July 28, 2021

சோழவரம் அருகே, அரிசி ஆலையின் சுவர் இடிந்து விழுந்ததில், ஒருவர் உயிரிழந்தார். பலத்த காயமடைந்த பெண் மருத்துவ மனையில் அனுமதி…

1 min read

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே உள்ள ஜனப்பன் சத்திரம் எம்.ஜி.ஆர் நகர் பகுதியில், பாலமுருகன் என்பவருக்கு சொந்தமான அரிசி ஆலை உள்ளது. அந்த அரிசி ஆலைக்கு 20 அடி உயரமுள்ள சுற்றுப்புற மதில்சுவர் அமைக்கப்பட்டு இருந்தது.

அப் பகுதியில், தொடர் மழை பெய்து வருவதால், அந்த சுற்று சுவர் இடிந்து அருகிலிருந்த வீடு ஒன்றின் மீது விழுந்ததில், வீட்டின் உரிமையாளர் ராஜா என்பவர் இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இந்த விபத்தில்பலத்த காயமடைந்த அவரது மருமகள் ரம்யாவை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக சென்னை அரசு ஸ்டேன்லி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த தகவல் அறிந்தது, சம்பவ இடத்திற்கு வந்த, பொன்னேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சிறுணியம் P.பலராமன் அங்கு பாதிக்கப்பப்பட்ட குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறியதுடன், அதிகாரிகளுக்கும் தகவல் கொடுத்தார்.

இதுகுறித்து தகவலறிந்து, சம்பவ இடத்திற்கு வந்த சோழவரம் காவல் துறையினர் உயிரிழந்த ராஜாவின் உடலை கைப்பற்றி, உடற்கூறு ஆய்வுக்காக பொன்னேரி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்து. விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் சேதமடைந்த மதில் சுவரை அகற்றுமாறு, ஏற்கனவே பலமுறை அரிசி ஆலை உரிமையாளரிடம் முறையிட்டும், அவர் அதை ஏற்காமல் அலட்சியமாக இருந்ததால், தற்போது உயிர் இழப்பு ஏற்பட்டுள்ளதாக குற்றம்சாட்டிய அப்பகுதி மக்கள் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க வலியுறுத்தியும், விபத்திற்கு காரணமான அரிசி ஆலை உரிமையாளரை கைது செய்ய கோரியும் கொட்டும் மழையில் சாலை மறியலில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து, தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வருவாய் கோட்டாட்சியர் செல்வம், இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை ஏற்று போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

செய்திகள் – மில்டன்
நிழல்.இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *