September 16, 2021

பழவேற்காட்டில் அனுமதி இல்லாமல் படகு சவாரி செய்வதால், நடக்கும் தொடர் உயிர் பலிக்கு யார்? காரணம்…

1 min read
Spread the love

திருவள்ளூர் மாவட்டத்தில் மிக முக்கியமான சுற்றுலா தளமாக விளங்குவது பழவேற்காடு ஆகும். பழவேற்காட்டில் கடற்கரை மற்றும் கடலும், ஆறும் இணையக் கூடிய முகத்துவாரம் பகுதி மற்றும் கலங்கரை விளக்கம், டச்சு கல்லறை, மாதாகோயில் என பலவிதமான முக்கிய இடங்கள் உள்ளன. அதனால் பழவேற்காட்டிற்கு வார விடுமுறை தினங்களிலும், விழாக்காலங்களிலும், பண்டிகை நாட்களிலும், திருவள்ளூர் மாவட்டம் மட்டும் இல்லாமல் சென்னையில் இருந்தும் மற்ற மாவட்டங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் அதிகளவில் இங்கு வருவது வழக்கம்.

அப்படி பழவேற்காடு சுற்றுலா வரக்கூடியவர்கள் முக்கியமாக செல்லக்கூடிய ஒரு இடம் முகத்துவாரம், அந்த முகத்துவார பகுதிக்கு பழவேற்காடு கரையில் இருந்து 45 நிமிடம் படகு சவாரியின் மூலம் அந்த இடத்துக்கு செல்ல வேண்டும். அதனால் பெரும்பாலும் பழவேற்காட்டிற்க்கு சுற்றுலா வரக்கூடிய அனைவரும் படகு சவாரி செல்வது வழக்கம். ஆனால், அந்தப் படகு சவாரியை அரசு தரப்பில் யாரும் சரிவர கண்காணிக்க படாததால், சுற்றுலா பயணிகள் படகுகளில் அதிக அளவில் ஏறிச் செல்வதால், அடிக்கடி முகத்துவாரம் பகுதியில் படகு விபத்து ஏற்படுகின்றன. அதனால் பலமுறை விபத்துக்கள் ஏற்பட்டு பல உயிர் இழப்புகள் ஏற்பட்டு உள்ளது. ஆனாலும், இது வரை அந்த பழவேற்காடு படகு சவாரி பயணத்தை யாரும் வரைமுறை படுத்தவில்லை அதனால் முகத்துவாரம் செல்லக்கூடிய சுற்றுலா பயணிகள் படகு விபத்து அடிக்கடி நடப்பது தொடர்கதையாக உள்ளது.

இந்நிலையில், சென்னை அண்ணா நகரை சேர்ந்த லலித் குமார் (17) என்ற +2 படிக்கும் மாணவர், தமது நண்பர்கள் 6 பேருடன் பழவேற்காட்டிற்கு வந்து, ஏரியில் படகு சவாரி செய்து முகத்துவாரம் பகுதிக்கு சென்றுள்ளனர். கடலும், ஏரியும் இணையும் முகத்துவாரம் பகுதியில் உள்ள மணல் திட்டில் 7 பேரும் இறங்கி குளித்த போது லலித் குமார் மட்டும் ஏரியில் மூழ்கி காணமல் போய் உள்ளார்.

உடனடியாக, அங்கு மீன் பிடித்து கொண்டிருந்த மீனவர்கள் லலித் குமாரை தேடினர். இதனிடையே திருப்பாலைவானம் காவல் துறையினருக்கு கிடைத்த தகவலையடுத்து, பொன்னேரி தீயணைப்பு மற்றும் மீட்பு படையினரும் ஏரியில் லலித்குமாரை தேடினர். நான்கரை மணி நேரமாக மீனவர்கள் உதவியுடன் தேடியதில் லலித் குமார் சடலமாக மீட்கப்பட்டார். உடலை பொன்னேரி அரசு மருத்துவ மனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்து திருப்பாலைவனம் காவல் துறையினர், தடையை மீறி படகு சவாரிக்கு ஏற்பாடு செய்தவர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது போன்ற ஒரு படகு விபத்து நடந்தால் அதிலிருந்து சில தினங்களுக்கோ அல்லது சில மாதங்களுக்கோ காவல்துறையினர் மற்றும் வருவாய் துறையினர் கள்ளத்தனமாக படகு சவாரி செல்வதை கண்காணிக்கின்றனர். அதிலிருந்து சில காலத்தில் அதை மறந்து விட்டு விடுவதால், இது போன்ற சம்பவங்கள் நடப்பது தொடர் கதையாகி விடுகிறது. இதற்கு காரணம் காவல் துறையா? வருவாய்துறையா ?அல்லது சுற்றுலா பயணிகள் அதிகம் வரக்கூடிய இந்த பழவேற்காடு பகுதியை இதுவரை முக்கிய சுற்றுலாத்தளமாக தரம் உயர்த்தி, அரசு சுற்றுலா துறையின் மூலம் படகு சவாரியை வரைமுறை படித்தி அதை அரசு நிர்வகிக்க வழிவகை செய்யாத ஆட்சியாளர்களா ? அவரவர்கள் மனசாட்சிக்கே, அது வெளிச்சம்…

G.பாலகிருஷ்ணன்
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed