July 28, 2021

இந்தியாவில் உள்ள மாநிலங்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்றால், அனைத்து நதிகளையும் தேசிய மயமாக்க வேண்டும்…

1 min read

காவிரி ஆறு கர்நாடக மாநில பிரம்மகிரி மலையில் துவங்கி தமிழகம் வழியாக 800 கிலோ மீட்டர் தூரம் பாய்ந்து வங்க கடலில் வந்து கலக்கிறது. இந்த ஆற்றின் மூலம் தமிழகத்தின் பல மாவட்டங்களில் உள்ள பல லட்சக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. அதனால் தான் நம் தமிழக மக்கள் இன்றளவும் காவிரியை தெய்வமாகவே நினைத்து வணங்குகிறார்கள். அதனால்தானோ என்னவோ, சில நூற்றாண்டுகளுக்கு முன்னரே காவிரி ஆற்றை அப்போதைய மைசூர் சமஸ்தானம் எங்கள் பகுதி நீர்வளம் எங்களுக்குத் தான் சொந்தம் எனக்கூறி பிரச்சனையை துவக்கி வைத்தது. அதன் விளைவாக அவர்கள் பகுதியில் பல தடுப்பணைகளை கட்டினர். அதனை பலமாக எதிர்த்த, நம் முன்னோர்களான இரண்டாம் ராஜராஜ சோழனும், ராணி மங்கம்மாள் ஆகியோரும், நியாயம் இல்லாத இந்த செயலைகளை கண்டித்தனர். அதுமட்டும் இல்லாமல் படையெடுத்துப் போய் அந்த அணைகளை எல்லாம் உடைத்தெறிந்தும் இருக்கிறார்கள்.

அன்று துவங்கிய இந்தப் பிரச்சனை இன்று வரை தீர்க்கப்படாமலேயே உள்ளது. காரணம் அரசியல், ஆமாம்.. கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தை மாநில கட்சிகளும், கர்நாடகத்தை தேசிய கட்சிகளும் மாறி,மாறி ஆண்டு வருகின்றனர். அதனால் தான் இன்றுவரை முடிவு எட்டப்படாத நிலையில் பிரச்சனை நீண்டு கொண்டே போகிறது.
இதில், 100 சதவிகிதம் நியாயம் தமிழகம் பக்கம் தான் இருக்கிறது என்று உலகம் அறியும். ஆனால், ஒன்றிய ஆட்சியாளர்கள் யார் ஆட்சிக்கு வந்தாலும் அவர்கள் கர்நாடகத்துக்கு சாதகமாக இருப்பதாலேயே, நாம் இன்று வரை நீதிமன்ற வாசலில் தவம் கிடக்க வேண்டிய நிலை உள்ளது. காவிரியில் இருந்து வரும் தண்ணீரை அதிக அளவில் பயன்படுத்துவது தமிழகம் தான். இப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டி, மைசூர் சமஸ்தானமும், சென்னை மாகாணமும் 1924 ஆம் ஆண்டு ஒரு ஒப்பந்தம் போடப்பட்டன. அந்த ஒப்பந்தம் 50 ஆண்டுகள் நடைமுறை படுத்தப்பட்டு, 1974 ஆம் ஆண்டு அப்போதைய நிலவரத்திற்கு ஏற்றார் போல் மாற்றி அமைத்துக் கொள்வது என, முடிவு செய்யப்பட்டது.

அப்போதைய நிலவரப்படி சென்னை மாகாணத்திற்கு 13 லட்சம் ஏக்கர் பாசனத்திற்கு 366 டிஎம்சி தண்ணீரையும், மைசூர் சமஸ்தானத்திற்கு ஒரு லட்சம் ஏக்கர் பாசனத்திற்கு 27 டிஎம்சி தண்ணீரும், பகிர்ந்து கொள்வது என முறைப்படுத்தப்பட்டது. பின்னர், 1947 இல் மொழிவாரி மாநிலமாக பிரிக்கப்பட்ட போது அம்பேத்கர், “இந்த நதிநீர் பிரச்சினைகள் எதிர்காலத்தில், பெரிய சிக்கலான பிரச்சினையாக அமைந்துவிடும். ஆகவே, நம் நாட்டில் உள்ள அனைத்து நதிகளையும் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டுக்குள் எடுக்க வேண்டும்.” என, கூறி உள்ளார். ஆனால், அவரது அபாய குரலுக்கு அப்போது யாரும் முக்கியத்துவம் கொடுக்கவில்லை. அவர் கூறியது போல, இப் பிரச்சனையை 1960களில் மீண்டும் விஸ்வரூபம் எடுத்தது. மொழிவாரி மாநிலமாக மாறிய தமிழகத்திற்கும் கர்நாடகத்திற்கும் பிரச்சனை பலமாக முற்றியது.

அதன் விளைவாக ஒப்பந்தத்தை மாற்றி அமைக்க வேண்டி, 1974 ஆம் ஆண்டிற்கு முன்பாகவே 1971 இல் அப்போதைய தமிழக முதல்வராக இருந்த கருணாநிதி அவர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். ஆனால், இந்திரா காந்தி தலையிட்டு வழக்கை வாபஸ் பெற வைத்தார். அதன் பிறகு தமிழக முதல்வர் கருணாநிதி தொடர்ந்து வலியுறுத்தியதன் பேரில், காவிரி உண்மை அறியும் குழுவை அமைத்தனர். கண்துடைப்பு அமைத்த அந்த குழு பல ஆண்டுகள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்ததால், 1983-இல் விவசாய சங்கத்தினர் நேரடியாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். ஆனால், இப் பிரச்சினையில் விவசாய சங்கத்தினர் வழக்கு போட முடியாது என நீதிமன்றம் கூறியது. அதனால், அப்போதைய முதல்வராக இருந்த எம்ஜிஆர் உடனடியாக அந்த வழக்கிற்கு ஆதரவு கடிதம் வழங்கியதால், நீதிமன்றத்தில் வழக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டது. இருந்தாலும் ஒவ்வொரு ஆண்டும் தமிழக விவசாயிகள் பருவமழையின் கருணையால் விவசாயம் செய்ய வேண்டிய நிலை இருந்தது. இந்த நிலையில் தான் 1989இல் உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின் பேரில், அப்போதைய பிரதமர் விபி சிங் வாயிலாக, காவிரி நடுவர் நீதிமன்றம் அமைக்கப்பட்டது.

நடுவர் மன்றம் 1991இல் இடைக்கால தீர்ப்பு ஒன்றை வழங்கியது. அதனால் கர்நாடகாவில் கலவரம் ஏற்பட்டு தமிழர்கள் தாக்கப்பட்டனர். பின் 1993இல் அப்போதைய தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா சாகும்வரை உண்ணாவிரதம் இருந்தார். அந்த சூழ்நிலையை சமாளிக்க ஒன்றிய அரசு நீர்வளத் துறை அமைச்சரை அனுப்பி சமரசம் செய்ததே தவிர, தண்ணீர் மட்டும் வந்தபாடில்லை. இடைக்கால தீர்ப்பிற்கு மதிப்பு கொடுக்காத கர்நாடக அரசை ஒன்றும் செய்ய முடியாத நிலையில் இருந்த ஒன்றிய அரசு, அதை தொடர்ந்து காவிரி நதிநீர் ஆணையம், காவிரி கண்காணிப்பு குழு அமைத்து ஒரு பயனும் இல்லாமல் போனது. ஆனால், இதை எல்லாம் எதிர்த்து கர்நாடக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த சட்டமன்ற தீர்மானங்களை நீதிமன்றம் வன்மையாக கண்டித்தது. நீதிமன்ற உத்தரவுகள், நடுவர் மன்ற உத்தரவு, மத்திய அரசு ஆலோசனை, என எதையும் மதிக்காத கர்நாடக அரசு தங்கள் நீர் பாசன பகுதிகளை மட்டும் உயர்த்திக் கொண்டே போனது. ” 1924ஆம் ஆண்டு வெறும் ஒரு லட்சம் ஏக்கர் பாசன வசதி பெற்றிருந்த கர்நாடகம் 2007இல் 27 லட்சம் ஏக்கர் பாசனத்திற்கு நீர் கேட்டது.”

இந் நிலையில், காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பு அரசு இதழில் வெளியிடப்பட்டது. அதில் கூறியிருப்பது என்னவென்றால், ” காவிரி நதியில் இருந்து கிடைக்கும் மொத்த நீர் அளவு 749 டிஎம்சி அதில் கேரளாவுக்கு 30 டிஎம்சி, கர்நாடகத்திற்கு 270 டிஎம்சி, தமிழ்நாட்டிற்கு 419 டிஎம்சி, புதுச்சேரிக்கு 7 டிஎம்சி, என மொத்தம் 726 டிஎம்சி தண்ணீர் ஒதுக்கப்பட வேண்டும். கையிருப்பு நீர் அளவு சுற்று சூழல் பாதுகாப்புக்காக 10 டிஎம்சி யையும், கடலில் கலக்கும் போது தவிர்க்க முடியாத வகையில் செல்லும் நீருக்காக 4 டிஎம்சி தண்ணீர் கொடுக்க வேண்டும்.” என்று தீர்ப்பு வெளியானது. இருப்பினும் கர்நாடகம் இதுவரைக்கும் தமிழகத்திற்கு தேவையான தண்ணீரை திறந்து விடவில்லை அதற்கு அவர்கள் சொல்லும் ஒரே காரணம் காவிரி பிரச்சினை குறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இருக்கிறது. தீர்ப்பு வரும் வரை எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது, என்று கூறுகின்றனர். ஆனால், உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின் பெயரில் அமைந்த காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை மதிக்காத கர்நாடகம் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள வழக்கை காரணம் காட்டுகிறது.

காவிரிப் பிரச்சனையில் கர்நாடக அரசு பல விதங்களில் தமிழகத்திற்கு தண்ணீர் கொடுப்பதில் முட்டுக்கட்டை போடுவதில், புதுப்புது யுத்திகளை கையாள்கிறது. அதில் ஒன்று தான், மேகதாது அணை பிரச்சனையும்.
இந்த மேகதாது அணை கட்டுவதில் அடம்பிடிக்கும் கர்நாடக அரசு, அணையை கட்டியே தீருவோம் என்று வரிந்து கட்டிக்கொண்டு அடாவடித்தனமாக செயல்படுகிறது. ஆனால், தமிழக அரசு மிகவும் நிதானமாக உறுதியுடன் செயல்படுகிறது. தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் இந்த பிரச்சினைக்காக அனைத்து கட்சி கூட்டத்தைக் கூட்டி, ஆலோசனை நடத்தி அனைத்துக் கட்சி தலைவர்களையும் டெல்லிக்கு அனுப்பி, நீர்வளத்துறை அமைச்சர் மற்றும் உயர் அதிகாரிகளை சந்தித்து, தமிழ்நாட்டின் நிலைப்பாட்டை தெளிவாக வெளிப்படுத்தி உள்ளனர்.

இந்நிலையில், தேசிய நீர்வழிச்சாலை தலைவர் ஏ.சி.காமராஜ் அவர்கள் தமிழக அரசிற்கு நல்ல தெளிவான ஆலோசனைகளை வழங்கியுள்ளார். அதில், ” எப்போதும் ஒரு ஆற்றில் வருகின்ற நீரில் அதன் கீழே உள்ள பகுதிகளுக்கு தான் முதல் உரிமை என்று உலகளாவிய சட்டமான “ரைப்பேரியன் ரைட்” சொல்கிறது. அதன்படி பார்த்தால், தமிழகம் சம்மதித்தால் தான் கர்நாடக அரசு அங்கு அணை கட்ட முடியும். தமிழக அரசு அணை கட்ட சம்மதிக்காத நிலையில், அணை கட்ட அவர்களுக்கு உரிமை கிடையாது. எனவே, ரைப்பேரியன் சட்டத்தை முன்னிறுத்தி, அதன்படி கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்ட முடியாது என்பதைத் தமிழக அரசு தெளிவுபடுத்த வேண்டும்.

2007ஆம் ஆண்டு பிப்ரவரியில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படி, கர்நாடகம் தமிழகத்துக்கு 192 டிஎம்சி வழங்க வேண்டும். ஆனால், 2018ஆம் ஆண்டு கர்நாடக அரசு பெங்களூரு குடிநீர்த் தேவையைக் காரணம் காட்டி, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததால், கர்நாடகாவுக்கு 280.75 டிஎம்சி, தமிழகத்துக்கு 177.25 டிஎம்சி (14.5 டிஎம்சி குறைவாக) வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த குறைக்கப்பட்ட தண்ணீரைக் கேட்டுப் பெற தமிழக அரசு சட்டப் போராட்டம் தொடங்க வேண்டுமென விவசாயிகள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

கர்நாடக அரசு காவிரி நீரினை மாதா, மாதம் கணக்கிட்டு தமிழகத்திற்கு வழங்க வேண்டும். ஆனால், இதில் சிக்கல் ஏற்படுகிறது. எனவே மாதந்தோறும் கணக்கிடும் முறையைக் கைவிட்டு விட்டு, அன்றாடம் கணக்கிட்டு பங்கிடும் முறையை அமல்படுத்த வேண்டும். அதாவது, ஒவ்வொரு முறையும் காவிரிக்கு வரும் நீர், அங்குள்ள கிருஷ்ணராஜசாகர், கபினி, ஹாரங்கி, ஹேமாவதி ஆகிய அணைகளில் தேக்கிவைக்கப்பட்டு, அவை நிரம்பிய பின்னரே தண்ணீர் வெளியேற்றப்பட்டு தமிழகத்துக்கு வருகிறது. இவ்வாறு வருடம் தோறும் அல்லது மாதம் தோறும் தேக்கிவைத்துக் கொடுக்கும் பொழுது ஏதாவது காரணம் சொல்லி கர்நாடகா தமிழகத்துக்குத் தண்ணீர் தர மறுக்கிறது. பின் வெள்ளம் வரும் பொழுது திடீர் என்று தண்ணீர் திறந்து விடுகிறது. அந்த உபரி நீர் மேட்டூர் அணையின் கொள்ளளவை தாண்டும்போது அது நேரே கடலுக்குப் போய்விடுகிறது.
ஆனால், அன்றாடம் பகிரும் முறையில் காவிரியில் கிடைக்கின்ற நீரினை உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி கர்நாடகாவுக்கு 270 டிஎம்சி நீரும், தமிழகத்துக்கு 177.25 டிஎம்சி நீரும் என்ற விகிதத்தில் அன்றாடம் பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்தியா முழுவதும் அண்டை மாநிலங்களோடு ஏற்படும் இது போன்ற தண்ணீர் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு ஏற்பட வேண்டும் என்றால், “தேசிய நீர்வழிச்சாலை திட்டத்தை இந்தியாவில் செயல்படுத்த வேண்டும்”. இவ்வாறு ஏ.சி. காமராஜ் ஆலோசனை வழங்கியுள்ளார்.

அதிகாரப்பூர்வமாக இந்தியாவின் மொத்த நீராதாரம் 65 ஆயிரத்து 400 டிஎம்சி க்கு மேல் உள்ளது. ஆனால், அனைத்து மாநிலங்களின் தண்ணீர் தேவை என்பது, வெறும் 17 ஆயிரத்து 500 டிஎம்சி தண்ணீர் தான். மீதம் இருக்கின்ற 75 சதவிகித தண்ணீர் கடலில் வீணாக கலக்கிறது. என்பது தான் கொடுமை… இந்த ஒரு விஷயத்தில், ” இந்தியா, நீர் மேலாண்மையை சரிவர கையாளவில்லை ” என்பது, உலக அரங்கில் வெட்ட வெளிச்சமாக தெரிகிறது. அதனால் இந்திய ஒன்றியம் உலக அரங்கில், தலை குனிந்து நிற்க வேண்டிய நிலை உள்ளது. இந்த நிலை நீங்க வேண்டும் என்றால், ஒன்றிய அரசு சாலை போக்குவரத்து, ரயில் போக்குவரத்து, கப்பல் போக்குவரத்து, விமானப் போக்குவரத்து, போன்றவைகளை போல, இந்திய அளவில் உள்ள அனைத்து நதிகளையும் தேசிய மாயமாக மாற்றினால் மட்டுமே, மாநிலங்களுக்கு இடையே உள்ள பிரச்சனைகள் நீங்கி, இந்தியாவினுடைய ஒற்றுமை உறுதி செய்யப்படும், என்பது மட்டும் உண்மை.

Gபாலகிருஷ்ணன்
நிழல். இன் - 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *