December 8, 2021

தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ள பாதிப்பில் சிக்கி உள்ள மக்களுக்கு உடனடியாக முகாம்களில் தங்க வைத்து நிவாரண உதவிகள் வழங்க மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் நடவடிக்கை…

1 min read
Spread the love

நெல்லை, தூத்துக்குடி, மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இன்று காலை முதல் கனமழை பெய்து வருகிறது. மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து தாழ்வான பகுதிகளில் வெள்ளம் தேங்கியுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் இன்று தொடர்ந்து தமிழகத்தில் உள்ள பெரும்பாலான தென் மாவட்டங்களுக்கு கனமழை உள்ளது என அறிவித்துள்ள நிலையில், மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 7 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்தவர், மேலும் வங்கக்கடலில் இன்று உருவாகி உள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி, புயலாக மாற வாய்ப்பில்லை எனவும் கூறியுள்ளார். தெற்கு வங்க கடல் பகுதியில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தற்பொழுதுள்ள சூழ்நிலையில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறுவதற்க்கு வாய்ப்பில்லை. இந்த மேலடுக்கு சுழற்சியின் காரணமாக இன்று ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி, புதுக்கோட்டை, நாகை ஆகிய 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும். என அவர் எச்சரித்தபடி,

இன்று காலையில் இருந்தே தூத்துக்குடி, மாவட்டத்தில் கனமழை கொட்டித்தீர்த்தது. திருச்செந்தூரில் கொட்டித்தீர்த்த கனமழையால் பெருவெள்ளம் சூழ்ந்துள்ளது. கனமழை காரணமாக நெல்லை, தூத்துக்குடி ஆகிய இரு மாவட்டங்களிலும் பள்ளிகளுக்கு இன்று மதியம் முதல் அரைநாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த அ விடுமுறை அறிவிப்பை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்தனர்.

மேலும் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் அவர்கள் மாவட்டம் முழுவதிலும் உள்ள அனைத்து வருவாய்த் துறை அதிகாரிகளையும் மற்றும் தீயணைப்புத் துறையினர் பொதுப்பணித்துறையினர் உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளையும் விரைந்து செயல்படும் வகையில் அவரே நேரடியாக கொட்டும் மழையிலும், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகள் மற்றும் வெள்ளம் சூழ்ந்த பகுதியில் உள்ள மக்களை தங்க வைக்கப்பட்டுள்ள முகாம்களுக்குச் சென்று பார்வையிட்டு வருகிறார். அவர்களுக்கு தேவையான உணவுகள் மற்றும் நிவாரண பொருட்களை உடனடியாக வழங்க உத்தரவிட்டுள்ளார். அதன்படி வெள்ளம் சூழ்ந்த அனைத்து பகுதிகளிலும் வருவாய்த் துறையினர் மக்களை பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் சென்று தங்க வைத்துள்ளனர்.

ஏரல் வட்டம் தேமான்கும் கிராமம் முத்தாரம்மன் கோவில் தெரு பகுதியில் மழைநீர் அதிக அளவில் சூழ்ந்ததால் அப்பகுதி மக்கள் 6ஆண்கள், 6 பெண்கள், 3 குழந்தைகள் உட்பட அனைவரும் அருகிலுள்ள திருக்களுர் கிராம சமுதாய நலக் கூடத்தில் தங்க வைக்கப்பட்டுள்னர். அவர்களுக்கு இரவு உணவு வழங்கப்பட்டது, மேலும் அவர்களுக்கு தேவையான படுக்கை வசதிகள் மற்றும் நிவாரணப் பொருட்களும் உடனடியாக வழங்கப்பட்டுள்ளது.

ஓட்டப்பிடாரம் வட்டம் வாலசமுத்திரம் கிராமத்தில் உள்ள இரண்டு ஓடைகளுக்கு நடுவில் இருந்த 7 குடியிருப்புகளில் உள்ள 3 குழந்தைகள் உட்பட, ஆண்கள் 9 பேரும், பெண்கள் 11 பேரும் என மொத்தம் 23 பேரை வெள்ளம் சூழ்ந்த அப் பகுதியிலிருந்து காப்பாற்றிய தீயணைப்பு துறையினர் பாதுகாப்பாக வாலசமுத்திரம் இந்து ஆரம்பப் பள்ளியில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு முதல்கட்டமாக வேஷ்டி சேலை படுக்கை விரிப்புகள் தண்ணீர் பிஸ்கட் போன்ற நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது.

முள்ளக்காடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்ததால் அப்பகுதியில் கிராமங்களில் உள்ள மக்கள் அருகிலுள்ள சென்ட் ஜோசப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள முகாமில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு தேவையான உணவு பொருட்கள் மற்றும் நிவாரண பொருட்களை வருவாய்த்துறை அதிகாரிகள் வழங்கினர்.

அதேபோல், வீரபாண்டியபுரம் கிராமத்தையும் வெள்ளம் சூழ்ந்தது அதனால் அப்பகுதியில் பாதிக்கப்பட்ட 16 குடும்பங்களை சேர்ந்த , 11 குழந்தைகள் உட்பட ஆண்கள் 21 பேரும், பெண்கள் 19 பேரும் பாதுகாப்பாக அருகில் இருந்த மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கும் தேவையான அத்தியாவசிய பொருட்களும் நிவாரணப் பொருட்களும் வருவாய் துறை அதிகாரிகள் வாயிலாக ஏற்பாடு செய்யப்பட்டது.

மேலும், தூத்துக்குடி வட்டம் மீளவிடடான் பகுதியில் கனமழையால் அப்பகுதி முழுவதும் வெள்ளநீர் சூழ்ந்தது அதனால் அப்பகுதியை சேர்ந்த 50 குடும்பங்களை சேர்ந்த குழந்தைகள் மற்றும் ஆண், பெண் அனைவரும் அருகிலுள்ள
ராஜபாண்டி நகர் பகுதியில் உள்ள முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். தூத்துக்குடி காந்தி நகர் இப்பகுதியிலும் உள்ள நிவாரண முகாமில் 10 குடும்பங்கள் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். தூத்துக்குடி வட்டத்தில் இவைகள் தவிர மேலும் பல முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்கள் அனைவருக்கும் தூத்துக்குடி வருவாய்த்துறை அதிகாரிகள் அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வருகின்றனர்.

திருச்செந்தூர் வட்டம் காயல்பட்டினம் தென்பாகம் கிராமம் பகுதியிலும் மழைநீர் சென்று அப்பகுதி மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாத சூழ்நிலையில் அவர்கள் வருவாய்த்துறை அதிகாரிகள் முன்னிலையில் அருகே உள்ள
கொம்பு துறை பாதுகாப்பு மையத்திற்கு கொண்டு சென்று சேர்த்தனர். தூத்துக்குடி மாவட்டம் முழுவதிலும் உள்ள அனைத்து வட்டங்களிலும் வருவாய்த்துறை அதிகாரிகள் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் அவர்களுடைய உத்தரவின்பேரில் இன்று மாலை முதல் வெள்ளம் சூழ்ந்த பகுதியில் உள்ள மக்களை காப்பாற்றி பாதுகாப்பு மையங்களில் தங்க வைத்து அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளை செய்து வருகின்றனர்.

செய்தியாளர் – ஜெகதீஸ்வரி
நிழல் . இன் – 8939476777

More Stories

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed