January 18, 2022

ஆசியா கண்டத்திலேயே முதன்முறையாக பல் குத்தும் குச்சியால் கலைப்பொருட்களை வடிவமைத்து இளைஞர் சாதனை. பொன்னேரி எம்.எல்.ஏ நேரில் சென்று பாராட்டு…

1 min read
Spread the love

திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு அருகே உள்ள நடுவூர்மாதா குப்பம் எனும் கிராமத்தில் வசிப்பவர் ஆரோக்கியராஜ். மீன்பிடி தொழில் செய்து வரும் இவரது மூத்த மகன் பினோஷாஜன். கல்லூரியில் பட்டப்படிப்பு படித்த இவர் பொழுது போக்காக ஆரம்பித்தது தான் பல் குத்தும் குச்சியில் கலைப்பொருட்களை வடிவமைப்பது. நாளடைவில் இது சாதனையாகும் என்று நினைக்காமல் கலைப்பொருட்களான கப்பல், தாஜ்மஹால், குதுப்பினார், லண்டன் மேம்பாலம், லைட்ஹவுஸ் உள்ளிட்ட ஏராளமான வடிவங்களை உருவாக்கினார். இவரது திறமையால் உருவான இந்த பொருட்களை கண்டு கிராம மக்கள் அவரை உற்சாகப்படுத்த, இரவு பகலாக கடினமாக உழைத்து 50க்கும் மேற்பட்ட கலைப் பொருட்களை உருவாக்கினார்.

லைட் ஹவுஸ் அருகே கடற்கரையில் இது குறித்த கண்காட்சி ஒன்றை நண்பர்கள் உதவியுடன் அமைத்தார். பழவேற்காடு பகுதிக்கு சுற்றுலா வரும் சுற்றுலா பயணிகள் இதனைக் கண்டு அவரை வெகுவாக பாராட்டி வருகின்றனர். ஆசியாவிலேயே பல் குத்தும் குச்சியால் இப்படி கலை பொருட்களை உருவாக்கியது இவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இதனை அறிந்து பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் நேரடியாக கண்காட்சி நடக்கும் இடத்திற்கு வந்து கண்காட்சியை துவக்கி வைத்து இளைஞரின் சாதனைகளை பாராட்டி கவுரவபடுத்தினார்.

இந்த நிகழ்வில் பழவேற்காடு சுற்றுவட்டார மீனவ கிராம நிர்வாகிகளும் பல்வேறு அரசியல் கட்சியை சார்ந்தவர்களும் அவரது உறவினர்களும் உடனிருந்தனர். இந்த கண்காட்சி கலங்கரை விளக்கம் நிர்வாகத்தால் வருகின்ற ஜனவரி 23ஆம் தேதி வரை ஒருமாத காலம் கண்காட்சி நடத்தி கொள்ள அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் அவர்களின் வலியுறுத்தல் காரணமாக மேலும் ஒரு வருடத்திற்கு கண்காட்சியை தொடர செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

செய்திகள் – பூர்ணவிஷ்வா
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *