January 26, 2022

சென்னைக்கு அருகிலேயே, ரங்கநாத பெருமாளை தரிசிக்க, வாருங்கள்…

1 min read
Spread the love

பெருமாளை வழிபடும் பக்கதர்கள் யாரும் திருச்சியில் உள்ள ரங்கநாதரை நேரில் கண்டு வணங்காமல் இருக்கமாட்டார்கள். அந்த திருவரங்க பெருமாளை நேரில் காண முடியாதவர்கள் சென்னைக்கு மிக அருகில் உள்ள, தேவதானம் திருவரங்கனை நேரில் கண்டு வணங்கி வருகின்றனர். அந்த ஆலையத்திற்க்கு சென்னையில் இருந்து, ரயிலில் வருபவர்கள் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து கும்மிடிப்பூண்டி மார்கமாக செல்லும் புறநகர் மின்சார ரயிலில் பயணித்து, அனுப்பம்பட்டு ரயில் நிலையத்தில் இறங்கி ஆட்டோவில் செல்லலாம். காரில் வருபவர்கள் கூகுளில் “தேவதானம் ரங்கர் கோயில்” என டைப் செய்து அதன் உதவியுடன் நீங்கள் கோயில் வந்து சேரலாம். வடஸ்ரீரங்கம் என்று சொல்லப்படும் இந்த தேவதானம் ரங்கநாதர் ஆலயத்திற்கு நீங்கள் நேரில் வந்து திருச்சி திருவரங்கரை விட பெரியதாய் அமைக்கப்பட்ட திருவரங்கனை தரிசித்து மனம் மகிழலாம்.

கோயில் வரலாறு ;

சாளுக்கிய மன்னன் தென் இந்தியாவின் மீது படையெடுத்த போது, திருச்சியில் காவிரிக் கரையோரம் உள்ள ஸ்ரீரங்கநாதரின் அழகைக் கண்டு அதிசயித்துப் போனான். பல இடங்களில் போரிட்டுக் கொண்டு வந்த அந்த மன்னனுக்கு, திருச்சி ஸ்ரீரங்கத்தில் உள்ள ரங்கநாதரின் உருவம் மட்டும் கண்ணில் இருந்து மறையவில்லை. அவரது அழகை வேறு எங்காவது வைத்து வழிபட வேண்டும் என்ற எண்ணம் அவன் மனதில் எழுந்தது. இத்தளம் வந்தபோது, அங்கு ஏரிக்கரையின் பக்கமாக வந்து கொண்டிருந்தான். அந்த இடம் முழுவதும் நெல் விளையும் பூமியாக, ஸ்ரீரங்கத்தைப் போலவே பசுமையுடன் காட்சியளித்தது. அதனால் இதனை வடஸ்ரீரங்கம் என்றே மனதில் எண்ணிக்கொண்டான். இந்த இடமானது தேவர்களால் தானமாக வழங்கப்பட்ட இடம் என்று கூறப்படுகிறது. இதனால் அந்த ஊர் தேவதானம் என்று அழைக்கப்பட்டது.

சாளுக்கிய மன்னன் அந்த இடத்தைப் பார்த்து அதிசயித்து நின்றான். அப்போது அங்கு ஒரு விவசாயி அறுவடை செய்யப்பட்டு, கதிரடிக்கப்பட்டு களத்தில் போடப்பட்டிருந்த நெல் மணிகளை மரக்கால் கொண்டு அளந்து கொண்டிருந்தார். திடீரென அந்த விவசாயி மறைந்தார். இதனைக் கண்ட மன்னன், விவசாயியைத் தேடினான். அவரோ, களைப்பின் காரணமாக மரக்காலை தலைக்கு வைத்தபடி ஓரிடத்தில் படுத்து உறங்கிக்கொண்டிருந்தார். அங்கு சென்ற மன்னனுக்கு, சயனக் கோலத்தில் பெருமாள் காட்சி கொடுத்து மறைந்தார். இதனால் ஆனந்தம் அடைந்த மன்னன், அங்கேயே இறைவனுக்கு ஒரு ஆலயம் அமைக்க முடிவு செய்தான். பின்னர் தன்னுடைய படைகளுடன் வட இந்தியாவிற்குப் புறப்பட்டான். கங்கை நதிக்கு வடக்கேச் சென்றபோது, நேபாள நாட்டில் இமயமலை அடிவாரத்தில் பெரிய அளவிலான ஒரு கல்லைப் பார்த்தான். அந்தக் கல்லைக் கொண்டு, தான் நினைத்த இறைவனின் திருவுருவத்தைச் செய்ய எண்ணினான். அதற்காக அந்தக் கல்லை ஏற்றிக்கொண்டு, தென்னிந்தியா புறப்பட்டான். ஆனால் கல்லானது, வழியில் கங்கை நதியில் விழுந்தது. நீரில் விழுந்த கல் மூழ்காமல், மிதக்கத் தொடங்கியது.

இதைக் கண்டு ஆச்சரியம் அடைந்த மன்னன், அது பற்றி அறிஞர்களிடம் விசாரித்தபோது, அது சாளக்கிராம கல் என்பது தெரியவந்தது. மேலும் அந்தக் கல்லில் இறைவனின் சிலையை வடித்து வழிபட்டால், அந்தப் பகுதி முழுவதும் சுபீட்சம் அடையும் என்றும் கூறினார்கள். இதையடுத்து அந்தக் கல்லையே கொண்டு வந்து, தனக்கு இறைவன் காட்சி கொடுத்த இடத்தில் ஆலயத்தை எழுப்பியதுடன், இறைவனின் சிலையையும் வடித்து வழிபட்டான் என்கிறது தல வரலாறு. இந்த ஆலயத்தைச் சுற்றிலும் நான்கு புறமும் மதில் சுவர் அமைக்கப்பட்டுள்ளது. ராஜகோபுரத்தை தரிசித்து உள்ளே நுழைந்ததும், கொடி மரமும், கருடாழ்வாரும் உள்ளனர். அடுத்ததாக ஆஞ்சநேயர் அமர்ந்திருக்கிறார். இவர்களை வழிபட்டு உள்ளேச் சென்றால், கருவறைக்கு வெளியே துவார பாலகர்களான ஜெயன், விஜயன் ஆகியோர் நம்மை வரவேற்கின்றனர்.

அவர்களுக்கு வலது பக்கத்தில் நம்மாழ்வார், பொய்கையாழ்வர், பூதத்தாழ்வர், குலசேகராழ்வர், திருமழிசையாழ்வார், பெரியாழ்வர், தொண்டரடியாழ்வர், திரு மங்கையாழ்வர், மதுரகவியாழ்வர், ஆண்டாள் ஆகிய பன்னிரு ஆழ்வார்கள், மணவாள முனிவர், விச்வக்சேனர், ராமானுஜர், தேசிகர், வேணுகோபால் சுவாமி கள் ஆகியோர் வீற்றிருக்கின்றனர். இவர்களை தரிசத்த வண்ணம் உள்ளே சென்றால் ஆதிசேசன் என்படும் ஐந்து தலைகள் கொண்ட நாகப் பாம்புவின் மீது சயன திருக்கோலத்தில் ஸ்ரீரங்கநாத பெருமாள் பள்ளிக்கொண்ட நிலையில் காட்சியளிக்கிறார். இவரது நாபியின் மீது பிரம்மா உள்ளார். இறைவனின் பாதித்திற்கு அருகில் ஸ்ரீதேவி, பூதேவி தாயார் இருவரும் அமர்ந்து, களைப்பில் இருக்கும் பெருமாளுக்கு சேவை செய்து கொண்டிருக்கின்றனர். பெருமாளின் திருவடியை சேவித்த நிலையில், தும்புறு மகரிஷியும், பக்த ஆஞ்சநேயரும் காட்சி தருகின்றனர். 18.5 அடி நீளமும் 5 அடி உயரத்துடன் காணப்படும் இறைவனின் உருவம், சாளக்கிராம கல்லால் செய்யப்பட்டது.

இந்த ஸ்ரீரங்கநாத பெருமாளை அமாவாசை நாளன்றும், வெள்ளிக்கிழமைகளிலும் தொடர்ந்து 7 மற்றும் 11 வாரங்கள் நெய் தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால், பணக் கஷ்டம், திருமண தடை நீங்கும். குழந்தை பாக்கியம், வேலை வாய்ப்பு கிடைக்கும். நினைத்த காரியங்கள் நினைவேறும் என்பது ஐதீகம். பெருமாளுக்கு இடதுபுறமாக ரங்கநாயகி தாயார் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். அவருக்கு அருகில் சக்கரத்தாழ்வார் சன்னிதி இருக்கிறது. அதன்கு பின்புறம் புற்றுக்கோவிலும், தனிச் சன்னிதியில் ஆண்டாளும் இருக்கின்றனர்.
இத்தல இறைவனை வழிபட்டு வந்தால் செல்வம் பெருகுவதுடன், நினைத்த காரியம் நிறைவேறுவதை நாமும் கண்டு பயனடையலாம்.

G.பாலகிருஷ்ணன்
நிழல்.இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed