December 8, 2021

திருவள்ளூர் மாவட்ட விவசாயிகள் பயிர் காப்பீடு திட்டத்தில் பதிவு செய்ய நாட்களை நீடித்து கொடுக்க தமிழக முதல்வருக்கு , திமுக விவசாயி அணி அமைப்பாளர் தமிழன் இளங்கோவன் கோரிக்கை…

1 min read
Spread the love

இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளில் தமிழக சட்டப் பேரவையின் வரலாற்றில் முதன் முறையாக வேளாண்மைக்கு என தனியாக ஒரு நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்து சுமார் 60 சதவீதம் வேளாண்மையில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு பல்வேறு நலத் திட்டங்களை அறிவித்து அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நடவடிக்கைகளை தமிழக முதல்வர் அறிவித்தார். இதில், சிறப்பு நடவடிக்கையாக இயற்கை இடர்ப்பாடுகளால் ஏற்படும் பயிர் இழப்பினால் விவசாயிகள் எதிர்கொள்ளும் பொருளாதார இழப்பிலிருந்து பாதுகாக்க “பயிர்க் காப்பீட்டுத் திட்டம்” சுமார் ரூ.2,327 கோடி ஒதுக்கீட்டில் 2021-2022 ஆம் ஆண்டில் 14 தொகுப்புகள் அடங்கிய 37 மாவட்டங்களில் செயல்படுத்தப்படும். என தமிழக அரசு தரப்பில் அறிவிக்கபட்டு இருந்தது.

இத்திட்டத்தில் விவசாயிகள் பயன் அடைய வேண்டுமென்றால் அவர்களுடைய பயிர்கள் காப்பீடு திட்டத்தின் விதி முறைப்படி பதிவு செய்திருக்க வேண்டும் அப்படிப் பதிவு செய்வதற்கான கடைசி நாள் இன்றுடன் (15-11-2021) முடிவடையும் எனவும் தமிழக அரசு அறிவித்திருந்தது.

இந்நிலையில், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் தமிழன் இளங்கோவன் தமிழக முதல்வருக்கு ஒரு கோரிக்கை வைத்துள்ளார். அதில்,
வடகிழக்கு பருவமழை காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் கொசஸ்தலை ஆறு மற்றும் ஆரணி ஆற்றங்கரைகளில் உள்ள பல்வேறு விவசாய கிராமங்கள் பாதிக்கபட்டது. 5 நாட்களாக பெய்த தொடர் மழை காரணத்தினால் விவசாயிகள் வெளியே வரமுடியாத சூழல் நிழவியதால் தங்கள் பயிர்களை காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்ய முடியாமல் கடைசி நாளான இன்று பதிவு செய்வதற்கு தனியார் இ சேவை மையங்களை நாடினர்.

இந்த நிலையில் இறுதி நாளான இன்று ஒரே நேரத்தில் அனைத்து இ சேவை மையங்களும் பணியாற்றிய காரணத்தினால் இன்டர்நெட் சேவைகள் தாமதமானது. ஒரு நபருக்கு பத்து நிமிடங்களில் ஒரு பதிவு செய்து முடிக்க வேண்டிய சூழலில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பதிவு நேரம் ஆனதால் நீண்ட நேரமாக விவசாயிகள் காத்திருக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். பொன்னேரி பகுதியில் ஏராளமான விவசாயிகள் கடைசி நாளான இன்று தங்கள் பயிர் காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்வதற்கு இ.சேவை மையத்தை நாடியுள்ளனர். இந்த நிலையில் இன்று சர்வர் சரியாக வேலை செய்யாத காரணத்தினால் இன்று இரவு வரை பல மணி நேரம் காத்திருந்த விவசாயிகள் பலர் பதிவு செய்ய முடியாமல் விரக்தியில் இருந்து வருகின்றனர்.

ஆகவே, விவசாயிகளின் வேதனைகளை நன்கு உணர்ந்த மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்ததற்கான காலக்கெடுவை. மேலும் சில தினங்களுக்கு நீடிப்பு வழங்கினால் மழை வெள்ளத்தால் பாதிப்படைந்த திருவள்ளூர் மாவட்ட விவசாயிகள் பயனடைய தங்கள் கருணையால் மேலும் ஒரு வாய்ப்பு வழங்கியதாக இருக்கும் என தமிழக முதல்வருக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

செய்தியாளர் – பூர்ணவிஷ்வா
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed