October 27, 2021

பெரியபாளையம் பகுதியில், சாலையை ஆக்கிரமித்து வேலி அமைத்த, போலீஸ்காரர் மீது பொதுமக்கள் போலீசில் புகார் …

1 min read
Spread the love

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் வள்ளலார் நகர் பகுதியில் சுமார் 50க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதி மக்கள் பயன்படுத்தி வந்த பாதையை திருவேலங்காடு காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வரும் ரமேஷ் என்பவர் கற்களை பதித்து வேலி அமைத்து ஆக்ரமித்துள்ளார்.

இதுகுறித்து, பொதுமக்கள் பெரியபாளையம் ஊராட்சி நிர்வாகத்தில் அளித்த புகாரின் பேரில் வேலியை அகற்றியுள்ளனர். ஆனால், தலைமை காவலர் ரமேஷ் மீண்டும் அதே இடத்தில் கற்களை பதித்து வேலி அமைத்து பாதையை ஆக்கரமித்து வ உள்ளதால், வள்ளலார் நகரில் குடியிருக்கும் மக்கள் சார்பில், பெரியபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். 

இந்த பிரச்சனை குறித்து அப்பகுதியில் குடியிருக்கும் குடியிருப்புவாசிகளிடம் விசாரித்த போது; நாங்கள் பல ஆண்டுகளாக இந்த வள்ளலார் நகர் பகுதியில் குடியிருந்து வருகிறோம். இதே பகுதியில் குடியிருக்க கூடிய தலைமை காவலர் ரமேஷ் என்பவர் நாங்கள் பல ஆண்டுகளாக பயன்படுத்திய சாலையை ஆக்கிரமித்து வேலி அமைத்தார். இது குறித்து நாங்கள் ஊராட்சி மன்ற தலைவரிடம் புகார் தெரிவித்தோம்.

அவர் நேரடியாக விசாரித்து வேலியை அகற்றி கொடுத்தார். ஆனால் ஊராட்சி மன்ற நிர்வாகத்தின் உடைய நடவடிக்கைக்கு மதிப்பளிக்காமல் தலைமை காவலர் ரமேஷ் மீண்டும் சாலையை மறித்து வேலி அமைத்துள்ளதால், ஊராட்சி மன்ற தலைவருடைய ஆலோசனையின் பேரில் பெரியபாளையம் காவல் நிலையத்தில் நாங்கள் புகார் அளித்திருக்கிறோம் என தெரிவித்தார்.

பொதுமக்களின் புகார் குறித்து ஊராட்சி மன்ற தலைவரிடம் நாம் பேசியபோது; தலைமை காவலர் ரமேஷ் சாலையை ஆக்கிரமித்து வேலி அமைத்தது உண்மை தான். அதுகுறித்து என்னிடம் பொதுமக்கள் புகார் அளித்தார்கள். அதன்படி, நான் காவலர் ரமேஷ் அவர்களுடைய குடும்பத்தாரிடம் பேசி வேலியை அப்புறபடுத்தினோம். ஆனால், அதே இடத்தில் மீண்டும் சாலையை ஆக்கிரமித்து வேலி அமைத்து உள்ளார்.


அவர் ஏற்கனவே அவருடைய வீட்டின் அருகே உள்ள 5 சென்டிற்க்கும் மேல் பொது இடத்தை ஆக்கிரமித்து தான் சுற்றுசுவர் அமைத்திருக்கிறார். அதை இதுவரை யாரும் கேள்வி கேட்கவில்லை. ஆனால், அதையும் கடந்து சாலையை ஆக்கிரமித்து வேலி அமைத்ததால் தான் பொதுமக்கள் அவர் மீது போலீசில் புகார் அளித்தனர். புகாரின் மீது ஆய்வாளர் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்து இருக்கிறார். காவலர் ரமேஷ் வெளியூரில் பணியில் இருப்பதால் விசாரணை நடத்துவது காலதாமதம் ஆகிறது என தெரிவித்தார்.

தலைமை காவலருடைய செயல் குறித்து பெரியபாளையம் காவல் நிலைய ஆய்வாளரிடம் நாம் விசாரிக்க முயற்சித்தும் அவரை தொடர்புகொள்ள முடியவில்லை.

G.பாலகிருஷ்ணன்
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed