November 27, 2021

பொன்னேரி அரசு தலைமை மருத்துவர் பிரட்சனையில் தலையிட்டு தீர்ந்து வைத்த, தமிழக முதல்வரை பொதுமக்கள் பாராட்டி மகிழ்ந்தனர் …

1 min read
Spread the love

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அரசு மருத்துவ மனையின் தலைமை மருத்துவராக அனுரத்னா என்பவர் கடந்த 2014 முதல் பணியாற்றி வந்தார். இவர் பொன்னேரி அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்ற தொடங்கிய நாளில் இருந்து பொன்னேரி அரசு மருத்துவமனையின் கட்டமைப்பு பணிகளை பல நிலைகளில் மாற்றியும், உயர்த்தியும் உள்ளார்.

அதுமட்டுமில்லாமல் வாரநாட்களில் மருத்துவமனைக்கு தினமும் அதிக அளவில் நோயாளிகளாக வரக்கூடிய கிராமங்களை கண்டறிந்து அந்த கிராமப்பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை நாட்களில் தனிப்பட்ட முறையில் அவர் மட்டும் நேரடியாக அந்த கிராமத்துக்குச் சென்று மருத்துவ முகாம் அமைத்து பொன்னேரி கும்முடிபூண்டி போன்ற பகுதிகளிலும் அதன் சுற்றுவட்டாரத்தில் உள்ள குக்கிராமங்களுக்கும் நேரடியாகச் சென்று மருத்துவ உதவி செய்யக்கூடியவர் என்பதால் பொன்னேரி மற்றும் கும்மிடிப்பூண்டி பகுதிகளில் உள்ள அடித்தட்டு மக்களிடம் இவர் நன்கு அறிமுகமாகி இருந்தார்.

இந்நிலையில், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பயிற்சிக்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவ மனைக்கு சென்ற போது, அதே மருத்துவ மனையில் மயக்க மருந்து மருத்துவரான விஜய் ஆனந்த் என்பவர் தலைமை மருத்துவராக பொறுப்பில் தற்காலிகமாக நியமிக்கபட்டார். இந்த நிலையில் 3 மாதங்கள் பயிற்சியை முடித்து விட்டு வந்த மருத்துவர் அனுரத்னாவுக்கு தலைமை மருத்துவர் பணி இல்லை என்றும், மகப்பேறு மருத்துவராக பணி செய்ய திருவள்ளூர் மாவட்ட ஊரக நலப்பணிகள் இணை இயக்குநர் சாந்தி உத்தரவிட்டதாகவும், மருத்துவர் விஜய் ஆனந்த் தலைமை மருத்துவராக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் சமூக வலைதளங்களில் வைரலானது. மருத்துவர் அனுரத்னாவை விட 5 ஆண்டுகள் ஜூனியரான விஜய் ஆனந்தை திருவள்ளூர் மாவட்ட ஊரக நலப்பணிகள் இணை இயக்குநர், தலைமை மருத்துவராக நியமித்தாகவும் பல்வேறு சமூக வலைதளங்களில் தகவல் வைரலானது.

இந்த நிலையில், இன்று காலை பொன்னேரி அரசு மருத்துவ மனையின் முன்பு திரைப்பட இயக்குநர் கோபி நயினார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறறது. மீண்டும் தலைமை மருத்துவராக அனுரத்னாவை நியமிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் கோஷங்களாக எழுப்பப்பட்டன.
ஆர்ப்பாட்டத்தில் வழக்கறிஞர்கள் நெடுஞ்செழியன், அமரகவி , பொன்னேரி ஜீவா, மீஞ்சூர் அபுபக்கர், வெல்டன் வாசகர், பன்னீர் செல்வம் உள்ளிட்ட திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில் இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் விதமாக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, மகப்பேறு பிரிவு, உள்நோயாளிகள் வார்டு ஆகிய பகுதிகளை ஆய்வு செய்த அமைச்சர், சிகிச்சைக்கு வந்திருந்த நோயாளிகளிடம் நலம் விசாரித்தார்.

பின்னர், திருவள்ளூர் ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ், மருத்துவர் அனுரத்னா, மருத்துவர் விஐய் ஆனந்த், திருவள்ளூர் மாவட்ட ஊரக நலப்பணிகள் இணை இயக்குநர் சாந்தி ஆகியோரிடம் விசாரணை நடத்தினார். சுமார் அரை மணி நேரம் நடத்தப்பட்ட விசாரணைக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சமூக வலைதளங்களில் வெளியான செய்தியை பார்த்த முதல்வர், இது குறித்து விசாரணை செய்ய தமக்கு உத்தரவிட்டதாகவும், பொன்னேரி அரசு மருத்துவ மனையில் விசாரணை செய்ததில், மீண்டும் தலைமை மருத்துவராக அனுரத்னா நியமிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

அதே நேரத்தில் மாவட்ட இணை இயக்குநர், மருத்துவர் விஜய் ஆனந்த் ஆகியோர் இணைந்து செயல்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். இன்னும் 6 மாதத்தில் ஒய்வு பெற உள்ள மாவட்ட இணை இயக்குநருக்கு மருத்துவர்கள் இணைந்து பிரிவு உபச்சார விழா செய்திட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தற்காலிக பணியாளர்களுக்கு வரன்முறைப்படுத்த துறைவாரியான ஆய்வு செய்ய உள்ளதாகவும், 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள் பணி நியமனம், பணி நிரந்தரம், வரன்முறைப்படுத்துதல் குறித்து முதல்வர் கவனத்துக்கு எடுத்து செல்வதாகவும் தெரிவித்தார். கொரோனா காலத்தில் பணியாற்றிய 1.05 லட்சம் மருத்துவ பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளாதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த ஆய்வு பணியின் போது கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜே கோவிந்தராஜன் , பொன்னேரி எம்எல்ஏ துரை சந்திரசேகர் , மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் உமா மகேஸ்வரி , முன்னாள் ஒன்றிய செயலாளர் பாஸ்கர் சுந்தரம் , மீஞ்சூர் ஒன்றிய செயலாளர் எம் எஸ் கே ரமேஷ் ராஜ் , பொன்னேரி ரவிக்குமார், கோளூர் கதிரவன் , மீஞ்சூர் மோகன்ராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.

.

செய்திகள் – பூர்ணவிஷ்வா நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed