December 8, 2021

புதுகும்மிடிப்பூண்டி ஹவுசிங் போர்டு பகுதியில் குடியிருப்புகளில் மழைநீரோடு தொழிற்சாலை கழிவு நீரும் சேர்ந்ததால் பொதுமக்கள் சாலை மறியல்…

1 min read
Spread the love

கும்மிடிப்பூண்டி அடுத்த புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சி ஹவுசிங் போர்ட் குடியிருப்புகளை ஒட்டிய தொழிற்சாலைகளில் இருந்து மழை நீரும், தொழிற்சாலை கழிவு நீரும் குடியிருப்புகளை சூழ்ந்ததை கண்டித்து அப்பகுதி மக்கள் சிப்காட் சாலையில் மறியலில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கும்மிடிப்பூண்டி சுற்றுவட்டார பகுதியில் ஞாயிற்றுக்கிழமை காலை முதல் திங்கள் காலை வரை 91மி.மீ மழை பெய்த நிலையில் பல தாழ்வான பகுதிகளில் மழை வெள்ளம் சூழ்ந்தது. இந் நிலையில் புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சி ஹவுசிங் போர்டு பகுதியில் ஞாயிறு அன்று அருகில் உள்ள தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறிய மழைநீர், தொழிற்சாலைகளின் ரசாயன கழிவு நீரோடு சேர்ந்து குடியிருப்புகளை சூழ்ந்தது. பல வீடுகளின் உள்ளே மழை வெள்ளம் சென்றது.

இதனால் பெரிதும் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் அப்பகுதி ஒன்றிய கவுன்சிலர் மதன்குமார் தலைமையில் கும்மிடிப்பூண்டி பைபாஸ்- சிப்காட் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டு தொழிற்சாலைகளில் இருந்து மழைவெள்ளம் ரசாயன கழிவுகளோடு குடியிருப்புகளை சூழ்ந்ததை தடுக்காத சிப்காட் திட்ட அலுவலக அதிகாரிகளை கண்டித்து கண்டன முழக்கமிட்டனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த கும்மிடிப்பூண்டி இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணி சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களை சமாதானப்படுத்தி அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தைக்கு அழைத்து சென்றார். இதனால் சிப்காட் சாலையில் 2மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, சிப்காட் தொழிற்பேட்டைக்கு செல்லும் வாகனங்கள் மாற்று பாதையில் சென்றது.

தொடர்ந்து கும்மிடிப்பூண்டி காவல்நிலையத்தில் வட்டாட்சியர் மகேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வாசுதேவன், நடராஜன், சிப்காட் திட்ட அலுவலர் சாய் லோகேஷ், உதவி திட்ட அலுவலர் சரவண நித்தின் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதோடு, மழை வெள்ளம் சூழ்ந்த பகுதிகளையும், தொழிற்சாலைகளில் இருந்து ரசாயன கழிவுநீரோடு மழை வெள்ளம் வெளியேறும் பகுதிகளையும் ஆய்வு செய்தனர்.

தொடர்ந்து குடியிருப்புகளில் மழை வெள்ளம் சூழாதவாறும், மழை வெள்ளத்தை வடிய செய்யவும் உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர்.

செய்திகள் – சுடர்மதி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed