November 27, 2021

தரங்கம்பாடியில் வீட்டு மாடியில் நவீன முறையில் நாற்றங்கால் வளர்க்கும் புதுமை விவசாயி…

1 min read
Spread the love

காரைக்கால் மாவட்டம் செருமாவிலங்கை கிராமத்தில் புதுச்சேரி அரசின் பண்டித ஜவஹர்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் (பஜன்கோவா ) இயங்கி வருகிறது. மாறிவரும் காலங்களுக்கு ஏற்ப மாணவ – மாணவியர் பொருத்தமான கல்வித் திறன் பெற அக்கல்லூரி பல்வேறு திட்டங்களை செயல் படுத்தி வருகிறது.

அவற்றில் ஒன்று ஊரக மற்றும் வேளாண் பணி அனுபவ பயிற்சி முகாம். இந்த பாடத் திட்டத்தை பயிலும் மாணவ – மாணவியர் சுமார் ஐந்து மாத காலம் கிராமங்களில் தங்கி விவசாயிகள், கூலித் தொழிலாளர்கள், தொழில் முனைவோர், வேளாண் துறை, விவசாயம் தொடர்பான அரசின் மற்றத் துறைகள், தன்னார்வத் தனியார் தொண்டு நிறுவனங்கள், மற்றும் தொழிற்சாலைகளுக்கு சென்று, மேலும் விவசாயப் பணிகளில் நேரடியாக பங்கேற்று அனுபவரீதியாக கற்றல் பெறுவர்.

இந்த வருடம் 63 பெண்கள் மற்றும் 49 ஆண்கள் உள்பட மொத்தம் 112 மாணவ மாணவியர் காரைக்கால், புதுச்சேரி, மாஹே, யானம், தமிழகம், கேரளா, ஆந்திரா பகுதிகளில் களப்பணி செய்ய உள்ளனர். இந்த பாடத் திட்டத்தின் தலைமை ஆசிரியர் டாக்டர் எஸ்.ஆனந்த்குமாரின் வழிகாட்டுதல்படி இந்த பாடத் திட்டத்தின் ஓர் அங்கமாக மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்காவில் உள்ள பெரம்பூர் கிராமத்தில் வீட்டு மாடியில் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சேறில்லா நாற்றாங்காலை விவசாயி பாலமுருகன் (பொறியியல் பட்டதாரி) இயற்கை முறையில் வளர்த்து வருவதை அறிந்தனர்.

மாணவர்கள் முகமது அசீமுதீன் , ஆரோன்குமார் கடந்த மாதம் (27.10.2021 அன்று) அவரை நேரடியாக சந்தித்து இந்த நவீன முறை விவசாயம் குறித்து கேட்டறிந்தனர். குழித்தட்டு ட்ரேயில், கருக்காய், தேங்காய் நார் மரத்தூள்களை பரப்பி அதில் நெல்மணிகளை விதைத்து பூவாளி மூலம் தண்ணீர் தெளித்து வருவதாகவும் இந்த முறையில் 20 சதவீதத்திலிருந்து 5 சதவீதத்திற்கும் கீழ் நீர் சேமிக்கபட்டு பூச்சி தாக்குதல் குறைவதாகவும் அந்த விவசாயி தெரிவித்தார்.
மேலும் பாரம்பரிய ரகங்களான தூயமள்ளி, சீரக சம்பா, கருப்பு கவுனி, கிச்சடி சம்பா போன்ற ரகங்களை சாகுபடி செய்யத் தொடங்கியுள்ளதாக, கூறினார்.

செய்தியாளர் – மணிவண்ணன்
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed