World Class Cinema Not In Tamil

உலகத் தரத்திற்கான சினிமா கோலிவுட்டில் இல்லை
& ‘நிழல்’ திருநாவுக்கரசு

”உலக சினிமா” ”உலக சினிமா” என்கிற சப்தம் தமிழ் திரை அரங்கில் அடிக்கடி கேட்கக்கூடிய வார்த்தையாக இருக்கிறது. உலக சினிமா என்ற ஒன்று இருக்கிறதா? என்று நம்மை நாமே கேட்டுக் கொண்டால் பல பதில்கள் கிடைக்கின்றன. சினிமாவின் மொழி ஒன்றுதான் பல அல்ல, அதனால் படித்தவருக்கும் பாமரருக்கும் தனக்கான மொழியாக சினிமா தேர்ந்தெடுத்துக் கொண்டது. கேமராவையும் எடிட்டிங்கையும்தான் இதன் மூலமாகவே சினிமா மக்களை எதிர்கொண்டது. இது உலகத்துக்குப் பொதுவான ஒன்று.

உலக சினிமா என்று பொதுவான ஒன்று இருக்கிறதா? இல்லை; ஒவ்வொரு நாட்டுக்கும் தனித்தன்மையுள்ள தேசிய அடையாளங்களுடன் கூடிய சினிமாவைத்தான் தனித்தன்மையானது என்கிறோம். இதுவே பின்னர் உலக மக்களுக்கு அற்பணிக்கப்படுகிறது. திரைப்பட விழாக்கள் மூலம், அதன் பின்னர் அப்படம் உலக சினிமா அந்தஸ்தைப் பெற்று விடுகிறது. வேறு எதுதான் உலக சினிமா? ஹாலிவுட் பெரும் பொருட்செலவில் தயாரித்து ஆங்கில மொழிவாயிலாகவே முன்பு உலகம் முழுவதுமே திரையிட்டு வந்தது. தற்போது அந்தந்த நாட்டு மொழிகளில் மொழி பெயர்த்து (டப் செய்து) வெளியிட்டு முன்பை விட இன்னும் அதிக வசூலை அள்ளுகிறது. இந்த முறை புரூஸ்லீ படங்களை விட ஜாக்கிச்சான் படங்களுக்குப் பொருந்தும்.

ஹாலிவுட் பெரும் பொருட்செலவில் ஆடம்பரமாகவும் பிரம்மாண்டமாகவும் படங்களைத் தயாரித்து மக்களை சிந்திக்க விடாமல் செய்வதில் தனது கெட்டிக்காரத் தனத்தைக்காட்டுகிறது. ஒரு காலத்தில் உள்நாட்டுப் படம் தயாரிப்பதற்கு பெரும் முட்டுக்கட்டையாக இருந்தது.

சினிமாவுக்கு பல்வேறு தொழில்நுட்பங்களையும் கோட்பாடுகளையும் ஐரோப்பிய நாடுகளான பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ரஷ்யா முதலிய நாடுகள் தனித்துள்ளன, ஆனால் வியாபார நாட்டாண்மை ஹாலிவுட்டிடம் இருப்பதால் என்றைக்குமே ஐரோப்பாவுக்கும்&ஹாலிவுட்டுக்கும் தீராத முரண் இருந்து வருகிறது. இன்றைக்கு உலகத்தின் வேறு, வேறு பகுதிகளில் இருக்கக்கூடிய நாடுகளான ஈரான், சீனா, கொரியா, ப்ரேசில் நாட்டுப்படங்கள் உலகப்பட விழாவில் முதன்மையான இடத்தை வகிக்கின்றன.

தமிழ்ப்படங்கள் 1916முதல் இன்று வரை 5000திற்கும் மேற்பட்ட படங்கள் எடுத்திருந்தாலும் ஒன்று கூட உலகப்படங்களுக்கான விருதினை தங்கப்பனை(பிரான்ஸ்) தங்கசிங்கம்(ஜெர்மனி), தங்க சிங்கம் (இத்தாலி) விருதினை பெற்றதில்லை. நாம் எடுத்துள்ளவை சினிமாவா? நாடகமா? என்கிற கேள்வியினை இன்று பலரும் கேட்கத் தொடங்கி விட்டனர். சினிமாவுக்குத் தேவையற்ற பாடல்கள், ஆடல்கள், காமெடி டிராக் போன்றவை என்றைக்கும் நம்மை உலகப்பட வரிசையில் நிற்க வைக்காது என்பது மட்டும் நிதர்சனமாகத் தெரிகிறது.

ஒரே விதமான கதை சொல்லல் முறை மூலம் பார்வையாளருக்கு மிகச்சீக்கிரத்தில் அலுப்புத்தட்டி விடுகிறது. ”ஹீரோ ஓரியண்டல்” கதை மீண்டும் வெறுப்பை ஏற்படுத்துகிறது. சம்பந்தமே இல்லாத வெளிநாட்டுக்காட்சிகள், பாடல்கள் யதார்த்தமே இல்லாத காட்சியமைப்புகளும் உரையாடல்களும் கசந்து போன பார்வையாளன் இன்று உலகப்படங்களை பார்க்க வைக்கிறது. பத்தாண்டுகள்ளுக்கு முன்னால் வெளிநாட்டுப் படங்களைப் பார்க்க வேண்டுமானால் பிலிம் கிளப் உறுப்பினராக இருந்தால்தான் முடியும் ஆனால் இன்றோ 30ரூபாய்க்கு உலகப்படங்கள் சந்தையில் கூவிக்கூவி விற்கப்படுகிறது. வசதி படைத்தவர்கள் இணையத்தில் பதிவிறக்கம் செய்து பார்க்கின்றனர். தொடந்து வெளிநாட்டுப்படங்களை பார்க்கும் ரசிகன் யதார்த்தமான பொருளில் உண்மையான சினிமாவை பார்ப்பதால் தமிழ்ப்படம் பார்க்கும் விருப்பமே போய் விடுகிறது. ”தான் இவ்வளவு காலம் பார்த்தது என்ன?” என்கிற கேள்வி வந்து உள் மனதில் தலையெழுப்புகிறது.

இதைப்பற்றியெல்லாம் கவலைப்படாத இயக்குநர்கள், தயாரிப்பாளரிடம் பேசும்போது உலகப்பட அளவில் தயாரிப்புக்கான செலவை பெறுவதற்கு திட்டம் போடுகின்றனர். உலகப்படங்களை இயக்குநர் பார்த்தால் அதன் ருசியே தனிதான். எந்த நாட்டுப் படமாக இருந்தாலும் நம் இயக்குநர் கண்பட்டால் போதும் அது அவரது சரக்காகி விடும். மூளையைக்கசக்கி பிழிந்து உருவாக்கியது என்பார் நாமும் பார்க்க வேண்டியதுதான்.

இன்று சில தமிழ்ப்பட இயக்குநர்கள் எனது படமும் கேனில் கலந்து கொண்டது என்று புருடா விட ஆரம்பித்துள்ளனர். கேனில் படம் திரையிடுவத்ற்கான பணத்தைக் கட்டினால் அந்த நகரத்தில் தெருக்களில் திரையிடலாம். அதைப் பயன்படுத்திக்கொண்டு இங்கு வந்து எனது படங்களும் போட்டியில் கலந்து கொண்டு விட்டது என்று செய்தியாளர்களிடம் தைரியமாக கதை அளக்கின்றனர்.

பல்வேறு மொழிகள், இனங்கள், நாடுகள் இவை எல்லாவற்றையும் இணைக்கும் உலக சினிமா தமிழ் சினிமாவை எப்போது இணைக்கும் என்பதுதான் எங்கள் சுப்பன் கேட்கும் கேள்வி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *