August 6, 2021

கும்மிடிப்பூண்டி அருகே, ஊராட்சிமன்ற தலைவரை தேசியக்கொடி ஏற்றவிடாமல் செய்த முன்னாள் ஊராட்சி தலைவர் மீது, திமுக நடவடிக்கை எடுக்காதது ஏன்?

1 min read

கும்மிடிப்பூண்டி ஒன்றியம் ஆத்துப்பாக்கம் ஊராட்சியில், கடந்தாண்டு நடந்த உள்ளாட்சி தேர்தலில் ஊராட்சிமன்ற தலைவராக தேர்வு செய்யப்பட்டவர் அமிர்தம் வேணு. இவர் பட்டியல் இனத்தை சேர்ந்தவர் ஆவார். அந்த ஊராட்சி இதுவரை பல ஆண்டுகளாக பொது பிரிவினருக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட
ஊராட்சியாக இருந்து வந்தது, இந்நிலையில் தற்போது அந்த ஊராட்சி தலித் பெண்களுக்கான ஊராட்சியாக மாற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில் 2019ஆம் ஆண்டு டிசம்பர் இறுதியில் நடைபெற்ற ஊராட்சி மன்ற தேர்தலின் போது அமிர்தம்மாள் ஊராட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். அவர் தேர்வு செய்த நாள் முதற்கொண்டே அவரை ஊராட்சியில் செயல்படவிடாமல் செய்வது, அவரை தலைவர் நாற்காலியில் உட்காரவிடாமல் தடுப்பது, கிராமசபை கூட்டத்தில் அவரை பங்கேற்பதை தடுப்பது, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணிகளை பார்வையிட சென்றால் அவரை அவமதித்து திருப்பி அனுப்புவது, அவர் பெயரை ஊராட்சிமன்ற அலுவல சுவரில் கூட எழுதவிடாமல் வைத்திருக்கும் அளவிற்கு வன்கொடுமை நடவடிக்கைகளில் ஊராட்சி செயலாளர் சசிகுமார் என்பவரும், துணை தலைவர் ரேவதியின் கணவர் விஜயகுமார் என்பவரும், முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர் அரிதாஸ் சொல்படி கேட்டு தொடர்ந்து அமிர்தம்மாளை மிரட்டி வந்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த வாரம் நடைபெற்ற 74 சுதந்திர தின கொண்டாட்டத்தின் போது, தி.மு.க ஒன்றிய கவுன்சிலரின் கணவரும், முன்னாள் ஊராட்சிமன்ற தலைவருமான அரிதாஸ், மற்றும் துணை தலைவரின் கணவர், ஊராட்சி செயலாளர், ஆகியோர் சேர்ந்து ஆத்துப்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் ஊராட்சிமன்ற அலுவலகத்தில் கொடியேற்ற விடாமல் அங்கிருந்து விரட்டிவிட்டு, முன்னாள் தலைவர் அரிதாஸ் தேசிய கொடியை ஏற்றியுள்ளார். இந்த சம்பவம் குறித்து, அமிர்தம் வேணு கும்முடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலர் கௌரியிடம், புகார் மனு ஒன்றை வழங்கினார்.
அதில், “தான் ஊராட்சி மன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், எங்கள் ஊரில் உள்ள அரசுப் பள்ளியின் தலைமை ஆசிரியர் என்னை தொடர்பு கொண்டு,
” நாளை (ஜனவரி 26) குடியரசு தினத்திற்க்கு, நமது பள்ளியில் நீங்கள் தான் தேசிய கொடியை ஏற்ற வேண்டும்” என அழைப்பு விடுத்தார். அதை கேட்டதில் இருந்து நான் முதன் முதலாக தேசியகொடி ஏற்ற போகிறோம் என்ற மகிழ்ச்சியில், எனக்கு சரியாக தூக்கம் கூட வரவில்லை, அதே மனநிலையில் மறுநாள் காலை பள்ளிக்கு சென்றேன். ஆசிரியர்களும் என்னை, கொடியேற்ற சொன்னார்கள். நான் கொடிமரத்தின் அருகில் சென்ற போது, முன்னாள் தலைவர் அரிதாஸ் என்னை பிடித்து தள்ளிவிட்டு, அவர் தேசிய கொடியை ஏற்றினார். அதனால் நான் மிகவும் அவமானபடுத்தபட்டதை நினைத்து வருத்ததில் வீட்டிற்க்கு சென்று விட்டேன். அதே போல், இப்போது நடந்த சுதந்திர தினவிழா கொண்டாடதிலும், என்னை ஊராட்சிமன்ற அலுவலகத்தில் கொடியேற்றவிடாமல், முன்னாள் தலைவர் அரிதாஸ் தான் கொடியேறினார். இந்த சம்பவங்கள் மேலும் தொடரா வண்ணம், தாங்கள் விசாரணை செய்து, என் மீது அவர்கள் செலுத்தும் அடக்குமுறை செயல்களில் இருந்து, என்னை காப்பாற்ற வேண்டும்” என் கூறியிருந்தார்.

தகவலறிந்த, திருவள்ளூர் மாவட்ட ஆட்சித்தலைவர் மகேஸ்வரி ரவிக்குமார் அவர்கள் பொன்னேரி ஆர்டிஓ வித்யா அவர்களை இந்த சம்பவம் குறித்து, விசாரணை செய்ய உத்தரவிட்டார். விசாரணைக்கு பிறகு, ஊராட்சி செயலாளர் சசிகுமார் பணி நீக்கம் செய்யபட்டார். மேலும் அவரும், துணை தலைவரின் கணவரும், கைதும் செய்யப்பட்டனர். பின்னர் மாவட்ட ஆட்சியர் அவர்களே நேரடியாக ஆத்துபாக்கத்திற்க்கு வந்து, ஊராட்சி தலைவர் அமிர்தம்மாளுக்கு, பூங் கொத்து கொடுத்து, மரியாதை செலுத்தி, ஊராட்சிமன்ற அலுவலகத்தில் அவர் பெயரை எழுத வைத்து, பின் தேசிய கொடியை ஏற்ற செய்தார். இந்நிலையில், அனைத்து பிரச்சனைகளுக்கும் முதல் காரணமான, திமுக பிரமுகரும், முன்னாள் தலைவருமான, அரிதாஸ் மீது யாரும் எந்த நடவடுக்கையும் எடுக்கவில்லை. அதன் மர்மம் தான் என்னவென்றே.. புரியவில்லை.

பட்டியல் இன மக்களுக்கு ஒன்று என்றால், முதலில் குரல் கொடுக்க கூடிய கட்சி திமுக என்பது இந்த உலகம் அறிந்த ஒரு விசயம், இன்று கூட, “கோயம்புத்தூர் ஜெ.கிருஷ்ணாபுரத்தின் பட்டியலின பெண் ஊராட்சிமன்ற தலைவர் சரிதாவிற்க்கு, அரசு பாதுகாப்பு வழங்க வேண்டும்” என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆனால், கும்முடிபூண்டி ஆத்துப்பாக்கம் பட்டியலின பெண் தலைவரான அமிர்தம்மாளை செயல்படவிடாமல், தொடர்ந்து அடக்குமுறையில் ஈடுபட்ட திமுக பிரமுகரான முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர் அரிதாஸ் மீது, திமுக எந்த நடவடிக்கையும் எடுக்காதது அதிர்ச்சியை கொடுக்கிறது.

G.பாலகிருஷ்ணன்
நிழல்.இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed