September 16, 2021

ஆரம்பாக்கத்தில் வங்கி மேலாளரை கண்டித்து பொதுமக்கள் கண்டன ஆர்ப்பாட்டம்…

1 min read
Spread the love

கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கத்தில் உள்ள பேங்க் ஆப் இந்தியா வங்கி கிளை மேலாளர் வாடிக்கையாளர்களிடம் அநாகரீகமாக நடப்பதாக கூறி வாடிக்கையாளர்கள், அனைத்து கட்சியினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் வங்கி முன் நடைபெற்றது. கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கத்தில் உள்ள பாங்க் ஆப் இந்தியா வங்கி கிளை கடந்த 30ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இந்த வங்கியில் ஆரம்பாக்கம், எகுமதுரை, தோக்கம்மூர், பூவலை ஊராட்சிகளை சேர்ந்த சுமார் 10ஆயிரம் பேர் வாடிக்கையாளர்களாக உள்ளனர். இந்த வங்கி கிளையின் தற்போதைய மேலாளர் துளசிராமன். இவர் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஆரம்பாக்கம் பாங்க் ஆப் இந்தியா வங்கி கிளை மேலாளராக பணிபுரிந்து வருகிறார்.

.

இந்நிலையில் கடந்த ஒன்றரை வருடங்களாக இவர் வாடிக்கையாளர்களிடம் அவமரியாதையாக நடப்பதாகவும், தாட்கோ மற்றும் மாவட்ட தொழில் மைய பரிந்துரைகளை இவர் ஏற்பதில்லை என்றும், கடன் வசூல் செய்ய வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கே சென்று மிரட்டுவதாகவும், வாடிக்கையாளர்களை அவர்கள் கணக்கில் செலுத்தும் பணத்தை காசாளர் மூலம் செலுத்தாமல் பணபரிவர்த்தனை செய்யும் இயந்திரத்தின் மூலம் செலுத்த படிக்காத பாமரர்களையும் வற்புறுத்துவதாக கூறியும் இவர் மீது தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்தவாறு இருந்தது. இந்நிலையில் இவர் மீது தொடர் குற்றச்சாட்டுகள் எழும்பிய நிலையில், இதனை கண்டித்தும் இவரை பணியிடமாற்றம் செய்ய வலியுறுத்தியும் ஆரம்பாக்கம் பாங்க் ஆப் இந்தியா வங்கி கிளை வாடிக்கையாளர்கள், அனைத்து கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் வங்கி முன் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கும்மிடிப்பூண்டி மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் மு.மணிபாலன் தலைமை தாங்கினார். நிகழ்விற்கு ஆரம்பாக்கம் ஊராட்சி தலைவர் வே.தனசேகர், தோக்கம்மூர் ஊராட்சி தலைவர் ராதாகிருஷ்ணன், பூவலை ஊராட்சி தலைவர் சம்பூர்ணம், ஆரம்பாக்கம் அனைத்து வியாபாரிகள் சங்க தலைவர் ஏ.எஸ்.கோபால், அனைத்து வியாபாரிகள் பொது நல சங்க செயலாளர் பி.காமராஜ், சிந்தனை சிற்பி சிங்காரவேலர் வியாபாரிகள் சங்க தலைவர் பி.ஏ.எம்.ஆறுமுகம், மாவட்ட கவுன்சிலர் சாரதா முத்துசாமி, திமுக நிர்வாகி ஆறுமுகம், அதிமுக நிர்வாகிகள் சேகர், ஐயப்பன், காங்கிரஸ் நிர்வாகி எஸ்.எஸ்.பெரியசாமி, கம்யூனிஸ்ட் நிர்வாகி முகம்மது சாலி, பாமக நிர்வாகி ஏழுமலை, விடுதலை சிறுத்தைகள் நிர்வாகி சம்பத், அமமுக நிர்வாகி சி.கே.பாபு முன்னிலை வகித்தனர். ஆரம்பாக்கம் ஊராட்சி துணை தலைவர் சிலம்பரசன் வரவேற்றார்.

தொடர்ந்து ஆரம்பாக்கம் பாங்க் ஆப் இந்தியா வங்கி மேலாளர் துளசிராமனை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கண்டன கோஷம் எழுப்பினர். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் ந.மகேஷ், ஆரம்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் அய்யனாரப்பன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்தினர். தொடர்ந்து இது குறித்து திருவள்ளூர் ஆட்சியர் அலுவலத்தில் உள்ள வங்கிகள் கண்காணிப்பு உயர் அதிகாரியிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக வட்டாட்சியர் ந.மகேஷ் உறுதி அளித்ததை தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

செய்திகள் – சுடர்மதி
நிழல். இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed