December 8, 2021

நீதிக்கட்சியின் நீட்சியாக ஆட்சி நடக்கும் தமிழகத்தில் “கொத்தடிமை காலனி” என்ற ஒரு குடியிருப்பு தேவையா …

1 min read
Spread the love

தமிழகத்தில் தற்போது ஆட்சிப் பொறுப்பேற்று இருக்கும் தமிழக முதல்வர் அவர்கள், தான் பொறுப்பு ஏற்ற நாளிலிருந்து இன்று வரை ஏழை எளிய மக்களுக்கு வீடு தேடித் தேடிச் சென்று நலத்திட்ட உதவிகளையும் வளர்ச்சிப் பணிகளை செய்து வருகிறார். அதிலும் குறிப்பாக பட்டியலின மக்களுக்கு பட்டியல் போடாமலேயே வீடு தேடி அனைத்து நலத்திட்ட உதவிகளும் சென்று சேருகிறது.

மக்களுக்கு வளர்ச்சி திட்டங்களையும் வளர்ச்சிப் பணிகளையும் அளித்து வரும் முதல்வர் மக்களிடையே பாகுபாடு உடன் இருக்கக்கூடிய கிராம கட்டமைப்புகளையும் மாற்றி அமைத்தால் நன்றாக இருக்குமென பெரும்பாலான மக்கள் எதிர்நோக்கி நிற்கின்றனர்.

காரணம், தமிழகத்தில் இன்னும் பல கிராமங்கள் ஜாதிகள் பெயரிலேயே இருந்து வருவது வருத்தத்தை அளிக்கிறது.
அதிலும் குறிப்பாக, தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியத்தில் அடங்கிய தடங்கம் ஊராட்சியில் ஒரு குக்கிராமம் உள்ளது. அதன் பெயர் கொத்தடிமை காலனி என்று பெயர் சூட்டப்பட்டு அதில் முப்பதுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த ஊராட்சி தர்மபுரி மாவட்டத்தின் தலைநகரமான தர்மபுரியில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இந்த ஊராட்சியில் மொத்தமுள்ள 2,200க்கும் மேற்பட்ட குடும்பங்களில், 8,000 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
அதில் 30 குடும்பங்களை மட்டும் ஒதுக்கி வைத்து அப்பகுதிக்கு கொத்தடிமை காலனி என்று பெயர் சூட்டி இன்றுவரை அழைக்கப்பட்டு வருவதுதான் கொடுமை.

1929 ல் இருந்தே தமிழகத்தில் பெரும்பாலான மக்கள் தங்களுடைய பெயருக்குப் பின்னால் இருந்த சாதியின் பெயரை நீக்க துவங்கிவிட்டனர். அதே போல் பெரும்பாலான மாநகரம் மற்றும் நகர்ப்பகுதிகளில்
தெருக்களின் பெயரிலேயே ஜாதி இருக்கக்கூடாது என்று சாதியின் பெயரை பல தெருக்களில் பெயர்களில் இருந்து நீக்கப்பட்டு பெயர் மாற்றம் பெற்றுள்ளது. ஆனால்
இன்று தமிழகத்தில் பல கிராமங்களில் குடியிருப்பு பகுதிகள் ஜாதியின் பெயரிலேயே உள்ளது. அதிலும் இது போன்ற அடிமைத்தனத்தை உணர்த்தும் பெயர்கள் நீதிக்கட்சியின் நீட்சியாக ஆட்சி நடக்கும் தமிழகத்தில் தேவையா? என பெரும்பாலான மக்கள் மனம் வருந்துகின்றனர்.

குறிப்பாக சமீபத்தில், தமிழக முதல்வர் அவர்கள் சென்னையில், பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகள் குறித்து அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டத்தில் ஈடுபட்டார். அப்போது, சீரமைக்கப்பட்டுள்ள குளங்கள் குறித்த பட்டியலை, முதல்வரிடம் அதிகாரிகள் ஒப்படைத்தனர். அதில், ‘வண்ணான் குளம்’ என்ற பெயருடன் இரண்டு குளங்கள் இருந்தது. இவை, ஒருமையில் குறிப்பிடும் வகையிலும், குறிப்பிட்ட ஜாதியை அடையாளப்படுத்துவதாகவும் இருந்ததால், அந்த பெயரை மாற்றக்கோரி, மாநகராட்சி கமிஷனர் சுகன்தீப் சிங் பேடிக்கு முதல்வர் உத்தரவிட்டார். அந்த வண்ணான் குளங்கள் தற்போது வண்ணமயமாக வண்ண குளங்கள் என்ற பெயர் மாற்றம் பெற்றுவிட்டது.

1976 லேயே கொத்தடிமை ஒழிப்பு சட்டம் கொண்டு வரப்பட்டு நாட்டில் கொத்தடிமைகளே இல்லாமல் செய்யவேண்டும் என அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியத்தில் அடங்கிய தடங்கம் ஊராட்சியில் உள்ள கொத்தடிமை காலனி என்ற குடியிருப்பு பகுதியின் பெயரையும் தமிழக முதல்வர் அவர்கள் மாற்றி அமைத்தால், தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கும் ஆட்சி, நீதிக்கட்சியின் நீட்சிதான் என்பது உலகுக்கு பறைசாற்றும்.

G.பாலகிருஷ்ணன்
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed