alfred_hitchcock

இயக்குனர்களின் இயக்குனர் ஆல்பர்ட் ஹிட்ச்காக்.

– ’நிழல்’ ப. திருநாவுக்கரசு..,

இங்கிலாந்து ராணியாக இருந்தாலும் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்தாலும் படம் ஆரம்பித்த பிறகு யாரையும் திரையரங்கினுள் அனுமதிக்கக் கூடாது என்று கட்டளை போட்ட இயக்குனர் உலகமே திகில் மன்னன் என்றழைத்த ஆல்பர்ட் ஹிட்ச்காக்.

இங்கிலாந்தில் உள்ள லேண்டோன் என்ற ஊரில் 1899 ஆம் ஆண்டு ஆக 13 ஆம் தேதியன்று பிறந்தார். தன் 21 ஆம் வயதில் மெளனப் படங்களுக்கு டைட்டில் எழுதும் வேலையில் சேர்ந்து உதவி இயக்குனராக்கி பி இயக்குனரானார். தன்னுடன் பணியாற்றிய அல்மரா வில்லியை மணந்தார். 1922 தொடங்கி 1976 வரை 66 படங்களை எடுத்தார்.

ஹிட்ச்காக்கின் தத்துவம்

இவரது அனைத்துப் படங்களுக்கும் ஜீவநாடியாக இருந்த மர்மம் மற்றும் திகிலைத் தனது திரைப்படக் கொள்கையாக அறிவித்திருந்தார். திரைப்படம் என்ன சொல்ல வருகிறது என்பதைப் பற்றிய எனக்கு கவலை இல்லை. பார்வையாளர்களை அலறவைக்கும் உத்தி பற்றித்தான் எனக்கு அக்கறை. ஒரு படம் நேர்த்தியாக அளிக்கப்பட்டதன் மூலம் பார்வையாளர்கள் ஜப்பானில் இருந்தாலும் சரி. இந்தியாவில் இருந்தாலும் சரி அவர்கள் ஒரு விதமாக திகிலுற வேண்டும். என்று தனது பேட்டியில் கூறியுள்ளார்.

இவர் படங்கள் அனைத்தும் ஒரு கொலையோ அல்லது ஒரு திகில் சம்பவமோ நடப்பதற்கு முன்னும் பின்னும் நிகழ்பவைகளை மையமாகக் கொண்டிருக்கும். நாவல்கள் சஸ்பென்ஸைக் கடைசி வரைக்கும் இழுத்துக்கொண்டு போகலாம். சினிமாவில் பார்வையாளர்களை நான் அப்படி ஏமாற்ற விரும்பவில்லை. முதலிலேயே அதைக்காண்பித்து விடுவேன். பிறகு அந்தக்கொலை எப்படி நடந்தது ? நாயகன் அல்லது நாயகி எப்படித் தப்பித்தனர் என்பது பற்றி மீதிப்படம் இருக்கும் என்று தன்னுடைய படங்கள் பற்றிக் கூறியுள்ளார். ஒரு நாவலையோ சிறுகதையோ நாடகத்தையோ தான் திரைப்படமாக எடுத்தார். பிற இயக்குனர்களைப் போலத் தானே கதை பண்ணும் வேலையைச் செய்த்தில்லை.

1925 தொடங்கி 40வரை இங்கிலாந்தில் இருந்து படங்களை இயக்கினார். தொடக்க காலப்படங்களான பிளஷர் கார்டன், த மவுண்டன் ஈகிள், தி லாட்ஜர், டவுன்ஷிப், ஈஸி வர்ட்சு, த ரிங், த பார்மல் வைப், ஷாம்பெய்ன், திமான்க்ஸ் மேன் ஆகிய படங்கள் திகிலற்ற மெலோ ட்ராமா மெளனப்படங்களாக இருந்தன.

]திரைமொழி

ஹிட்ச்காக் பணியாற்றிய ஜெர்மன் கம்பெனிக்காக ஜெர்மனியில் இருந்தபோது அந்நாட்டின் திரைமேதைகளான முர்நாங், பிரிட்ஜ்லாங், எரிக் பொம்மர், போன்றோருடன் பணியாற்றியபோது தான் திரைமொழியான பார்வை ஊடகமொழியை தான் புரிந்துகொண்ட்தாக பல சந்தர்ப்பங்களில் தெரிவித்துள்ளார். அமெரிக்கப் படங்களில் காணப்படும் வழவழா உரையாடல் இவர் படங்களில் இருக்காது. பல நேரங்களில் உரையாடல் இல்லாமலே படம் எடுப்பதற்கு ஜெர்மானிய அனுபவம் உதவியிருப்பதை அவரது படங்களில் காணலாம். அத்துடன் அவருடையவை திகில்ப்படங்கள் என்பதால் உரையாடலுக்கானத் தேவையும் இருக்காது. அவரது மெளனப்படங்களிலும் அதிகம் திரைமொழியையே பயன்படுத்தியிருப்பார்.
திகில் படங்களுக்கான ஒலி, ஒளி, இசை எடிட்டிங் போன்றவற்றை நேர்த்தியான விகிதங்களில் கலந்து கொடுத்ததால் தான் இன்றளவும் பேசப்படுகிறார். ஹிட்ச்காக். திகிலை உண்டாக்குவதில் எடிட்டிங் முக்கிய பங்காற்றுகிறது. பட்த்தின் தன்மைக்கு ஏற்ப வேகமாகவோ மெதுவாகவோ காட்சியைத் திரைப்படுத்துவதால் பார்வையாளர் மனதில் திகிலை உருவாக்க முடியும் என்பதை ரஷ்யாவின் புரட்சி இயக்குனர் செர்ஜி ஐஸன்ஸ்டீனின் எடிட்டிங் உத்தியான இண்டலக்சுவல் எடிட்டிங் முறையினால் பார்வையாளரை நாற்காலியின் முனைக்குக் கொண்டு வந்து விடுவார். இதுவே இவரது வெற்றிக்குக் காரணம் என்று விமர்சகர்களை கூறுகின்றார்.

படங்களின் மத்தியில் தோன்றுதல்

திகில் படங்களுக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு இருப்பதை உணர்ந்து கொண்ட ஹிட்ச்காக் தனது படங்களில் இடையில் தோன்றுவதைக் கடைசி வரையில் கடைப்பிடித்தார். இதைக் கவனிப்பதற்குப் பெரும் ரசிகர் கூட்டம் உருவாகி விட்டது. இதன் மூலமாக பார்வையாளர்களின் கவனம் சிதறுவதை பின்னர் உணர்ந்த ஹிட்ச்காக் படத்தின் துவக்கத்திலேயே அடையாளப்படுத்த முடியாதபடி அல்லது கூட்டத்தின் கூட்டமாக வந்து போகிற வழக்கத்தை வைத்துக்கொண்டார்.

லைப்போட் 1943 என்ற படத்தில் கப்பல் உடைந்த முக்கிய கதாபாத்திரங்கள் மட்டுமே பிழைத்திருக்கும் நேரத்தில் ஹிட்ச்காக் எப்படித் தோன்றுவார் என்று பார்வையாளர்களிடையே ஒரு (ஆர்வக்) குறுகுறுப்பு தொற்றிய நிலையில் கப்பலில் கிடைக்கும் செய்தித்தாளில் தொப்பை குறைக்கும் விளம்பரத்திற்கு போஸ் கொடுத்து ரசிகர்களுக்குப் பெரும் மகிழ்ச்சியை உண்டாக்கினார். உலக அளவில் சார்லி சாப்ளினுக்குப் பிறகு ஹிட்ச்காக் தான் பெரிய ரசிகர் கூட்டத்தைப் பெற்றிருந்தார்.

திரைப்படமேதை

பிரான்சில் புதிய அலை உருவாகியிருந்த நேரம் க கியே து சினிமா என்ற சினிமா இதழின் ஆசிரியராக இருந்த ஆந்த்ரே பாஸன் ஒரு படத்திற்கு இயக்குனர்தான் முழுப்பொறுப்பு என்ற Author Theory யை உருவாக்கினார். அதற்கு ஹிட்ச்காக் முற்றிலும் பொருத்தமானவராக இருந்தால் புதிய அலை இயக்குனராக பிரான்சுவா த்ரூபோவ் ஹிட்ச்காக்கைப் பலநாட்கள் பேட்டிக்கண்டு அதை புத்தகமாக்கினார். இந்தப் புத்தகத்தின் மூலம் ஹிட்ச்காக் வெறும் திகில் மன்னன் மட்டுமல்ல ஒரு மேதையும் தான் என்பதை உலகம் ஒப்புக் கொண்டது.
ஹிட்ச்காக் படத்தின் புதிய திரைநுட்பங்கள்
ஹிட்ச்காக் சிறந்த ஓவியராகவும் இருந்ததால் செவ்வகச் சட்டகத்தை எவ்வாறு சிறந்த முறையில் கட்டமைப்பது என்பதிலும் புதிய உத்தியை அறிமுகப்படுத்தினார். இவரது காட்சியமைப்பைத் திரையில் ஒரு முறைப் பார்த்தால் போதும் வாழ்நாள் எல்லாம் மறக்கவே முடியாது. சைக்கோவில் வரும் வீடு, நார்த் பை வெஸ்ட் வரும் விமானத் துரத்தல், பேட்ஸில் வரும் துரத்தல் போன்றவை என்றும் அழியாத ஓவியங்கள்.

இங்கிலாந்தில் பிளாக் மெயில் ஐ மெளனப் படமாக எடுத்த நேரத்தில் திரைப்படங்கள் பேச ஆரம்பித்துவிட்டன. உடனே ஹிட்ச்காக் தனது படங்களையும் பேச வைத்தார் அத்துடன் அப்படத்தில் நடித்த ஒரு நடிகருக்கு டப்பிங் குரல் கொடுத்து புதுமையை புகுத்தினார். இதேபோல 39 ஸ்டெப்ஸ் படத்தில் சுத்தம் செய்யும் வேலைக்காரி கொலை செய்யப்பட்டுக்கிடப்பதை பார்த்து அலற அந்த ஓசையை ரயில் சத்தத்துடன் இணைத்து ரயிலில் கொலையாளி இருப்பதைக்காட்டி ஒலிக்கலவையில் எடிட்டிங் புதுமையை புகுத்தினார்.
அதேபோல் நொட்டோரியஸ் படத்தில் கேமரா கிரேன் மூலமாக தூரக்காட்சியிலிருந்து படிப்படியாக மாடியிலிருந்து கீழ் இறங்கி ஹாலுக்குள் நுழைந்து குளோசப்பில் காதாநாயகின் கையில் உள்ள சாவியைக் காண்பிக்கும். இந்த கிரேன் சாட் காட்சியை உலகசினிமா ரசிகர்கள் மறக்கமாட்டார்கள்.

அவது முதல் வண்ண படம் ரோப் (1948) இதிலும் ஒரு புதுமை பட்த்தில் கட்டே கிடையாது. ஒரு காட்சியிலிருந்து அடுத்த காட்சிக்கு செல்ல லைவ் ஃபேட் இன், ஃபேட் அவுட், டிசால்வ் முதலியவற்றை பயன்படுத்தினார். பட்த்தின் முழுக்கதையும் ஒரே ஹாலில் நடப்பதால் கட் தெரியாமல் படமாக்கியிருந்தார். காமிராவில் ஒரு கேன் முடிந்த்தும் அந்த ஷாட் ஒருவர் முதுகிலோ அல்லது ஒரு பொருளிலோ முடியும் மீண்டும் கேன் பொருத்தப்பட்டு பழைய கேன் முடிந்த இட்த்திலிருந்து ஷாட் ஆரம்பிக்கும். இந்த முறையை உலகமே வியந்து பார்த்த்து. ஸ்ட்ரேஞ்சர் ஆன் ட்ரெய்ன் படத்தில் ஒரு கொலை நடக்கிறது. அதை நேரடியாக்க் காட்டாமல் கொலையாளி பெண்ணின் கழுத்தில் கை வைக்க அப்பெண்ணின் முகத்தில் இருந்த கூலிங் கிளாஸ் கீழே விழுகிறது .

இப்படியாக கொலைக்காட்சிக்காட்டப்பட்டது. இந்த காட்சியை பலத்தமிழ் படங்களில் காப்பி அடித்தனர். நொட்டோரியஸ் படத்தில் ஒரு முத்தக்காட்சி . அமெரிக்கத்தணிக்கை குழு முத்தக்காட்சி மூன்று நிமிடங்களுக்கு மேல் நீடிக்கக்கூடாது என்று கட்டுப்பாடு விதித்தது அதை மீறுவதென்று முடிவு செய்த ஹிட்ச்காக் முத்தத்தைக் காண்பித்துவிட்டு காப்பி பருகுவதை காட்டுவதன் மூலம் முத்தம் தொடர்கிறது என்று பார்வையாளர்களை உணரச்செய்தார்.
பொதுவாக திகில் காட்சிகளை இரவுச்சூழலில் எடுத்தால் தான் பார்வையாளரிடம் அச்சத்தை உருவாக்க முடியும். ஆனால் ஹிட்ச்காக் பட்டப்பகல் பணிரெண்டு மணிக்கு கொளுத்தும் வெயிலில் படமாக்கி அதிசயிக்க வைத்தார். நார்த் நார்த் பை வெஸ்ட் என்ற படத்தில் ஏழு நிமிடங்கள் இடம் பெறும் இந்த காட்சி 134 சாட்டுகளாக எடுத்து திரையிட்டு அதிசயிக்கச்செய்தார். இதே போல் சைக்கோ படத்தில் இரண்டு கொலைச்சம்பவங்கள் வருகின்றன. முதல் கொலை ஒரு பெண் குளிக்கும் காட்சியில் 42 விநாடிகளே இடம்பெறும் இக்காட்சி 72 சாட்டுகளாக எடுக்கப்பட்டிருந்தன. அவற்றை படம் பிடிக்க ஒரு நாளானது. 67.5 அடி. படம் திரையில் ஓடும் போது பார்ப்பவர் கொலையை நேரில் பார்ப்பது போன்ற பிரம்மையை ஏற்படுத்தும் .

இதே படத்தில் அடுத்தக்காட்சி துப்பறிவாளன் மாடிக்குச் செல்கிறான். திடீரென திறக்கப்படும் கதவு வழியாக வரும் கொலையாளியால் கொல்லப்படுகிறான் . பொதுவாக படங்களில் மாடியிலிருந்து கீழ் விழுபவனை பின்புறமாகத்தான் பார்ப்போம். ஆனால் இந்தப்படத்தில் பார்வையாளரைப் பார்த்துக்கொண்டே படிகளில் சரிகிறான் துப்பறிவாளன் . மேலே கண்ட காட்சியில் ஹிட்ச்காக் எப்படி படம் பிடித்தார் தெரியுமா ?
படிக்கட்டுகளில் அகலமான பலகை வைத்து அதில் டிராலி தண்டவாளங்கள் பொருத்தப்பட்டன. கேமராவை வண்டியின் மூலம் மேலிருந்து தரை வரை முதலில் படமாக்கினார். அந்த காட்சியை பேக் ப்ரொசெக்சன் மூலமாக திரையில் விழச்செய்து திரையின் முன் நடிகனை நடிக்கவைத்து இப்போது திரையில் விழும் காட்சியையும் நடிகனின் நடிப்பையும் இன்னொரு கேமரா மூலமாக படம் பிடித்து திரையிட்டார். அந்த காட்சி வித்தியாசமாகத் தோன்றியது.

வெர்ட்டிக்கோ படத்தின் கதாநாயகனுக்கு உயரமான இடத்திலிருந்து கீழே வீழ்ந்து விடுவோமோ என்ற பயம் உண்டு . படத்தில் சில விநாடிகளே இடம்பெறும் இக்காட்சிக்காக 19000 டாலர் செலவு செய்தார் ஹிட்ச்காக் .
இரண்டு கட்டிடங்களுக்கு இடையே உள்ள அகல பாதாளத்தை காண்பிக்க கட்டிடத்தின் மேலிலிருந்து கீழ் வரை பக்கவாட்டில் டிராலி அமைத்து கேமரா கீழே விழுந்து விடாமல் ஜூம் லென்ஸை பொருத்தி கேமரா கீழிலுருந்து மேல் செல்லும் போது லென்ஸ் கீழ் நோக்கி அதன் பார்வையைச் செலுத்தும் டிராலியில் நாம் நகர்ந்த படி பின்புலத்தை சென்று அடைவது போலத் தெரியும் . ஜூம் லென்ஸில் காட்சியின் பின்புலம் நம்மை நோக்கி வருவது போல இருக்கும் இதற்கு முன்னர் யாரும் இப்படிச்செய்ததில்லை. ஆகையால் தான் ஹிட்ச்க்காக் இயக்குனர்களின் இயக்குனர் எனப்படுகிறார்.

தமிழ்சினிமாவில் ஹிட்ச்காக்கின் பாதிப்பு

டையல் பார் எம்மர்டர் என்ற படம் அப்படியே சாவி என்ற பெயரில் தமிழில் வந்தது. ஸ்ரேஞ்சர்ஸ் ஆன் அ ட்ரெயின் என்ற படத்தின் மூலக்கதையை முரண் என்ற தமிழ்படத்தில் பார்க்கலாம். த மேன் நியூ டூ மச் என்ற படத்தில் ஒரு குடும்பம் பிரிக்கப்படும் அக்குடும்பம் குடும்ப பாடல் மூலம் மீண்டும் ஒன்றிணையும். இதை முதலில் ஹிட்ச்க்காக் தான் ஆரம்பித்து வைத்தார். கைசா கைசா என்ற பாடல் கைதி கண்ணாயிரம் என்ற தமிழ் படத்தில் கொஞ்சி கொஞ்சி பேசி மதி மயக்கும் என்று வெளிவந்தது. இதே போல பிரியா படத்தில் பிரியா பாடல்.

கதாநாயகனை போலீஸ் துரத்தும் போது சாலையில் ஆட்டு மந்தை வழி மறிக்கும் இந்த காட்சியை ஹிட்ச்க்காக் முதன் முதலாக 37ஸ்டெப்ஸ் என்ற படத்தில் எடுத்தார். சுமைதாங்கி என்ற படத்தில் இந்த காட்சி வருகிறது. ஸ்பெல் பவுண்டு படத்தில் இங்கிரிட் பெர்க்மனும், கிரிகிரி பெக்கும் முத்தமிட்டுக்கொள்ளும் காட்சியில் பின்புலத்தில் 7 கதவுகள் ஒன்றன் பின் ஒன்றாக திறக்கும் பாரதிராஜாவின் நிழல்கள் படத்தில் பூங்கதவே தாழ்திறவாய் என்ற பாடல்காட்சி ஹிட்ச்காக்கையே நினைவூட்டுகிறது.

ஐ கன்பஸ் என்ற படத்தில் யார் கொலையாளி என்பது பாதிரியாருக்குத் தெரியும் ஆனால் தன்னிடம் பாவமன்னிப்புக் கேட்பவரின் ரகசியத்தை வெளியே சொல்லக்கூடாது என்பது மத மரபு. இந்த உள்ளடக்கத்தைக் கொண்டு சோ வின் உண்மையே உன் விலை என்ன என்று கோமாளித்தனமாக எடுத்தார்.
நடிகர் நடிகைகளைப் பற்றி ஹிட்ச்காக் எப்போது அலட்டிக்கொண்டதில்லை . அவர்களை கால்நடைகள் என்றே குறிப்பிட்டுள்ளார். அவர்களின் ஈகோவை மசாஜ் செய்தால் அது ஆக்டோபஸ் போல பத்துக்கரங்களால் நம்மைக் கேட்டுக்கொண்டே இருக்கும் நம்மால் திருப்தி செய்ய முடியாது என்பார்.

ஆயிரத்தில் ஒருவர்

ஹிட்ச்காக் அளவிற்கு வேறு எந்த இயக்குனர் படமும் மீண்டும் மீண்டும் தயாரிக்கப்பட்டது இல்லை அணுவை பற்றி உலகம் அறியாதிருந்த காலத்திலேயே அதை உள்ளடக்கமாக கொண்டு படமெடுத்தவர்
யுனிவர்ஸ் பிக்சர்ஸ் தயாரித்த ஹிட்ச்காக்கின் சைக்கோ படத்திற்காக போடப்பட்ட செட்டை இன்றளவும் சுற்றுலா பயணிகளுக்காக காட்சிப் பொருளாக அப்படியே வைத்துள்ளனர். ஹிட்ச்காக் ஒரு ஓவியராக இருந்ததால் பாத்திரங்களின் உருவ அமைப்பு செட் ஆகியவற்றை ஸ்டோரி போர்டில் அப்படியே வரைந்து வைத்து விடுவார். தான் எடுக்கப்போகும் படத்தின் 75 சதவீதத்தை தன் மேஜையிலேயே பார்த்து விடுவதாக ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

சிறந்த படமெடுக்க என்ன செய்ய வேண்டும் என்று கேட்டதற்கு ஹிட்ச்காக் சொன்னார் அதற்கு வேண்டியது மூன்று அம்சங்கள் 1.திரைக்கதை 2.திரைக்கதை 3. திரைக்கதை

your comments below.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *