November 27, 2021

பொன்னேரி மீன்வள துறை அதிகாரிகளின் அலட்சியத்தால், பழவேற்காட்டில் நடுக்கடலில் மீனவர்களுக்குள் மோதல் ஏற்படும் சூழ்நிலை ….

1 min read
Spread the love

திருவள்ளூர் மாவட்டத்தில் அடங்கிய பழவேற்காடு பகுதியில் 35க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்கள் உள்ளன. அதில் ஏரிக்கும் கடலுக்கும் இடையில் உள்ள கூனாங்குப்பம், செம்பாசிபள்ளி, திருமலை நகர், லைட் ஹவுஸ் அரங்கம்குப்பம், வைரங்குப்பம், கோரை குப்பம், சாத்தான் குப்பம் , பசியாவரம் போன்ற கிராமங்களை உள்ளடங்கிய 15க்கும் மேற்பட்ட கிராமங்களில் வசிக்கும் மீனவர்கள் கடலில் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். மற்ற மீனவ கிராம மக்கள் பழவேற்காடு ஆற்றில் மீன் பிடிக்கும் தொழில் செய்து வருகின்றனர்.

கடலில் மீன் பிடிக்கக் கூடிய மீனவர்கள் தங்களுடைய சிறிய ரக மோட்டார் படகின் மூலம் கரையிலிருந்து மீன்வளத்துறை அதிகாரிகளால் நிர்ணயிக்கப்பட்ட எல்லைக்குள் மீன் பிடிப்பது வழக்கம், அந்த எல்லைக்கு அப்பால், ஆழ்கடல் பகுதியில் பெரிய ஸ்டீமர் போன்ற விசைபடகுகளில் மீன் பிடிக்கக்கூடிய மீனவர்கள் மீன் பிடிப்பது வழக்கம், இதில், பழவேற்காடு பகுதியை சேர்ந்த மீனவ மக்கள் யாரும் சிறிய ரக மோட்டாரை தவிர பெரிய ரக விசை படகுகளில் மீன் பிடிப்பது இல்லை.

இந்நிலையில், ஸ்டீமர் போன்ற பெரிய விசைபடகுகளில் மீன் பிடிக்கக் கூடிய வெளிமாவட்ட மீனவர்கள் அடிக்கடி பழவேற்காடு மீனவர்கள் மீன் பிடிக்க கூடிய பகுதிகளில் கரையை ஒட்டினாற்போல் வந்து வேகமாக அப்பகுதியை கடந்து செல்கின்றனர். அப்போது பழவேற்காடு மீனவர்களுடைய வலைகள் மற்றும் மீன்பிடிக்க உதவக்கூடிய உபகரணங்கள் அனைத்தும் சேதமடைகின்றன. இதுகுறித்து பழவேற்காடு பகுதி மீனவர்கள் பொன்னேரி மீன்வளத்துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் செய்தும் அவர்கள் இதுகுறித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவும் இல்லை, பழவேற்காடு மீனவர்களுக்கு எந்த விதமான உதவியும் செய்யவும் இல்லை.

இந் நிலையில் கடந்த இரண்டு தினங்களாக இதேபோல் கன்னியாகுமரி, காரைக்கால் போன்ற பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் விசைபடகுகளில் பழவேற்காடு மீனவர்கள் மீன்பிடிக்கும் பகுதியில் வேகமாகச் சென்று அவர்களுடைய வலைகளையும் மீன்பிடி உபகரணங்களையும் சேதப்படுத்தி சென்றனர். அதனால் தங்களுடைய வாழ்வாதாரம் பாதிப்படையக் கூடிய வகையில் விசைபடகுகளில் மீன் பிடிக்கும் மீனவர்கள் தங்களுடைய வலைகளை அடிக்கடி சேதப்படுத்துவதால், கோபமடைந்த பழவேற்காடு பகுதி மீனவர்கள் அனைவரும் இன்று காலை 50க்கும் மேற்பட்ட மோட்டார் படகுகளில் கடலுக்குள் ச விசைப்படகு மீனவர்களையும், விசைப் படகுகளையும் சிறைபிடிக்க புறப்பட்டுச் சென்றனர்.

இத்தகவலை அறிந்த பொன்னேரி வட்டாட்சியர் மணிகண்டன் மற்றும் பொன்னேரி டி.எஸ்.பி மீன்வளத்துறை அதிகாரிகள் உட்பட அதிகாரிகள் பழவேற்காடு பகுதிக்கு உடனடியாக விரைந்து சென்றனர். இதற்கிடையே, பழவேற்காடு மீனவர்கள் படகுகளில் கடலுக்குள் சென்று விட்ட தகவலறிந்து மீன்வளத்துறை அதிகாரிகள் மீனவர்களுடன் ஒயர்லெஸ் கருவிகள் மூலம் அவர்களிடம் பேசி சமாதானம் செய்ய முயன்றனர். ஆனால், மீனவர்கள் “தங்களுடைய வலைகளையும் உபகரணங்களையும் சேதப்படுத்தியவர்களை சிறை பிடித்து அழைத்து வருகிறோம். அப்போதாவது நீங்கள் நடவடிக்கை எடுக்கிறார்களா என பார்ப்போம்” என கூறினர்.

பின்னர் கடலில் சென்று தங்களுடைய வலை மற்றும் உபகரணங்களை செயல்படுத்திய வெளிமாவட்ட விசைப்படகு மீனவர்களை சுற்றி வளைத்து தங்களுடைய பொருட்கள் சேதம் அடைந்தது குறித்து முறையிட்டனர். அப்போது விசைப்படகு மீனவர்கள் இவர்கள் மீது ரப்பரால் ஆன உருண்டை வடிவ பந்துகளை வீசி தாக்கியதாக கூறப்படுகிறது. அந்த தாக்குதலில் சந்தோஷ், கன்னிமுத்து, அஜய், அன்பு உட்பட 7 மீனவர்கள் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தால் பழவேற்காடு மற்றும் அதன் சுற்றுவட்டார மீனவ கிராமங்களில் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது.

G.பாலகிருஷ்ணன்
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed