Monthly Archives: November 2012

Nizhal Oct2012 Magazine

கலகக்கார கலைஞர்கள்
-நெய்வேலி பாரதிக்குமார்
“ கலவர பூமியில் ஒரு பத்திரிகையாளனோ, புகைப்படக் கலைஞனோ பயணிப்பது என்பது பசி மிகுந்த சிங்கத்தின் குரல்வளைக்கு கீழே பயணிப்பது போல.. எப்போது வேண்டுமானாலும் அது விழுங்கிவிடும்…”
நம் இந்தியச் சூழலில் ‘கலகம்’ என்ற சொல் தவறாக புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது. ‘புரட்சி’ என்ற சொல் தவறாக கையாளப்பட்டுக்கொண்டிருக்கிறது. இங்கே அமைதியான எந்த சூழலையும் குலைக்க நினைப்பவர்களை ‘கலகக்காரர்கள்’ என்றே அடையாளப்படுத்துகிறார்கள். உண்மையில் நிகழ் சமூகம் ஒட்டுமொத்தமாக அநீதியாக காணப்படும்போது அதனை அப்படியே புரட்டிப்போடுவது ‘புரட்சி’ என்றும், அசந்தர்ப்பமான சூழலில், அதன் கால நிலை கருதி எழும் எதிர் குரலை ‘கலகம்’ என்றும் புரிந்துகொள்வோம்.
எங்கெல்லாம் மனசாட்சிக்கு எதிரான சம்பவங்கள் நிகழ்கின்றனவோ, அங்கெல்லாம் தங்களுக்கு ஏதுவான வழியில் எதிர்ப்பை பதிவு செய்பவர்கள் அனைவரும் கலகக்காரர்களே.அந்த வகையில் பெரும்பாலான படைப்பாளிகள் தங்கள் படைப்புகளில் எப்படியாகிலும் எதிர்குரலை பதிவு செய்தபடிதான் இருக்கிறார்கள்.
திரைப்படத்துறை என்பது பெருமளவில் பணமும், புகழும் புரளும் இடம் என்பதால் அங்கே பலரும் தங்கள் உணர்வுகளை அழுத்திக்கொண்டு எல்லாவற்றோடும் இயைந்தே இருப்பார்கள். ஆனால் மெய்யான கலைஞர்கள் எல்லா கட்டுக்களையும் மீறி கலகக்காரர்களாக இயங்குவார்கள். அதன் காரணமாக தங்கள் உயிரை, வாழ்வை, உறுப்புகளை இழந்தவர்கள் அனேகம். அப்படியான கலைஞர்கள் சிலரை பற்றிய எளிய அறிமுகமே இத்தொடர்….

கிறிஸ்டியன் பவெடா

2009-ஆம் ஆண்டு செப்டெம்பர் 2-ந்தேதி எல்சால்வடார் நாட்டின் தலைநகர் சான்சல்வடாரிலிருந்து பத்து மைல் தொலைவிலுள்ள டான்கேட்பேவிலிருந்து கிறிஸ்டியன் பவெடா தனியே காரில் திரும்பிக்கொண்டிருந்தார். அவரது ஆவணப்படம் ‘லா விடா லோகா’ அன்றுதான் டான்கேட்பேயில் திரையிடப்பட்டிருந்தது.
ஏற்கனவே அவருக்கு கொலை மிரட்டல்கள் இன்னபிற அச்சுறுத்தல்கள் இருந்த சூழலில் அவர் அவ்வாறு தனியாக பயணித்திருக்கக்கூடாது. ஆனால் கிறிஸ்டியன் பவெடாவுக்கு இது பழக்கமான ஒன்றாகிவிட்டது. ‘லா விடா லோகா’ ஆவணப்படத்தின் படபிடிப்பை கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் இத்தகைய அச்சுறுத்தல்களுக்கு இடையேதான் அவர் முடிக்கவேண்டியிருந்தது. ஆனால் படபிடிப்பு சமயங்களில் அவரது பயணத்திட்டம், படபிடிப்புத்தளங்கள் ஆகியன வேறு யாராலும் யூகிக்க முடியாத அளவு ரகசியமாகவே இருந்தது. ஆனால் படம் வெளிவந்ததும் அவர் அசாத்திய துணிச்சலுடன் எல் சால்வடார் எங்கும் பயணிக்க தொடங்கிவிட்டார். ஆனால் எதிரிகள் அந்த சந்தர்ப்பத்தை மிகச்சரியாக பயன்படுத்திக்கொண்டார்கள்.
டான்கேட்பேவிலிருந்து தனியே திரும்பிக்கொண்டிருந்த அவரை அடையாளம் தெரியாத சிலர் சூழ்ந்துகொண்டு சுட்டுக்கொன்றார்கள். தலையில் பலமுறை சுடப்பட்ட நிலையில் காரில் பிணமாகக்கிடந்தது சில மணி நேரங்களுக்குப்பிறகு கண்டுபிடிக்கப்பட்டது. அவரது ஆவணப்படம் ‘லா விடா லோகா’ எல் சால்வடாரில் கோலோச்சிக் கொண்டிருந்த ‘மரியா சல்வாருச்சா’ என்ற குழுவினர் நடத்திய படுகொலைகள், பலாத்காரங்கள், ஆள் கடத்தல்கள், போதைப்பொருள் கடத்தல்கள் பற்றி வெளிச்சமிட்டுக்காட்டியதுதான் அவரது கொலைக்கு காரணம் என்று கூறப்படுகிறது.
‘மரியா சல்வாருச்சா’ எனப்படும் M.S 13 என்ற குழு உண்மையில் எல் சல்வடாரில் துவக்கப்படவில்லை. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ்சில் 80-களில் துவங்கி அமெரிக்கவின் 37 மாநிலங்களில் கிளைத்த அபாயகரமான விடலைக்குழு. அது துவங்கப்பட்ட காரணத்தை பற்றி அறிந்து கொள்ள சில வருடங்கள் நாம் பின்னோக்கி பயணிக்க வேண்டும்..
எல் சால்வடார் நம் தமிழகத்தின் மக்கள் தொகை அளவே கொண்ட மிகச்சிறிய நாடு ( 2009 மக்கள் தொகை கணக்குப்படி 5 கோடியே 77 லட்சம் பேர்தான் )
எல் சால்வடாரின் மக்களை பூர்வகுடி அமெரிக்கன்கள், ஐரோப்பிய குடியேறிகள் என இரண்டு பிரிவாக சுருக்கிவிடலாம். சால்வடாரின் இயற்கை வளங்கள், மற்றும் முன்னேற்றத்துக்கு தடையாக அவ்வப்போது குமுறும் எரிமலைகள் காரணமாக இருந்தன. எனவே அடிப்படை வேலைவாய்ப்புகள், கல்வி, தொழிற்சாலைகள் இல்லாமை காரணமாக பெரும்பாலானோர் அமெரிக்காவை நோக்கி இடம் பெயரத்தொடங்கினர். அமெரிக்காவில் வசிக்கும் வெளிநாட்டினரில் எண்ணிக்கை அடிப்படையில் பார்த்தால் மூன்றாவது இடத்தில் சால்வடேரியன்கள் இருக்கின்றனர். அமெரிக்காவில் இருக்கும் பிற நாட்டினரிடமிருந்து தங்களை பாதுகாப்பதற்காககூறித்தான் மரியா சால்வருச்சா குழு லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் 13 வது தெருவில் துவங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. குழுவின் செயல்பாடுகளுக்காக தேவைப்படும் நிதியைத்திரட்ட வாகனத்திருட்டு, ஆள்கடத்தல், போதை மருந்து கடத்தல் , ஆயுதக்கடத்தல் ஆகியவற்றில் ஈடுபடத்துவங்கினர். ஆனால் நாளடைவில் கேளிக்கைகள், மற்றவர்கள் பயந்து விலகிச் செல்வதில் கிடைக்கும் குரூர திருப்தி காரணமாக வேலையற்ற இளைஞர்கள் பலர் அதில் சேர்ந்து பல வன்முறைச்செயல்களில் ஈடுபட்டனர்.
அமெரிக்கவில் துவங்கப்பட்ட இந்த குழு கனடா, ஹோண்டுராஸ், மெக்ஸிகோ, குவாதிமாலா, ஆஸ்திரேலியா என பரவத்தொடங்கினர். அமெரிக்காவின் குடியேற்றத்துறை அதிகாரிகளுக்கு பெரும் தலைவலியாக மாறிப்போன அவர்களை தேடி அமெரிக்க அதிகாரிகள் வேட்டையாடத்தொடங்கினர். கைதானவர்களை எல் சால்வடாருக்கு திருப்பியனுப்பினர். அமெரிக்காவிலிருந்து தாயகம் திரும்பிய அவர்கள் தங்கள் குற்றச்செயல்களை சொந்த நாட்டிலும் அரங்கேற்றினர்.
தங்கள் முகத்திலும், கைகளிலும் டாட்டூஸ் எனப்படும் வினோத உருவங்களை பச்சைக்குத்திக்கொண்ட அவர்கள் கொலை, கொள்ளை, கடத்தல் போன்றவற்றை இரக்கமற்ற முறையில் நடத்தினர். போதாதற்கு 90-களில் அதே லாஸ் ஏஞ்சல்ஸ்-சில் துவக்கப்பட்ட மாரா18 என்ற குழுவும் அவர்களுக்கு சளைத்தவர்கள் இல்லை என்பது போல வன்முறை வெறியாட்டங்களை சல்வடாரிலும் , அமெரிக்கவிலும் நிகழ்த்தினர். குறிப்பாக 13லிருந்து 20 வயது வரையிலான இளம்பிராயத்தினர்தான் அதிகம் இந்த குழுக்களில் சேரத் தொடங்கினர். கல்வி கற்க வேண்டிய வயதில் அவர்களை அந்த குழுக்கள் ஈர்த்த காரணம்.. போதைமருந்துகள், எந்த வேலைக்கும் போகாமலேயே கையில் புரளும் பணம், கட்டுப்பாடுகளற்ற பாலியல் தொடர்புகள், எல்லாவற்றுக்கும் மேலாக அடுத்தவர்களை மிரட்டுவதில் கிடைக்கும் அளவற்ற ஆனந்தம் ஆகியவையே.. மற்றபடி இந்த குழுக்கள் வேறு எந்த உயர்ந்த லட்சியங்களையும் முன் வைக்கவில்லை..
ஒருகட்டத்தில் மாதத்திற்கு 300 கொலைகள் வீதம் நடந்ததாக கூறப்படுகிறது. அதாவது சராசரியாக தினம் 10 கொலைகள். பவெடா கொலையில் சம்மந்தப்பட்டதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவன் கொஞ்சமும் அச்சமின்றி இன்றைய 10 பேர் பட்டியலில் பவெடாவின் பெயரும் இருந்திருக்கிறது போலும் என்று சொன்னானாம்.. எனில் எல்சால்வடாரின் அன்றைய கொடூரமான சூழலை கற்பனை செய்து பார்க்கலாம்.. வேடிக்கை என்னவென்றால் எல் சால்வடார் என்றால் அவர்களது பாரம்பரிய மொழியில் பாதுகாப்பான தேசம் என்று பொருளாம்..
கிறிஸ்டியன் பவெடாவுக்கு இந்தச் சூழல் மிகுந்த அதிர்ச்சியளிப்பதாக இருந்தது.. ஒட்டு மொத்தமாக ஒரு தலைமுறையே உழைக்கவோ, கல்வி கற்கவோ விரும்பாமல், காட்டுமிராண்டித்தனமாக அடுத்தவர்களை அடித்துப்பிடுங்கி, அச்சுறுத்தி வாழ்வது அந்த தேசத்தையே சீரழித்துவிடும் என்று உணர்ந்தார். இத்தனைக்கும் அவர் எல்சல்வடார் நாட்டை சேர்ந்தவர் இல்லை.
1957 ஆம் ஆண்டு ஜனவரி 12-ந்தேதி அல்ஜீரியாவில் பிறந்தவர் பவெடா. ஒரு சிலர் அவர் பிறந்த வருடம் 1955 என்று சொல்கிறார்கள். பவெடாவின் தாய் வழி மற்றும் தந்தை வழி பாட்டனார்கள் இருவரும் அரசியலில் சித்தாந்த ரீதியாகவே வெவ்வேறான கருத்து உடையவர்கள். ஒருவர் ‘அரசு’ என்ற ஒன்றே தேவையற்றது மக்கள் கூட்டாட்சியாக இருக்கவேண்டும் என சொல்பவர், மற்றவர் தீவிர பொது உடைமைவாதி.. இருவருக்குமான கருத்து மோதல்களுக்கு இடையேதான் பவெடா வளர்ந்தார். இருவரின் வாதங்களில் ஈர்க்கப்பட்ட பவெடா இயல்பிலேயே சமூக அக்கறையுடன் இயங்கிவந்தார், அவரது குடும்பம் ஸ்பெயினிலிருந்து அல்ஜீரியாவுக்கு இடம் பெயர்ந்த பல குடும்பங்களில் ஒன்று. அல்ஜீரிய விடுதலைக்குப்பின் ஃபிரான்ஸில் குடியேறினர்.
பவெடாவின் 19 ஆம் வயதில் புகைப்படங்கள் விற்பனையாளராக இருந்தார். அதன் பிறகு அந்த கலையின் மீது இருந்த ஆர்வம் காரணமாக புகைப்படக்காரனாக மாறினார். ஆனால் அவரது நாட்டம் வர்த்தக ரீதியான புகைப்படங்கள் எடுப்பதில் இல்லை. அப்போது லத்தின் அமெரிக்க நாடுகள் பலவற்றில் நிகழ்ந்த உள்நாட்டு யுத்தங்கள் மீது கவனம் குவிந்தது.
ஆஜானுபாகுவானத் தோற்றம் கொண்ட பவெடா இயல்பிலேயே துணிச்சலானவர். அவருடன் பல்வேறு யுத்தபூமிக்கு பிரயாணித்த நிக் பிரேஸர் என்ற மற்றொரு புகைப்படக்காரர் “ நான் பணியாற்றியதிலேயே பவெடா போல நெஞ்சுரம் மிக்க வேறொருவரை கண்டதில்லை. பல சமயங்களில் உயிருக்கு ஆபத்தென்று தெரிந்தும் எந்த சலனமுமின்றி அங்கே பயணிப்பார் மக்களுக்கு நன்மைபயக்கும் செயலுக்கு ஒரு சதவிகிதம் வாய்ப்பு இருக்குமெனில் அதற்காக 99 சதவிகிதம் உயிரை பணயம் வைக்கலாம் என்பார்” என்று வியப்போடு குறிப்பிட்டுள்ளார். பாரிஸ் மேட்ச், டைம் போன்ற பத்திரிகைகளில் அவரது புகைப்படங்கள் வெளியாகி மிகப்பிரபலமாகி இருந்தார்.
1980 களில் அவருக்கு ஆவணப்படங்கள் எடுப்பதில் நாட்டம் ஏற்பட்டது. ஆரம்பத்தில் குத்துச்சண்டை மற்றும் மல்யுத்த களங்களில் அவரது ஆவண முயற்சி இருந்தது. போகப்போக யுத்தங்கள், கலவரங்களின் போது உண்மை நிலவரத்தை வெளிக்கொணரும் பணியை தனது கடமையாகக் கருதினார்.
சிலி, மெக்ஸிகோ, குவாதிமாலா என்று பல்வேறு நாடுகளுக்கு பயணித்த அவர் மனைவியோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிய நேரிட்ட போது மகிழ்வோடு அதை எதிர்கொண்டார். ஏனெனில் அவருக்கு எல்சல்வடார் நாட்டில் வசிக்க பெரும் ஆவல் இருந்தது. குடும்ப பந்தம் என்பது அதற்கு தடையாக இருப்பதாக அவருக்குத் தோன்றியது. என்ன காரணத்தினாலோ எல்சல்வடார் அவருக்கு பிரியமான தேசமாக இருந்தது.
அவருக்கு இருந்த பணப்பயன் மிகுந்த வேலைவாய்ப்புகள், புகழ் எல்லாவற்றையும் புறந்தள்ளிவிட்டு எல்சல்வடாரில் குடியேறினார். அங்கு நிகழ்ந்த குழுச்சண்டைகள், பாலியல் கொடுமைகள், இளவயது மரணங்கள், எதிர்காலம் பற்றிய எந்த கவலையும் இல்லாமல் குழுக்களுக்கு அடிமையாக போதையின் பாதையில் பயணிக்கும் இளம் தலைமுறை என எல்லாம் அவரை கவலையில் ஆழ்த்தின.
எல் சல்வடாரின் வன்முறைக்குழுக்களின் செயல்பாடுகளால் இளமையை தொலைத்த ஒரு தலைமுறை பற்றி வரும் தலைமுறைக்கு எச்சரிக்கை செய்யவேண்டும் என அவருக்கு தோன்றியது. இரும்புகோட்டையாக விளங்கிய இரண்டு குழுக்களிலும் என்ன நடக்கிறது என்பது பற்றி எல்லோரும் சொல்ல அஞ்சினர். குழுவிலிருந்து வெளியேறியவர்கள் வாய்திறக்க பயந்தனர் வெளியேற்றப்பட்டவர்கள் உயிருடன் இல்லை. இந்த சூழலில் அவர்களைப்பற்றி வெளிப்படையாக ஒரு ஆவணப்படம் என்பது பெரும் சவாலாகவே இருந்தது.
2005-ல் முயற்சிக்கத் துவங்கி கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் குழுக்களின் அச்சுறுத்தல்கள், பணப்பற்றாக்குறை, உடன் பணியாற்ற தயங்கிய தொழில்நுட்பக்காரர்கள், இயற்கை தடங்கல்கள், பேசப்பயந்த மக்கள் என எதிர்கொண்ட சவால்கள் அனைத்தையும் முறியடித்து 2008-ல் சான் செபஸ்டின் உலகத்திரைப்படவிழாவில் படம் வெளிவந்தது. அந்தப்படம் அந்த குழுவினர் பற்றி வெளிவராத அதிர்ச்சியளிக்கும் அரியத்தகவல்களுடன் 90 நிமிடங்கள் ஓடக்கூடியதாக இருந்தது. பொதுவாக திரைப்படங்களுக்குத்தான் திருட்டு டி.வி.டி.கள் வரும். ஆனால் இந்த ஆவணப்படத்தின் திருட்டு டி.வி.டிகள் மெக்சிகோ, கனடா, அமெரிக்கா, ஃபிரான்ஸ் எங்கும் பரவின.
படத்தை எடுத்த போதும் , படம் வெளிவந்தபிறகும் அவரது நண்பர்களும், அவரது எதிரிகளும் சொன்ன ஒரே விஷயம் அவர் எல்சல்வடாரிலிருந்து வெளியேறிவிடவேண்டும் என்பதே.. ஒரு தரப்பு அன்பின் மிகுதியாலும் மற்றொன்று அச்சுறுத்தலாகவும் அந்த கோரிக்கையை வைத்தன.
பவெடா நினைத்திருந்தால் இதை விட எளிதான சுகமான பிரபல்யம் வய்ந்த வாழ்க்கை அவருக்கு கிடைத்திருக்கும். ஆனால் அவருக்கு எல்சல்வடார் மீது இருந்த அக்கறை, அந்த சமூகத்தின்பால் கொண்டிருந்த கவலை, இளைய தலைமுறை மீது கொண்டிருந்த பரிவு அவரை அனாதை போல இறக்க வைத்தது. ஆனால் அவர் மீது அன்புகொண்ட புகைப்பட மற்றும் திரை கலைஞர்கள் செப்டெம்பர் 2-ல் அவரது நினைவஞ்சலி கூட்டங்களில் அவரது பொறுப்பு மிக்க கலை உணர்வை போற்றுகின்றனர். அவரது ‘லா விடா லோகா’ ஆவணப்படம் இன்றைக்கும் லத்தின் அமெரிக்க நாடுகளில் உள்ள திரைப்பட கல்லூரிகளில் தவறாது திரையிடப்படுகிறது. அவரது ஆவணப்படம் வெறும் பரபரப்பு கருதி உருவாக்கப்பட்ட படம் இல்லை . அது ஒரு சமூக எச்சரிக்கை பதிவு. அதற்காக தன் உயிரையே பணயம் வைத்த கிறிஸ்டியன் பவெடா ஒரு கலகக்காரரே..

– நெய்வேலி பாரதிக்குமார்.

———————————————————————————————
தீக்கிரை
இயக்கம் : டெனிஸ் வில்லுநோவா ( denis Villeneuve)

”சினிமா என்ற ஒரு கலை வெளிப்படுத்திய புதிய கருத்து என்பது கடலின் கொந்தளிப்போ அல்லது எரிமலைகளின் குமுறலோ இல்லை. மாறாக ஒருவனின் கண் ஓரத்தில் மெல்லத் தேங்கும் ஒரு கண்ணீர் துளியாகும்”
-பெலபெலாஸ்.
எல்லாத் திரைப்படங்களையும் நாம் இரண்டு வகையாக பிரித்து விடலாம். ஒன்று பொழுதுபோக்குப்படங்கள் ( Commercial films) இரண்டு கலைப்படங்கள் (Art film) . கலைப்படங்கள் சமூகம் சார்ந்தவைகள். சமூகப்பிரச்சனைகளைப் பற்றிய செய்திகளைச் சொல்பவை. அதனால் உலகம் முழுவதும் இருந்து வெளிவரும் திரைப்படங்களின் 90 சதவீதம் பொழுதுபோக்கு படங்களே அதில் பத்து சதவீதமே கலைப்படங்கள் . 90 சதவீதம் பொழுதுபோக்குப் படங்களாக இருப்பதால் சினிமா என்றாலே அது ஒரு பொழுதுபோக்கிற்கான கலை என்ற போக்கு மக்களிடையே நிலவுகிறது. அதற்குக் காரணம் வணிகப்பட நிறுவனங்கள் அதற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து அதிக எண்ணிக்கையில் வெளியிடுவதே இதனால் 75 சதவீதம் உள்ள பார்வையாளர்கள் கலைப்படங்களைப் பார்ப்பதற்கான வாய்ப்புகளை இழ்ந்துவிடுகின்றனர். குறிப்பாக மூன்றாம் உலக நாடுகளில் இப்படி ஒரு துரதிஷ்டம் நிலவுகிறது. எனவே ‘நல்ல சினிமாக்களை அறிமுகப்படுத்தும் பொருட்டு நிழல் தொடர்ந்து இவ்வகைப்படங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் Incendies மற்றும் Lemon Tree என்ற இரண்டு படங்களுக்கான விமர்சனங்கள் வெளியிடப்படுகின்றன.
கோலிவுட்டிலிருந்து ஹாலிவுட் வரைக்கும் உள்ள திரைப்பட முதலாளிகள் தங்கள் லாபத்தை குறித்தே ‘சினிமா’ என்ற கலையை ஒரு வெறும் பொழுதுபோக்கிற்கான ஊடகமாக மாற்றி வைத்து இருக்கும் போக்கிற்கு எதிராகவும் அதற்கு இணையாகவும் ‘மாற்றுசினிமா’ (Alternative cinema ) என்கிற போக்கை மனசாட்சியுடைய பல இயக்குனர்கள் தங்களின் திரைப்படங்களின் மூலம் உருவாக்கியுள்ளனர். இத்தகைய படங்கள் இன்று பெரும்பாலான மக்களிடையே ஆச்சரியமூட்டும் வகையில் அதிக கவனம் பெற்று வருகின்றன. இத்திரைப்படங்களின் வெற்றி நல்லசினிமாவை தேடும் நம் போன்றோருக்கு ஆறுதலாக இருக்கும். அதேசமயம் சினிமா சமூக பரிமாணம் (Social diamension ) அடைந்து வருகிறது என்பதையும் நமக்கு உணர்த்துகிறது.
Incendies திரைப்படம் முழுக்க முழுக்க அ-நேர்கோட்டு பாணியில் (Non-Linear) எடுக்கப்பட்டுள்ள படம் போரினால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் வாழ்க்கையினூடாக மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பொது அரசியல் பிரச்சனையை விவரிக்கும் படம். மிக மிக அற்புதமான கதை அமைப்பு, சிறப்பான இயக்கம், சிறந்த நடிப்பு, நெகிழ வைக்கும் படப்பிடிப்பு, பிசிரற்ற படத்தொகுப்பு என அனைத்தும் கச்சிதமாக அமைந்த ஒரு நல்ல திரைப்படம் . ஒவ்வொரு பிரேமும் நன்கு திட்டமிடப்பட்டு அமைக்கப்பட்டுள்ளது. ஒரு மருத்துவக்கல்லூரி மாணவனுக்கு இறந்த உடல் எப்படி பயன்படுகிறதோ அந்த அளவுக்கு ஒரு திரைப்படக்கல்லூரி மாணவனுக்கு பகுதி பகுதியாக பிரித்து சினிமா நுட்பங்களை சொல்லிக்கொடுக்கும் அளவில் இப்படத்தின் ஒவ்வொரு நுட்பமும் சிறப்பாக அமைந்த படம். சமீபகாலத்தில் நான் பார்த்து வியந்த படங்களில் இப்படமே முதலில் நிற்கிறது.
லெபனான் நாட்டு கிராமம் ஒன்றில் கிறித்துவபெண் அந்நாட்டிலுள்ள பாலஸ்தீன முஸ்லீம் அகதியை காதலித்து ஊரை விட்டு ஓட நினைக்கும் நேரத்தில் அப்பெண்ணின் சகோதரனால் அக்காதலன் சுட்டுக்கொல்லப்படுகிறான். திருமணத்திற்கு முன்பே அப்பெண் கர்ப்பமானதால் பிறந்தவுடன் அக்குழந்தை அனாதை இல்லத்தில் சேர்க்கப்படுகிறது. லெபனான் உள்நாட்டுப்போரில் கிறித்தவ தேசியவாதிகள் முஸ்லிம்களுக்கு இழைக்கும் கொடுமைகளைக் கண்டு அப்பெண் அதன் தலைவரைச் சுட்டுக்கொல்ல சிறையில் அடைக்கப்படுகிறாள். சிறையில் அவள் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாகிறாள். அங்கேயே அவளுக்கு இரட்டை பிள்ளைகள் பிறக்கின்றன அந்த இரண்டு பிள்ளைகளுடன் கனடாவில் இறுதி காலத்தை கழிக்கிறாள். இறக்கும் போது இரண்டு கடிதங்களை உயிலாக எழுதி வைத்துவிட்டு இறந்துபோகிறாள். இந்த இரண்டு கடிதங்களில் ஒன்று (பார்க்காத) சகோதரனுக்கு மற்றொன்று (இறந்துவிட்டதாக கருதும்) அவர்களது தந்தைக்கு இரண்டு கடிதங்களையும் உரியவர்களிடம் சேர்க்கும் பொருட்டு தாயின் சொந்த ஊருக்கு செல்ல, அங்கு அவள் படாதபாடுபடுகிறாள். வலியும் வேதனையுமிக்க ஒரு வாழ்க்கையை அதை பற்றியே அறிந்திராத ஒரு தலைமுறைக்கு அத்தாய் இரண்டு கடிதத்தின் மூலமாக புரிய வைத்திருப்பதே படத்தின் கதையாகும்.
முதல் காட்சியில் லெபனான் மலைப்பகுதியை Wide Angle ல் காட்டும் கேமிரா கொஞ்ச நேரம் கழித்து ஒரு அறைக்குள் முழுவதுமாக ஒரு சுற்றுச் சுற்றி வட்டமிடுகிறது . ஒரு ஜன்னலின் கோணத்திலிருந்து இவ்வளவு விரிந்த மலைப்பகுதியை பார்க்கும் அனுபவம் சற்று வித்தியாசமாக இருந்தது. அதை அமைதியான நகர்த்தலில் நமக்கு புதுவித அனுபவத்தை ஏற்படுத்துகிறது. அறைக்காட்சியின் பிண்ணனி இசையாக ரேடியோஹெட் ( Radio Head ) ராக் இசை குழுவின் பாடல் மெலிதாக ஒலிக்க இரண்டுபேர் சிறுவர்களுக்கு மொட்டை அடித்து கொண்டிருக்கின்றனர். அதில் ஒரு சிறுவனுடைய ஊடுருவி துளைக்கும் பார்வைகொண்ட அந்த முகத்திற்கு மட்டும் குளோசப் செய்கிறது கேமரா . கேமரா நகர்த்தல் என்பது படத்திற்கு எவ்வளவு முக்கியம் என்பதை நிரூபிக்கிற வகையில் படம் முழுவதும் கேமரா மெதுவாக நகர்த்தப்பட்டு இருக்கிறது.
இந்தகாட்சியை கட் செய்து அடுத்த காட்சி கனடா நாட்டு வக்கில் அறையில் காட்டப்படுகிறது. இது போன்ற தொடர்பற்ற காட்சி அமைப்புகள் படம் முழுவதும் கையாளப்படுகின்றன. அதாவது ( Un Related Scene sequence ) முறை கையாளப்பட்டுள்ளது. காட்சி தொடர்கள் Juxtapose முறையில் செய்யப்பட்டுள்ளன. படம் தொடர்ச்சியற்ற Non Continuity முறையில் ஆனால் காட்சி தொடர்ச்சியின் ( Continuity of sequal ) அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. ப்ளாஸ்பேக்காக இல்லாமல் juxtapose முறையில் படம் எடுக்கப்பட்டுள்ளது. இது பார்வையாளனுக்கு புதுவிதமாக படம் பார்க்கும் அனுபவத்தை ஏற்படுத்துகிறது.
இயக்குனர் திரைக்கதையாசிரியர் என்பதால் கதையை மிக வலிமையுள்ள திரைக்கதையாக மாற்றியுள்ளார். இது இப்படத்திற்கு முதுகெலும்பாக அமைந்துள்ளது. இது தான் இப்படத்திற்கான சிறப்பம்சமும் கூட இத்திரைக்கதையின் இன்னொரு சிறப்பம்சம் என்னவெனில் படத்தில் வரும் எல்லாக் கதாப்பாத்திரங்களையும் இன்றைய காலக்கட்டத்தின் உருவக உருவங்களாக (Allegorical Characters ) சித்தரித்திருப்பது இயக்குனரின் திறமைக்கு சான்றாக உள்ளது.
நவ்வால் மர்வான் கதாபாத்திரம் மத்தியகிழக்கு சமூகங்களின் ஒட்டுமொத்த உருவகம். ஆம், ஒத்திசைவோடு ஒன்றிணைந்து வாழவிரும்புகின்றன நாடுகள் , ஆனால் அது மறுக்கப்படுகிறது (பாலஸ்தீன அகதி + கிறித்துவப் பெண் காதல் ) அவள் குடும்பத்தினரால் நிராகரிக்கப்படுகிறாள் . ( அரபு நாடுகளால் பாலஸ்தீன விடுதலை புறக்கணிக்கப்படுகிறது). தன் சொந்த வாழ்க்கை ஒவ்வொரு தடவையும் நாசமாக்கப்பட்டாலும் விரக்தி அடைந்துவிடாமல் மீண்டும் மீண்டும் எழுந்து வாழ்க்கையை முன்நோக்கி நகர்த்திக்கொள்கிறாள். ( அமெரிக்க-இஸ்ரேல் தாக்குதலால் தினம் தினம் நசுக்கப்பட்டாலும், பாலஸ்தீன விடுதலைப்போராட்டம் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.)
ஜேன்மர்வான் : இன்றைய தலைமுறையின் உருவகமாக காணப்படுகிறாள் எத்தனை இன்னல்கள் வந்தாலும் கொண்ட குறிக்கோளை அடைந்தே தீருவதென தாயின் வழிகளில் செல்கிறாள். (கொடுங்கோலர்கள் எத்தனைமுறை அடக்குமுறைகளை செய்தாலும் அதை எதிர்த்து சமீபமாக அரபு நாடுகளில் ஏற்பட்டுள்ள போராட்டங்களை சொல்லலாம்.)
சிமோன் மர்வான் : இளம் தலைமுறையின் மற்றொரு பகுதியினரை உருவகப்படுத்தும் கதாப்பாத்திரம் . பெற்ற தாயின் கடைசி விருப்பத்தின் அடிப்படையைக் கூட புரிந்துகொள்ள முடியாத எந்த உணர்வும் இல்லாத, சமூகம் பற்றிய எந்த அறிவுமற்ற, தான் மட்டும் பிரச்சனை இல்லாமல் வாழ நினைக்கும் இளைய தலைமுறை . அதனால் தான் இறந்துவிட்ட தாயை “பொதைச்சுட்டு போய்கிட்டே இருக்க வேண்டியது தானே, எதற்கு வீண் சிரமம் எடுக்கணும்” என்கிற தொனியில் பேசும் இவர் பொறுப்பற்று வாழும் இன்றைய இளம் தலைமுறையின் சரியான உருவகமாக உலாவருகிறார் படத்தில்.
ஜேன் லெபல் : நவால் மர்வானின் வக்கீலாக வரும் இவர் மிகச்சிறந்த நடிகர் ஆர்ப்பாட்டமில்லாத அமைதியான நடிப்பு . அரபுலக போராட்டத்தளத்தில் இடைநிலையாளராக இவரை நாம் அடையாளப்படுத்திக்கொள்ளலாம்.
நிகாத் மே என்ற அபுதாரிக் : நவால் மர்வானின் மகனும், இரண்டு பிள்ளைகளின் தந்தையாகவும் காட்டப்படும் இவர் இருபக்கமும் போராடும் இளைஞர்களை உருவகப்படுத்துகிறது.
ஒளிப்பதிவு குறித்து நாம் பேசித்தான் ஆகவேண்டும். வெளிப்புறக் காட்சிக்கு wideAngleம் உணர்ச்சுபூர்வ நடிப்பிற்கு குளோசப் காட்சியும், இரண்டு மூன்று பேர் உள்ள காட்சிக்கு மீடியம் சாட் என்கிற வகையில் காட்சிகள் அமைக்கபட்டுள்ளன. ஒளிப்பதிவின் இன்னொரு சிறப்பம்சம் இயற்கையான வெளிச்சத்திலேயே கிட்டத்தட்ட எல்லாக்காட்சிகளும் படமாக்கப்பட்டுள்ளன. குறிப்பாக லெபனான் நகரில் காரில் போகும் போது குகை சாலையை கடக்கும் போது அரைஇருட்டும் பின்பு வெளியே வரும்போது பிரகாசமாக அதே நேரம் wideangleல் காட்டப்படும் நகர்புற காட்சியும் நம்மை ஆச்சரியமூட்டுகிறது. அது நம்மை உடல் ரீதியாக உணரவைக்கிறது. அந்த அனுபவத்தை நாம் படம் பார்க்கும் போது தான் உணர முடியும். பார்வையாளனை கேமராவோடு பயணிக்கவைக்கிற இந்த மாதிரி அனுபவங்கள் ஒரு சில படங்களில் மட்டுமே அதுவும் ஒரு சில ஒளிப்பதிவாளர்களால் மட்டுமே சாத்தியமாகிறது. லெபனான் மலைப்பகுதிகளில் எல்லாம் wideangleல் காட்டி இருக்கும் அழகு நேர்த்தியானது. ஆம், படத்தின் அப்படி ஒரு அழகான அனுபவத்தை ஆரம்பித்து வைக்கிறது.
முஸ்லிம்களும், நவால் மர்வானும் வருகிற பஸ்ஸை நிறுத்தி கிறித்துவர்கள் எரித்துவிடும் காட்சியில் மார்வான் தான் ஒரு கிறித்துவபெண் என்று சிலுவையை காட்டுவதால் அவளை மட்டும் விட்டுவிட்டு மற்ற முஸ்லிம்களை பஸ்ஸில் உயிரோடு எரித்துக்கொள்ளும் காட்சி ஒரு குளோசப் காட்சி தான். இதில் மர்வான் மண்டியிட்டு அழுதவாறு இருக்க பின்னால் பஸ் எரிகிறது மனதை பிசையும் காட்சி . சில காட்சிகள் அமைப்புகள் நாம் என்றென்றும் நினைவில் கொள்ளுமாறு அமைந்து இருக்கிறது. அந்த அற்புத ஒளிப்பதிவாளர் அந்திரே துர்பின்.
இந்த படத்திற்கு இன்னொரு கூடுதல் சிறப்பும் உண்டு . அது தான் இசை, இசையே இல்லை என்று சொல்லும் அளவுக்கு பின்னணி இசை மிகக்குறைவாகவே உள்ளது இரண்டு மூன்று இடங்களில் மட்டும் மெலிதான இசை இழையோடுகிறது மற்றபடி படம் ரொம்ப அமைதியாக போகிறது. ஒளி,ஒலி,காட்சி,கோணம், இசை, கதை, இயக்கம், படத்தொகுப்பு எல்லாமே ஒருங்கிணைந்து ஒரு உண்மையான Theatrical Experience-ஐ இப்படம் தருகிறது எனில் மிகையல்ல இவையெல்லாம் கட்சிதமாக பொருத்தப்பட்டால் தான் திரைக்குமுன்னால் உட்கார்ந்து இருக்கும் பார்வையாளனுக்கு இயக்குனர் சொல்ல விரும்பும் செய்தியை சொல்லமுடியும். பார்வையாளனுக்கும் இயக்குனருக்கும் இடையே இந்த ஒலி அற்ற மவுன மொழியே சினிமா மொழியென்கின்றனர்.
அரபுகலாச்சாரம், அதன் அரசியல் நிலைமை என எதுவுமே தெரியாத கனடாவை சேர்ந்த இந்த இயக்குனரால் மத்தியகிழக்கு பிரச்சனையை பற்றிய ஒரு படத்தை இவ்வளவு சிறப்பாக எப்படி எடுக்கமுடிந்தது என்கிற ஆச்சரியத்தோடுதான் நான் படம் பார்க்க தொடங்கினேன். இந்த ஆச்சரியம் இன்னும் விலகவில்லை. “கனடாவில் வாழும் லெபனான் நாட்டு நாடக ஆசிரியரான வாஜ்திமெளவாத் என்பாரின் நாடகத்தைப் பார்த்தவுடனேயே என்னை மிகவும் பாதித்ததால் இதை படமாக்க வேண்டுமென்று அன்றே நினைத்தேன். காரணம் அந்த கதையமைப்பு” என்கிறார் இயக்குனர் டெனிஸ் வில்லுநோவா
எனவே, அவர் 4,5 முறை மத்திய கிழக்கு நாடுகளுக்குப் பயணம் செய்து அங்குள்ள கலாச்சாரம்,அரசியல் குறித்து நேரிடையாகப் பார்த்து அறிந்துகொள்கிறார். மேலும் நாடகத்தை தன் இஷ்டம் போல் திரைக்கதை அமைக்க அவர் நாடகாசிரியரைக் கேட்ட போது உன் இஸ்டப்படி மாற்றிக்கொள் என்று அனுமதி அளித்திருக்கிறார். அதனால் இயக்குனர் முழுமையான சுதந்திரத்துடன் இவ்வளவு சிறப்பான திரைக்கதையை உருவாக்க முடிந்திருக்கிறது.
இக்கதை பற்றி இயக்குனரிடம் கேட்டபோது, “இது உண்மைச் சம்பவம் இல்லை அல்ல. லெபனான் உள்நாட்டுப் போரின் போது ஒரு இராணுவ அதிகாரியைக் கொல்ல முயன்ற ஒரு பெண் அதற்காக பத்து ஆண்டுகள் சிறை தண்டனை பெறுகிறார். அந்த பத்து ஆண்டுகளில் மிக குறுகிய சிறை அறையில் அப்பெண் காட்டிய வீரம், அரசியல் ஈடுபாடு மற்றும் அவளது எதிர்ப்புணர்வு ஆகியவற்றினால் தூண்டப்பட்ட மெளவாத் மிக அற்புதமாக நாடகத்தை தயாரித்தார். ஆனால், அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக அந்த நாடகம் இல்லாததால் குறிப்பாக 70-80களில் நடந்த சப்ரா, சதிலா படுகொலைகள் மற்றும் 1975ல் பெய்ரூட்டில் நடந்த பஸ் எரிப்பு போன்ற சில வரலாற்று சம்பவங்களை கதையினூடாக அமைத்து திரைக்கதையை உருவாக்கினேன்” என்கிறார் .
கனடாவில் பிறந்த ஒரு ஆங்கில இயக்குனர் தனக்குத்தெரியாத மொழி, கலாச்சாரம்,அரசியல் கொண்ட மத்திய கிழக்கு நாடுகளிலுள்ள ஒரு பிரச்சனையை பற்றி ஏன் படமெடுக்க வேண்டும் ? இது போன்ற கேள்விகளுக்கு விடை காண மீண்டும் நாம் படத்திற்குள் நுழைவோம்.
படத்தில் காதலர்களாக பாலஸ்தீன அகதி இளைஞனும் லெபனான் கிறித்தவ பெண்ணும் வீட்டை விட்டு ஒட நினைக்கும் போது காதலன் சுட்டுக்கொல்லப்படுகிறான். பிறகு கற்பமாக உள்ள அப்பெண்ணின் பாட்டி மகப்பேறு பார்த்து அக்குழந்தையை அனாதை இல்லத்திற்கு அனுப்பும் முன்பு “நன்றாகப் பார்த்துக்கொள் உன்மகனை, எப்போதாவது ஒரு நாள் இவனை பார்க்க நேர்ந்தால் உன் மகன் தான் என்று அடையாளம் தெரிந்துகொள்ள கணுக்காலின் கீழ் மூன்று புள்ளிகள் அச்சு குத்துகிறேன்” என்று புள்ளியிடுகிறார்.
இந்தப் புள்ளிதான் கதையின் முடிச்சாக கதையில் தொடக்கமாக அமைகிறது பிறகு அக்குழந்தை வளரும் அனாதை இல்லம் கிறித்தவ தேசிய வெறியர்களால் தாக்கப்படுகிறது. அப்போது இஸ்லாமிய யுத்தபிரபு ஒருவரால் எல்லா சிறுவர்களும் காப்பாற்றப்பட்டு தன்னிடத்தில் அதாவது ’மதரசா’ எனப்படும் பள்ளியில் போராளிகளாக வளர்க்கப்படுகின்றனர். அந்த காட்சித் தான் படத்தின் முதல் காட்சி அவனுக்கு ’நிகாத் மே’ எனப்பெயரிடுகிறார். தனது திறமையால் போராட்ட தளபதியாக மாறும் நிகாத் சிறையில் அடைபட்டு இருக்கும் பெண்ணை அதாவது படத்தின் கதாநாயகியை மர்வானை அடிக்கடி வன்புணர்ச்சி செய்கிறார். அதனால் அவள் மீண்டும் மீண்டும் கற்பமடைகிறாள். சிறையில் அவளுக்கு பிறக்கும் இரட்டைக் குழந்தைகளை செவிலிப்பெண் காப்பாற்றி மர்வானிடம் சேர்க்கிறாள். சிறைத்தண்டனை முடிந்து தனது இரு குழந்தைகளுடன் கனடாவில் வாழ்கிறாள். ஒரு நாள், தன் மகள் ஜேன்மர்வானுடன் கனடாவிலுள்ள நீச்சல் குளத்தில் குளித்துவிட்டு கரையேறும் சமயம் கரையில் நிற்கும் ஒருவனின் காலில் மூன்று புள்ளிகள் குத்தப்பட்டு இருப்பதைப் பார்க்கிறாள். தன் மகன் கிடைத்துவிட்டான் என்ற ஆவலுடன் கரையேறி அந்த ஆணின் தோள் மீது கை வைக்க அவன் திரும்பி இவளைப் பார்க்கிறான். அவன் முகத்தில் எந்த சலனமும் இல்லை. ஆனால், மர்வான் முகம் –சப்தநாடியும் ஒடுங்கியது போல, ஆயிரம் இடிகள் தாக்கியது போல, சட்டென அனைத்தும் நொறுங்கியது போல, பூமி விலகி அதன் பாதாளத்தில் விழுவது போல உணர்ந்த முகத்தோடு நடந்துபோய் அமர்கிறாள். சித்தபிரம்மைப் பித்தவளாக உட்கார்ந்து இருக்கிறாள்.
யாரைத்தேடி ஊர் ஊராக அலைந்தாளோ தனக்கு ஏற்பட்ட அத்தனை கொடுமைகளையும் சகித்துக்கொண்டு யாருக்காக வாழ்ந்தாளோ அவன் கிடைத்துவிட்டான். ஆம், கணுக்காலின் கீழ் பாட்டி வைத்த மூன்று புள்ளிகள்கொண்ட கால்களுக்குச் சொந்தக்காரன் கிடைத்துவிட்டான். அவன் தான் அபுதாரிக் என்கிற நிகாத் மே – அவனே தான். ஆனால், மர்வானை மாறி மாறி வன்புணர்ச்சி செய்தானே, அவனும் அவனே தான். தன் மகனாலேயே தான் வன்புணர்ச்சி செய்யப்பட்டு இருக்கிறோம் என்பதை அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
தன்னை பெற்றெடுத்த தாயைத் தான் நாம் மாறி மாறி வன்புணர்ச்சி செய்திருக்கிறோம் என்று தெரியாதவனாக முகத்தில் எந்தச் சலனமுமின்றி அவன் நிற்க, ஆனால் படம் பார்க்கும் நமக்கோ, சலனமுற்ற நம் மனசாட்சி படம் பார்த்த பிறகு பேயாட்டம் போடுகிறது. இந்தக் கதை கருதான் இயக்குனரை பாதித்த விசயம். எந்த ஒரு மனிதனுக்கும் நேராத, நேரக்கூடாத ஒரு விசயம். இந்த மானுடக் கொடூரமே இயக்குனர் வில்லுநோவை படம் எடுக்க தூண்டிய விசயம். இப்படம் வெற்றிகரமாக இயக்கி இருப்பதற்கு காரணம் அவரிடம் மனசாட்சியும், மனித உணர்வும் சேர்ந்தே இருந்தது தான். இப்படியான பல்வேறு கொடுமைகள் தினந்தோறும் மத்தியகிழக்கு நாடுகளில் நடந்தவண்ணம் உள்ளன. மறைக்கப்படும் இந்த கொடுமைகளையெல்லாம் வெளியில் யார் சொல்வது? அப்படி பார்க்கையில் உலகத்தாரிடம் சொல்லியிருக்கும் இயக்குனருக்கு நம் பாராட்டுகளை தெரிவித்தே ஆகவேண்டும்.
1967ஆம் ஆண்டு அரபு-இஸ்ரேல் போருக்கு பிறகு, அமெரிக்காவின் பிராந்திய அடியாளும் , அரசியல் பினாமியுமான இஸ்ரேல், கோலன் மலைப்பிரதேசம் சினாய் பகுதி, காசா மற்றும் மேற்குக்கரைப் பிரதேசங்களை ஆக்கிரமித்தப் பிறகு அங்கிருந்து பாலஸ்தீன மக்கள் வெளியேற்றப்பட்டனர். சொந்த மண்ணிலிருந்து வேறோடு பிடுங்கப்பட்டு, அகதிகளாக பிற பகுதிகளில் தஞ்சம் புகத்தொடங்கினர். இதில் கிட்டத்தட்ட அதிகாரப்பூர்வமாக நான்கு லட்சம் பாலஸ்தீனியர்கள் லெபனானில் அகதிகளாக வாழ்கின்றனர். ஏற்கனவே லெபனானில் கிறித்தவர்கள் 65 சதவீதமும் முஸ்லீம்கள் 35 சத்வீதமும் இருந்த நிலையில் அகதிகளின் வருகை அங்கு சிறியதாக இருந்த இனப்பிரச்சனை பூதாகரமாக வெடிக்கத்தொடங்கியது. விளைவு, மாரோனைட் கத்தோலிக்க கிறித்தவர்கள் தங்களுக்கென படையும் முஸ்லிம்கள் கிறித்தவர்களிடமிருந்து பாதுகாத்துக்கொள்ள ஹிஸ்புல்லா போன்ற படைகளையும் உருவாக்கிக்கொள்ள இனக்கலவரம் தொடர்கின்றன. இது லெபனானின் அரசியல் பின்புலம்.
இஸ்லாமிய பயங்கரவாதம் என்று கூக்குரலிடும் வல்லரசுகள் அதற்குக்காரணமானவர்கள் தாங்கள்தான் என்பதை மறைக்க பயங்கரவாதி எனும் முகமூடியை மத்திய கிழக்கு நாடுகளின் மக்கள் முகங்களில் அணிந்துவிட்டதை பறைசாற்றும் இது போன்ற திரைப்படங்கள் உலகம் முழுவதும் சென்றடையும் போது தான் உண்மையான காரணங்கள் புரிய வரும்.
எண்ணெய் வளமிக்க மத்திய கிழக்கு நாடுகள் எப்போதும் தன் கட்டுப்பாட்டில் இருக்கவேண்டும் . அவர்கள் ஒற்றுமை அடையக்கூடாது, போராடும் குழுக்கள் பலம் அடைந்துவிடக்கூடாது இவையே அமெரிக்காவின் குறிக்கோள் அதற்குத்தான் இஸ்ரேலை அங்கு ’பெரிய அண்ணனாக’ உருவாக்கியுள்ளது. இந்த எண்ணெய் வளத்தை கொள்ளை அடிக்க மக்களின் வாழ்க்கையை சின்னாபின்னமடித்து கொண்டிருக்கின்றன வல்லரசுகள்.
ஆனால், இந்த அரசியல் சூழ்நிலைகளுக்கு எல்லாம் இயக்குனர் போகாமல் இந்த சூழ்நிலை ஒரு குடும்பத்திற்குள் எப்படி சிதைவை உருவாக்குகிறது என்றும் சமூகத்தில் நிலவும் வன்முறையை இக்கதை எப்படி கையாள்கிறது என்பதே எனக்கு பிடித்த விசயம் என்று கூறும் இயக்குனர் அக்கதையை போலவே திரைக்கதை கட்டமைப்பிலும் அதே உத்தியைக் கையாண்டு இயக்கியிருப்பதே இயக்குனரின் மற்றொரு முக்கியமான விசயமாகும். அதாவது Story Structureக்கும் Visual Structureக்குமான இணைவை மிகச்சரியாக பொருத்தியிருக்கிறார் இயக்குனர்.
பொதுவாக எல்லாப்படங்களிலும் இசை காட்சிக்குத் தகுந்தவாறு அமைத்திருப்பார்கள். இசையுடன் கூடிய காட்சிகள், அது ஹாலிவுட் படங்களில் அந்தப் பின்னணி இசையை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்று தெரிந்து இருந்தாலும் இசையின்றி பாடலின்றி பார்த்திருக்க மாட்டோம். ஆனால் இசையின்றி இப்படத்தை பார்ப்பது புதுவிதமான அனுபவத்தை தருகிறது. அதாவது மவுனத்தை எவ்வாறு பயன்படுத்துவது என்பதையே இயக்குனர் இங்கு புதிய யுக்தியாக கையாண்டுயிருக்கிறார். இன்னும் இது போன்று பல அம்சங்களை எழுதிக்கொண்டே போகலாம்.
டெனிஸ் வில்லுநோவே கனடா நாட்டின் கியூபெக் மாகாணத்திலுள்ள ஜென்டில்லி பகுதியை சேர்ந்தவர். 1967ஆம் ஆண்டு பிறந்தவர். தனது திரைப்படப் பிரவேசத்தை 1990ல் தொடங்கினார். தனது 20வருட கால திரைப்படத்துறை சேவையில் இதுவரை நான்கே படங்கள் தான் இயக்கியுள்ளார்.
August 32nd on earth -1990
Maelstorm – 2000
Polytechnique -2009
Incendies – 2010

கனடாவில் ஜெனி விருதினை மூன்று முறை பெற்றவர் . கடைசி மூன்று படங்களுக்கு சிறந்த இயக்குனருக்கான பரிசும் சிறந்த படங்களுக்கான பரிசும் வென்றவர். 2011ல் பார்க்கவேண்டிய மிகச்சிறந்த படங்களின் இயக்குனர்களில் இவர் தேர்வு செய்யப்பட்டார். நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை 2011-ல் வெளிவந்த பத்து சிறந்த படங்களில் Incendiesஐ தேர்வு செய்தது. 2010-ல் சிறந்த பிறமொழிப் படத்திற்கான அகாடமி விருதை Incendiesவென்றது. உள்ளூரிலும் வெளிநாடுகளிலும் இதுவரை இவரது திரைப்படங்கள் கிட்டத்தட்ட 150 பரிசுகளைப் பெற்றுள்ளன.
Incendies ஆஸ்கர் பரிசுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. இறுதியாக இயக்குனர் கூறிய வாக்கியங்களுடன் இதனை முடிக்கலாம்.

“One of the Beauties of cinema is to bridge between cultures”
————————————————————————————————————–

தட்டுங்கள் திறக்கப்படும்

எஸ். மலர்விழி – உடுமலை:
கே : புகழ் பெற்ற இந்திய படங்கள் டிவிடிக்காளாக கிடைப்பதில்லை இவற்றை எங்கு வாங்கலாம்…?

நிழல் : சில படங்கள் டோரண்ட் இணைய கிடங்கில் இருக்கிறது. பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். மற்றபடங்களை லோக்சபா சேனலில் சனி,ஞாயிறுகளில் பார்க்கலாம்.

மு.ரவி-காரைக்கால்:
கே: எங்கள் ஊரில் ஃபிலிம் கிளப் ஆரம்பிப்பது எப்படி ?

நிழல்: முதலில் உங்கள் ஃபிலிம் கிளப் பெயரை பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யவேண்டும். தலைவர்,செயலாளர்,பொருளாளர், சங்க உறுப்பினர்கள் 7பேர் முதல் 11பேர் வரை இருக்கலாம். பதிவு முடிந்தவுடன் சங்க உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை கொடுக்க வேண்டும். திரைப்படம் திரையிடும் போது டிக்கெட் விற்பனையை சங்கம் செய்யக்கூடாது. ஆனால், உறுப்பினர்களிடமிருந்து ஆண்டுக்கட்டணம் பெறலாம். சென்னை, தில்லியில் உள்ள வெளிநாட்டு தூதரகங்களை அணுகி படங்களைப்பெற்று திரையிடலாம். இந்தியப்படங்களை புனே, மற்றும் பெங்களூரில் உள்ள ஆவணக்காப்பகங்களில் பெற்று திரையிடலாம். திரையிடல் முடிந்த பின்பு திறனாய்வு கட்டாயம் நடத்த வேண்டும், ஆண்டுக்கு ஒரு முறை ஃபிலிம் அப்ரிசியேசன் வகுப்பு, சிறப்பு திரையிடல்கள்,படவிழாக்கள் முதலியன நடத்தலாம்.
கி.சங்கர்-ஜாகிர்பாளையம்,சேலம்
கே:ஆவணப்படங்களை விலை கொடுத்துப் பெற்றுக்கொள்ளும் நிறுவனங்கள் இருக்கிறதா…?
நிழல்: தில்லியில் உள்ளது. தமிழக ஆவணப்படக்காரர்களில் ஒருசிலர் இந்த நிறுவனத்தில் விற்றுள்ளனர். மற்றவர்களுக்குத்தான் சொல்வதில்லை.

ஆ.ரவீந்திரன் – மயிலாடுதுறை
கே: குறும்படங்கள் எடுப்பவர்கள் ப்யூச்சர் பிலிம் எடுக்ககூடாதா…?

நிழல்: அப்படி எந்தவித சட்டமும் இல்லை; குறும்படங்கள் எடுத்த இயக்குனர்களான லெனின், அம்சன்குமார்,அருண்மொழி போன்றவர்கள் குறும்படம், ஆவணப்படம் மற்றும் முழுநீள திரைப்படம் எடுத்தவர்கள் தான்.
வெளிநாட்டு இயக்குனர்களான கோடார்ட், ட்ரூபா, போலன்ஸ்கி,கீஸ்லோவஸ்கி, மார்ட்டின் ஸ்கார்ஸி, ஹெர்சாங், போன்ற பலர் பெரிய படங்கள் இயக்குவதற்கு முன் குறும்படங்களை இயக்கி பயிற்சி பெற்று முழுநீள திரைப்படத்திற்குள் நுழைந்தனர். விம்வெண்டர்ஸ், ஹெர்சாங், போன்றவர்கள் முழுநீள திரைப்படத்திற்கு நடுவே ஆவணப்படங்களையும் இயக்கிவருகின்றனர்.
இங்கேயுள்ள பிரச்சனை, சினிமாவைப்போன்ற (சின்ன சினிமாவை எடுத்து) குறும்படம் என்கிற போர்வையில் தமிழ்சினிமாவுக்கான நுழைவு சீட்டாக பயன்படுத்துவது தான். முழுநீள சினிமா வேறு – குறும்படம் வேறு விதமானது தான். அது அதற்கென்று தனித்தனி இலக்கணம் இருக்கிறது.
இன்று ‘யூடியூப்பில்’ பொறியியல் படித்த மாணவர்கள் இயக்கிய பல படங்கள் ’சின்னசினிமா’ வகையறா தான் ! நல்ல குறும்படங்களை இயக்கிவர்களைத்தான் பெரிய திரையும் வரவேறுகும்; மசாலாக்களை அல்ல.!!

எம்.தம்பிராஜா-திட்டகுடி
கே: நீளமான சாட்டுக்களில் எடுக்கப்பட்ட படம் எது ?

நிழல் : ஹிட்சாக் எடுத்த ’ரோப்’ படமே முன்னோடி. பின்னர் அலெக்சாண்டர் சுக்ரோவ் இயக்கி டில்மேன்பட்னர் ஒளிப்பதிவில் வெளிவந்த “ருஸ்யன் ஆர்க்” 96 நிமிடம் ஒரே சாட்டில் எடுக்கப்பட்டு இன்றளவும் புகழப்பட்டு வருகிறது.
மதன்.கே –நாகர்கோவில்
கே: மாற்றுப்படங்களுக்கான மாற்று விநியோக முறை இருக்கிறதா..?
நிழல் : உருவாகிவருகிறது என்று தான் சொல்ல முடியும்; புலம்பெயர்ந்த தமிழர் ஒருவர் இயக்கிய ’மிதிவெடி’ என்கிற முழுநீள திரைப்படத்தை வெளியே திரையிடாமல் இணையத்தில் வெளியிட்டார். பார்வையிடுவதற்கு பணம் கட்டி பார்க்கவேண்டும். பலரும் பார்த்து அவருக்கு ஏதோ படம் எடுத்ததில் ஓரளவு கிடைத்தது. இந்த புதியவிநியோகமுறை முன்பெல்லாம் எண்ணிப்பார்க்க முடியாத விசயம். இது போன்ற பல புதிய மாற்றுவிநியோக முறை வரும்போதுதான் ’நவீன தமிழ்சினிமா’ உருவாகும்.

அ.கவின் –செல்லூர்,மதுரை
கே: தற்போது வெளிவந்துள்ள தமிழ்சினிமாவில் மாற்று சினிமாவாக எதை நீங்கள் கணிக்கிறீர்கள் ?

நிழல்: மாற்று சினிமா என்பதை Alternative or Parallel சினிமாக்களைத்தான் குறிப்பிடுகிறேன். வணிகப்படங்களுக்கு மாற்றான உள்ளடக்கம், தயாரிப்பு, விநியோகம் இவற்றைத் தான் மாற்று சினிமா என்கிறோம். சமீபத்தில் வெளிவந்த படங்களை ஒவ்வொன்றாக பார்க்கலாம். முதலில் வந்த சங்ககிரி ராஜ்குமார் இயக்கிய ’வெங்காயம்’ படம் வந்த வேகத்தில் திருப்பி அனுப்பிவிட்டார்கள். அதன் தன்மையை உணர்ந்த இயக்குனர் சேரன் அதை வாங்கி மறுவிநியோகித்ததன் மூலம் பார்க்க முடிந்தது. ஒரு உதவி இயக்குனர், தன் உழைப்பின் சம்பளத்தை கேமரா வாடகைக்கு கொடுத்து தன் உறவினர்களையே நடிக்க வைத்து எடுத்த படம். இந்த படத்தில் எந்த புகழ் பெற்ற ஹீரோவும் இல்லை. அமெரிக்க ஐரோப்பா என்று வெளிநாடு சென்று படம் எடுக்கவும் இல்லை. அதானாலேயே நமது ’விநியோக ராஜாக்கள்’ முடக்கிவிட்டார்கள். இது போலவே செந்தமிழனின் ’பாலை’க்கும் நேர்ந்தது. நார்வே தமிழர்கள் இந்த இரண்டு படத்திற்கும் பரிசுகள் தந்து புண்ணியம் கட்டிக்கொண்டார்கள்.
அடுத்து வந்த ’மதுபானக்கடை’ குறைந்த முதலீட்டில் ஒரே செட்டில் எடுக்கப்பட்ட படம் , ஏதாவது கதை இருந்தாக் தேடி கண்டுபிடியுங்கள் என்று இயக்குனர் சவால் விட்டார். திரை மேடையாக மதுபானக்கடை பார், அங்கு வரும் வாடிக்கையாளர் ஒவ்வொருவரின் வாழ்க்கையும் விரிகிறது. அதுவே கதையாகிறது. தமிழ்திரைப்பட உலகில் புதிய கதை சொல்லல் முறை இது. ஐம்பதுகளில் இத்தாலியில் கடைபிடிக்கப்பட்ட ‘நவஎதார்த்தவகை’ மூலம் பொதுமக்களையே நடிக்க வைக்கும் முறை படத்திற்கு மேலும் உயிரூட்டவே செய்தது. ராமும் கவிஞர் ராஜ்குமாரும் வெளுத்துக்கட்டினார்கள். இருந்தும் வெள்ளிக்கிழமை விநியோகஸ்தர்கள் ‘வேற புதிய படத்தை போடுய்யா’ என்று அரங்க உரிமையாளர்களை மிரட்ட படம் வேறுவேறு தியேட்டர்களில் எப்படியோ மூன்று வாரம் ஓடியது; ’மிரட்டலை’ விட நன்றாகவே ஓடியதை பார்வையாளர்கள் பார்த்தனர். இருந்தாலும் இன்று வரை தியேட்டர்காரர்களின் குடுமி விநியோகஸ்தர்களிடம் இருப்பதால் அவர்களின் அசைவுக்கு ஏற்ப ஆடும் பொம்மைகளாகவே இருக்க வேண்டி இருக்கிறது.
பாலை படம் டிவிடியாக விநியோகிக்கப்படுகிறது. அது போலவே மதுபானக்கடையும் மாடர்ன்சினிமா மூலம் டிவிடியாக வெளிவருகிறது. தமிழ்சினிமா.காம் இணையத்தில் பணம் கட்டி பார்க்கும் முறையில் வெளியிட்டுள்ளனர். இந்த முறைகள் ஏதோ ஒரு அளவுக்கு நட்டத்தை குறைக்க உதவும். விநியோகஸ்த முறைகள் புதிது புதிதாக கண்டுபிடிக்க வேண்டும். தமிழக அரசு “A” சர்ட்டிபிகேட் படங்களுக்கு 30சதவீதம் வரி கேட்கிறது; மேலும் “A” சர்ட்டிபிகேட் படங்களை தனியார்/அரசு தொலைக்காட்சிகளில் வெளியிடக்கூடாது என்கிற சட்டமுறை வேறு இருக்கிறது. படுகேவலமான படங்கள் எல்லாம் ”யூ” சர்ட்டிபிகேட் எப்படி பெற்றனர் என்பது ஊர் அறிந்த ரகசியம் . இப்படிப்பட்ட சூழலில் மாற்றுசினிமாவை எப்படி உருவாக்குவது ? இது படைப்பாளிகளின் மனதை நோகடிக்கும் சூழலை உருவாக்குகிறது.
புலம்பெயர்ந்த தமிழர்கள் இது போன்ற மாற்றுசினிமாக்களை ஊக்குவிக்கலாம். பரிசு கொடுப்பதும் மட்டும் போதாது. வாங்கி விநியோகிக்கவும் வேண்டும். மத்திய கிழக்கில் உள்ள தமிழ்நாட்டு தமிழர்களும் முன்னெடுக்க வேண்டும்.
;மக்களுக்கான சினிமா’ முன்னோடியாக எழுத்தாளர் ஜெயகாந்தன் பலரிடமிருந்து நிதி திரட்டி கூட்டுறவு முறையில் இயக்கிய ‘உன்னைபோல் ஒருவன்’ படத்தையும் இதே போல அன்றைக்கு இருந்த (1964) விநியோகஸ்தர்கள் விடவில்லை.இருந்தாலும் ஜெகே காட்சி ஒன்றுக்கு ஆயிரம் ரூபாய் வசூலித்து, விரும்பியவர்களுக்கு மட்டும் படத்தை திரையிட்டு வந்தார். 1964ஆம் ஆண்டு உலக திரைப்படவிழாவில் சத்தியஜித்ரேயின் சாருலதாவுடன் உன்னைப்போல் ஒருவன் போட்டி போட்டு மூன்றாவது பரிசை பெற்றது; இல்லஸ்ட்ரேட்வீக்லி இரண்டு வாரம் தொடர்ச்சியாக விமர்சனத்தை வெளியிட்டது; இந்தப்படம் வெற்றிக்கரமாக மக்களிடம் விநியோகித்திருந்தால் ஜெகே முழுவீச்சில் திரையுலகிற்கு வந்திருப்பார். இதெல்லாம் நடந்து இருபது ஆண்டுகளுக்கு பிறகு தான் ஜான் ஆப்ரகாம் கேரளத்தில் மக்கள் திரைப்பட இயக்கத்தை ஆரம்பித்தார் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. வரலாற்றில் ஒருவர் எடுக்கும் முன்முனைப்பு பின்னர் வரும் பலருக்கும் வழிகாட்டியாக இருக்கும்.

ஜா.செல்வம்-அனுப்பர்பாளையம்
கே: நான் குறும்படம் எடுக்க விரும்புகிறேன் யாராவது ஸ்பான்சர் செய்வார்களா..?

நிழல் : தமிழகத்தைப் பொருத்தளவு குறும்படமோ ஆவணப்படமோ உருவாக்குபவர்களை பார்த்தால், அவர்களே தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், நடிகர்கள், விநியோகஸ்தர்கள் என்று பல அவதாரம் எடுத்து செய்யவேண்டியவர்களாக இருக்கிறார்கள். இது பிற்காலத்தில் மாறும் ‘படமெடுக்கவேண்டுமென்று உத்தேசிவிட்டாலே போதும் நீங்கள் குறும்படங்காரர்கள் ஆகிவிடுகிறீர்கள்’ ( ) பிறகு கேம்ராவோ மற்ற தொழில்நுட்ப சாதனங்கள் இல்லை என்று சொல்வது முட்டாள்தனம். தமிழகத்தில் எடுக்கப்பட்ட பல படங்கள் வாடகை கேமராவில் தான் எடுக்கப்பட்டது. நண்பர்களிடமிருந்து கேமரா கடனாக பெற்று, ஜீரோ பட்ஜெட்டில் படம் எவ்வாறு எடுக்கலாம் என்பதை பற்றி முந்தைய ”நிழலில்” பல கட்டுரைகள் வெளிவந்துள்ளன. “படமெடுக்க முடிவு செய்துவிட்டீர்களா திருடியாவது படமெடுங்கள் என்கிறார் செனகல் நாட்டு இயக்குனர் செம்பேன் உஸ்மான்…

சமீபத்திய குறும்பட & ஆவணப்படங்கள்
இந்த நூற்றாண்டின் கர்நாடக இசைக்கலைஞர் மணக்கால் ரங்கராஜன்
திருச்சி அருகில் உள்ள லால்குடியை அடுத்த மணக்கால் ரங்கராஜன் எந்த குருவிடமும் இசைக் கற்காமல் தானே அசுர சாதகம் செய்து உருவானவர். இவரைப்பற்றி லண்டன் விம்பம் பத்மநாப அய்யர் நிதி உதவியில் அம்ஷன்குமார் ஆவணப்படமாக கொண்டு வந்துள்ளார்.
இன்று, 90 வயதாகும் மணக்காலுக்கு குரலில் எவ்வித நடுக்கமும் கிடையாது; பழைய பாரம்பரியம் எப்படி இருந்தது என்பதற்கு எடுத்துக்காட்டாக இருக்கக்கூடியவர். இவரது மாமனார் எழுத்தாளர் துமிலன்.
ஐம்பதுகளின் தொடக்கத்தில் திருவையாறு தியாகராஜ ஆராதனையில், பாடுவதற்கு நேரம் கிடைக்குமா? என்று தயங்கி நின்று கொண்டிருந்த போது, கும்பகோணம் பிடில் ராஜமாணிக்கம் பிள்ளை (நடிகர் தியாகுவின் தாத்தா) ஒரு பாட்டுப் பாடட்டும் என்று குழுவினரிடம் சிபாரிசு செய்தாராம். உடனே மணக்கால் ‘நினுவினா’ கீர்த்தனையை ஏழெட்டு ஆவர்த்தனையில் பாடி அவையினரை வியப்பில் ஆழ்த்திவிட்டாராம். பாடலின் வேகம், ஏற்ற இறக்கங்களில் பலவித அசைவுகள் இன்றைக்கு கேட்கும் போது கூட ரசிக்கும்படி இருக்கின்றன மணக்காலின் மகன் இந்த பாட்டு பற்றி சிலாகித்துச் சொல்லும் பொழுது மேலும் அவர் மீது நமக்கு மரியாதை ஏற்படுகிறது. மற்றொரு இடத்தில் டி.வி கோபாலகிருஷ்ணன் சொல்லும் போது ’பழங்கால கச்சேரி பத்ததிக்கு முரணாகாமல் புதுமையை புகுத்தி வியக்க வைப்பதை சொல்லலாம்’.
மணக்கால் போன்ற பழம்பெரும் சங்கீத வித்வான்களைப் பற்றி ஆவணப்படமாக்கும் போது அவரது சிறப்புகளையும் பாணிகளையும் பழைய புதிய இசைக்கலைஞர்களான டி.கே மூர்த்தி, ஏ.கே.சி நடராஜன், குன்னக்குடி, டி.என் கிருஷ்ணன், துர்கா, கோவிந்தராவ், இளைவர்களான ரவிகிரண், சூர்யபிரகாஷ், டி.எம் கிருஷ்ணா, நர்மதா, முதலியோர் வாயிலாக அம்ஷன்குமார் கொண்டுவந்துள்ளார்.
வெளிநாட்டு ரசிகர்களான பத்மநாப அய்யர், க்ளீவ்லேண்ட் சுந்தரம்,குல்கர்னி, ஞானசுந்தரம், பாலுரகுராமன், நந்தினி போன்றோர் ‘ரசிகா மனோபாவத்தில் வெளிப்படுத்தும் ஆர்வத்தை என்னென்பது ?
மணக்காலின் மனைவி பத்மா, மகன், பேத்தி எல்லோரும் சென்னையிலிருந்து கிளம்பி மணக்காலை அடைவதிலிருந்து படம் தொடங்கினாலும், வேனில் பாட்டைக் கேட்டுக்கொண்டே மணக்காலும் அவர் மனைவியும் தாளமிடுவதை படத்தொகுப்பில் இணைத்து காண்பித்திருந்தது; ரயில் முன்னேறும் போது கடக்கும் தண்டவாளங்களும், பெட்டிகளின் லயம் பிரளாத ஓட்டமும் இயற்கையையும் இசையையும் இணைக்கும் இடமும்; ‘சபாபதிக்கு வேறு தெய்வம் சமானமாகுமா?’ என்று சபாவில் தள்ளாத வயதில் பாடும்போது, மணக்கால் அந்த காலத்தில் பாடிய பாடலை இணைத்து அதாவது பழைய பாடலை இன்றைய வீடியோவுக்கு இணைத்து காட்டிய விதங்கள் போன்றவை அம்ஷன்குமாரிடம் இன்றைய ஆவணப்படக்காரர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய பாடமாகும்.
நாளி
வழக்கறிஞர் முருகவேளும், கவிஞர் லட்சுமணனும் இணைந்த கைவண்ணத்தில் ஒன்றரை மணிநேர ஆவணப்படமாக ’நாளி’ வந்துள்ளது. தென்னிந்தியாவில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையே அரபிக்கடலிலிருந்து வரும் காற்றைத் தேக்கி தமிழ்நாடு, கேரளா, கர்நாடக மாநிலங்களில் நீர் உற்பத்திக்கு காலங்காலமாக உதவி வருகிறது. அடர்ந்த காடுகளும், அருவிகளும் ஆறுகளும் கானுயிர்களும் இயற்கையின் சக்தி சமநிலையுள்ள இந்த பிரதேசத்தில் பல ஆயிரம் ஆண்டுகளாக வாழ்ந்து வருகின்றன. சிங்கமும் காண்டாமிருகமும் தவிர அனைத்து விலங்குகளும் இங்கு சாதாரணமாக பார்க்கலாம். இப்பகுதி கானுயிர்கள் பற்றி ரோமுலஸ்விட்டேக்கர், அல்போன்ஸ்ராய்,செங்கப்பா போன்றவர்களின் ஆவணப்படங்களை நேஷ்னல் ஜியோகிராபி ஒளிபரப்பியுள்ளது.
திருமுருகாற்றுப்படை சொன்ன ‘கைபுனைந்து இயற்றா கவின் பெறு வனப்பு’ என்னவென்பது மேற்கு தொடர்ச்சி மலையை பார்க்கும் போது மட்டுமே உணர முடியும். இவ்வளவு இயற்கை அழகுகளை தன்னகத்தே கொண்டுள்ள மேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் இன்று உள்ளூர், வெளிநாட்டு கோர கரங்களுக்கு எப்படி போய்சேர்ந்தது என்பதையே இந்த ஆவணப்படம் வரலாற்று மாணவனுக்கு ஆசிரியர் பாடம் புகட்டுவது போன்ற வர்ணனையால் அழகுற கூறிச்செல்கிறது.
மேற்குதொடர்ச்சி மலைகளில் மனிதன் தோன்றிய காலம் முதற்கொண்டே தோடர், இருளர்,காணிக்காரர்கள், குறும்பர், தொதுவர்,மன்னாடிகள், பளியர் முதலிய 18பழங்குடிகள் வாழ்ந்து வருகின்றனர். தமிழ்,மலையாளம்,கன்னடம், முதலிய மொழிகளையும் பழங்குடிகளுடைய மொழிகளையும் இணைத்தே பேசி வருகின்றனர். உருவ அமைப்பில் பழந்திராவிட கூறுகளைப்பார்க்கலாம்.
வணிகப்பொருளான ’மிளகு’க்கு ஐரோப்பாவில் நல்ல விலையிருந்தது. இது பற்றி ரோமானிய வரலாற்றில் பல இடங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. மிளகை இயல்பாக தங்கள் பகுதிகளில் பயிரிட்டு வளர்த்து வந்தனர். இது பொருக்காத குறுநிலமன்னர் காட்டின் உட்பகுதிகளிலிருந்த பழங்குடிகளை விரட்டிவிட்டு அங்கு தங்களுடைய தாசர்களான நம்பியார்கள், பணிக்கர்களை அனுப்பி கங்காணிகளாக மாற்றிய வரலாறு மலையாளத்தில் இன்றளவும் சொல்லப்படுவதை ஓவியங்களாக வரைந்துகாட்டி விளக்கிச்செல்கின்றனர். மிளகுக்கு இருந்த செல்வாக்கு போர்ச்சுக்கீசியர்களால் கொண்டுவரப்பட்ட ‘மிளகாய்’ வந்ததும் எப்படி மறைந்து போனதும் என்பதும் சுவையான நிகழ்வு
மிளகு பயிரிட்டபோது கூட காட்டிற்கு எந்த பிரச்சனையும் வரவில்லை ஆங்கிலேயர் இப்பகுதிகளை ஆக்கிரமித்த போது, காட்டை அழித்து முதன்முதலாக தேக்கு வளர்க்க ஆரம்பித்தனர். இதன்மூலம் செறிவான காடு, பறவைகள் விலங்குகளுக்கு வாழ்விடமாக இருந்தது மாறுகிறது. தங்களது தோட்ட வேலைகளுக்கு ‘அடிமை முறை’க்கு வர மறுத்த பழங்குடிகளை ஆங்கிலேயர் தேக்கு வளர்க்க பயன்படுத்திக்கொண்டனர்.
தேக்குக்குப் பிறகு காப்பிப்பயிர் வளர்க்கப்பட்டது; அதுவும் நோய் வந்து அழிந்தது; மேலும், காப்பியின் செலவைவிட மெக்சிக்கோவிலிருந்து வந்திறங்கிய காப்பி குறைந்த விலையில் கிடைத்ததாலும் காப்பி பயிரிடுவதை தானாகவே ஆங்கிலேயர்கள் குறைத்துக்கொண்டனர். அடுத்ததாக வயநாடு பகுதியில் தங்கம் தோண்ட ஆரம்பித்து அதுவும் கிடைக்காததால் கைவிடப்படுகிறது. அடுத்ததாக என்ன செய்யலாமென தேடிக்கொண்டிருந்த ஆங்கிலேய முதலாளிகளுக்கு கிடைத்தது ’தேயிலை’.
தேயிலை பாரம்பரியமாக சீனர்கள் வசமிருந்தது ஐரோப்பாவில் அதற்கு நல்ல சந்தை இருந்ததை கண்டுகொண்ட ஆங்கிலேயர்கள் முதலில் சீனர்களிடம் கமிஷன் அடிப்படையில் வாங்கி விற்று வந்தனர். பின்னர் சீனர்களுக்கு அபின் விற்று நாட்டையே கபளிகரம் செய்தனர். பல ஆயிரம் ரூபாய் செலவழித்து தேயிலை விதைகளைக் கொண்டுவந்து ஊட்டி அஸ்ஸாம் போன்ற இடங்களில் பெரும் பெரும் காடாக இருந்தவைகளையும், பழங்குடிகள் விளைநிலமாக உருவாக்கி இருந்த நிலங்களையும் கொள்ளை அடித்து பெரும் தேயிலைத் தோட்டங்களை உருவாக்கினர். பின்னர் லிப்டன் கம்பெனி வந்து எஸ்டேட்டுகளாக்கியது .
தேயிலை தோட்டங்கள் உருவாகுவதற்கு முன்பு அப்பகுதிகளில் வாழ்ந்து வந்த எண்ணற்ற கானுயிர்களான யானை,புலி,கரடி,சிறுத்தை,சிவங்கி, போன்றவை கணக்கு வழக்கு இல்லாமல் கொல்லப்பட்டன. இவர்கள் தான் இன்றைக்கு புலி அழிகிறதே என்று கவலைப்படுகிற மேல்தட்டு வர்க்கங்கள்.
இந்த தேயிலை தோட்டங்களில் வேலை செய்வதற்கு எண்ணற்ற கற்பனைகளைப் பரப்பி ஆட்களை பிடித்தனர். தோட்ட தொழிலாளர்களுக்கு எந்தவித நலன்களையும் செய்யாமல் ‘லயன்கள்’ எனப்படும் ஒரே அறைகொண்ட தகர கொட்டகைகளில் தங்க வைத்து கொடுமைப்படுத்தினர். மலைமேலுள்ள தட்பவெட்பமும் கொசுக்கடியாலும் ஆண்டுக்கு நூற்றுக்கணக்கானோர் மடிந்தனர். எஸ்டேட் வாழ்க்கையை புதுமைபித்தனின் துன்பக்கேணி; தேநீர், எரியும் பனிக்காடு முதலிய நூல்கள் தெளிவாக தெரிவிக்கின்றன. இவை பின்னர் எஸ்டேட் இலக்கியங்கள் என வகைப்படுத்தப்பட்டன. தோட்ட தொழிலாளர்கள் கொடுமைகளை பொறுக்க முடியாமல் சமவெளிகளுக்கு தப்பி ஓடிவந்தாலும் அவர்களை ஆங்கிலேய போலீசும் சட்டமும் மீண்டும் பிடித்து வந்து ஒப்படைத்ததை நடிக்க வைத்து படத்தில் இணைத்துள்ளனர்.
மிளகு, தேக்கு , காப்பி, தேயிலை பணப்பயிர்களால் காட்டின் உட்பகுதிகளில் வசித்து வந்த பழங்குடிகளை காட்டின் விளிம்புக்கு கொண்டுவந்துவிட்டனர். நடுக்காடுகளில் அவர்களுக்கான குடியிருப்புகள், கோயில்கள், தானியக்களஞ்சியங்கள் முதலியவை இருந்த பகுதிகளின் எச்சங்களை இன்றைக்கும் காணலாம் என்கிறார் பழங்குடி இனத்தலைவர்.
தமிழகத்தில் அடிமை முறையே இருந்ததில்லை என்று வரலாறு தெரியாமல் சிலர் எழுதியதுண்டு. சோழர் காலத்திலேயே தங்களை கோயிலுக்கு விற்றுக்கொள்ளும் வழக்கம் இருந்ததை கல்வெட்டுக்கள் வாயிலாக நொபுரு கரசிமா தனது நூலில் தெளிவாக்கியுள்ளார். வயநாடு பகுதியில் இருக்கும் ’வள்ளியூர் காவு’ கோவிலில் அடிமைகளை விற்கும் வாங்கும் முறை 1970கள் வரை இருந்துள்ளது. உண்மையான கம்யூனிஸ்டாக வாழ்ந்து மறைந்த தோழர் வர்க்கீஸ் தான் இதனை முடிவுக்கு கொண்டுவந்தார் என்பதை மறக்காமல் பதிவு செய்துள்ளனர். காடுகளில் வாழ்ந்த பழங்குடிகளை தங்களுடைய நலன்களுக்காக வயல்களிலும் தோட்டங்களிலும் அடிமைகள் ஆக்கப்பட்டதை இடையிடையே விவரித்துச்செல்கின்றனர்.
கர்நாடகாவிலிருந்து வந்த சமணம் கேரளாவிலிருந்ததையும் பின்னர் இந்துத்துவத்தின் மூலம் அது உள்ளிழுக்கப்பட்டதையும் தெளிவாக்குகின்றனர். பழங்குடிகளின் தாய் தெய்வங்கள் காரமடை ரெங்கநாதருக்கு மனைவிகளாக்கப்பட்டு பழங்குடிகளை இந்துக்களாக்கும் முயற்சி சொல்லப்படுவதுடன் இன்றளவும் அதற்கான திருவிழாக்கள் நடப்பதையும் காட்சிப்படுத்தியுள்ளனர்.
காட்டின் மேலிருந்தவைகளை ஆங்கிலேயர்கள் ஒழித்தது போல், காட்டின் கீழே இருப்பவற்றை எடுப்பதற்கு தடையாக இந்த பழங்குடிகளை நமது கருப்புதுரைமார்கள் வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளை பல சட்டங்கள் போட்டு தொடர்ந்து செய்து வருகின்றனர். பழங்குடியினர்களின் நிலங்கள் ’காப்புக்காடுகள்’ என்ற பெயரில் வனப்பகுதிகளாக மாற்றப்படுகிறது. தங்களின் தொப்புள் கொடியான காடுகளிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டு திருடர்களாக்கப்படுகின்றனர். ஆனால், எதார்த்தத்தில் மரம், விலங்குகளை வேட்டையாடுபவர்கள் நகர முதலாளிகளாகவே இருக்கின்றனர். ’இந்தியர்கள் இரவில் கூடலூர் சாலையில் செல்ல தடை; ஆனால், வெள்ளைக்காரர்கள் இரவில் காட்டில் சுற்ற மட்டும் வனத்துறை எப்படி அனுமதிக்கிறது’ என்று பவானிசாகர் சட்டமன்ற உறுப்பினர் கேட்கிறார்.
காலங்காலமாக விலங்குகளுடன் தான் பழங்குடிகள் வாழ்ந்து வந்தனர். ஆனால், இன்றோ புலிகளின் எண்ணிக்கை குறைந்து விட்டது கூட்டவேண்டும் என்கிற போர்வையில் பழங்குடிகளை காட்டைவிட்டு விரட்டும் நடவடிக்கை துரிதப்படுத்தப்படுகிறது. வெளியேறும் பழங்குடி குடும்பத்திற்கு பத்துலட்சம் என்று மத்திய அமைச்சர் தொலைக்காட்சியில் கூவி விற்பதை காணலாம். பழங்குடிகள் வெளியேற்றப்பட்டால் காடு மலை என்னவாகும் என்பதை ஒரிஸ்ஸா அனுபவம் தெளிவாக காட்டுகிறது. முதலில் தமிழக வனங்களில் சுற்றுச்சூழல் சுற்றுலா (Eco Tourism) அறிமுகப்படுத்த இருக்கின்றனர். பின்பு கனிவளங்களை வெளிநாட்டு முதலாளிகள் தோண்ட ஆரம்பிப்பார்கள் அவர்கள் ஆய்வு செய்வதற்கு பழங்குடிகள் தடையாக இருப்பார்கள் என்று முதலில் அவர்களை காட்டினுள்ளே வர தடைசெய்துள்ளனர். காட்டில் இருக்கும் பழங்குடிகளுக்கு பட்டா வழங்கக்கோரி நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இதற்கிடையில் சுற்றுசூழல் ஆர்வலர்கள் என்கிற பெயர்களில் வெளிநாட்டு தொண்டு நிறுவனங்களின் தொங்கு சதைகளாக இருப்பவர்கள் ’மனிதர்கள் இல்லாக்காடு’ என்கிற அமெரிக்க கோஷத்தை முன் வைத்து பிரச்சாரம் செய்து வருகின்றனர். இவர்களைத் தோலுரித்துக் காட்டுகிறது ‘Conversation refugee’ என்கிற நூல் .
இந்த ஆவணப்படம் எப்படி படமெடுக்கவேண்டுமோ அந்த வகைகளிலெல்லாம் சிறப்பாக செயல்பட்டிருக்கிறது. பல்வேறு துறை சார்ந்த நபர்களிடம் நேர்முகங்கள் பெறப்பட்டு அந்தந்த இடங்களில் இணைக்கப்பட்டுள்ளது. ஓவியங்கள், புகைப்படங்கள், முன்னர் எடுப்பட்டிருந்த வீடியோக்கள் போன்றவை படத்தில் சரியான இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. சமூக, அரசியல், பொருளாதார, வரலாறு முதலிய பல்வேறு துறைசார்ந்த ஆவணப்படமாக இது மிளிர்கிறது. தமிழகத்தில் எடுக்கப்பட்ட இத்துறை சார்ந்த படத்தில் இதுவே முதன்மையானதாக இருக்கிறது. ஒரு ஆவணப்படம் எடுப்பதற்கு முன்பு இயக்குனர் அது சார்ந்த பல்வேறு நூட்களை ஆய்வுசெய்திருப்பதை இந்த படம் காட்டுகிறது. இனி வருகிறவர்களுக்கு இந்த படம் முன்னோடியாக செயல்பட்டிருக்கிறது. அரசியல் ஆவணப்படமெடுப்பவர்கள் தொண்டு நிறுவனங்களை சாராமல் எப்படி எடுக்கலாம் என்பதை இந்த படம் தெளிவாகக் காட்டுகிறது.

K.B. Sundarambal The Legend :
மைசூர் சி.ஐ.ஐ.எல் நிறுவனத்தின் உதவியுடன் இயக்குனர் மதிவானன் இயக்கியுள்ள இந்த 28நிமிட ஆவணப்படம், சோழநாடனின் ‘கொடுமுடிகோகிலம்’ கே.பி.சுந்தராம்பாள் வரலாறு’ என்ற நூலை அடியொற்றி செல்கிறது. எஸ்.எஸ்.ஆர், மனோரமா,சிவக்குமார், சோழநாடன், பாலரமணி முதலியோர் பேட்டி அளித்துள்ளனர். கே.பி.சுந்தரம்பாளின் இளமைக்கால வாழ்வை ஒரு சிறுமியை நடிக்கவைத்து எடுத்துள்ளனர். ஆண்டிப்பட்டி ஜமீன்தார் வீடு எங்கு கண்டுபிடித்தாரோ –நல்ல தேடல் இருக்கிறது. கே.பி.எஸ்-ன் விடுதலைப் போராட்ட வாழ்வு, திரைப்படபிரவேசம், தமிழிசை
இயக்கம் போன்ற எல்லா நிகழ்வுகளையும் கனகச்சிதமாக சோர்வூட்டாமல் கொண்டு சென்றுள்ளார்.
பழைய ரசிகர் ஒருவரின் பேட்டியை இணைத்திருக்கலாம். ஆங்கில வர்ணனையை ராமநாதன் கம்பீரமாக செய்திருப்பதால் வேற்று மொழியினர் உலகிற்கும் இப்படம் செல்ல வாய்ப்பிருக்கிறது.

இப்படிக்கு தோழர் செங்கொடி
வெற்றிவேல் சந்திரசேகர் பல முன்னணி இதழ்களில் பணியாற்றியவர். முத்துக்குமாரின் வாழ்க்கையை குறித்து துருப்புச்சீட்டு என்ற புத்தகத்தை எழுதியவர். ‘பாலை’ படத்தின் துணைஇயக்குனர். மரணதண்டனையை எதிர்நோக்கி காத்திருக்கும் பேரறிவாளன் உள்ளிட்ட மூவரின் தண்டனையை எதிர்ப்பு தெரிவித்து தீக்குளித்து மடிந்த தோழர்.செங்கொடியைப் பற்றிய இந்த ஆவணப்படத்தை கொண்டுவந்துள்ளார்.
செங்கொடியின் பழைய படங்கள் அவர் பறையடித்து ஆடும் வீடியோ இணைத்திருப்பது சிறப்பு. செங்கொடி பற்றி தோழர்.மணியரசன், வைகோ, ’கொளத்தூர்’ மணி, சீமான் மற்றும் பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள்,கவின்மலர், ரேவதி உள்ளிட்ட பலரை நேர்காணல் செய்துள்ளார். செங்கொடியின் தம்பி அளித்த நேர்முகம் கண்ணீரை வரவழைக்கும்.
செங்கொடி தனது உடலையே ஆயுதமாக்கி போராடியிருக்கிறார். தமிழக வரலாற்றில் ஒரு பெண் அரசியல் காரணத்திற்காக தீக்குளித்தது இதுவே முதல்முறையாகும்.
சமீப ஆண்டுகளில் பல சமகால நிகழ்வுகள் ஆவணப்படமாக பதிவு செய்து வருவது தமிழக ஆவணப்பட துறையில் ஏற்பட்டு வரும் விழிப்புணர்வை காட்டுகிறது.
லாவணி
போட்டிக்கு போட்டியாக இருவர் பேசினால், பொதுமக்கள் வட்டார வழக்கு மொழியில் சொல்வது ’லாவணி’ பாடாதே என்பதுதான். நான் சிறுவனாக இருக்கும் போது எனது உறவினர் ஒருவர் சினிமாவுக்கு அழைத்துச் செல்கிறேன் என்று கூறி ’காமன்பண்டிகை’ திருவிழாவுக்கு அழைத்துச்சென்றார். அங்கு காமன் எரிந்துவிட்டான் என்று ஒருவரும் எரியவில்லை என்று ஒருவரும் மாறி மாறி பாடினார்கள். ஆனால், அவர்கள் இசைத்த டேப்பும், டேப்பின் மேல் தட்டிக்கொண்டே பாடியதும் என்னை சுவாரசியப்படுத்தியது . நிகழ்ச்சியில் ஒன்றிப்போனேன் இது நடந்தது 1967. பின்னர் பலநேரங்களில் வானொலியில் ’லாவணி’ நடக்கும் போது கட்டாயம் கேட்கும் பழக்கம் வந்தது. இந்த ஆவணப்படத்தில் கிட்டத்தட்ட ஒண்ணே கால் மணி நேரப்படத்தில் முக்கால் பங்கு ’லாவணி’யைப் பார்க்கவும் கேட்கவும் முடிந்தது. தஞ்சை சாம்பான் தயாரிப்பில் ராஜகுமார் இயக்கியுள்ளார். தஞ்சை இனாயத்கான்பட்டியில் கூணிச்சம்பட்டு சச்சிதானந்தமும், அப்துல்காதரும் பாடியுள்ளனர். இடையிடையே லாவணியை ஆய்வு செய்த விவேகானந்த கோபால் விளக்க உரை ஆற்றுவது இந்த கலையை புரிந்துகொள்ள உதவுகிறது.
மகாராஷ்ட்ராவில் லாவணி என்றால் நாற்று நடுவது என்று பொருள்படும் இந்த நாட்டுப்புற பாடல்வகை பிற்காலத்தில் ’தமாஷா’ என்ற சிருங்கார ஆட்டத்திற்கான போட்டிப்பாடலாகிறது. தமிழகத்திலோ பலகாலமாக இருந்து வந்த காமன் கதை போட்டிப்பாடல் பாடுவதற்கான வடிவமாக உருக்கொண்டது. ’லாவணி’ பாடுவதற்கு நல்ல குரல் வளமும், தமிழ் பயிற்சியும் அவசியம். இதன் இசை வடிவம் சந்தம் நிறைந்த சிந்துப்பா வகை, அதற்கு இணையாக டேப் இசையும் டேப்பில் மேல் மோதிரத்தால் தட்டிக்கொண்டே பாடுவதும் மரபு. விருத்தம் பாடுவதற்கு; போட்டிப்பாட்டு பாடுவதற்கு;கதையை சொல்வதற்கு;என்று டேப் அடிப்பதில் பலவகை ‘நடை உண்டு’
எழுபதுகளின் இறுதியில் கும்பகோணம் ’டேப்’ குருசாமிதாஸ் அவர்கள் எனக்கு அடித்து காண்பித்ததை என்றைக்கும் மறக்க முடியாது. தமிழகத்தில் 300 வகையான கலை வடிவங்கள் இருந்தன. இன்று ஒவ்வொன்றாக மறைந்து வருகிறது. தமிழ் தமிழ் என்று வாய்கிழிய கத்தும் தவளைகள் இந்த கலைகளை காப்பாற்றும் என்று எனக்கு நம்பிக்கையில்லை. தஞ்சை,திருச்சி மக்களுடைய கலையான ’லாவணி’யை அவர்கள் தான் காப்பாற்றிக்கொள்ள வேண்டும்.
அதங்கோட்டாசான்:-
அதங்கோட்டாசான் தலைமையில் தொல்காப்பியம் அரங்கேற்றப்பட்டதாக பனம்பாரனாரின் பாடல்வரி தெரிவிக்கிறது. திருவிதாங்கோடு குமரி மாவட்டத்தில் இருக்கிறது. ’கோடு’ என்பது சிறுபாறைகளைக் குறிக்கும் சொல்லாக இருக்க, குமரி மாவட்டத்திலோ குளங்களைக் குறிக்கும் சொல்லாக இருக்கிறது. ’கோடு’ என்கிற பெயரில் ஐம்பதுக்கும் மேற்பட்ட ஊர்கள் அந்த மாவட்டத்தில் இருக்கின்றன. அதங்கோட்டையை அடுத்து ’காப்பியக்காடு’ என்ற ஊர் உள்ளது. இது தொல்காப்பியர் வாழ்ந்த இடமாக இருக்கக்கூடும் என்கின்றனர். அதங்கோட்டைச் சுற்றி தென்னை, பாக்கு, மலைத்தொடர்கள், ஆறுகள் என செழிப்பான பகுதிகளை ஒளிப்பதிவு செய்துள்ளனர். தமிழக அரசு அதங்கோட்டாசானுக்கு கோட்டம் அமைத்துள்ளது. இந்த பகுதியில் தெக்கன் களரி, வர்மக்கலை முதலியவை பாரம்பரியமாக இருந்துவருவதை பதிவு செய்துள்ளனர். சிவபத்மநாபன், குளத்தூரான், பச்சைமால், முதலியோர் பேட்டி அளித்துள்ளனர். பார்த்தீபபுரம் கோவில் பலகல்வெட்டுகளைக் கொண்டது அதன் சேவைகளைக் காட்சிப்படுத்தியுள்ளனர். மொத்தத்தில் அதங்கோட்டைச் சுற்றியுள்ள சமூக, இலக்கிய, கலை சார்ந்தவற்றை தொகுத்து இணைத்துள்ளார் தஞ்சை தமிழ்பல்கலைக்கழக நாடகத்துறை பேராசிரியர் ரவீந்திரன் அவர்கள் .

விதைத்தவசம் :
சேலம் ‘அம்மாபேட்டை கணேசன்’ என்கிற கலை ஆளுமையை அதன் அக,புற வெளிகளை அலசி ஆராய்ந்து இரண்டரை மணிநேர ஆவணப்படமாக கொண்டுவந்துள்ளார் ’மணல்வீடு’ ஹரிக்கிருஷ்ணன்.
நாட்டுக்கூத்து, பொம்மலாட்டம், தோல்ப்பாவைக்கூத்து, என்ற மூன்று கலை வடிவங்களையும் சர்வசாதாரணமாக நிகழ்த்திக்காட்டக்கூடியவர் அம்மாபேட்டை கணேசன். புரிசை கண்ணப்பதம்பிரான் முன்னோரும் ஒரு காலத்தில் பொம்மலாட்ட தோல்ப்பாவைக் கூத்துக்கலைஞர்களாக இருந்துள்ளதை கலை வரலாற்றாசிரியர்கள் பதிவு செய்துள்ளனர். கூத்துக்கலைஞர்கள் எல்லாம் உயர்சாதியினராகவே இருப்பார்கள். இவரோ குறவர் இனத்திலிருந்து வந்து இந்த கலைகளை கைக்கொண்டதாக எவ்வித ஒளிவு மறைவுமின்றி பேட்டி அளித்துள்ளார். அந்தந்த கலைக்குரிய கருவிகளை அந்தந்த கலைஞர்களே உருவாக்கிக்கொள்வது நமது மரபாக இருந்து வருகிறது என்பதை ‘இசைப்பாணரே கடஞ்செய்வார்’ என்கிறது கல்லாடம். அதுபோல கூத்துக்கான உடைகள்; பொம்மலாட்டத்திற்கு தேவையான பொம்மைகளை கனம் குறைந்த மரத்திலிருந்து உருவாக்குவது; தோல்பாவைக்கூத்துக்கு தேவையான ‘தோல்பாவை’களை உருவாக்குவது போன்றவற்றை கணேசனே மேற்கொள்கிறார். சிறந்த ஓவியராக, சிற்பியாக, நடிகராக, இசைஞராக (மத்தளம்,தாளம்,ஆர்மோனியம்,வாய்ப்பாட்டு) என அனைத்தும் அறிந்த மாபெரும் கலைஞராக அதுவும் இந்த காலத்தில் அரிதினும் அரிதான கலைஞராக இருப்பது பெரும் ஆச்சரியத்தை தருகிறது.
ஆவணப்படம் தொடங்குவதே தோல்பாவைக்கான தோலை பதப்படுத்துவது, சுத்தம் செய்து காயவைத்து பின்னர் அதில் உருவங்களை வரைவது பின்னர் வண்ணமடிப்பது போன்றவைகளை செய்துகொண்டே தனது வரலாற்றை அவர் சொல்வதும் இடைக்கிடை தோல்பாவைக்கூத்து, பொம்மலாட்டம், கூத்தின் பகுதிகளை நாம் பார்த்து அந்த அனுபவத்தினுள் சென்றுகொண்டிருக்கிறோம். படம் ஓடிக்கொண்டே இருக்கிறது. படத்தில் பிற கலைஞர்களிடமும் நேர்முகம் செய்யப்பட்டுள்ளது. கணேசனை பல இடங்களில் வைத்து படமாக்கியுள்ளார். அவரது மாமனாரை பக்காவாட்டில் வைத்து குறைந்த ஒளியில் ஒரு ஓவியம் போல் படமாக்கியிருந்தது காட்சிக்கு அழகு சேர்க்கும் படியாக உள்ளது.
படம் ஒவ்வொன்றையும் விவரித்துக்கொண்டே செல்லும் போது அந்த மாபெரும் கலைஞன் மீது நமக்கு பெரும் மரியாதையை உருவாக்கி விடுகிறார் ஆவணப்படக்காரர். அதற்கு முழுத்தகுதி உடையவர் தான் அவர் என்பதில் நாம் லயித்துப்போய் இருக்கும் சமயத்தில் இன்றைய வாழ்வில் அவரது இடம் எது என்பதை உண்ரும் போது பெரும் அதிர்ச்சிக்குள்ளாகிறோம். மாபெரும் கலைஞனாக கணேசன் தன் வாழ்க்கைப்பாட்டுக்கு காய்கறி விற்றுவருவதை ஒரு சோக கவிதையின் அழகியலோடு கேரமா விவரித்துக்கொண்டு போவது மனதை பிசைகிறது.
இது போன்ற மாபெரும் கலைஞனின் கலைமரபு அழிந்து போகாமல் இயக்குனர் ஹரிகிருஷ்ணன் ‘களரிப் பள்ளியை தொடங்கி எட்டுபேருக்கு கற்றுக்கொடுக்கும் போக்கு வருங்காலத்தில் பெருகுவதற்கு கலை உள்ளங்கள் தான் உதவமுடியும்’.

கே.ஆர் உபேந்திரா இயக்கிய ஆவணப்படம்
The soul of Vibrat Shadows – ஓரு பார்வை
வெளி ரங்கராஜன்
கேரள தோல்பாவை கூத்துக்கலைஞர் அண்ணாமலைப் புலவர் பற்றிய இந்த ஆவணப்படம் 02.09.2012 அன்று சென்னை கே.கே நகர் தியேட்டர் லேப் அரங்கில் திரையிடப்பட்டது. அண்ணாமலைப்புலவரின் கலைச்சூழலை விவரிப்பதன் மூலம் தோல்ப்பாவை கூத்துக்கலையின் அழகியல் பின்புலம் அதன் செயல் விளக்கம் மற்றும் அக்கலைஞர்களின் வரலாற்று ரீதியான பங்களிப்பு ஆகிய பல தகவல்கள் இந்த ஆவணப்படத்தில் பதிவாகின்றன. ஒரு இயல்பான சூழல் சித்தரிப்பு மற்றும் உரையாடல்கள் மூலம் இக்கலையின் பல்வேறு நிலைகள் குறித்த ஒரு பார்வையை இந்த ஆவணப்படம் செறிவாக கவனப்படுத்துகிறது.
இந்த ஆவணப்படத்தை இயக்கிய கன்னடத்தை தாய்மொழியாகக் கொண்ட கே.ஆர் உபேந்திரா (இவர் தமிழ்நாட்டில் வாழ்ந்தவர் தான். தற்போது பெங்களூரில் வசிக்கிறார்) நாடகம் மற்றும் தோல்பாவை நிகழ்த்துபவராகவும் இருப்பதால் ஒரு இயல்பான ஈடுபாட்டுடன் இப்படத்தை உருவாக்கியுள்ளார். கர்நாடகத்தில் சிமோகாவில் உள்ள நிநாசம் நாடகப்பள்ளியில் நாடகம் பயின்ற இவர் இந்திய நாடகப்போக்குகள் குறித்த செறிவான பார்வைக் கொண்டவர். தமிழ்நாடகங்களிலும் இவர் பங்கேற்றுள்ளார். இந்த ஆவணப்படத்திற்கு அதற்குரிய கலைப்பின்புலத்தை வழங்கியதில் அவருடைய அரங்க அறிவு அதிகம் கைகொடுத்திருக்கிறது. தற்போது அவர் கேரள கலாமண்டலத்தில் நாடக ஆராய்ச்சி படிப்பை மேற்கொண்டிருப்பதால் கேரள நிகழ்த்துக்கலைகளின் பின்புலத்தையும், சூழலையும் நன்கு அறியவும் கேரளப்பகுதியில் ஆழ்ந்து பயணம் செய்யவும் அதிக வாய்ப்புகள் பெற்றிருக்கிறார். அந்த அனுபவங்கள் இந்த ஆவணப்படத்திற்கு ஒரு சிறப்பான அசல் தன்மையை வழங்குகின்றன.
இந்த ஆவணப்படத்தில் தோல்பாவைக் கூத்து நிகழ்வுகளிலிருந்து நேரடியாக எடுக்கப்பட்ட பல காட்சிகள் தொழில்நுட்ப ரீதியாக பாவைகளை இயக்கும் மனித கற்பனையையும், வண்ணங்களின் இயக்கத்தையும் சிறப்பாக பதிவு செய்கின்றன. பின்புறத்திலிருந்து தீபங்களால் ஒளியூட்டப்பட்ட திரையில் ராமர் பட்டாபிசேகக் காட்சியும், அனுமான் படைகளை அழிப்பதையும், அனுமான் இந்திரஜித் யுத்தத்தையும் நிழல்கள் வடிவில் காண்பது அதிக சுவைகள் கொண்டுள்ளதாக உள்ளது. நிழல்கள், வண்ணங்கள், மற்றும் அசைவுகளின் இயக்கங்கள் குறித்த மனித மனத்தின் ஈர்ப்பு காரணமாகவே இக்கலை இத்தனை ஆண்டுகளாக நிலைபெற்றுள்ளது. கிட்டத்தட்ட ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தஞ்சாவூரிலிருந்து பாலக்காட்டிற்கு இடம்பெயர்ந்த புலவர் பரம்பரையினரே கேரளப்பகுதிகளில் ராமாயணக்கூத்தை அடிப்படையாகக் கொண்ட இக்கலையை பாரம்பரியமாக நிகழ்த்தி வருகின்றனர். கம்பராமாயண பாடல்களை அடிப்படையாகக் கொண்டு பாலக்காடு, திருச்சூர், மலப்புரம் பகுதிகளில் இந்த நிகழ்வுகளை தமிழிலேயே நிகழ்த்தி வருகிறார்கள். இவர்கள் இலக்கிய புலமையும், தத்துவ நாட்டமும் கொண்டவர்களாக இருந்ததால் புலவர்கள் என்றே அழைக்கப்பட்டனர். பகவதி கோவில்களுடன் இணைந்த சடங்கு வடிவமாகவே நிகழ்த்தப்பட்ட இக்கலை வடிவம் புலவர் பரம்பரையினரின் அற்பணிப்பு மிக்க உழைப்பினால் பெரும் மக்கள் ஈடுபாட்டை உருவாக்கி தற்போது கோவில்களுக்கு வெளியிலும் நிகழ்த்தப்பட்டு வருகிறது. இக்கலையின் முக்கிய ஆளுமையான கிருஷ்ணன் குட்டிப்புலவரின் மாணவர் தான் இந்த அண்ணாமலைப்புலவர்.
அண்ணாமலைப்புலவரின் வாழ்க்கை நிகழ்வுகளிலிருந்து உருவாக்கப்பட்ட இந்த ஆவணப்படம் அவருடைய கடைசி காலக்கட்டத்தை பதிவு செய்து அவருடைய மரணத்துடன் முடிகிறது. அவருடைய குடும்பமே அவருடைய செயல்பாடுகளில் முழுமையாக பங்கேற்றது. ஆழ்ந்த படிப்பு இசைப் பாடல்களை இசைப்பதில் அவர்களின் ஒட்டுமொத்த ஈடுபாடு, இன்று இக்கலையின் சரிந்து வரும் சமூக மதிப்பு புதிய விசயங்களை இக்கலையில் புகுத்தி அதை பாதுகாக்க வேண்டும் என்ற இளைஞர்களின் ஆவல் என்று இவை குறித்த உரையாடல் தளமாக இந்த ஆவணப்படம் விரிவுகொள்கிறது. இவையெல்லாம் பிரத்தியேகமான ஒரு கேரள நிலவெளிச்சூழலில் அதிக உயிரோட்டம் பெறுகின்றன. இறுதியில் அண்ணாமலைப்புலவரின் மரணம் இக்கலை சார்ந்து இந்த ஆவணப்படத்திற்கு ஒரு புனைவுத் தன்மையை வழங்குகிறது.
படப்பெட்டி
உதவி இயக்குனராக இருந்து கொண்டிருக்கும் இளைஞனுக்கு படமெடுக்க வாய்ப்பு கிடைக்கிறது. புதுமுக இயக்குனர் என்பதால் தயாரிப்பாளர் ஒரு டிஜிட்டல் கேமராவுல உணர்வோட பதிவு செய்து காட்டுங்க அப்புறம் படமாக்கிடலாம் என்கிறார். இயக்குனர் ஒரு பேருந்து நிறுத்தத்தில் காது கேளாத வாய் பேச முடியாத ஒரு காதலர்களின் பிரிவை படமாக்கி விடுகிறார். அந்த ஜோடிகள் தற்கொலை செய்துகொள்ளபோவதை தடுக்க நினைக்கும் இயக்குனர் விபத்துக்குள்ளாகிறார். கதைக்குள் கதை வைத்து சொல்லப்படும் யுத்தியில் சொல்லப்பட்டுள்ள இந்த குறும்படத்திற்கு ராஜ் தொலைக்காட்சி தயாரித்திருக்கிறது. டென்சிங் இயக்கியிருக்கிறார்.
படத்தின் இறுதியில் ஒரு பெண் கை கல்லறைக்கு பூ வைக்கிறது. அது யார் கல்லறை? பூ வைக்கும் பெண் அந்த ஊமைப் பெண் தானா? என யோசிப்பதற்குள் படம் முடிக்கப்படுகிறது.
பொய்குடம்
சமூகத்தில் தற்போது காணப்படும் நிகழ்வாகவும் செய்தித்தாள்களில் அடிக்கடி இடம்பெறும் விசயமாகவும் உள்ள ஒரு நிகழ்வை குறும்படமாக்கியிருக்கிறார் அசோக்ரத்னம். புதுமணத்தம்பதிகள், நாட்கள் செல்லச்செல்ல குழந்தைப் பேறு மருமகளுக்கு உண்டாகாததை அடிக்கடி குத்தி காண்பிக்கிறாள் மாமியார். ஒரு நாள் மருமகள் வாந்தி எடுக்கிறாள் அவளுக்கான வளைகாப்பு சடங்குகள் நடைபெறுகிறது பிள்ளை பேறுக்காக மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறாள் . மருத்துவமனை அல்லோல கல்லோலப்படுகிறது. அடுத்தக்காட்சி போலீஸ் ஸ்டேசனில் ஏன் இப்படி செய்தாய் என இன்ஸ்பெக்டர் விசாரிக்கிறார் தனக்கு ஏற்பட்ட இக்கட்டான சூழலை மருமகள் விவரிக்கிறாள் இறுதியில் புதுமணத்தம்பதிகள் கொஞ்சநாள் மகப்பேறுக்காக பொறுத்திருக்கலாம். இல்லையெனில் எவ்வளவோ நவீன சிகிச்சை முறைகள் இருப்பதையும் தத்தெடுத்து வளர்க்கும் முறையையும் கூறி அனுப்பி வைக்கிறார். சமூக விழிப்புணர்ச்சி படமாக இதனை கொள்ளமுடியும்.

பெப்பே

ஒரு கைப்பேசி அலைப்புக்காக ஏங்கும் ஒரு இளைஞனின் அற்ப ஆசைக்காக இந்த ட்ரிக் கையாளப்பட்டிருப்பது மனதை நெகிழ வைக்கிறது. கைப்பேசி ஆசை ஒரு ஊமை ஜீவனை மட்டும் விட்டுவைக்குமா என்ன? ஊமை இளைஞன் நல்லவனுமில்லை கெட்டவனுமில்லை நம்மைப் போல நொதுமல் இனத்தைச் சேர்ந்தவன். ஓட்டலில் வேலை செய்யும் இவன் சாப்பிட வருபவரிடமிருந்து திருட்டுத்தனமாக ஒரு கைப்பேசியைக் லாவகமாக கைப்பற்றுகிறான் அதை வைத்துக்கொண்டு அந்த ஓட்டலின் பின்னே உள்ள சந்தில் நின்று கொண்டு பரவசத்துடன் தனது பெப்பே மொழியில் பேசித்தீர்க்கிறான் இது தான் படத்தின் உச்சம். இந்த ஊமை ஜீவன் பேசும் மொழி பொருள் பொதிந்தது. பேசி முடித்தபின் கைப்பேசியை இவன் அதே இடத்தில் நைசாக வைத்து விடுகிறான். காணாமல் போன அதே இடத்தில் வியக்கும் வாடிக்கையாளனை தான் வென்றெடுத்து விட்டதாக பார்வையை செலுத்தும் நம் பெப்பே நாயகன். இந்த காட்சி முடிந்து படம் முடிகிறது. படத்தில் உரையாடல் இல்லாமல் காட்சி வழியாக செல்கிறது. இந்த படத்தை முகுந்தன் இயக்க கார்த்திக் பழனிச்சாமி ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தை சிறப்பான முறையில் நாகராஜ் படத்தொகுப்பு செய்துள்ளார்.

-ஜம்பு
———————————————————————————————————-
Lemon Tree
இஸ்ரேலியத்திரைப்படம் 2008
திரைக்கதை, தயாரிப்பு, இயக்கம் : எரான் ரிக்ளிஸ்

“சினிமாவின் எதார்த்தம் என்பது அதன் ஒளிப்பதிவின் அமைவைப் பொறுத்தே “
– ஆந்திரே பாசின்

Lemon Tree திரைப்படம் உண்மைக் கதையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளதால் இயக்குனர் எரான் ரிக்ளிஸ் கதையை நேர்கோட்டுப்பாணியிலேயே எடுத்துள்ளார். படம் பாலஸ்தீனர்களின் அவலமான வாழ்நிலையை மட்டுமல்ல பெண்களின் நிலைகுறித்தும் பேசுகிறது.
தந்தை உருவாக்கிய எலுமிச்சை தோட்டத்தை பராமரித்துக்கொண்டு வாழ்க்கை நடத்தும் ஒரு பாலஸ்தீன விதவைப் பெண் வீட்டிற்குப் பக்கத்தில் குடியேறும் இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் தனது குடும்ப பாதுகாப்பிற்காக எலுமிச்சை தோட்டத்தை வேறோடு வெட்டியெடுக்க ராணுவ நீதிமன்றத்தில் அனுமதி பெற்றுவிடுகிறார். இதை எதிர்த்து இஸ்ரேல் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கிறார் விதவைப்பெண் சல்மா, இவ்வழக்கில் அவர் வெற்றி பெற்றாரா இல்லையா என்பதே lemon tree படத்தின் கதை.
“அழகுமிகு எழுமிச்சை மரமே
உன் மலர்கள் மிக இனிமையானது
ஆனால், வறிய எலுமிச்சை மரமே
உனது கனியை யாரும் உண்ணமுடியாதே”
இப்பாடல் வில்ஹோல்டு என்பவரால் எழுதப்பட்ட பாடல். பிரேசில் நாட்டு கிராமிய மெட்டில் அமைந்த இப்பாடலை பாப்மார்லே உட்பட பல்வேறு பாடகர்கள் செழுமைப்படுத்தி பதிவு செய்துள்ளனர். அதன் இன்றைய பதிப்பாக உள்ள மேற்கத்திய இசைப் பாங்கில் அமைந்த அழகான பாடலாக முதல் காட்சியின் பின்னணியில் ஒலித்தவாறு படம் துவங்குகிறது, கேட்பதற்கு ரம்மியமாக உள்ள இப்பாடல் எலுமிச்சை பழம் குறித்து பேசுவதால் தேடிப்பிடித்து சேர்த்திருப்பது இயக்குனரின் அக்கறைப்பாட்டை நமக்கு உணர்த்துகிறது.
பாலஸ்தீன பிரச்சனைப்பற்றி ஒரு இஸ்ரேல் நாட்டு இயக்குனர் படம் எடுத்திருப்பதால் உள்ளூர மகிழ்ச்சியுடன் பார்க்கும் ஆர்வத்தை தூண்டியது. பாலஸ்தீனப் போராட்டம் பற்றி நாம் எத்தனை புத்தகங்கள், ஆவணப்படம் பார்த்தாலும் நமக்குள் ஏற்படுத்த முடியாத ஈர்ப்பை இத்திரைப்படம் நம் மனதுக்குள் என்றென்றும் நிலைத்துவிடச் செய்கிறது. காரணம் எந்த பிடிப்புமற்ற ஒரு விதவைப் பெண் சொந்த வாழ்க்கையினூடாக இப்பிரச்சனையின் பரிமாணத்தைக் காட்டியிருப்பதுதான். இவர் ஏற்கனவே எடுத்துள்ள படமான Syrian Bride படம் பெரும் வெற்றியையும் சர்வதேச அளவில் பெரும் புகழையும் பெற்றுத்தந்தது. அதில் நடித்த எகிப்து-இஸ்ரேல் நடிகையான ஹியாம் அப்பாஸ் நடிப்பில் கவரப்பட்ட இயக்குனர் அவரை வைத்து மற்றொரு படம் தயாரிக்க வேண்டும் என்ற ஆவலில் இப்படத்தை எடுத்துள்ளார். ஒட்டுமொத்த படமும், கதையும் அவரை மையமாக வைத்து பின்னப்பட்டு இருப்பதால் முழுப்படமும் அவரின் நடிப்பே ஆக்கிரமித்துள்ளது.
நடிப்பிற்கு சில இலக்கணமுண்டு. அதில் ஒன்று முகத்தில் குறிப்பாக கண்களில் கொண்டு வரவேண்டும். அதை சல்மா செய்திருக்கும் விதம் பார்க்கும் நம் முகத்தை வியப்பில் ஆழ்த்துகிறது.
உலக வரைபடத்திலிருந்தே பாலஸ்தீனம் அழிக்கப்பட்ட நிலையில், அதன் சொந்த பூமியில், அந்த மக்களின் வாழ்க்கையும், வளமும் துடைத்தழித்துக் கொண்டிருக்கும் சகாப்தத்தில், அதன் அவல வாழ்வின் ஒரு பகுதி இப்படத்தின் மூலம் பார்வையாளர்களுக்கு வாசிக்கத்தரப்பட்டுள்ளது. பாலஸ்தீனர்கள் சொந்த மண்ணிலிருந்து வேறோடு பிடுங்கப்பட்டு அகதிகளாக்கப்படுகின்றனர். அடிமைகளாக பிற நாடுகளில் வாழ்க்கை நடத்தும் அவலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் இஸ்ரேல் நடத்தும் ஆக்கிரமிப்பினால் பாலஸ்தீனர்கள் சொந்த நாட்டிலேயே இரண்டாந்தர குடிமக்களாக மாற்றப்பட்டுள்ளனர். இதனால் தினம் தினம் எழுதப்படும் ஆயிரமாயிரம் சோகக்கதைகளில் ஒரு கதையாக Lemon Tree அமைந்துள்ளது. யூத இன ஒழிப்பு வரலாற்றில் நடத்தப்பட்ட மாபெரும் சோகம். ஆனால், அதே இனம் மற்றொரு இன அழிப்பில் ஈடுபடுவது எந்த விதத்திலும் ஞாயப்படுத்த முடியாதது.
இஸ்ரேல் ஆக்கிரமிப்பு போரிலிருந்து தங்களது வீடு, நிலம், பெற்ற பிள்ளைகள், மரம் வரை காப்பாற்றுவதே பாலஸ்தீனர்களின் தினசரி வாழ்க்கையாக அமைந்துவிட்டது. இக்கொடூரமான நிலைமையே இப்படத்தை நான் எடுக்கக்காரணம் என்று கூறும் இயக்குனர் ரிக்ளிஸ் மிக நடுநிலைமையோடு ஒரு அரசியல் திரைப்படத்தை அதுவும் ஒரு சிறு எதிர்ப்பு கவிதை போல எடுத்திருப்பதே இந்த படத்தின் வெற்றியாகும்.
அரசியல் படம் என்றால் பலபேர் முகம் சுழிப்பார்கள் ஆனால் எவருமே முகம் சுழிக்காவண்ணம் ஒரு தனிமனித வாழ்க்கையினூடாக இரு நாடுகளுக்கிடையே உள்ள அரசியல் பிரச்சனையை மனதை லயப்படுத்தும் கலாப்பூர்வ ஒரு காட்சிப்படுத்துதல் மூலம் ஒரு சகாப்தத்தை நிகழ்த்தியிருக்கிறார் இயக்குனர். இப்படத்திலும் நடிகர்கள் மிகச்சிக்கனமாக நடிக்கவைக்கப்பட்டுள்ளனர். விதவைப்பெண் சல்மா, வக்கீல் தாவூத், பாதுகாப்பு அமைச்சர், அமைச்சர் மனைவி மீரா, இந்த நான்கு கதாப்பாத்திரங்களே முக்கிய நடிகர்கள் .
இஸ்ரேல் – பால்ஸ்தீனத்தின் மேற்குக் கரையோர பகுதியில் கதை நடப்பதாக அமைத்துள்ளனர். எல்லையோர கதை என்பதால் ஆதாரமற்ற பகுதியாக உள்ளது . இரண்டு வீடுகளுக்குள் புகும் கேமரா சல்மா வீட்டின் மூலம் பாலஸ்தீனத்தையும், அமைச்சர் வீட்டின் மூலம் இஸ்ரேலையும் காட்டுகிறது. எளிமையான காட்சியமைப்பு, எளிமையான படப்பிடிப்பிறகான இடங்கள், ஆனால் அமைதியான நடிப்பினால் உருவாகும் பிரம்மாண்டம் பார்வையாளர்களை ஆட்படுத்தி அமைதிப்படுத்துகிறது. ஆரவாரமும்,பரபரப்பும், உணர்வு கொந்தளிக்கும் இயல்பு என எதுவும் இல்லாமல் அரசியல் படம் அமைந்திருப்பது மிக அரிதாக நிகழக்கூடிய ஒன்று. எனவே ஒரு அழகான சினிமாவை பார்க்கும் அனுபவம் ஏற்படுகிறது. பாலஸ்தீன நாட்டின் ஒட்டுமொத்த பிரச்சனைகளின் ஒரு பிரதிநிதித்துவமாக சல்மாவின் எலுமிச்சை தோட்டம் அமைக்கப்பட்டு இருப்பது கதையின் ஒரு சிறப்பம்சம். அதேசமயம் பாலஸ்தீனிய சமூகத்தை பிரநிதித்துவப்படுத்துவராக சல்மா கதாப்பாத்திரம் உள்ளது. பாலஸ்தீன அதிகார வர்க்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பாத்திரத்தில் வக்கீல் தாவூத், இஸ்ரேல் அரசை பிரதிநிதித்துவப்படுத்தும் பாத்திரத்தில் இஸ்ரேல் நவான். இஸ்ரேலிய மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பாத்திரத்தில் மீரா. இதுவரை பாலஸ்தீன மக்களின் பிரச்சனையை எட்டிப்பார்க்காத இஸ்ரேலிய சமூகம் தற்பொழுது அவர்களின்பால் தங்களின் பார்வையை திருப்பியிருக்கிறார்கள். பாலஸ்தீனியப் பிரச்சனையை அவர்களும் உணர ஆரம்பித்துவிட்டார்கள் என்பதன் குறியீடாகவே மீரா கதாப்பாத்திரத்தை வைத்திருக்கிறார் இயக்குனர் உண்மைதான்.
ஆனால், அமெரிக்கா மத்திய கிழக்குப்பகுதியில் அமைத்திருக்கும் வலிமையான கோட்டையே இஸ்ரேல். எனவே இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு யுத்தத்தை எதிர்த்த பாலஸ்தீன மக்களின் போராட்டத்திற்கு குறைந்தபட்சமேனும் இப்படத்தின் தாக்கம் உதவியாக அமையுமா என்ற கேள்வி அமைகிறது. நிச்சயமாக இப்படம் அந்த வகையில் இரு தரப்பு மக்களிடையேயும் குறிப்பாக இஸ்ரேல் மக்களிடம் பாலஸ்தீனிய போராட்டம் பற்றிய அவர்களது புரிதலில் பெரும் அளவிலான சலனங்களை ஏற்படுத்தியுள்ளது.அதற்கு இப்படத்தின் வெற்றியே சாட்சி.
ஆனால், Syrian Bride படத்தை பெருமையுடன் பேசி இயக்குனரின் தோளை தட்டிக்கொடுத்த இஸ்ரேல், Lemon Tree –ஐ பார்த்தவுடன் முகத்தை சுழித்துக்கொண்டது. காரணம் பாலஸ்தீன மக்களின் நியாய உணர்வுகளுக்கு முழுமையான மதிப்பு கொடுத்திருக்கிறது. அவர்களது போராட்டங்களை நேரடியாக ஆதரிக்கிறது. ஆனால், இயக்குனர் பாலஸ்தீன அரசையும், இஸ்ரேல் அரசையும் விமர்சனப்படுத்தும் காட்சிகளை நேரடியாகக் காட்டாமல் இருதரப்புகளிலுள்ள குறைபாடுகளை கதாப்பாத்திரங்கள் மூலம் காட்டுயுள்ளார். அதிகார போதை மற்றும் ஒப்பந்தங்களின் உதவிகள் ஆகியவற்றால் ஆட்டிப்படைக்கப்படும் பாலஸ்தீன அரசு உருவகப்படுத்தும் வக்கீல் தாவூத் கதாப்பாத்திரத்தையும் ஏமாற்றும், பொய்யும் உள்ள இரக்கமற்ற அதிகார வர்க்கத்தினை உருவகப்படுத்தும் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் கதாப்பாத்திரத்தையும் உருவாக்கியுள்ளார்.
அரசியல் ரீதியாகவும், சமூக ரீதியாகவும் மிகவும் பலகீனமான சல்மா தனது வாழ்வாதாரமான எலுமிச்சை தோட்டத்தை மீட்பதில் தைரியமாகவும், தீர்க்கமானவராகவும் இருக்கிறார். எனவே ராணுவ நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்ட தன் வழக்கை இஸ்ரேல் உச்ச நீதிமன்றத்திற்கு கொண்டு போகிறார். இஸ்ரேல் உச்சநீதிமன்றம் நீதி வழங்குவதில் புகழ் பெற்ற ஒன்று என்ற மாயை இரு தரப்பு மக்களிடம் உள்ளது. எதேச்சதிகாரம் கொண்ட ஒரு நாடு அதன் கீழ் இயங்கும் எந்த அமைப்பையும் தனித்து இயங்க விடாது என்பது தான் எதார்த்தம். ஆனால் தனக்கு நீதி கிடைக்கும் என நினைக்கும் சல்மாவுக்கு உச்சநீதிமன்றம் ஒரு சொத்தையான தீர்ப்பை வழங்குகிறது. அதாவது இராணுவ நீதிமன்றம் பாதுகாப்புக் காரணங்களைக்காட்டி எலுமிச்சைத் தோட்டத்தை வேறோடு பிடிங்கி எடுக்க உத்தரவிடுகிறது. உச்சநீதிமன்றம் 55அங்குலம் விட்டு விட்டு மீதி அனைத்தையும் வெட்டி எடுத்துவிடுமாறு உத்தரவிடுகிறது.
மரங்களை வெட்ட அனுமதி வாங்கி வந்ததிலிருந்து சல்மாவுக்கு ஆதரவாக அமைச்சர் மனைவி பேசினாலும் இறுதியில் கணவனின் பேச்சை மீறி அவளால் எதுவும் செய்ய முடியவில்லை. ஆண் அதிகார மையங்களை மீறி எதுவும் செய்யமுடியாத கையறு நிலையில் உள்ள இரு பெண்களும் பார்வையாலேயே உணர்வுகளை பரிமாறிக்கொள்ளும் காட்சிகள் மனதை தொடும் படியான நடிப்பு அதில் வெளிப்பட்டுள்ளது . இரு பெண்கள், இரு வேறு உலகங்கள் இரு வேறு மொழிகள் இடையில் ஒரு வேலி அவர்கள் ஒருவருக்கொருவர் பரஸ்பர உறவுக்குள் இணைய முடியாதபடி தடுப்பது எது ?
இப்படத்தில் எலுமிச்சை மரம் பாலஸ்தீன மக்களின் குறியீடாக அமைக்கப்பட்டுள்ளது. மண் உரிமையின் ஒரு குறியீடாக; ஒரு நாட்டை கைப்பற்றும் போது கூட அங்குள்ள மரங்களை வெட்டுவது தடை செய்யப்பட்டுள்ளது என பைபிளிலே கூறப்பட்டு இருக்கிறது. ஆனால் இஸ்ரேல் அரசு மேற்கு கரையை ஆக்கிரமித்தப் போது பாதுகாப்பு காரணங்களைக் காட்டி அங்கிருந்த ஆலிவ் மரங்களை பிடிங்கி எறிந்தது.ஆலிவ் மரங்கள் பாலஸ்தீன மக்களின் வாழ்வோடு பின்னிப்பிணைந்த ஒன்று. அதன் கிளை அமைதியின் சின்னம் இப்படத்தின் இயக்குனர் ஆலிவ் மரங்களுக்குப் பதில் எலுமிச்சை மரங்களை பதிலீடு செய்திருப்பதற்கு காரணம் அதன் மஞ்சள் நிற கவர்ச்சி தன்மை கொண்டதால் தான். அதன் சுவையான புளிப்பும் இனிப்பும் பாலஸ்தீன-இஸ்ரேல் பிரச்சனையை குறீயீடாகக் கொண்டதனால் கூட அதை தேர்வு செய்திருக்கலாம் என நினைக்கிறேன். இப்படி குறியீடுகளின் மூலம் பார்வையாளன் படத்திலிருந்து வரலாற்றுக்குள் பயணிக்க வைக்கும் முறையே நம்மை விட அவர்களுக்கு சிறப்பாக அமைகிறது.
மனித இனம் மரம் போன்றது , அதற்கும் நிலம், தண்ணீர், காற்று, வெளிச்சம் என எல்லாம் தேவைப்படுகிறது. மரத்திற்கும் மனிதனுக்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன. இதன் முக்கியத்துவமே இயக்குனரை படத்தின் மையப்புள்ளியாக வைக்கத் தூண்டியுள்ளது. மரமே இங்கு இரண்டு நாடுகளையும் பரஸ்பரம் பேசிக்கொள்ளவைக்கும் ஒரு ஊடகமாக மாற்றியதன் மூலமே இப்படத்திற்கு சினிமா மொழி கை கொடுத்திருக்கிறது. அதனால் தான் சல்மா தோட்டத்தில் வேலை செய்யும் முதியவர் நீதிமன்றத்தில் சாட்சியம் அளிக்கும் போது “மரங்கள் மனிதர்களைப் போல் ஆன்மாவைக் கொண்டது “ என்கிறாள்.
பாலஸ்தீனத்திற்கும் இஸ்ரேலுக்குமிடையே எழுப்பப்பட்டிருக்கும் மதில் சுவர் இரண்டு இனஸ்களைப் பிரித்துக் காட்டும் குறியீடு இந்த நீண்ட நெடிய மதில் சுவர் ஆக்கிரமிப்பின் குறியீடாகவும் நமக்குப் புலப்படுகிறது. அதனால் தான் உணர்விலும் சிந்தனையிலும் மதரீதியாக எழுப்பப்பட்டுள்ள பலமதில் சுவர்கள் எழுப்பப்பட்டுள்ளன. ஆனால் இவைகளையெல்லாம் மீறி நிற்பது மனிதநேய உணர்வே மானுட உணர்வே என்ற செய்தியை சொல்வதே இப்படம்.

———————————————————————————————————–

பாட்டுபாடியே மதசமத்துவத்தைப் போதித்த
தேசிய கலைஞன் டி.எம். காதர்பாட்சா
-பேரா. வா.பாலகிருஷ்ணன்

1930களில் டி.எம். காதர்பாட்சா, கே.எஸ். தேவுடுஅய்யர், கே.எஸ். செல்லப்பா அய்யர், எஸ்.ஜி கிட்டப்பா, டி.எம் மருதப்பா, பி.எஸ். ரத்தினாபாய், அயன் ஸ்தீரீபார்ட் எஸ்.எஸ் சாரதாம்பாள், கே.பி சுந்தராம்பாள் ஆகியோர் பாடிய தமிழிசைப் பாடல்கள் கிராமபோன் இசைத்தட்டுகளாக தமிழகம் முழுவதும் பிரபலமாக இருந்த காலம்.
ஸ்பெஷல் நாடக மரபிற்கு தமிழகத்தில் பட்டி தொட்டியெல்லாம் அமோக வரவேற்பு இருந்தது. நாடக நடிகர்களை கடவுளின் அவதாரமாகவே மக்கள் நினைத்துக்கொண்டிருந்தனர். அன்றைய நாடகக்கலைஞர்கள் பெரும்பாலும் தேசவிடுதலைப்போராட்டத்திலும் கலந்துகொண்டனர். இந்த பாரம்பரியம் மிக நீண்டது. அந்த வரிசையில் விஸ்வநாததாஸ், டி.எம். காதர்பாட்சா ஆகியோர் முக்கியமானவர்கள்.
திருச்சி உறையூரில் பிறந்த டி.எம். காதர்பாட்சா ஸ்பெஷல் நாடகங்களில் ஹார்மோனிஸ்டாக இருந்தார். இவர் காலால் மற்றும் கைகளால் இயக்கப்படும் ஆர்மோனியத்திலும் பாண்டித்தியம் பெற்றவர். இவர் பாடிய பாடல்கள் மக்கள் மத்தியில் பெற்ற அபரிதமான வரவேற்பால் “சக்கரவர்த்தி” என்ற பட்டமும் பெற்றவர்.
டி.எம். காதர்பாட்சா தாம் பாடுகிற பாடல்களின் ராகத்திற்கு ஏற்ப ஆர்மோனியம் வாசிப்பதில் கைதேர்ந்தவர். இவர் நாடகங்களில் ஐந்தரைக் கட்டை சுருதியில் பாடும் பாட்டு எப்படிப்பட்டவரையும் ரசிக்கச்செய்யும். அந்த காலத்தில் ஆர்மோனியம் இல்லாத இசை விழாக்களே இல்லை என்று சொல்லலாம். அப்போது பிண்ணனி இசைப்பவர்களோ, பின்பாட்டுக்காரர்களோ மேடைக்குக்கீழே முன்புறத்தில் உட்கார்ந்து தான் பாடுவார்கள். அவர்களை மறைத்து தட்டி ஒன்றை கட்டிவிடுவார்கள். அதனால் இந்த பின்பாட்டுக்கலைஞர்களை மக்களுக்கு தெரியாமலேயே போய்விடும் . இந்த சூழலில் எஸ்.ஜி கிட்டப்பாவின் தம்பி எஸ்.ஜி காசி அய்யர், கே.எஸ் தேவுடு அய்யர், டி.எம் காதர்பாட்சா போன்றவர்கள் மட்டுமே மேடையிலேயே இருந்து வாசிக்கும் மரியாதையே பெற்றவர்கள்.
டி.எம். காதர்பாட்சா பாடல்களில் தேச பக்தியும் இறைபக்தியும் இணைந்து இருந்தன. ஆர்மோனியத்தை இசைத்தபடியே பல்லவியை பாடிவிட்டு தொடையைத் தட்டி மீசையைத் தடவிக்கொண்டு மிடுக்காக மக்களைப் பார்க்கும் போது மக்களின் ஆரவாரம் விண்ணைப்பிளக்கும் இவருடைய தனி ஆவர்த்தனம் மலேசியா சிலோன் ஆகிய நாடுகளில் பிரசித்தம் பெற்றது.
காலனிய காலத்தில் மக்களிடையே பிரபலமான கலைஞர்களை எந்தவிதத்திலாவது வேட்டையாடிக்கொண்டிருந்தது பிரிட்டீஸ் ஏகாதிபத்தியம். டி.எம். காதர்பாட்சாவும் இதற்கு தப்பவில்லை. இவருக்கு சிறைத்தண்டனையும் அபராதமும் விதித்தது. எஸ்.வி சுப்பையா பாகவதர், எம்.கே. தியாகராஜபாகவதர் முதலியோர் டி.எம். காதர்பாட்சாவுக்கு விதிக்கப்பட்ட அபராதத்தொகையை கட்ட முன்வந்தனர். ஆனால், டி.எம். காதர்பாட்சாவோ ‘இந்த அபராதத்தொகையை கட்டினால் செய்யாத குற்றத்தை ஒப்புக்கொண்டதாகிவிடும். இது தேசியத்திற்கே அவமானம்’ என்று கூறி அபராதத்தொகையை கட்ட மறுத்து ஆறுமாத கடுங்காவல் தண்டனையை அனுபவித்தார்.
அன்றைய நாடகங்களிலும் அரசியல் மேடைகளிலும் டி.எம். காதர்பாட்சா, விஸ்வநாததாஸ் ஆகியோர் தேசிய உணர்ச்சியைத் தூண்டும் பாடல்கள் பாடுவதை வழக்கமாககொண்டிருந்தனர். இந்த மரபைப் பின்பற்றி பலபாடகர்களும் பாடினர். இப்படிப்பாடப்படும் சிலபாடல்களை மக்கள் ஒன்ஸ்மோர் கேட்பதுண்டு. அப்போது சிலபாடகர்கள் பாடுவார்கள் சிலர் மறுப்பதுண்டு. ஒன்ஸ்மோர் பாடப்பட்டால் மக்கள் அதிசயமாகவும் சாதனையாகவும் அதை பேசிக்கொண்டிருப்பார்கள். இந்த சூழலில்தான் கிராமபோன் ரிக்கார்டுகள் அறிமுகமாகின. மக்கள் இவற்றை வாங்கி தாங்கள் விரும்பிய பாடல்களை விருப்பம் போல் எத்தனை முறை வேண்டுமோ அத்தனை முறை கேட்பார்கள். இசைத்தட்டுகளால் அதை பாடிய கலைஞர்களும் புகழ்பெற ஆரம்பித்தனர். இந்த கலைஞர்களின் இசையை நுகர்ந்த ரசிகர்கள் இவர்களை நேரில் காண நாடகக் கொட்டகைகளை மொய்த்தனர்.
1930களில் காதர்பாட்சா பாடிய சுமார் 70 தமிழ் பாடல்கள் எச்.எம்.வி இசைத்தட்டுகளில் பதிவு செய்யப்பட்டு தமிழ்கூறும் நல்உலகம் முழுவதும் விற்பனையாகின. இவ்வாறாக ஒரு பின்னணிக்கலைஞர் முன்னணி சூப்பர் ஸ்டாராக தமிழகத்தில் உலாவந்தார்.
நாடக நடிகரும் பின்னாளில் திரைப்பட நடிகருமான வி.கே.ராமசாமி ’எனது கலைப்பயணம்’ என்ற தமது நூலில் பின்வருமாறு குறிப்பிடுகிறார். யதார்த்தம் பொன்னுச்சாமி பிள்ளைக்கு சொந்தமான மதுரை பாலகானசபா என்ற நாடகக் கம்பெனி இருந்தது அதன் சார்பில் அரக்கோணம் டவுன்ஹாலில் சுமார் ஒரு மாதகாலம் நாடகம் நடத்தி வந்தோம். எங்கள் நாடகம் வசூலில் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. அதனால் நாடகம் நடத்தும் இடத்திற்கு வாடகை கொடுக்க முடியவில்லை. ஆகவே நாங்கள் நாடகம் போட்டுக்கொண்டிருந்த டவுன்ஹால் இடத்தைப் பூட்டிவிட்டார்கள். நான் அந்த டவுன்ஹால் செகரட்டரி மனைவியிடம் நாங்கள் படும் கஷ்டத்தைச் சொன்னேன் அவர் செகரட்டரியிடமும் மத்த கமிட்டியாரிடமும் பேசி, நாங்கள் நாடகம் நடத்த அனுமதி வாங்கி தந்தார். அப்போது செகரட்டரியின் மனைவி ”ராமசாமி நல்ல நாடகமா போடு அப்பதான் காசு சம்பாதிக்க முடியும் டவுன்ஹாலுக்கு தரவேண்டிய வாடகை பாக்கியை கொடுத்திடு. நல்லபடியாக பொழச்சுக்க” என்று சொன்னார்.
திருப்பத்தூரில் வார்பண்டு (யுத்த நிதிக்காக) நாடகத்தை முடித்துவிட்டு அரக்கோணம் வந்துசேர்ந்த நடிகர் டி.கே.ராமச்சந்திரன் அவர்களிடம் ‘நாடகத்திற்கு ஜனங்க வரணும்னா புதுமையா விளம்பரம் பண்ணனும், பாப்புலர் ஆர்ட்டிஸ்டை பாடவைக்கலாம்’ என்று சொன்னேன். உடனே அவர் சென்னைக்குப் புறப்படு என்றார் நானும் அவரும் சென்னைக்குச் சென்று சக்கரவர்த்தி காதர்பாட்சாவை சந்தித்து எங்கள் நாடகத்திற்கு வருகை தந்து நாடகத்திற்கு இடையில் ஸ்பெஷல் காட்சியில் தோன்றி தாங்கள் ஆர்மோனியம் வாசித்துப் பாடவேண்டும் என்று அவரைக் கேட்டுக்கொண்டோம். அந்த பெரிய மனிதர் உடனே ஒப்புக்கொண்டு உங்களுக்கு நாடகம் நன்றாக நடந்து திருப்தியாக வசூலானால் எனக்கு ஊதியம் கொடுங்கள் இல்லையென்றால் எனக்கு பணமே வேண்டாம். போக்குவரத்து செலவுக்கு மாத்திரம் கொடுத்தால் போதும் என்றார்.
நாங்கள் மீண்டும் அரக்கோணம் வந்து ஒரு இடம் கூட விடாமல் எங்கள் நாடகத்திற்கான வால்போஸ்டரை ஒட்டினோம். அந்த விளம்பரம் இது தான்.

எங்கள் நாடகத்திற்கு இடையே
திரு.சக்கரவர்த்தி காதர்பாட்சா மேடையில் தோன்றி தேனிசையால் பார்வையாளர்களை மகிழ்விப்பார்.

”ஒரே ஸ்பெஷல் ஒரே ஸ்பெஷல்”
”காணத்தவறாதீர்கள்”
”கண்டுகளியுங்கள்”

இது சமயம் தவறினால் மறுசமயம் வாய்ப்பதரியது.
கண்டிப்பாக ஒன்ஸ்மோர் இல்லை.

மறுபடியும் சக்கரவர்த்தி இந்த மேடையில்
தோன்றமாட்டார்.

அடாது மழைபெய்தாலும் விடாது நாடகம் நடைபெறும்.
டிக்கெட்டுக்கு முந்துங்கள்.

காலை 9மணி முதல் தியேட்டரில் எல்லா வகுப்பு
டிக்கெட்டுகள் கிடைக்கும்.

இந்த விளம்பரத்தைப் பார்த்து ஜனக்கூட்டம் நாடகக்கொட்டகைகளில் அலைமோதியது. நாடகக்கொட்டகைக்கு வெளியே அரங்கம் நிறைந்து விட்டது. (ஹவுஸ்புல்) என்ற அறிவிப்பு பலகை தொங்கியது. மேடையில் காதர்பாட்சா தோன்றி செஞ்சுருட்டி ராகத்தில் ஆதிதாளத்தில்

”சுருளி மலை மீதுலாவும் சீலா –உன்னை
ஸ்தோத்தரித்தேன் சுப்பிரமண்ய வேலா ”
என்று பாட ஆரம்பித்தவுடன் ஜனங்களின் ஆரவாரம் விண்ணைப் பிளந்தது. அதுவரை அந்த டவுன்ஹாலில் இருந்த ஜனக்கூட்டம் போல் எப்போதும் கூடினது இல்லை. என்று தம் நூலில் கூறியுள்ளார். இது போன்ற பல நாடகங்களுக்கு தம்மாலான உதவிகளை செய்துகொண்டு, தேச விடுதலைக்காகவும் போராடினார். “முத்தகு பித்தானே நபியே” ”மக்கம் பிறந்த நபி” போன்ற சில பாடல்கள் இவரது குரலால் மிகவும் புகழ்பெற்றது.
1929ஆம் ஆண்டு மதுரகவி பாஸ்கரதாஸ் தமது நாட்குறிப்பில், ‘காதர்பாட்சா தம்மை வந்து பார்த்து பேசிக்கொண்டிருந்து விட்டு, பாடல் எழுதுவதற்காக பத்து ரூபாய் கொடுத்து சென்றார்’ என்று எழுதியுள்ளார். அன்றைக்கு ஒரு சவரன் தங்கம் விலை 12ரூபாய் பாட்டு எழுதுவதற்காக பத்து ரூபாய் கொடுத்த வள்ளல் காதர்பாட்சா என்று அன்றைய நாடக கலைஞர்கள் பேசிக்கொண்டனர். காதர்பாட்சா பாடிய பாடல்களை பெரும்பாலும் பாஸ்கரதாசும், சூளை மாணிக்க நாயக்கரும் எழுதியுள்ளனர்.
இவர் பாடிய பாடல்களை பின்வருமாறு வரிசைப்படுத்தலாம்.
1. பாலாபிஷேகம் பழனிமலை, 2.கதனகுதூகலம், 3.மாட்சிமைதங்கிய மலர்பாதா 4.மஹிபரே உம்மை நம்பினேனய்யா 5. ராமபஜனஹேர்தியா (இந்திபாடல்) 6.ஸாது ஜனார்த்தன ராமா 7.ஆண்டவனே அடியேன் 8.ஆலவாய்மதுராபுரி 9.குகனேசிங்காரவேலா 10.சண்முகா ஏழையின்மேல் 11.சரவணபவ குகனே வா 12.நெஞ்சமே இந்த மானிடவாழ்வு 13. வாவா கார்த்திகேயா 14. தினமும் துதிப்பாய் நெஞ்சே 15. ஆதார மெனக்கார் 16.பார்க்க வேணும் 17.ஜகத்குருபா ஷண்முக 18.கல்லோய் சொல்லாய் மனது (பாகம்1,2) 19.வாவா வடிவேலனே 20.நான் நம்பும் தேவதை 21.இனிபோதமருள்வாய் 22.பக்தர் பஜனை பாடுரார் 23. மக்கம் பிறந்த நபி 24. ஹர ஹர சிவ பரமகுருபரா 25.கடவுள் தன் சேய் கார்த்திகேயா 26.சூரகுல சம்ஹாரா 27.தயவில்லாதென்ன வஞ்சகம் 28.ஆதியானொளி 29.மதுரை ராணி 30.கோருங்கள் கோருங்கள் 31.பெண்கொண்ட பேர்பட்ட பாடு 32.முத்துகு பித்தான நபியே 33.என்னை காப்பாற்றி அருள்வாயே 34.பத்துலட்சம் பொன் 35.ஈசனைக் காண 36.வீசுகாற்றே 37.திருக்கடையூர்தனிலே 38.ஓடிப்பிழைத்து போறேன் 39.ஆண்டவர்களே ஹீத்துப்பாண்டவர்களே 40.திருச்செந்தூர் வேலாயுதா 41.ஆதிக்கடவுளுக்காரிடத்திலும், 42.மாயப்பிரபஞ்சமடி பாப்பா (பாகம்1,2) 43.இது சரியாமா எமை கொல்லப்போமா 44.நல்ல பெண் என்ற பெயரை நாட்டு 45.இந்த வேளை யார் போய் சொல்லுவார் 46. ஈடேற மார்க்கம் சொல்லய்யா 47.சீதாராம பஜ 48.கவலைத்தீர்த்தே 49.அன்னையே உன்னையே 50.ஆலயங்களில் சீலம் விடாமல் 51.காரணி பரிபூரணி 52.தபோநிதி சங்கரி 53.ஏக சக்ராதிபதி 54. நடனசபாபதியே தெய்வம் 55.இருப்பு சங்கிலி தொறட்டு 56. சந்தேல ஷாயா 57. வாவாவா வண்ணமயில்ஏறி 58.கொண்டாடுவோம் மயில்வாகனா 59.கோபியர் கொஞ்சும் தாமனே 60.ஜீவாதராஸ்வாமியே ஆகிய பாடல்கள் இசைத்தட்டில் உள்ளன. இவை தவிர தெம்மாங்கு. லாவணி ஆகிய பாடல்களை காதர்பாட்சா பாடியுள்ளார்.

பிரிட்டீஸ் ஏகாதிபத்தியம் காதர்பாட்சா மீது ஒரு பொய்யான கொலைக்குற்றம் ஒன்றை வேண்டுமென்றே திணித்தது. இந்த கொலைக்குற்றச்சாட்டைப் பற்றி நாடக நடிகர் சட்டாம்பிள்ளை வெங்கட்ராமன், தமது ‘தமிழ்நாடக கலைமணிகள்’ என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார். இந்த செய்தியை நடிகர் கிளவுன் சுந்தரம் தம்மிடம் கூறியதாக தனது நூலில் நன்றியுடன் குறிப்பிடுகிறார்..

பிரிட்டீஸ் ஏகாதிபத்திய அரசாங்கம் காதர்பாட்சா மீது கொலைக்குற்றம் சுமத்தி விசாரணையும் நடைபெற்றது. விசாரணையின் முடிவில் இவருக்கு தூக்கு தண்டனை வழங்கி தீர்ப்பு அளிக்கப்பட்டது. செய்யாத குற்றத்திற்காக தண்டனையை அனுபவிக்கத்தான் வேண்டுமோ ? என்று கல்லாய் சமைந்து காலத்தை கடத்தி வந்தார். ஆனால் தம்முடைய விடுதலைக்காக அவர் எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

விடிந்தால் தூக்கு :-
தூக்கில் போடுவதற்கு முன்னால் காதர்பாட்சாவை பார்த்து கடைசி ஆசை என்ன என்று கேட்டனர் சிறைஅதிகாரிகள். அதற்கு காதர்பாட்சா என்னுடைய ஆர்மோனியத்தை இசைத்தபடியே பாடவேண்டும் என்றார். இரண்டு மருத்துவர்கள், சிறை அதிகாரிகள் புடைசூழ அதே மிடுக்குடன் ஆர்மோனியத்தை வாசித்தப்படி தனது புகழ்பெற்ற பாடலான
”சுருளி மலை மீதுலாவும் சீலா –உன்னை
ஸ்தோத்தரித்தேன் சுப்பிரமண்ய வேலா ”
என்ற பாடலை உச்சஸ்தாயில் பாடினர். மருத்துவர்களும் சிறை அதிகாரிகளும் தம்மை மறந்து பாடலில் லயித்துவிட்டனர். இதனால காதர்பாட்சாவை தூக்கில் போடவேண்டிய நேரம் தாண்டிவிட்டது. சட்டவிதிகளின் படி தூக்கில் போடமுடியவில்லை. பிறகு விடுதலை செய்தனர்.
ஆர்மோனிய சக்ரவர்த்தி காதர்பாட்சா கடைசிவரையில் கதர் அணிவது, தீண்டாமை ஒழிப்பு, இந்து முஸ்லிம் ஒற்றுமைக்காக பாடுபடுவது என்கிற கொள்கையில் இறுதிவரை விட்டுக்கொடுக்காமல் தனது கொள்கை வழி வாழ்ந்தார்.

——————————————————————————————————–

From Nizhal Film Magazine – 13th year Sovenier (Oct – Nov 2012)

Ma Aranganathan Padaippugal

<<

மா.அரங்கநாதன் படைப்புகள்:

எண்பது வயது தொட்ட மா.அரங்கநாதனை நவம்பர் 3 அன்று (நிழல்) திருநாவுக்கரசு; (வித்யாசம்) எஸ். சண்முகம், (நற்றிணை) பாண்டியன், (பதியம்) வாசன், பாலா, தேவராஜன், (முன்றில்) மகாதேவன், (மொழிபெயர்ப்பாளர்) ஜார்ஜ், கவிஞர் செந்தமிழினியன் (புதுவை) முதலியோர் சென்று தங்கள் வணக்கத்தையும் வாழ்த்தையும், தெரிவித்துக் கொண்டனர்

டிசம்பரில் மா.அரங்கநாதன் படைப்புகள் பற்றிய கருத்தரங்கம் நடக்க இருக்கிறது.

எழுத்தாளர் மா.அரங்கநாதனின் படைப்புகள் :

காடன் மலை, வீடு பேறு, ஞானக்கூத்து முதலிய சிறுகதை தொகுப்புகளும்.

“பறளியாற்று மாந்தர்” , “காளி ஊட்டு”, முதலிய நாவல்களும், “பொருளின் பொருள் ” என்ற கவிதையைப்பற்றிய அறிமுக நூலும் குறிப்பிடத்தக்கவை….

லத்தின் அமெரிக்காவில் உருவாக்கப்பட்ட “மேஜிக்கல் ரியலிஸம்” இவரது படைப்புகளில் மிக இயல்பாக அமைந்துள்ளதால் விமர்சகர்களால் “தமிழகத்து போர்ஹே” என்று செல்லமாக அழைக்கப்படுகிறார்.

[nggallery id=7].