கு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் செய்தனர். அதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.
இதைத்தொடர்ந்து நேற்று இரவு பல்லக்கில் சுவாமி உலா நடைபெற்றது. பிரகாரத்தில் சாமி- அம்பாள் வந்தபோது மழை பெய்தது.

இந்த மழையை பொருட்படுத்தாமல் பக்தர்கள் நனைந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
இந்த நிலையில், ஆடி 1-ம் தேதியை முன்னிட்டு திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் இன்று காலை ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். மேலும் 1000-த்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கிரிவலம் சென்றனர். பல நாட்களுக்கு பிறகு இன்று தான் அதிக அளவில் பக்தர்கள் கிரிவலம் சென்று வருகின்றனர்.

நாளை ஞாயிற்றுக்கிழமை என்பதால், பக்தர்கள் வருகை அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் கிரிவலப்பாதையில் தங்கியிருக்கும் சாமியார்கள் இரவில் தூங்க முடியாமல் மிகுந்த அவதிப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு தங்க போதிய இட வசதிகள் செய்து கொடுக்காததால் நடைபாதையில் செட் அமைத்து அதற்குள் முடங்கி கிடக்கின்றனர். வெறும் தார்ப்பாய் மட்டும் போட்டிருப்பதால் மழை சாரல் விழுகிறது. இது பற்றி அதிகாரிகளுக்கு தெரிந்தும் இன்னும் நடவடிக்கை எடுக்க முன்வராதது சாமியார்களை வேதனைப்படுத்தி வருகிறது. இது தொடர்பாக நடவடிக்கை எடுத்து சாமியார்களுக்கு உதவவேண்டும் என்று பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

செய்தியாளர் – மூர்த்தி
நிழல். இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed