December 8, 2021

தமிழகத்தில் அடிக்கடி காய்கறி விலைகள் ஏற்றம் பெறுவதற்கு யார்? காரணம்…

1 min read
Spread the love

ஒரு மனிதனுக்கு அடிப்படை தேவையானது உண்ண உணவு, உறங்க உறைவிடம், உடுக்க உடை என பெரியவர்கள் கூறுவது வழக்கம். மனிதனின் தேவைகளில் முதலில் இடம்பிடிப்பது உணவு, இது ஒரு இயந்திரத்திற்கு எரிபொருள் எவ்வளவு முக்கியமோ அதே போல் ஒரு மனிதனின் இயக்கத்திற்கு உணவு மிக முக்கியமானது. அதிலும் அந்த உணவை சுவைபட உண்ண வேண்டும் என நினைக்கையில் அதில் சுவைக்காகவும் உடல் ஆரோக்கியத்திற்காகவும் இயற்கை நமக்கு கொடுத்திருக்கும் வரப்பிரசாதங்கள் தான் காய்கறிகள்.

ஆதிகாலத்திலேயே மனிதனின் முதல் உணவு காய், கனிகள் இதன் பிறகு தான் பரிமாண மாற்றத்தின் ஒட்டத்தில் மனிதன் உணவு பழக்க வழக்கங்களை பலவிதங்களில் மாற்றி அமைத்துக் கொண்டு வருகிறான். இருந்தாலும் நம்முடைய இந்திய உணவு பழக்கங்களில் காய்றிகள் , பழங்கள் ஒரு முக்கிய இடத்தில் தான் இன்று வரை இருந்து வருகிறது. ஆனால் அவைகளுக்கு இன்று நாம் முக்கியத்துவம் கொடுத்து இருக்கிறோம் என்றால் இல்லை. பணம் கொடுத்தால் காய்கறிகள் எங்கிருந்து வேண்டுமானாலும் கிடைக்கும் என்ற நினைப்பில் நாம் அவைகளை விளைவிப்பதில் இருந்து சோம்பேறித்தனத்தாலும், பகட்டு வாழ்க்கை வாழ்வதாலும் அதை மறந்து போய்விட்டோம். விளைவு என்று நாம் அடிக்கடி காய்கறி விலை உயர்வு என்ற ஒரு வார்த்தையை கேட்டு அதிர்ச்சி அடைகின்றோம். இப்படிப்பட்ட சூழ்நிலையில் நாம் முதலில் குறை கூறுவது அரசாங்கத்தை தான், ஆனால் உண்மையில் காய்கறி விலை உயர்வுக்கு காரணம் ஆட்சியாளர்கள் தான் என்று நாம் குற்றம் சாட்ட முடியாது.

காரணம், காய்கறி விலை ஏற்றத்திற்கு பொறுப்பு ஏற்க வேண்டியது ஆட்சியாளர்கள் கிடையாது. அதற்கு முக்கிய பொறுப்பு பொதுமக்களாகிய நாம் தான், காரணம் என்னவென்றால் காய்கறி என்பது ஒரு காலத்தில் கிராம புறங்களில் ஒவ்வொரு வீட்டின் பின்புறம் விளையக்கூடிய ஒரு உணவு பொருளாக தான் இருந்து வந்தது, அல்லது வயல்வெளிகளில் ஒரு பகுதியில் தங்கள் குடும்பத்திற்கு தேவையான அனைத்து காய்கறிகளையும் சிறிது சிறிது விளைவிப்பது வழக்கம்.

உதாரணத்திற்கு கிராமப்புறங்களில் ஒவ்வொரு வீட்டினுடைய கொல்லை புறத்திலும் அவரைக்காய் புடலங்காய் பாவற்காய் பூசணிகாய் சுரைக்காய் போன்ற கொடிவகை காய்கறிகளும், தக்காளி கத்தரி வெண்டைக்காய் பச்சை மிளகாய் போன்ற செடிவகை காய்கறிகளும் இதுபோன்ற மிக முக்கியமான காய்கறிகள் அனைத்தும் நாமே விலைய வைத்து அதை தமது வீட்டிற்கு பயன்படுத்தியது போக மீதம் இருப்பதை தங்களுடைய அக்கம்பக்கம் உள்ள குடும்பத்தினருக்கும் மிகக் குறைந்த விலையில் விற்பனை செய்து அந்த பணத்தை குடும்பத் தலைவிகள் தங்களுடைய தினமும் தேவையான குடும்ப செலவிற்கு அந்த தொகையை பயன்படுத்துவது வழக்கம்.

ஆனால், இன்று கிராமப்புறங்களில் உள்ள பெண்கள் கூட தினமும் பையை கொண்டு போகாமல் கடையில் நின்று வெளிமாநிலங்களில் விளையக்கூடிய காய்கறிகளை வாங்கி வருவதும் அதை வாங்கி வரும் போது தான் சுமந்து வரும் பிளாஸ்டிக் பை கிழிந்து சாலையில் காய்கறிகள் கொட்டி அவைகள் அனைத்தும் சாலையில் உருண்டு ஓடினால் அதை பொறுக்கி மடியில் போட்டுக் கொண்டு வருவதை இன்றைய பெண்கள் கவுரவமாக நினைக்கிறார்கள். இந்த பகட்டு வாழ்க்கை நம்மில் கலந்து கொண்டதால் தான், நாம் அடிக்கடி இது போன்ற காய்கறிகளுடைய விலை ஏற்ற கொடுமையை அனுபவிக்க வேண்டிய நிலை உள்ளது. இப்படி பகட்டு வாழ்க்கை வாழும் நமக்கு இது ஒரு தண்டனை தான். இனி இது போன்ற அடிக்கடி காய்கறி விலை ஏற்றம் என்பதை நாம் யாரும் தவிர்க்க முடியாது.

இந்நிலையை நம்மால் தவிர்க்க முடியுமா என்றால் …. கண்டிப்பாக முடியும், காரணம் இன்று கூட அதற்கான காலம் கடந்து போய்விடவில்லை. முதலில், தமிழக அரசு செய்ய வேண்டியது, மக்களுடன் சிறிதும் நேரடித் தொடர்பில் இல்லாமல் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கக்கூடிய தமிழக வேளாண்மை துறையில் உள்ளடங்கிய தோட்டக்கலைத் துறை அதிகாரிகளை தட்டி எழுப்ப வேண்டும். அரசினுடைய திட்டங்களை மக்களிடம் நேரடியாகக் கொண்டு சென்று சேர்க்கும் வகையில் அவர்களை தமிழக அரசு வேலை வாங்க வேண்டும். தோட்டக்கலை துறை அதிகாரிகள் அந்த துறையில் உள்ள எவ்வளவோ திட்டங்களை மக்களுக்கு எடுத்து சொல்வதும் இல்லை அந்தத் துறையில் உள்ள திட்டங்களை செயல்படுத்துவதும் இல்லை , இந்த நிலையை மாற்றி நகர்ப்புறங்களில் உள்ள மக்களுக்கு மாடித்தோட்டம் பயிர் செய்வதை ஊக்குவிக்க வேண்டும்.

அதேபோல் , கிராமப்புறங்களில் உள்ள உள்ளாட்சி அமைப்பின் மக்கள் பிரதிநிதிகளுக்கு தோட்டக்கலை துறையின் மூலம் விழிப்புணர்வு கொடுக்கப்பட வேண்டும். ஊராட்சித் தலைவர்களில் 25% பேர் சமூக அக்கறையுடன் தங்களுடைய பகுதிகளில் சிறந்த வளர்ச்சிப் பணிகளை செய்து வருகின்றனர். பெரும்பாலான ஊராட்சிமன்ற மக்கள் பிரதிநிதிகள் பதவிக்கு வந்து விட்டால் மாதத்திற்கு ஒரு முறை மின் விளக்குகளை மாற்றுவதும், ஆறு மாதத்திற்கு ஒருமுறை தெரு குழாய்களை மாற்றுவதும், ஆண்டிற்கு ஒரு முறை உள்ளூரில் உள்ள கோயில்களுக்கு திருவிழா நடத்துவதும், இரண்டு ஆண்டிற்கு ஒருமுறை சாலைகளை புதியதாக போடுவதும் மட்டும் தான் மக்கள் பணி என நினைத்து கொண்டு செயலாற்றும் பெரும்பாலான ஊராட்சி மன்ற தலைவர்களுக்கும் சமூக அக்கறையுள்ள மற்ற தலைவர்களை போல, இவர்களுக்கும் விழிப்புணர்வு கொடுத்து, ஊராட்சி மன்றம் வாயிலாக ஒவ்வொரு வீட்டிற்கும் காய்கறிகளுடைய விதைகளையும், செடி வகைகளையும் வழங்கி ஒவ்வொரு வீட்டினை சுற்றிலும் காலியாக உள்ள இடங்களில் வளர்க்க ஊக்குவிக்க வேண்டும். அதே போல், ஊராட்சிகளுக்கு பொதுவான இடங்கள் பயன்பாடு இல்லாமல் இருந்தால் அங்கெல்லாம் மகளிர் குழுக்களிடம் அந்த இடங்களை ஒப்படைத்து காய்கறி தோட்டங்களை அமைக்க ஊக்குவிக்க வேண்டும். அதேபோல் கிராமப்புறங்களில் இந்த காய்கறியை அதே கிராமத்தில் விற்பதற்கான வழிவகைகளையும் அந்த ஊராட்சி நிர்வாகம் செய்து கொடுக்க வேண்டும். இதுபோன்ற நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டாலே எதிர்வரும் காலங்களில் அடிக்கடி இதுபோன்ற காய்கறி விலை ஏற்றங்கள் மக்களை அச்சுறுத்தல் பார்த்துக் கொள்ளலாம்.

மக்களுக்கும், மக்கள் பிரதிநிதிகளுக்கும், தோட்டக்கலைத்துறை அதிகாரிகளுக்கும், அரசிற்கும் மனம் இருந்தால் மார்க்கம் உண்டு…

G.பாலகிருஷ்ணன்
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed